மத நம்பிக்கைக்கு சாவுமணி

உலகத்திலே எத்தனையோ, இயக்கங்களும் ஸ்தாபனங்களும் தோன்றி மறைந்துள்ளன; மறைந்து வருகின்றன. சில இயக்கங்களுக்கும் ஸ்தாபனங் களுக்கும் ஒரு காலத்துத் தேவை ஏற்பட்டிருக்கலாம். அத் தேவை மறையும் போது அவை மறைவது இயல்பே. இந்தப் பொதுவிதிக்குக் கட்டுப்படாத இயக்கங்களோ ஸ்தாபனங்களோ உலகத்தில் இல்லவே இல்லை.

தற்பொழுது உலகம் முழுதும் மத நம்பிக்கை குறைந்து வருகிறது. ருஷியாவிலே மதம் அழிந்துவிட்டது; ஆலயங்கள் மறைந்துவிட்டன; புரோகிதர், பூசாரிகளும் ஒழிந்துவிட்டனர். அமெரிக்காவில் ஆலயங்கள் இருந்தாலும் ஆலய வழிபாடு செய்வோர் தொகை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றன. பாதிரிமார் செல்வாக்குக் குறைந்துவிட்டதாம். அறிவியக்கம் நாளுக்கு நாள் காட்டுத் தீப்போல் பரவி வருகிறதாம். துருக்கியிலும் மத ஆதிக்கம் ஒழிந்துவிட்டது. ராஜாங்கத்துக்கும் மதத்துக்கும் இருந்த தொடர்பு அறுபட்டு விட்டது. மதத்தின் ஸ்தானத்தைப் பகுத்தறிவு கைப்பற்றி விட்டது. இவ் வண்ணம் உலகம் முழுதும் மத நம்பிக்கை குறைந்துவரக் காரணமென்ன? காரணங்கள் இரண்டு; ஒன்று தேசீய சம்பந்தமானது; மற்றொன்று சதாசாரச் சார்புடையது.

மதக்கொள்கைகளும் நம்பிக்கைகளும் விஞ்ஞான சாஸ்திர உண்மைகளுக்கு முரண்பட்டவைகளாக இருக்கின்றன. எனவே விஞ்ஞான சாஸ்திரம் வளர வளர மத நம்பிக்கை குறைந்துகொண்டே வருகிறது. விஞ்ஞானத் துறையில் முன்னேற்றமடைந்த தேசங்களில் மத நம்பிக்கை முற்றிலும் கலகலத்துப்போய்விட்டது. இதை எவராலும் மறுக்கவே முடியாது. விஞ்ஞான உண்மைகளை எதிர்த்து நிற்க மத நம்பிக்கைகளுக்கு சக்தியில்லை. ருசுப்படுத்தப்படாத விஷயங்களை நம்ப மக்கள் தயங்குகின்றனர் மறுக்கின்றனர். பிரபஞ்சத்தில் பல துறைகளில் பிரதி தினமும் நடைபெற்று வரும் ஆராய்ச்சிகள் எல்லாம் மத நம்பிக்கைகளை வேரறுக்கக் கூடியவை களாகவே இருக்கின்றன. கிறிஸ்துமதச் செல்வாக்கு உச்சஸ்தானத்திலிருந்த காலத்திலே கிறிஸ்தமத எதிரிகள் தமது அபிப்பிராயங்களை வெளியிட அஞ்சினர். இன்றோ கிறிஸ்துமதம் பகிரங்கமாகத் தாக்கப்படுகிறது. கிறிஸ்து மதக்கொள்கைகள் சதாசாரத்துக்கு முரணானவை யென்று பகிரங்கமாகத் தாக்கப்படுகின்றன. ஏனைய மதங்களுக்கும் இக்கதியே ஏற்பட்டிருக்கிறது. உண்மையில், ஒரு காலத்திலே வானமண்டலத்தில் பறந்துகொண்டிருந்த மதக்கொடி அற்று வீழ்ந்துவிட்டது.

எனினும் பழமை விரும்பிகள் மதவெறியர்கள் லக்ஷ்யம் செய்ய வில்லை. “ஆமாம்! ஆமாம்! மதத்தையும் கடவுளையும் எத்தனையோ பேர் எதிர்த்துப் பார்த்தார்கள். ஒன்றும் சாயவில்லை. நாஸ்திகம் புதியதல்ல. ஆஸ்திகம் தோன்றிய அன்றே நாஸ்திகமும் தோன்றியுள்ளது. கடைசியில் நாஸ்திகமே தோல்வியுற்றது. எனவே தற்கால மத எதிர்ப்பைப் பார்த்து எவரும் அஞ்சவேண்டியதில்லை. ஆஸ்திகத்தை நாஸ்திகம் வெல்லவே செய்யாது. ஆஸ்திகம் அழிவில்லாதது” என அவர்கள் கூறித் திருப்தி அடைகிறார்கள்.

ஆனால் இவர்கள் உண்மை நிலையை அறிந்தவர்கள் அல்ல. பழங்கால நாஸ்திகத்துக்கும் தற்கால நாஸ்திகத்துக்கும் பெருத்த வித்தியாசமுண்டு. லோகாயதம் தோன்றிய காலத்திலே விஞ்ஞான சாஸ்திர உணர்ச்சியே தோன்றவில்லை. “சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது. இராகு கேதுக்கள் சூரிய சந்திரர்களைச் சில குறிப்பிட்ட காலத்தில் விழுங்கிக் கக்குகின்றன. இரும்பைப் பொன்னாக்கலாம்; கல்பமுண்டு சிரஞ்சீவியாகலாம்” என்பன போன்ற நம்பிக்கைகள் தாண்டவமாடிய காலத்திலே லோகாயதம் தோன்றியது. அத்தகைய லோகாயதத்தை நாஸ்திகத்தை ஆஸ்திகர் வெகு சுளுவில் தோற்கடித்திருக்கக் கூடும். அக்கால நாஸ்திகர்களுக்கு விஞ்ஞான உண்மைகள் துணை நிற்கவில்லை. நுண்ணிய ஆராய்ச்சி முன் எதிர் நிற்காத யுத்தி வாதங்களினாலேயே அக்கால நாஸ்திகர் ஆஸ்திகரைத் தாக்கிவந்தனர். எனவே நாஸ்திகர் தோல்வியுற்றிருக்கலாம்.

நாஸ்திகரைத் தோற்கடித்த ஆஸ்திகர் எல்லாம் வஞ்சகர் என்றோ மோசக்காரர் என்றோ மூடர்கள் என்றோ நான் கூறவில்லை. அவர்கள் நம்பியபடி அவர்கள் நடந்துகொண்டார்கள். தெய்வ நம்பிக்கையின்றிப் பிரபஞ்சமே நசித்துவிடுமென்று அவர்கள் உணர்ந்திருந்தார்கள். எனவே அவர்கள் அக்காலத்துப் பெற்றிருந்த அறிவின் துணைகொண்டு ஆஸ்திகத்தை நிலைநாட்ட முயன்றனர். ஒரு பிரச்சினையை முடிவு செய்வதற்குத் தேவையான சாதனங்கள் எவையோ, அவை இல்லாதிருந்த காலத்திலேயே அவர்கள் அப்பிரச்சினையை முடிவு செய்தனர். பகுத்தறிவுப்படியும் சரித்திரீகமாகவும் முயன்றனர். ஆனால் அவர்களது விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான சரித்திர ஞானமோ விஞ்ஞானமோ அவர்களிடம் இருக்கவில்லை. எனவே பகுத்தறிவு முன் நிற்க முடியாத யுக்தி வாதங்களையும் கூடார்த்தச் சொற்றொடர்களையும் பகட்டு வாதங்களையும் காட்டி மதத்தை ஆதரிக்கத் துணிந்தனர். அவர்களாலானது அவ்வளவே, அதற்குமேல் நாம் அவர்களிடம் எதிர்பார்க்கவே முடியாது?

ஆனால் ஊகத்துக்கு நில்லாத முன்னோர் வாதங்களைக் காட்டி இக்கால ஆஸ்திகர்கள் உலகத்தை ஏமாற்றப் பார்ப்பதுதான் வெகு ஆச்சரியமாக இருக்கிறது. மதவிரோதிகளுக்கு உதவியான சாதனங்களை “சப்ளை” செய்வது விஞ்ஞான சாஸ்திரங்களின் நோக்கமல்ல; எனினும் மத விரோதிகளுக்குத் தேவையான தகவல்களை யளிப்பதே விஞ்ஞான சாஸ்திரிகளின் வேலையாக இருந்து வருவதாய்ப் பலர் நம்புகிறார்கள்.

விஞ்ஞான சாஸ்திரங்களின் உண்மையான நோக்கம் அறிவை வளர்ப்பதே; ருசுப்படுத்தக் கூடிய உண்மைகளை பகிரங்கப்படுத்துவதே; ஆனால் விஞ்ஞான உண்மைகள் பல மத உண்மைகளுக்கு முரண்படலாம்; ஆனால் இது இரண்டாம் பக்ஷமான பலன். விஞ்ஞானிகள் இதை லக்ஷ்யம் செய்வதில்லை. நேரடியான பலனே அவர்களுக்கு முக்கியம்; மறைமுகப் பலன்களை அவர்கள் மதிப்பதில்லை; அல்லது பிரமாதப்படுத்துவதில்லை. சாதாரண விஞ்ஞான உண்மைகளும் கூட மதத்துக்கு முரணாகவே இருக்கின்றன. எனவே மதத்தை யொழிக்கவே விஞ்ஞானிகள் முயல்வதாக சாமானியர் முடிவு கட்டி விடுகின்றனர். விஞ்ஞான சாஸ்திரிகள் கடும் உழைப்பாளிகள்; கருமமே கண்ணாயினர். காலத்தின் அருமையை அவர்கள் நன்கறிவார்கள் தம் கடமைகளையும் அவர்கள் நன்குணர்வார்கள். அவர்களது ஆராய்ச்சியில் மதவிரோதமான பல உண்மைகள் வெளியா கின்றன; ஆனால் அவைகளை அவர்கள் லக்ஷ்யம் செய்வதில்லை; ஏனையோரே லக்ஷ்யம் செய்கிறார்கள்; பீதியடைகிறார்கள்; கடவுளருளிய வேதங்களில் நம்பிக்கை வைத்தோர் நடு நடுங்குகிறார்கள். இயற்கையை நடுக்கத்துடன் ஆராய்ச்சி செய்ய விஞ்ஞான சாஸ்திரிகள் முயன்றபோதே எல்லாம் தலைகீழாக மாறத் தொடங்கியது. அக்காலத்திலே மதமே பிரபஞ்சத்திலே அரசு செலுத்தி வந்தது. பெரிய எதிர்ப்புகளுக்கிடையே தடைகளுக்கிடையே ஆராய்ச்சி வேலைகள் நடைபெற்று வந்தன.

இப்பொழுதோ பழைய ராஜா அடிமையாகி விட்டான். மதம் அறிவுக்கு அடிமைப்பட்டு விட்டது உண்மையாயினும் மதவாதிகள் அதை பகிரங்கமாக ஒப்புக்கொள்வதில்லை. அறிவியக்கவாதிகளை மதவாதிகள் இப்பொழுது எதிர்ப்பதில்லை; ஹிம்சிப்பதில்லை. எனினும் விஞ்ஞான உண்மைகள் மத உண்மைகளுக்கு முரணல்லவெனப் பாசாங்கு செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். கிறிஸ்தவர்களின் ஆதியாகமம் பூகர்ப்ப சாஸ்திரத்துக்கு முற்றிலும் முரணானது. ஆனால் கிறிஸ்தவப் பாதிரிமார் சொல்வதென்ன? “ஆதியாகமம் பூகர்ப்ப சாஸ்திரத்துக்குப் பொருத்தமானதே. பூகர்ப்ப சாஸ்திர உண்மைகளைத்தான் ஆதியாகமம் தெளிவாக விளக்கிக் கூறுகின்றன” என பாதிரிமார் மழுப்புகிறார்கள். இவ்வளவாவது அவர்கள் ஒப்புக்கொள்ள முன் வந்தது அறிவியக்கத்துக்கு ஒரு பெரிய வெற்றியாகும். பூகர்ப்ப சாஸ்திரத்தையே ஒரு காலத்து எதிர்த்தவர்கள் இப்பொழுது இவ்வளவாவது ஒப்புக்கொள்வது பெரிய காரியமல்லவா! இதனால் விஞ்ஞான சாஸ்திரங்களை மதவாதிகள் ஒப்புக்கொள்வதாகவே ஏற்படுகிறது. ஆனால் அவர்கள் மனப்பூர்வமாக ஒப்புக்கொள்ளவில்லை. தீராப்பொறியாகவே ஒப்புக்கொள்கிறார்கள். அவர்கள் கூறுவது போல் கிறிஸ்தவ ஆகமம் பூகர்ப்ப சாஸ்திர உண்மைகளுக்கு அனு குணமாயில்லை. அனுகுணமாக இருப்பதாகக் கூறி, செத்து வரும் மத உணர்ச்சிக்கு மத நம்பிக்கைக்கு புத்துயிரளிக்கவே அவர்கள் முயல்கிறார்கள். விஞ்ஞான சாஸ்திர அறிவு பரவப்பரவ மத நம்பிக்கை ஒழிவது திண்ணம். ஒழியத் தொடங்கி விட்டது. ஏன்? ஒளியின் முன் இருள் நில்லாது. விஞ்ஞானம் ஒளி: மதம் இருள்.

பகுத்தறிவு (மா.இ.) கட்டுரை ஆகஸ்ட் 1936

 

You may also like...