சமதர்மமும் முதலியாரும்
தோழர் கல்யாணசுந்தர முதலியார் அவர்கள் 131136ந் தேதி “நவ சக்தி”யில் நாயக்கர் என்ற தலைப்பில் ஈ.வெ. ராமசாமியை சில கேள்விகள் கேட்டு சில புத்திமதி கூறியிருக்கிறார். அதற்காக முதலியாருக்கு நன்றி செலுத்தி விடையளிப்போம். தோழர் முதலியார் அவர்கள் சர்.கே.வி. ரெட்டி நாயுடும், சர். மகம்மது உஸ்மானும், குமாரராஜா முத்தைய செட்டியாரும் செட்டிநாட்டில் சமதர்மத்தைத் தாக்கிப் பேசி இருக்கிறார்கள் என்றும் இம்மூவர் பேச்சைப் பார்த்த பின்பு ராமசாமியாரே நீர் ஜஸ்டிஸ் கட்சியிலேயே இருக்கப்போகிறீரா? அப்படியானால் உம்மை நம்பிய இளைஞர் நிலை என்ன? என்றும் கேட்டிருக்கிறார். ஆகவே இந்த மூன்று விஷயம் பதிலளிக்கப்பட வேண்டியதாய் இருக்கிறது. அதற்கு நாம் மகிழ்ச்சியோடு விடை பகருகிறோம். இக்கேள்விகள் கேட்டதை நல்லதொரு சமயத்தில் நமக்கு செய்யாமல் செய்த உதவி போல் கருதி விடை பகருகிறோம். இந்த இடத்தில் தோழர் முதலியார் அவர்கள் பிரயோகித்திருக்கும் சமதர்மம் என்பதற்கு பொருளென்ன? கடவுள், மோட்சம், ஆத்மா என்கின்ற விஞ்ஞானத்துக்கு அதீதப்பட்ட வார்த்தைகள் போன்ற...
