வரப்போகிறார்களாமே!

தென்னாட்டில் காங்கிரசுக்குச் செல்வாக்கும் மதிப்பும் குறையும்போது வடநாட்டுத் தலைவர்களை அழைத்துக்கொண்டு ஊரூராய்ச் சுற்றி நிதி சேர்ப்பதும் காங்கரஸ் பிரசாரம் செய்வதும் தென்னாட்டுப் பார்ப்பனர்களின் வழக்கமாக இருந்து வருகிறது.

இன்று தென்னாட்டு காங்கரஸ் குடைசாய்ந்து கிடக்கிறது. தமிழ் மாகாண காங்கரஸ் காரியக்கமிட்டியார் ராஜிநாமாச் செய்ய வேண்டுமென்று காங்கரஸ்காரர்களே கிளர்ச்சி செய்கிறார்கள். தலைவரை வீழ்த்தவேண்டும் என்றும் ஒரு கிளர்ச்சி நடை பெற்று வருகிறது.

காங்கரஸ் ஆதிக்கம் பெற்ற ஜில்லா போர்டுகளில் எல்லாம் ஊழல்கள் நிறைந்து விட்டன. ஜில்லா போர்டுகளில் காங்கரஸ் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டிருக்கிறது.

காங்கரஸ்காரர்களின் ஜில்லா போர்டு நிர்வாகத்தைப் பரிசீலனை செய்ய நியமிக்கப்பட்டிருந்த கமிட்டியார் “நிர்வாகம் ரொம்ப ரொம்ப ஒழுங்கு” என அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். எனினும் அவ்வறிக்கையை காங்கரஸ்காரர்களே எதிர்க்கிறார்கள்.

வேலூர் ஜில்லாபோர்டு இடைத்தேர்தலில் காங்கரஸ் பேரால் அபேட்சகர்களாய் நிற்கக் கூட ஆட்கள் முன் வரவில்லை.

சென்னை நகரசபைத் தேர்தல் சம்பந்தமான ஊழல்களைக் கண்டிக்க ஒரு விசேஷ காங்கரஸ் கமிட்டியார் முயற்சி செய்து வருகிறார்கள். காங்கிரஸ் அபேட்சகர்களுக்கு எதிரிடையாக காங்கிரஸ்காரர்களே பிரசாரம் செய்து வருகிறார்கள்.

காங்கரஸ் சீரழிந்து மானங்கெட்டு மதிப்பிழந்து கிடப்பதற்கு இவ்வளவும் போதாவா!

இந்த நிலை மேலும் இப்படியே இருந்து கொண்டிருக்குமானால் வரப் போகும் பொதுத் தேர்தலில் காங்கரசுக்குச் சாவுமணி அடிக்கப் போவது உறுதி.

ஆகவே தென்னாட்டு காங்கரஸ் பிராமணர்கள் பண்டித ஜவஹர்லால், பாபு ராஜேந்திர பிரசாத், சர்தார் படேல் முதலியவர்களை தென்னாட்டுக்கு வரவழைத்து பாமர மக்களை ஏமாற்ற ஏற்பாடு செய்து விட்டார்கள். இம்மாத இறுதியில் ராஜேந்திரரும் படேலும் வரப்போகிறார்களாம்.

அக்டோபர் முதல் வாரத்தில் பண்டித ஜவஹர்லால் வரப்போகிறாராம்.

இவர்கள் வருவதைப்பற்றியும் பிரசாரம் செய்வதைப் பற்றியும் நாம் கவலைப்படவில்லை. ஏன்? தென்னாட்டில் சுற்றுப் பிரயாணம் செய்யவும் பிரசாரம் செய்யவும் எல்லாருக்கும் உரிமை யுண்டு.

ஆனால் அவர்களது பொய்ப் பிரசாரத்தினால் தென்னாட்டார் ஏமாந்து விடக் கூடாதென்று இப்பொழுதே எச்சரிக்கை செய்வதுடன் காங்கரஸ்காரர் அட்டூழியங்களை ஜவஹர்லால் கம்பெனியார் பார்வைக்குக் கொண்டுவர தேவையான முயற்சிகள் செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்நாடு காங்கரஸ் காரியக்கமிட்டியார் அட்டூழியங்களையும் அயோக்கியத்தனங்களையும் சென்னை காங்கரஸ்காரர் சிலர் பண்டித ஜவஹர்லாலுக்குத் தெரிவித்திருக்கிறார்கள். தோழர் ஜவஹர்லால் சென்னைக்கு வரும்போது அவரைப் பேட்டி கண்டு தென்னாட்டுக் காங்கரஸ்காரர் அயோக்கியத்தனங்களைத் தெரிவிக்க காங்கரஸ்காரர் சிலர் முயற்சி செய்வதாயும் தெரியவருகிறது. ஜவஹர் கம்பெனியார் சுற்றுப்பிரயாணம் செய்வதைப் பற்றியோ பிரசாரம் செய்வதைப் பற்றியோ நாம் அஞ்சவில்லை. ஆனால் சத்தியமூர்த்தி கம்பெனியாரின் வார்த்தைகளை ஜவஹர் கம்பெனியார் நம்பி உண்மை நிலையை உணராமல் ஏமாந்து போகும்படி தென்னாட்டார் பார்த்துக்கொண்டிருக்கக் கூடாதென்றே நாம் எச்சரிக்கை செய்கிறோம்.

குடி அரசு துணைத் தலையங்கம் 13.09.1936

You may also like...