“ஏழைப் பங்காளர்”

சத்தியமூர்த்தி!

தீண்டாமையொழிப்பு காங்கரஸ் வாலாக்களுக்குக் கட்டிக் கரும்பாம். எளியோர் விடுதலை பால் சோறாம். கிரியாம்சையில் இவையாவும் வாய்ப்பந்தலாகவே இருக்கிறது.

700 மைல் தூரம் கால்நடையாக நடந்து பட்டினிப்பட்டாளம் கள்ளிக்கோட்டையிலிருந்து சென்னைக்குச்சென்றது. சட்டசபையில் நமது விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டுமென்பது அந்தப் பட்டாளத்தின் நோக்கம். “எதற்காக 700 மைல் தூரம் நடத்துவர வேண்டும்! ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும்! சட்டசபை மெம்பர்கள் மூலம் சமர்ப்பித்தால் போதுமே” என்றெல்லாம் சர்க்கார் காரணம் கூறிக்கொண்டார்களாம். சட்டசபை செல்ல பட்டாளம் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் ஏழைகளுக்காகப் பாடுபடும் காங்கரஸ் பிரதிநிதி அதிலும் தமிழ் மாகாண காங்கரஸ் கமிட்டித்தலைவர் தோழர் சத்தியமூர்த்தி என்ன செய்தார் தெரியுமா? உதவி வேண்டிய பட்டாளத்தின் வார்த்தைகளைத் தம் காதில் கூடப் போட்டுக்கொள்ள வில்லையாம். “உங்கள் கொள்கை எங்கள் கொள்கைக்கு மாறானது. காங்கரஸ் பேரால் உதவி செய்ய முடியாது. வேண்டுமானால் தர்மத்துக்காக ஒரு நாளைக்குச் சோறுபோடலாம். காங்கரஸ் மண்டபத்தில் தங்க இடம் தரலாம். சலாம் போய் வாருங்கள்” என ரத்னச் சுருக்கமாகப் பேசி முடித்துவிட்டாராம். பட்டினிப் பட்டாளத்தின் கொள்கை மாகாண காங்கரஸ் தலைவருக்கே பிடிக்கவில்லையானால் சென்னை சர்க்காருக்குப் பிடிக்கவா போகிறது? ஆனாலும் தோட்டி முதல் தொண்டமான் வரை இந்தியர் அனைவருக்கும் காங்கரஸே ஏக பிரதிநிதி ஸ்தாபனம் என்று சொல்லிக்கொள்ளப்படுகிறது. ஏழைகள் உதவி நாடிச் சென்றால் தமிழ் மாகாண காங்கரஸ் தலைவர் கையை விரிக்கிறார். அதைப்பார்த்து அழுவதா? சிரிப்பதா?

குடி அரசு துணைத் தலையங்கம் 06.09.1936

You may also like...