பொள்ளாச்சி, கோவை சுற்றுப் பிரயாணம்

 

தலைவர் அவர்களே! தோழர்களே!

அடுத்த வருஷ ஆரம்பத்தில் அமுலுக்கு வரப்போகும் சீர்திருத்தத்தில் பல பதவிகளும், அதிகாரங்களும் கொழுத்த சம்பளங்களும் கிடைக்கப் போகின்றன என்பதில் சந்தேகம் வேண்டியதில்லை.

அவற்றை யார் அனுபவிப்பது என்பது பார்ப்பனர்கள் மாத்திரமா அல்லது எல்லா மத வகுப்பாரும் விகிதாச்சாரமா என்பதுதான் இப்போது அரசியல் கிளர்ச்சியாக இருந்து வருகிறது. அதிலும் இத்தனை நாள் மகா தியாகிகள் போல் நடித்து வந்த காங்கிரஸ்காரர்கள் இப்போது புது அரசியல் சீர்திருத்தம் வெளியானவுடன் எப்படியாவது அந்தப் பதவிகளைப் பெற்று அதிகாரம் செய்து சம்பளங்களை அடையவேண்டும் என்கின்ற ஆத்திரத்தில் தலைகால் தெரியாமல் குதிக்கிறார்கள்.

என்ன செய்தாவது எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றியாவது பதவி பெறவேண்டியது இன்று காங்கிரசின் ஜீவாதாரமான கொள்கையாக இருக்கிறது. காங்கிரஸ்காரர்கள் பதவி மோகத்தில் தங்களுடைய கொள்கை, நாணயம் எல்லாவற்றையும் காற்றில் பறக்க விட்டு விட்டு “பிசாசு”கள் போல் பதவி ஆசைபிடித்து அலைகிறார்கள்.

உத்தியோகத்துக்கும் பதவிக்கும் சம்பளத்துக்கும் ஆசைப்பட யாருக்கும் உரிமை உண்டு என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் நாணயத்துடன் ஆசைப்படவேண்டாமா என்றுதான் கேட்கிறேன். மத விகிதாச்சாரம், வகுப்பு விகிதாச்சாரம் பிரித்து அனுபவிப்பது என்று காங்கிரசுக்காரர்கள் ஒரு வார்த்தையில் ஒப்புக்கொள்ளுவதானால் காங்கிரசே இந்த நாட்டு அரசியல் கிளர்ச்சிக்கு தலைமை வகித்து நடத்துவதில் எனக்கு ஆக்ஷேபணை கிடையாது.

அல்லது மத பிரிவும் வகுப்பு பிரிவும் இந்தியாவில் இல்லாமல் போகும்படி சட்டம் செய்வோம் என்று காங்கிரஸ் ஒப்புகொள்வதா யிருந்தாலும் காங்கிரசே இந்திய மக்களுக்கு பிரதிநிதித்துவ சபையாய் இருப்பதில் எனக்கு ஆக்ஷேபணை இல்லை. அந்தப்படி இரண்டும் இல்லாமல் பல மதங்களையும் பல வகுப்புகளையும் காப்பாற்றுவதாய் வாக்கு அளித்துவிட்டு அவற்றில் மதம் காரணமாகவும் வகுப்பு காரணமாகவும் இருந்துவரும் உயர்வு தாழ்வுகளைப் போக்க சட்டம் செய்வதில்லை என்றும் உறுதிமொழி கூறிவிட்டு மதஉரிமை கூடாது, வகுப்பு உரிமை கூடாது என்றால் அது எப்படி யோக்கியமான காரியம் ஆகும்? என்று கேட்கிறேன். “இது தேசீயத்துக்கு விரோதம்” “அது சுயராஜ்யத்துக்கு விரோதம்” என்று சொல்லுவதாலேயே ஒவ்வொரு மதக்காரனும் வகுப்புக்காரனும் அரசியல் ஆதிக்கத்தையும் அதனால் வரும் பயனையும் அந்நிய மதக்காரனுக்கும் அந்நிய வகுப்புக்காரனுக்கும் விட்டுக் கொடுத்துவிட்டு ஏமாளியாய் இருப்பானா என்று கேட்கின்றேன். ஒரு நாட்டின் தேசீயத்துக்கு பல மதங்களும் பல வகுப்புகளும் பிரிவுகளும் இருப்பது விரோதமில்லை என்றால் பல மதங்களுக்கும் பல வகுப்புகளுக்கும் உரிமை இருப்பது மாத்திரம் எப்படி கெடுதியாய் விடும் என்று கேட்கின்றேன்.

தேசீயம் என்றால் உத்தியோகமும் பதவியும்தானா என்று சிலர் கேட்கிறார்கள். இவர்கள் தெரிந்து கேட்கிறார்களோ, தெரியாமல் கேட்கிறார்களோ என்பது ஒரு பக்கம் இருந்தாலும் இதுவரை நடந்துவந்த தேசீய கிளர்ச்சியில் உத்தியோகம், பதவி, சம்பளம் என்பவை அல்லாமல் வேறு என்ன இருந்தது? அல்லது வேறு என்ன கிடைத்தது? அல்லது வேறு எதற்கு ஆக தேசியக்கிளர்ச்சி பாடுபட்டது? பாடுபடப்பட்டது? என்று கேட்கின்றேன். காங்கிரசுக்கு வயது 50 ஆனாலும் எனக்கு காங்கிரசின் யோக்கியதை 30, 40 வருஷங்களாகவே தெரியும்.

காங்கிரசின் கோரிக்கையே உத்தியோகப் பிச்சையாகவும் சம்பளத்துக்கு கெஞ்சுவதாகவும் தான் இருந்துவந்தது. அதற்கு ஆக ராஜபக்தியும் ராஜவிஸ்வாசமும் இருப்பதாகவும் காட்டுவதாகவும் தீர்மானம் செய்வதுதான் காங்கிரசின் முக்கிய வேலையாய் இருந்துவந்தது. இன்றும் ஒவ்வொரு உத்தியோகத்திலும் ஒவ்வொரு பிரதிநிதித்துவத்திலும் ராஜவிசுவாசப் பிரமாணம் செய்தே தீரவேண்டி இருக்கிறது. இந்த யோக்கியதையில் இருந்துவந்த காங்கிரசுக்காரர்கள் இன்று மகா தியாகிகள்போல் நடிப்பதைக் கண்டு யார் ஏமாறக்கூடும்? இது தகப்பன் வீட்டுப் பெருமையை தமயனிடம் சொல்லும் முட்டாள் தனம் போன்றதேயாகும்.

உத்தியோகங்களிலும் பதவிகளிலும் நாம் பார்ப்பனரல்லாதார் பங்கு கேட்க ஆரம்பித்த பிறகுதான் காங்கிரசுக்காரர் அது தேசீயத்துக்கு விரோத மென்றும் தேசத்துரோகம் என்றும் சொல்லி நம்மை ஏய்க்கப் பார்த்து அது முடியாமல் போனபின்பு இப்போது சிறிது காலமாய் பெரிய தியாகிகள்போல் நடித்து ஒத்துழையாமை என்றும், பஹிஷ்காரம் என்றும் பொதுஜனங்களை ஏமாற்றினார்கள். காங்கிரசுக்காரர்கள் எங்கே ஒத்துழையாமை செய்தார்கள்? எதை பஹிஷ்கரித்தார்கள்? என்பதை யோசித்துப்பாருங்கள்.

1922ல் ஒத்துழையாமை என்றார்கள். அப்போது பொது ஜனங்கள் செய்த தியாகம் என்பதைக்கொண்டு சிலர் சட்டசபை போகவும் மந்திரி பதவி பெறவும் ஆசைப்பட்டார்கள். தேசத்தில் அவர்களுக்கு ஆதரவு இல்லாததால் காங்கிரசு பெயரால் அல்லாமல் சுயராஜ்யக்கட்சி என்று ஒரு கட்சி ஏற்படுத்திக்கொண்டு அதன் மூலம் முயற்சித்தார்கள். அதிலும் தோல்வி அடைந்த பிறகு சற்று அடங்கிக்கிடந்து மறு தேர்தல் வரும் சமயம் மறுபடியும் அதேபோல் சட்டமறுப்பு, சத்தியாக்கிரக வேஷம் போட்டார்கள். அதுவும் பயன்படாமல் போய்விட்டது. ஆகவே 1922 முதல் இதுவரை காங்கிரசின் பேராலும் “அது செய்த தியாகத்தின்” பேராலும் அவர்களுக்கு எதிலும் வெற்றி இல்லாமற் போனதோடு பொதுஜன ஆதரவும் இல்லாமலே போய்விட்டது. இப்போது பொதுஜன ஆதரவு இருக்கும் என்று கருதி சட்டமறுப்பு, சத்தியாக்கிரகம், பஹிஷ்காரம், எதிர்ப்பு, முட்டுக்கட்டை எல்லாவற்றையும் கைவிட்டு விட்டு நாங்கள் ஒரு காலத்தில் தியாகம் செய்தோமென்று சொல்லிக்கொண்டு மாஜி தியாகிகள் பேரால் ராஜவிஸ்வாசப் பிரமாணம் செய்து பதவி அடைய பார்க்கிறார்கள். இதற்கு நாம் ஏமாந்து விடக்கூடாது. ஏய்ப்பவர்களுக்கு இடம் கொடுப்பது என்பது சிறிதும் ஒப்புக் கொள்ளக்கூடாத காரியமாகும்.

ஜில்லா போர்டு, முனிசிபாலிட்டி ஆகிய தேர்தல்களில் சிலர் பணச் செலவுக்கு பயந்தும் காங்கிரஸ் தொல்லையில் இருந்து தப்பித்துக்கொள்ள முயற்சித்தும் காங்கிரசின் பேரால் நின்று வெற்றிபெற்றதாலேயே காங்கிரசுக்கு தலைசுற்றும்படியான அகம்பாவமும் ஆணவமும் ஏற்பட்டுவிட்டது. அந்த அகம்பாவமும் மூன்றேநாளில் ஒடுங்கிவிட்டது. இன்று ஸ்தல ஸ்தாபன “வெற்றி”யின் பயனாய் காங்கிரஸ்காரர்களின் காரியம் இந்தியா பூராவும் சிரிப்பாய்ச் சிரிக்கிறது.

இப்படிப்பட்ட காங்கிரசார் நம்மை குறைகூறுகிறார்கள். உண்மையிலேயே நம்மீது எவ்வித தப்பிதமும் சொல்ல இவர்களுக்கு வழி இல்லை. ஆனாலும் பாமரமக்களிடம் முட்டாள் தனமாக உளறுகிறார்கள். இதன் மூலம் காங்கிரசுக்காரருக்கு அரசியல் ஞானம் இல்லை என்பதை காட்டிக் கொள்ளத்தான் முடிந்ததே ஒழிய மற்றப்படி நம்மை சிறிதாவது அசைக்கக்கூட முடியாமல் போய்விட்டது.

காங்கிரசுக்காரர்களால் ஏற்படுத்தப்பட்ட பதவியையும் உத்தியோகத் தையும் சம்பளத்தையும் தான் ஜஸ்டிஸ் கட்சியார் பெறுகிறார்களே ஒழிய ஜஸ்டிஸ்கட்சியார் தாங்களாக தங்கள் சுயநலத்துக்கு என்று எதையும் உண்டாக்கிக் கொள்ளவில்லை.

காங்கிரசுக்காரர் உண்மையாகவோ (அல்லது தாங்கள் ஆசைப்பட்டாலும் தங்களுக்குக் கிடைக்கமாட்டாது என்று கருதி) பொய்யாகவோ தங்களால் நடத்த முடியாது என்றும், தாங்கள் ஏற்க மாட்டோம் என்றும் சொன்ன சீர்திருத்தத்தை ஏற்று தங்களால் கூடுமானவரை 15 வருஷ காலம் பொறுப்பேற்று நடத்தி இருக்கிறார்கள்.

ஜஸ்டிஸ்கட்சியார் அந்த சீர்திருத்தத்தை ஏற்க மாட்டேன் என்று சொல்லி இருந்தால் என்ன ஆயிருக்கும் என்பதை யோசித்துப்பாருங்கள். அப்பொழுதே மிதவாதிகள் என்கின்ற ஒரு கூட்டம் காங்கிரசில் சேராமலும் பஹிஷ்காரத்தை ஆதரிக்காமலும் சர்க்காருக்கு உதவி செய்து வந்ததோடு காந்தியாரையும் கைதி செய்து கடினமான அடக்குமுறை கொண்டு காங்கிரசை அடக்கும்படி சர்க்காருக்கு யோசனை சொல்லிவந்திருக்கிறார்கள். மற்ற மாகாணங்களிலும் ஜஸ்டிஸ்கட்சி இல்லாதிருந்தும் அங்கு மிதவாதிகள் சீர்திருத்தத்தை ஏற்று நடத்திக் கொடுத்திருக்கிறார்கள். அதுபோலவே சென்னை மாகாணத்திலும் ஜஸ்டிஸ்கட்சியார் மந்திரிபதவி ஏற்காதிருந்தால் மிதவாதிகள் என்னும் பேரால் பார்ப்பனர்களே மந்திரிகளாகி இருப்பார்கள். இந்த பதினைந்து வருஷ காலத்தில் சர்வம் பார்ப்பன மயம் ஜகத் என்பதாக எல்லா உத்தியோகம், பதவி, பட்டம் சகலமும் பார்ப்பனர்களுக்கே போய் பார்ப்பனரல்லாதார், முஸ்லீம்கள், தாழ்த்தப்பட்டவர்கள் ஆகியவர்கள் நிலை அதோகதி ஆகி இருக்குமே ஒழிய சுயராஜ்யம் வந்திருக்குமென்பதோ, வெள்ளைக்காரர்கள் இந்தியாவைக் காலிசெய்துவிட்டு ஓடி இருப்பார்கள் என்பதோ அடியோடு அயோக்கியத்தனமான பேச்சேயாகும்.

சென்ற காரியம் எப்படியோ இருக்கட்டும் என்றாலும் இனி செல்லப் போகும் காரியங்களில் காங்கிரசு சாதிக்கப்போவது என்ன என்று கேட்கின்றேன்.

காங்கிரசுக்காரர்கள் வரப்போகும் சீர்திருத்த தேர்தலில் சட்டசபைக்கு போகவேண்டும் என்று மாத்திரம் தீர்மானித்துக் கொண்டார்களே தவிர அங்குபோய் என்ன செய்வது என்பதைக் கூற அவர்களுக்கு யோக்கியதை இல்லாமல் போய்விட்டது. ஏன், இவர்கள் நாணயஸ்தர்களானால் உள்ளது சொல்லலாமல்லவா? மூடிவைப்பானேன்? சட்டசபையில் போய் இன்னது செய்கிறோம் என்று சொல்லாமல் ஓட்டுக்கேட்பதென்றால் ஓட்டர்களை இவர்கள் எவ்வளவு கேவலமாய் மதித்து இருக்கிறார்கள் என்பது விளங்கவில்லையா? சட்டசபையில் காங்கிரசுக்காரர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பது கூடத் தெரியாமல் ஓட்டர்கள் ஓட்டுச் செய்வார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு மூடர்களாகவும், சுயமரியாதை அற்றவர்களாகவும் இருக்கிறார்கள் என்று கருதியிருக்க வேண்டும் என்று கேட்கிறேன்.

காங்கிரசுக்காரர்களின் நாணயத்திலும் அரசியல் ஞானத்திலும் நம்பிக்கை வைத்து ஓட்டுச் செய்யலாம் என்றால் இந்த பதினைந்து வருஷ காலமாக காங்கிரஸ்காரர்கள் எந்த கொள்கையிலாவது திட்டத்திலாவது புத்திசாலித்தனமாகவோ நாணயமாகவோ நடந்தார்கள் என்று யாராவது சொல்லக் கூடுமா என்று பந்தயங்கட்டி கேட்கிறேன்.

ஆதி முதல் இவர்கள் கொள்கை என்ன ஆயிற்று? திட்டங்கள் என்ன ஆயிற்று? பொது ஜனங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆயிற்று? தேர்தல் காலங்களிலும் ஒவ்வொரு தேர்தலிலும் கொடுத்த வாக்குறுதி என்ன ஆயிற்று? காங்கிரஸ் ஸ்தாபன விதிகள் என்னவாயிற்று? ஒரு வருஷத்தில் சுயராஜ்யம், பூரண சுயேச்சை, முட்டுக்கட்டை, பகிஷ்காரம் முதலிய பெரிய பெரிய வார்த்தைகள் சொல்லி மக்களை ஏய்த்து பணம் பிடுங்கினதுடன் மக்களுக்கு எவ்வளவு தொல்லை கொடுத்தார்கள்? அதனால் பொது மக்கள் பணம் எவ்வளவு நாசமாயிற்று? இவர்களுக்கு புத்திகற்பிக்க என்று அரசாங்கத்தில் நம் வரிப்பணம் எவ்வளவு வீணாயிற்று? இவைகளை யோசித்துப் பார்த்தால் காங்கிரசுக்காரர்களின் ஞானமற்ற தன்மையும், மக்களை ஏமாற்றும் தன்மையும் வெட்டவெளிச்சம் போல் விளங்கும். இப்படிப்பட்டவர்கள் ஜஸ்டிஸ் கட்சியைப் பற்றி விஷமப் பிரசாரம் செய்வது என்பது எவ்வளவு துணிகரமான காரியம் என்று பாருங்கள். அவர்களுடைய சகல ஆயுதங்களும் ஓய்ந்து போன பிறகு கூட்டத்தில் கலகம் செய்வதன் மூலம் தங்கள் வண்டவாளங்களை வெளியார் அறியாமல் செய்யப் பார்க்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை நான் இந்த காலித்தனத்துக்கு பயப்படு கிறவனல்ல. காங்கிரஸ்காரர்களில் ஒவ்வொரு காலியின் யோக்கியதையும், கூலியின் யோக்கியதையும் எனக்கு நன்றாய்த் தெரியும். நானும் ஒரு காலத்தில் கூலிகொடுத்துப் பார்த்தவன்தான். இதற்கு பயந்து ஓடுவது என்பது இதுவரை எங்கும் நடக்கவே இல்லை. அவர்கள் காலித்தனம் செய்த இடங்களில் எல்லாம் தோல்வியே அடைந்திருக்கிறார்கள். காலிகளின் செய்கையின் பலனை அவர்களின் தலைவர்கள் என்பவர்கள் தான் அனுபவித்து வருகிறார்களே ஒழிய அவர்கள் மிஞ்சிவிட்டதாகவோ கெடுதி ஏற்பட்டதாகவோ சொல்லமுடியாது.

இங்கு இன்று கனம் மந்திரியார் விஜயம் செய்து தலைமை வகித்தும் இங்கு விஷமம் நடப்பதை போலீசார் அனுமதித்து வருகிறார்கள். பார்ப்பனர்கள் போலீஸ் ஆபீசர்களாய் இருக்கும் ஊர்களில் எல்லாம் அனேகமாய் இப்படித்தான் நடக்கின்றது. அதிலும் இன்று போலீசார் எவ்வளவு அலட்சியமாய் நடக்கிறார்கள் பாருங்கள். இனி பார்ப்பன ராஜ்யமாகிவிட்டால் நாம் இந்த நாட்டில் இருக்க முடியுமா? நமது வரிப்பணம் தான் அவர்களது சம்பளம். 2000, 3000 பேர் கூடியிருக்கும் இந்த கூட்டத்திற்கு ஒரு அதிகாரி கூட வராமல் அதுவும் அரசாங்க மந்திரியார் வந்திருக்கும் கூட்டத்துக்கு ஒருவர் கூட வரவில்லையானால் அவர்கள் மற்ற காரியங்களில் தங்கள் பொறுப்புகளை கவனிப்பார்களா என்பதை நீங்களே யோசித்துப்பாருங்கள். 2, 3 கோடி ரூபாய் பொதுமக்கள் பணம் பாழாக்கப்பட்டு 15 வருஷமாய் நடந்த அரசியல் கிளர்ச்சியின் பயனாய் காங்கிரஸ்காரர்கள் கற்றுக்கொண்ட பாடம் இக்காலித்தனம் தான் என்பதல்லாமல் வேறு ஒரு காரியமும் இல்லை.

இன்றும் கூட நான் சொல்லுகிறேன். காங்கிரஸ்காரர்கள் யாரானாலும் சரி, மேடையில் ஏறி பொதுஜனங்கள் முன்னால் காங்கிரசினால் இந்த 15 வருஷகாலமாக அரசியல் துறையிலாகட்டும், சமுதாயத் துறையிலாகட்டும், பொருளாதாரத்துறையிலாகட்டும் இன்ன நன்மை ஏற்பட்டது என்று சொல்ல ஒருவருக்கும் யோக்கியதை இல்லை என்றே சொல்லுவேன். யாராவது சொல்லக்கூடியவர்கள் இருந்தால் வரட்டும் என்றே அறைகூவி அழைக் கிறேன். யாதொரு அரசியல் ஞானமும் இல்லாத வெறும் ஆட்கள் கூலியை வாங்கிக்கொண்டு மேடைஏறுவது, புராணம் படிப்பதுபோல் காந்தி எம்பெருமாள், முழங்கால் வேஷ்டிக்காரர், உலகம் போற்றும் உத்தமர், ஒண்ணுக்கு இருந்தால் பன்னீர் வாசம், ஜயிலில் அடைத்தால் வெளியில் வந்து விடுகிறார், டெல்லியில் மோட்டாரில் போனார், வைஸ்ராய் கை குவிக்கிறார், பட்டினி விரதம் இருந்தார் என்பன போன்ற வார்த்தைகளைச் சொல்லி மக்களை ஏய்ப்பதல்லாமல் அவரால் விளைந்த காரியம் இன்னது, அவர் புத்திசாலித்தனத்தால் கிடைத்த வெற்றி இன்னது என்று யாராவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றேன். பதில் சொல்ல யோக்கியதை யற்றவர்கள் காலிகளைத் தூண்டிவிட்டு “நீ ஏன் தாடி வைத்திருக்கிறாய்” என்று கேள்வி கேட்கச் சொல்லுவது, பிறகு அவன் மாட்டிக்கொள்வதானால் விட்டுவிட்டு ஓடிப்போவது ஆகிய இவைதான் காங்கிரஸ் பிரசாரமாய் இருக்கின்றதே ஒழிய நாணயமாய் யோக்கியமாய் பேசி பிரசாரம் செய்வதே காங்கிரஸ்காரரிடம் அருமையாகவே இருக்கிறது.

ஆகவே பொது மக்கள் எந்தக் கட்சியை ஆதரிப்பதானாலும் தங்கள் பகுத்தறிவை பயன்படுத்தி நடந்து கொள்ள வேண்டுமாய் வேண்டிக் கொள்ளுகிறோம்.

குறிப்பு: 21.08.1936 இல் பொள்ளாச்சியிலும் 22.08.1936 இல் கோவையிலும் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை.

குடி அரசு சொற்பொழிவு 30.08.1936

You may also like...