1926ஆண்டுநாடகமே இப்போதும்

“வெளியேறிய நேருவின் வீரமொழி”

1924ம் வருஷம் காங்கிரசுக்காரர்கள் இன்றையப் பித்தலாட்டம் போலவே பித்தலாட்டம் செய்து இந்திய சட்டசபைக்குச் சென்று அங்கு ஒரு வேலையும் செய்ய முடியாமல் 3வருஷ காலம் இருந்துவிட்டு சட்டசபை காலாவதி முடிய ஒரு வாரம் இருக்கும் போது “சட்டசபைகளை விட்டு வெளியேறுகிறோம்” என்று சொல்லிக்கொண்டு “வெளியில் வந்து” விட்டார்கள் என்பது யாவரும் அறிந்திருக்கலாம்.

ஆனால் அந்த வெளியேறுகிற காலம் வரையில் சட்டசபை கமிட்டிகளில் அங்கம் பெற்றார்கள், பெரும் சம்பளம் பெற்றார்கள், சட்டசபை நடவடிக்கை களுக்கு விகிதாச்சார பங்கும் பெற்றார்கள். இவ்வளவும் பெற்று 3 வருஷம் வாழ்ந்துவிட்டு கடைசியாக போலி வெளியேற்றம் செய்தபோது தோழர் பண்டிட் மோதிலால் நேரு அவர்கள் என்ன சொன்னார் என்பதை சற்று யோசித்துப்பார்க்கும்படி இப்போது வெளியிடுகிறோம்.

~subhead

வெளியேறிய நேருவின் வீரமொழி

~shend

  1. “சர்க்காரை நாங்கள் பயமுறுத்தவில்லை.
  2. சர்க்காருக்கு மகத்தான சக்தியும் அதிகாரங்களும் உண்டு.
  3. சர்க்காரை எதிர்க்கும் பலம் எங்களுக்கில்லை.
  4. தேசத்தில் உள்ள சமூக வேற்றுமையால் எங்களுக்குள் ஒற்றுமை இல்லை.
  5. ஆதலால் சட்ட மறுப்புச் செய்ய எங்களால் ஆகாது.
  6. இந்த நிலைமையில் சட்டசபைக்குப் போவது பயனற்ற காரியம்.
  7. இவ்வளவு பலமுள்ள பெரிய சர்க்காரை வெளியேறுவதாலும் ஒழித்துவிட நாங்கள் முயற்சிக்கவில்லை.
  8. நாங்கள் ஆசைப்பட்டாலும் நடக்கிற காரியமல்ல.
  9. வெகுநாளைக்கு முன்னமே நாங்கள் வெளியேறி இருக்க வேண்டும்.
  10. நாங்கள் சர்க்கார் தந்திரத்தால் ஏமாந்து உள்ளே வந்தோம்.
  11. இனி நாங்கள் இங்கு இருப்பதில் சிறிதும் பிரயோஜனமில்லை.
  12. இந்த பொம்மை சபைகளில் எங்களுக்கு வேலை இல்லை.
  13. தேசத்தின் மானத்தைக் காப்பாற்றவே வெளியில் போகிறோம்”.

என்று சொல்லி இருக்கிறார்.

இவை 21-3-26ந் தேதி “குடி அரசி”லும் அந்த வார இதர தினசரி பத்திரிக்கைகளிலும் வெளிவந்திருக்கின்றன.

இப்படிப்பட்ட இவர்கள் இப்போது சட்டசபைக்கு போகிறேன் என்பதிலும், அங்குபோய் சர்க்காருக்கு முட்டுக்கட்டை போடுவோம் என்பதிலும் அர்த்தமுண்டா என்று கேட்கின்றோம். சமதர்மத்தையும் பொதுஉடமையையும் பேசும் குட்டி நேரு அவர்கள் சட்டசபைக்குப் போய் சர்க்காரை சாதித்து விடலாம் என்பாரானால் இவருக்கு ராஜீயஞானம் இருக்கிறது என்று எப்படிச் சொல்ல முடியும்? இவருக்கு ராஜீய ஞானம் இருக்கிறது என்று சொல்லப்படுமானால் இவர் தந்தை பெரிய நேருவுக்கு ராஜீய ஞானம் இல்லை என்று தானே அர்த்தமாகும். ஆகவே இன்று காங்கிரசுக்காரர்கள் அரசியல் தத்துவத்தையோ தேச நலத்தையோ சிறிதும் லட்சியம் செய்யாமல் எப்படியாவது பார்ப்பனரல்லாதார் சமூகத்தை அரசியல் சம்மந்தத்தில் இருந்து துரத்தி அடித்து பார்ப்பனர் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்பதல்லாமல் வேறு குறிப்பு ஒன்றுமே இல்லை என்று உறுதி கூறுவோம்.

~subhead

ஸ்தல ஸ்தாபனங்கள்

~shend

காங்கிரசுக்காரர்கள் ஸ்தல ஸ்தாபனங்களில் பிரவேசிப்பது கூடாது என்று பலநாள் பேசிவிட்டு பார்ப்பனரல்லாதாருக்குள் சில்லறை மனஸ்தாபம் ஏற்பட்ட உடன் இதுதான் சமயம் என்று அவர்களுக்குள் கட்சிகளை ஏற்படுத்தி ஒரு கூட்டத்தாரை சுவாதீனம் செய்து, அவர்களை காங்கிரசில் சேர்த்து, அவர்களுக்கு ஸ்தானங்கள் சம்பாதித்துக்கொடுத்து கலகம் உண்டாக்கியதன் பயனை இன்று காங்கிரசார் அனுபவிக்கிறார்கள். இப்பொழுது தான் காங்கிரசுக்காரர்களுக்கு ஞானம் உதித்ததுபோல் வேஷம் போட்டு,

“இனி ஸ்தல ஸ்தாபனங்களில் காங்கிரசுக்காரர்கள் பிரவேசிக்கக் கூடாது” என்று பேசுகிறார்கள். இது முன்பு 1924ல் சுயராஜ்யக் கட்சி சட்டசபைக்குப்போய் அங்கு ஏமாற்றமடைந்த பின் வெளியேறினதாக நாடகம் நடித்தது போலவே முடிந்து இருக்கிறது. பண்டித மோதிலால் நேரு அவர்கள் 1926ல் “வெளியேறிய” போது சர்க்கார் இருந்த நிலைமையை விட, சீர்திருத்தம் இருந்த நிலைமையைவிட, மக்கள் சமூகம் இருந்த நிலைமையை விட, காங்கிரஸ் இருந்த நிலைமையைவிட இப்போது எந்த அம்சத்தில் எந்த நிலைமை மாற்றமடைந்திருக்கிறது என்று யோசித்தால் பார்ப்பனர்கள் எப்படியாவது பார்ப்பனரல்லாதார் சமூகத்தாரின் முன்னேற்றத்தை அடக்கி ஒழித்து ராமராஜ்யம் அல்லது இந்திய அரசர் காலத்திய நீதியையும் ஆதிக்கத்தையும் நிலை நாட்டி மேன்மைபெற முயற்சிக்கிறார்கள் என்பது யாருக்கும் விளங்காமல் போகாது.

குடி அரசு துணைத் தலையங்கம் 23.08.1936

You may also like...