கழுவுக்கேற்ற கோமுட்டி நியாயமா?

 

காங்கிரஸ்பேரால் திருச்சி நகரசபைத் தலைவர் தேர்தலுக்கு நிறுத்தப்பட்ட தோழர் ரத்னவேலுத் தேவரை ஆதரியாத காங்கிரஸ் மெம்பர்கள் எல்லாம் ராஜிநாமாச் செய்துவிட வேண்டுமென்று தமிழ்நாடு காங்கிரஸ் காரியக்கமிட்டியார் தீர்ப்புக்கூறி யிருக்கிறார்கள். ஆனால் நகரசபைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தோழர் பொன்னய்யா பிள்ளை, திருச்சி ஜனங்களைத் திருப்திப்படுத்துவதற்காக தாம் மெம்பர் பதவியையோ, தலைவர் பதவியையோ ராஜிநாமாச் செய்யப் போவதில்லையென்றும் வேண்டுமானால் காங்கிரசிலிருந்து விலகிவிட தயார் என்றும் மார் தட்டிக் கூறுகிறார். இதற்காக ஒரு காங்கிரஸ் தினசரி ஜஸ்டிஸ் கட்சி மீது பழி சுமத்துகிறது. “ஸ்தல ஸ்தாபனங்களில் 15 வருஷங்களாக ஜஸ்டிஸ்கட்சி இருந்திருந்தும் ஸ்தல ஸ்தாபன ராஜீய வாழ்க்கை இவ்வளவு மோசமாயிருப்பது ஜஸ்டிஸ் கட்சியின் யோக்கியதையைக் காட்டுகிறது” என அப்பத்திரிகை குருட்டுத்தனமாக எழுதியிருக்கிறது. ஸ்தல ஸ்தாபன விஷயங்களில் அரசியலைப் புகுத்தக் கூடாதென்பது ஜஸ்டிஸ் கட்சியார் கொள்கை. இதுவரை ஸ்தலஸ்தாபனத் தேர்தல்களில் ஜஸ்டிஸ்கட்சி பேரால் அபேட்சகர்கள் நிறுத்தப்படவுமில்லை. “ஜஸ்டிஸ்” கொள்கையை ஆதரிப்பவர்கள் தம் சொந்த ஹோதாவிலேயே நின்று வந்திருக்கிறார்கள். தவிரவும் திருச்சி திருவிளையாடல்களுக்குக் காரணஸ்தராயிருந்தவர்கள் “ஜஸ்டிஸ்” கட்சியாரல்ல காங்கிரஸ் பக்தர்களே. எனவே திருச்சி பழிக்கு ஜஸ்டிஸ் கட்சியைக் குறை கூறுவது கழுவுக்கேற்ற கோமுட்டி நியாயமாகவே இருக்கிறது.

குடி அரசு துணைத் தலையங்கம் 30.08.1936

You may also like...