ஜவஹர்லால் நாடகம் சபாஷ் சென்னை!

தோழர் ஜவஹர்லால் சென்னை விஜயமானது தற்போது நடக்க இருக்கும் முனிசிபல் கார்ப்பரேஷன் எலக்ஷன் பிரசாரத்துக்கும் இனியும் ஒரு மாதத்துக்குள் நடக்கும் சில ஜில்லா போர்டு எலக்ஷன் பிரசாரத்துக்கும் பிப்ரவரி முதலில் நடக்கப் போகும் சென்னை சட்டசபை எலக்ஷன் பிரசாரத்துக்கும் ஆக பயன்படுத்திக் கொள்ளவும் மற்றும் அப்பிரசாரங்களுக்கு ஆக பொதுஜனங்கள் இடம் இருந்து பணம் திரட்டிக்கொள்ளவுமே அல்லாமல் வேறொன்றுக்குமாக அல்ல என்று எழுதி இருந்தோம்.

இதற்கு முன்னும் இதுபோலவே சென்ற வருஷத்திலும் ஜில்லாபோர்டு தேர்தல்கள் மும்முரமாய் நடந்துகொண்டிருந்த காலத்தில் தோழர் ராஜேந்திர பிரசாத் அவர்களை அழைத்து வந்து நமது பார்ப்பனர்கள் தங்கள் பிரசாரத்துக்கு அனுகூலம் செய்துகொண்டதோடு பணமும் ஏராளமாக வசூலித்துக் கொண்டார்கள் என்பதும் யாவரும் அறிந்ததேயாகும்.

அதுபோலவே இந்திய சட்டசபைத் தேர்தல் இருந்த காலத்திலும் நமது பார்ப்பனர்கள் தோழர் காந்தியாரை அழைத்து வந்து பிரசாரத்துக்கு அனுகூலம் செய்து கொண்டார்கள் என்பதும் யாவரும் அறிந்ததே.

ஆனால் தோழர் காந்தியார் வந்தபோது எலக்ஷனைப்பற்றி தனக்குக் கவலையே இல்லை என்றும் ஹரிஜனங்களுக்கு ஆக வந்தேன் என்றும் சொல்லி ஏமாற்றி விட்டுப் போனார். தோழர் ராஜேந்திரபிரசாத் அவர்களோ தனக்கு இங்கு எலக்ஷன் நடப்பதே தெரியாது என்றும், தான் காங்கிரஸ் கொள்கைப் பிரசாரத்துக்கு வந்தேன் என்றும் சொல்லி ஏமாற்றி விட்டுப் போனார்.

இந்த சமயம் அந்த ஏமாற்றுதல்களுக்கு இடமில்லாமல் போனதால் மக்கள் இனி ஏமாற மாட்டார்கள் என்று தெரிந்து விட்டதால் தான் வந்த காரியத்தின் இரகசியத்தை ஜவஹர்லால் வெளிப்படையாய் ஒப்புக்கொள்ள வேண்டியதாகி விட்டது.

அதாவது நாம் சென்ற வாரம் எழுதியது போலவே இங்கு தான் எலக்ஷன் பிரசாரத்துக்கு ஆகவே வந்ததாகவும், ஆதலால் தோழர்கள் சத்தியமூர்த்தி, அண்ணாமலை, குப்புசாமி கம்பினியார் எப்படிப்பட்ட அயோக்கியர்களை நிறுத்தினாலும் நிறுத்தப்படுபவர்கள் “குருடனானாலும் மொண்டி ஆனாலும்கூட ஆளைப்பார்க்காமல் ஓட்டு செய்யவேண்டும்” என்றும் சொல்லுகிறார்.

இதற்குமுன் சகல தேர்தல்களிலும் காங்கிரசின் பேரால் நிறுத்தப்பட்ட ஆட்களில் 100க்கு 75 பேர்கள் போல் கட்டுப்பாட்டுக்கு கட்டுப்படாதவர் களாகவும் துரோகம் செய்தவர்களாகவும் ஆகி நாணயத் தவறுதலாகவும் அயோக்கியத்தனமாகவும் நடந்துகொண்டதின் காரணமாகவே தோழர் ராஜகோபாலாச்சாரியார் ராஜிநாமா கொடுத்தும் “சுதேசமித்திரன்”, “இந்து”, “தமிழ்நாடு” முதலிய பத்திரிகைகள் கட்சிகளை பார்க்கக் கூடாது என்றும் ஆட்களின் யோக்கியதையைப் பார்க்கவேண்டும் என்றும் எழுதிய பிறகும், தோழர் ராஜகோபாலாச்சாரி போன்றவர்கள் ஸ்தல ஸ்தாபனங்களில் காங்கிரஸ் போட்டி போடுவது சரி ஆகாது என்று யோசனை சொல்லியும் மற்றும் பல காங்கிரசுகாரர்களே ஸ்தல ஸ்தாபன வேலைகளைப் பொறுத்தவரை காங்கிரஸ் திட்டத்திற்கு வேலை இல்லை என்று சொல்லியும் தங்கள் தோல்விக்கு பரிகாரம் தேடிக்கொண்டு இருக்க, இப்போது மறுபடியும் காங்கிரசின்பேரால் முன் நிறுத்தப்பட்ட ஆட்களைவிட மோசமான ஆட்களை நிறுத்தி வைத்துக் கொண்டு இப்போது காங்கிரசின்பேரால் மொண்டியை நிறுத்தினாலும் குருடனை நிறுத்தினாலும் அலியை நிறுத்தினாலும் ஓட்டுப்போடவேண்டியது தான் என்று சொன்னால் இப்படிப்பட்ட தலைவர் என்பவருக்கு பொறுப்போ, ஞானமோ இருக்கிறதாக யாராவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம்.

இந்த லட்சணத்தில் இப்படிப்பட்ட நபர்களை நிறுத்தி காங்கிரஸ்காரர் போட்டி போடும் எலக்ஷனுக்கு பொது ஜனங்கள் பணம் கொடுக்க வேண்டும் என்றும் சொல்லுகிறார் என்றால் பொது ஜனங்களை இந்தத் தலைவர் என்பவர் எவ்வளவு தூரம் அடிமுட்டாள் என்று கருதி இருக்கிறார் என்பது விளங்கவில்லையா என்று கேட்கின்றோம்.

இவற்றையெல்லாம் நன்றாய் ஆலோசித்தே நாம் ஜவஹர்லால் பண்டிதரைப் பஹிஷ்கரிக்க வேண்டியது அவசியம் என்று சொன்னோம்.

~subhead

பகிஷ்காரம்

~shend

அதற்கிணங்கவே சென்னைவாசிகள் ஜவஹர்லால் வந்திறங்கிய உடன் “ஜவஹர்லால் திரும்பிப்போ” “பார்ப்பன கங்காணியே திரும்பிப் போ” என்ற கோஷத்துடன் கறுப்புக் கொடி பிடித்து பஹிஷ்கரித்தது சபாஷ் சென்னை என்று சொல்லி பாராட்டக்கூடிய காரியமாகும்.

~subhead

பார்ப்பன பத்திரிகை கட்டுப்பாடு

~shend

கறுப்புக்கொடி பிடித்ததையும் திரும்பிப் போ என்ற கோஷத்தையும் சென்னை பார்ப்பனப் பத்திரிக்கைகளும் அவர்களுடைய அடிமைப் பத்திரிக்கைகளும் வெகு கட்டுப்பாடாக மறைக்க முயற்சித்தன என்றாலும், சில பத்திரிக்கைகள் தன்னையும் அறியாமல் உண்மைகளை வெளிப்படுத்தி விட்டன. அதாவது “சுதேசமித்திரன்” 6ந்தேதி பத்திரிக்கை 7வது பக்கம் 2வது கலம் போலீஸ் தடியடி என்னும் தலைப்பின் கீழ் “மூர்மார்க்கட்டுக்கு எதிரில் ஒரு தொண்டரை போலீசார் தடியடி அடிக்கவே” என்று எழுதி இருக்கிறது.

~subhead

செருப்பு பறப்பு

~shend

மறுபடியும் அதே பாராவில் “கூட்டத்தில் சிலர் கோபமடைந்து கற்களையும் செருப்புகளையும் எறிந்தனர். போலீசார் தடியாலடித்ததில் பலர் காயம்பட்டனர். ஒருவர் ஜனரல் ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டதாகச் சொல்லப்படுகிறது” என்றும் எழுதி இருக்கிறது. மற்ற பத்திரிக்கைகளிலும் “மெயில்” பத்திரிக்கை

“சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு எதிரில் சிலர் கறுப்புக்கொடி பிடித்து கூட்டமாக வந்தார்கள். கூட்டத்தில் பலர் அதை பிடுங்க முயற்சித்தார்கள்”

என்று எழுதி இருக்கிறது. மற்றும் “இந்து” பத்திரிக்கையிலும் கறுப்புக் கொடி ஊர்வலம் நடந்ததாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. “ஜஸ்டிஸ்” “விடுதலை”, “ஜனநாயகம்” ஆகிய பத்திரிக்கைகளில் விபரமாய் குறிப்பிடப் பட்டிருக்கின்றது. அதை மற்றொரு பக்கம் காணலாம்.

மற்றும் “ஊழியனி”லும் “ஒரு சிலர் துக்கக் குறியை காண்பிக்கும் நன்னோக்கத்துடன் கறுப்புக்கொடி பிடித்து மூர்மார்க்கட்டுக்கு கிழக்கே வந்தார்கள்” என்றும் “நவசக்தி”யில்

“பண்டிதர் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்ததும் கறுப்புக்கொடி காணப்பட்டது” என்றும் எழுதி இருக்கின்றன.

“தமிழ்நாடு” மாத்திரம் கறுப்புகொடி பற்றி அடியோடு ஒன்றுமே குறிப்பிடவில்லை.

இந்த பத்திரிக்கைகள் இவ்வளவு கட்டுப்பாடாய் உண்மையாக நடந்த விஷயத்தை சரியாய் வெளியிடாமலும் சில அடியோடு மறைத்தும் திரித்தும் விட்டதின் கருத்து இந்த விஷயம் வெளியானால் மற்ற ஊர்களிலும் இதுபோலவே நடந்துவிடுமே என்று கருதி எல்லோரும் கூடிப்பேசி மறைத்துக் கொண்டார்கள் என்றாலும் நடக்க வேண்டியது நடந்து விட்டது என்பதோடு இனியும் நடப்பதும் இதனால் குந்தகப்படப் போவதில்லை என்றே சொல்லலாம். ஏனெனில்,

மற்ற சம்பவங்களையும் கல் விழுந்ததையும் செருப்பு விழுந்ததையும் கள்ளுக்குடம் உடைக்கப்பட்டதையும் குறிப்பிடும்போது பகிஷ்காரம் தானாக வெளியாகித் தீரவேண்டியதாய் விட்டது. ஆகவே பூனை கண் மூடி பால் குடித்த கதைபோல்தான் மறைத்த விஷயம் முடிவு பெற்று விட்டது.

சுமார் 200 கறுப்புக்கொடிகளுக்கு மேலாகவே பிடிக்கப்பட்ட ஒரு பெரும் கூட்டம் ஊர்வலம் என்பதற்கு எதிரில் நின்று சென்ட்ரல் ஸ்டேஷனிலே இருந்தே “ஜவஹர்லால் திரும்பிப்போ” “பார்ப்பன கங்காணியே திரும்பிப்போ” என்ற கோஷத்துடன் பஹிஷ்கரித்திருந்தாலும் அக் கூட்டத்தை ஜவஹர்லால் தகவலுக்கு தெரியாமல் செய்ய பார்ப்பன வாலிபர்கள் பலர் பலாத்காரத்தில் இறங்கி கற்களை வீசி கொடிகளை பிடுங்க முயற்சித்தும் ஒன்றும் முடியாமல் பதிலுக்கு பதில் கற்களும் செருப்புகளும் பாணங்கள் போல் பறந்திருப்பதாகத் தெரிகின்றது. சில காங்கிரஸ் தொண்டர்களுக்கு தடிஅடியும் சில பார்ப்பனருக்கும் தொண்டர்களுக்கும் கல் அடியும் நடந்து ஜெனரல் ஆஸ்பத்திரிக்கும் சிலர் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் காணப்படுகின்றது. வழியில் சென்ற கள்ளுக் குடங்களும் உடைபட்டு பல தொண்டர்களுக்கு அபிஷேகமும் ஆனதாகத் தெரிகிறது. இந்த கலாட்டாவுக்கு காரணம் கறுப்புக்கொடியை பார்ப்பனர்கள் பிடுங்கி எறிய முயற்சித்ததே தவிர மற்றபடி காங்கிரஸ்காரர் அல்லாதவர்கள் நடத்தை அல்ல. எப்படி இருந்தாலும் இந்த விஷயத்தையே அடியோடு மறைப்பதற்காக “கேட் மூடியிருந்ததால் குழப்பமும் கலகமும் ஏற்பட்டது” என்று மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் சில பத்திரிகைகள் எழுதி பொது ஜனங்கள் கண்களில் மண் போடப் பார்த்தன. ஆனாலும் மூர்மார்க்கட்டுக்கு எதிரில் கலவரம் நடந்தது என்று “சுதேச மித்திரன்” பத்திரிகை எழுதி இருப்பதால் மூர்மார்க்கட்டுக்கு பக்கத்தில் கேட்டுகள் அடைபட இல்லாததால் அதன் புரட்டை ஒருவாறு உணர்ந்து கொள்ளலாம்.”

மற்றும் கறுப்புக் கொடியை காங்கிரஸ் தொண்டர்கள் பிடுங்கினதையும் அதனால் ஏற்பட்ட கலவரத்தால் போலீசார் சமாதானம் சொல்லி கேட்காததால் தடியடி பிரயோகம் ஆரம்பித்ததையும் அதைக்கண்டு பண்டிதர் ஜவஹர்லால் இறங்கி நடக்க ஆரம்பித்ததையும் அதற்குள் பார்ப்பனர் சமாதானம் சொல்லி கெஞ்சி மறுபடியும் அவரை வண்டியில் உட்கார வைத்ததையும் கொண்ட அனேக சம்பவங்கள் பார்ப்பனர்கள் தலையை தொங்க விட்டுக்கொள்ள வேண்டியதாகிவிட்டன.

~subhead

ஜவஹர் வண்டவாளம்

~shend

இவை ஒரு புறமிருக்க ஜவஹர்லாலின் யோக்கியதையை சற்று ஆராய்வோம்.

ஜவஹர்லால் சென்னைக்கு வந்ததால் அவர் வண்டவாளம் இன்னது என்று வெளுத்துப் போய்விட்டது.

“மெயில்” பத்திரிகை எழுதியபடி அவரை மக்கள் நினைத்துக் கொண்டிருந்ததற்கு நேர்மாறாகவே காணப்பட்டார் என்பது முழுதும் உண்மையாகிவிட்டது. பொதுவாக ஜவஹர் ஒரு அனுபவஞானமற்றவர் என்பதை நன்றாய் காட்டிக்கொண்டார் என்பதாக மற்ற “நவசக்தி”, “தமிழ்நாடு” முதலிய பத்திரிக்கைகளும் எழுதிவிட்டன.

வக்கீல் தொழிலில் கொள்ளை அடித்த பணத்தால் அவரது பெற்றோர்களின் பணத் திமிர் பிடித்த மனப்பான்மையால் செல்லப்பிள்ளையாக வளர்க்கப்பட்டவர்.

அதோடு கூடவே காந்தியாரின் சலுகையால் அளவு கடந்த விளம்பரப் படுத்தப்பட்டு வெறும் கம்பீரச் சனியனுக்கிடையே ஆணவத்துடன் வளர்ந்தவர்.

புஸ்தகப் படிப்பு அல்லாமல் அனுபவ அரசியல் ஞானம் சுட்டுப் போட்டாலும் புரிந்துகொள்ள முடியாதவர். சென்னையில் அவரது பேச்சுக்கள் முழுவதும் ஆணவமும் முட்டாள்தனமான உளறலும் நிறைந்து கிடந்தது என்பதைத்தவிர அனுபவ பூர்வமாக பயன்படத்தக்கதாக தற்காலப் போக்கில் செய்யக்கூடிய ஒரு வேலைத் திட்டமாக அல்லது விளங்கக்கூடிய ஒரு கொள்கையாக ஒரு வார்த்தையாவது தேடி எடுக்க அருகதை அற்றதாகவே இருந்தது.

தன்னைத்தவிர மற்றவர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்பதே அவர் பேச்சிலும் மூச்சிலும் நிறைந்து வழிந்தது என்று தான் சொல்ல வேண்டும். இதை “மெயில்” பத்திரிகை தனது உபதலையங்கத்தில் நன்றாக விளக்கி விட்டது.

~subhead

ஆத்திர வசவு

~shend

முதலாவது அவர் கண்ட கறுப்புக்கொடியின் ஆத்திரத்தைக்காட்ட பொதுக்கூட்டத்தில் ஜஸ்டிஸ் கட்சியை வைதிருக்கிறார். அதுவும் அறிவோடு வைய முடியாமல் போய்விட்டது. அதாவது “இங்கு ஜஸ்டிஸ்கட்சி என்று ஒரு கட்சி இருந்ததாய் வெகுநாளைக்கு முன் கேள்விப்பட்டேன். இப்போது இருக்கிறதோ இல்லையோ எனக்குத் தெரியாது” என்றார்.

மறுபடியும் “அடுத்தாப்போல் மறைகின்ற கட்சிகள் அதிகமாகச் சத்தம் போடும்” என்கிறார்.

அப்படிப்பட்ட கட்சி எது என்று கருதிச் சொன்னார் என்று பார்த்தால் ஜஸ்டிஸ் கட்சி இருக்கிறதோ இல்லையோ என்று கருதிச் சொன்னாரா? அல்லது அதன் பஹிஷ்காரத்தை நேரில் பார்த்ததைக் கொண்டு ஆத்திர மடைந்து சொன்னாரா என்பது வெளிப்படும். நிற்க,

~subhead

சமதர்மப் பல்லவி

~shend

சமதர்மமே சிறந்தது, அதுவே எல்லாவற்றிற்கும் மருந்து என்ற பல்லவியை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பாடிக் கொண்டே இருந்தார். அதற்குத் தன்னிடத்தில் இப்போது யாதொரு திட்டமும் இல்லை என்றும் ஒப்புக் கொள்கிறார். மறுபடியும் சமதர்மப்பேச்சு நாடு சுயராஜ்யம் அடைந்த பின்பு தான் பேசமுடியும் என்கிறார். மறுபடியும் ஏழ்மைக்கும் வேலையில்லாத் திண்டாட்டத்துக்கும் மருந்து சுயராஜ்யம் என்கிறார்.

~subhead

“சுயராஜ்யம்”

~shend

தீண்டாமை சுயராஜ்யம் கிடைத்தால்தான் ஒழியும் என்கிறார்.

இப்படியாக உளறிக் கொட்டி இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

சுயராஜ்ய நாடுகளிலும் ஏழ்மையும் வேலையில்லாத் திண்டாட்டமும் இருப்பதை இவர் அறியாதது இவன் ஞான சூன்யத்தையே காட்டுகிறது என்றுதான் சொல்லவேண்டியிருப்பதற்கு வருந்துகிறோம்.

சுயராஜ்யம் இருந்த காலத்தில் ஏற்பட்ட தீண்டாமையைத்தான் பிற ராஜ்யம் ஏற்பட்ட காலத்தில் சிறிது சிறிதாய் அழித்துவரப்படுகிறதே ஒழிய சுயராஜ்யம் இல்லாததால் தீண்டாமை ஏற்பட்டு விடவில்லை என்பதை பண்டிதர் உணரவில்லையோ அல்லது உணர்ந்தே பார்ப்பனக் கூலியாய் இருந்து மக்கள் கண்களில் மண்ணைப் போடப் பேசுகிறாரோ என்பது புரியவில்லை.

ஏழைகள் துயர் களைய சமதர்மமே வழி என்று சொல்லிவிட்டு சுயராஜ்யம் பெற்றால்தான் சமதர்மம் வரும் என்று சொல்லி தப்பித்துக் கொள்ளுகிறார்.

இப்போது உலகத்தில் சுயராஜ்யம், ஜனநாயகம், குடி அரசு என்பவைகள் உள்ள நாட்டில் எல்லாம் சமதர்மம் ஏற்பட்டு விட்டதா என்று கேட்கின்றோம். சுயராஜ்யம் இன்மையே சமதர்மத்துக்கு முட்டுக்கட்டையானால் சுயராஜ்யமுள்ள நாடுகளால் ஏன் சமதர்மம் ஏற்படவில்லை? என்று கேட்கின்றோம்.

ஆகவே சமதர்ம விஷயத்தில் தனக்கே புரியாத விஷயங்களைத் தட்டிப்பேச ஆளில்லாத இடத்தில் சண்டப்பிரசண்டமாய்க் கொட்டி குளறு கின்றார் என்றுதான் சொல்லவேண்டி யிருக்கிறது.

காங்கிரசைப் பலப்படுத்துங்கள் என்கிறார்.

காங்கிரஸ் ஏற்பட்டு 50 வருஷம் ஆயிற்று. ஜவஹரும் காந்தியாரும் காங்கிரசை 16 வருடங்கள் நடத்தியாய் விட்டது. 2, 3 கோடி ரூபாய் செலவாகி விட்டது. 10 ஆயிரக்கணக்கான வாலிபர்களைக் காலிப் பசங்களாக ஆக்கி ஆய்விட்டது. இவ்வளவு செய்தும்,

இன்றைய வரையில் காங்கிரசுக்கு கேவலம் தேர்தல்களுக்குக்கூட யோக்கியமான சுயமரியாதையுள்ள ஆட்கள் கிடைக்கவில்லை என்றால், கிடைத்த ஆட்களில் எல்லாம் 100க்கு 90 அயோக்கியர்களாக கிடைத்தார்கள் என்றால் காங்கிரசைப் பலப்படுத்தும் யோக்கியதை காந்தியாருக்கோ, ஜவஹருக்கோ, சத்தியமூர்த்தியாருக்கோ அல்லது அந்த ஸ்தாபனத்துக்கோ இருக்கிறதா என்று கேட்கிறோம்.

அந்நிய ராஜ்யத்தை வெள்ளைக்கார ஆட்சியை ஒரு கடுகளவாவது அசைக்கவாகிலும் காங்கிரசினிடமோ, காந்தியாரிடமோ, ஜவஹர்லாலிடமோ ஏதாவது ஒரு கொள்கை இருக்கிறது என்று யாராவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம். சுயராஜ்யம் என்பது ஒரு அர்த்தமற்ற வார்த்தை என்று ஜவஹர்லால் படத்திறப்பு விழாவாற்றப்பட்ட சி. விஜயராகவாச்சாரியார் அவர்களே சொல்லிவிட்டார். இதுவரை யாரும் அதற்கு பதில் சொல்லவில்லை.

இப்படி இருக்க இனியும் சுயராஜ்யம் சுயராஜ்யம் என்று மக்களை ஏமாற்றுவது யோக்கியமா?

~subhead

சீர்திருத்தம் உடைப்பது

~shend

சீர்திருத்தத்தை உடைக்க வேண்டியது தங்கள் கடமை என்று பேசுகிறார். உடைக்க முடியுமா? அதற்கு திட்டம் என்ன என்பதை ஜவஹர்லால் எங்காவது சொல்லி இருக்கிறாரா என்று பாருங்கள்.

சட்டசபைகளைக் கைப்பற்றினால் சீர்திருத்தம் எப்படி உடைக்கப்பட முடியும் என்று கேட்கிறோம். சட்டசபைக்கு உள்ள அதிகாரம் தெரிந்திருந்து தான் ஜவஹர் இப்படிப் பேசுகிறாரா அல்லது மக்களை ஏய்த்து தன்னை தலைவர் என்று அழைத்து ஊர்வலம் நடத்துகிற ஆட்களுக்கு ஓட்டு வாங்கி கொடுக்க இப்படி பேசுகிறாரா என்பதை பொது ஜனங்களே உணரட்டும் என்று விட்டுவிடுகிறோம்.

சட்டசபைக்கு போவது அடிமைத்தனம் என்று இவரே சொன்னார். இப்போது சட்டசபைக்குச் செல்லலாம், மந்திரி பதவி ஏற்கக்கூடாது என்கிறார்.

மந்திரி பதவி ஏற்பதானது ஒத்துழைப்பது, சர்க்காருக்கு அடிமை ஆவது என்கிறார்.

ஆனால் இவர் கூடவே நிழல் போல் திரிந்து மக்களை ஏமாற்றி வரும் மூர்த்தியார் “பதவி ஏற்கவேண்டும். இதை மாற்றிக்கொள்ள என்னால் முடியாது” என்று உடனுக்குடன் சொல்லி விடுகிறார். இவருக்கு பதில் சொல்ல ஜவஹர்லாலுக்கு தைரியம் இல்லை.

~subhead

காங்கிரஸ் கட்டுப்பாடு

~shend

இந்த லக்ஷ்ணத்தில் காங்கிரசில் பலமான கட்டுப்பாடு இருக்கிறதாம். இன்னும் பலமான கட்டுப்பாடு வேண்டுமாம். இது ஒரு மானங்கெட்ட பல்லவியாகும். டாக்டர் சுப்பராயன் காங்கிரசுக்கு “துரோகம்” செய்தவர் என்று தீர்ப்பளிக்கப் பட்டவர். இப்போது சமீபத்தில் அவர் காங்கிரசில் சேர்த்துக் கொள்ளப்பட்டார் என்பது மாத்திரமல்லாமல் அவருக்கு மந்திரி வேலை கொடுப்பதாகவும் வாக்களிக்கப்பட்டாய் விட்டது. அடுத்த காங்கிரஸ் கமிட்டி தேர்தலில் அவரே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு தலைவராகவும் ஆக்கப்படப் போகிறார். அதற்காக இப்பொழுதிருந்தே ஏஜண்டுகள் வேலை செய்கிறார்கள்.

எனவே காங்கிரசுக்கு கட்டுப்பாடு உண்டா? கட்டுப்பாடாவது ஒரு பக்கம் தொலைந்து போகட்டும், காங்கிரசுக்கு மானமாவது உண்டா என்று தான் கேட்கின்றோம்.

~subhead

புகார்கள்

~shend

தோழர் ஜவஹர்லால் பெரிய தலைவர் என்று கருதி காங்கிரஸ் தொண்டர்கள் 500 பேர் கையொப்பமிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி யோக்கியதையைப் பற்றியும் தலைவர் சத்தியமூர்த்தி யோக்கியதையைப் பற்றியும் அவருக்குள்ள கட்டுப்பாடும் ஒழுக்கமும் நாணையமும் அற்ற தன்மையைப் பற்றியும் புகார் விண்ணப்பம் கொடுத்திருக்கிறார்கள். அதை வாங்கி குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டார்.

காங்கிரசுக்கு தன் மனச்சாட்சிக்கும், கொள்கைக்கும், சமூகத்துக்கும் துரோகமாய் நின்று தொண்டாற்றின தோழர் தாவுத்சா சாயபு அவர்களை நட்டாற்றில் விட்டு விட்டு அவரிடமே தங்கள் சூழ்ச்சியைக் காட்டி உனக்கும் பெப்பெப்பே என்று கையை விரித்து விட்டார் தோழர் சத்தியமூர்த்தி. அதைப்பற்றி அவரும் ஒரு முழு நீளம் பிராது கொடுத்திருக்கிறார். திருச்சி முனிசிபாலிட்டியில் காங்கிரசுக்கு “துரோகம்” செய்த தலைவருக்கு காங்கிரஸ் மெம்பர்கள் உதவி செய்துகொண்டு இருக்கிறார்கள். இவைகள் எல்லாம் காங்கிரசுக்குக் கட்டுப்பாடாம்.

எனவே சிறு குழந்தைகள் பெரிய ஆள்களுக்குப் பூச்சாண்டி காட்டுவது போல் ஜவகர் தமிழ் நாட்டில் பூச்சாண்டி காட்டுகிறார். இதைப் பார்க்கிறபோது தோழர் மாளவியாவை மலையாளத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஞாபகத்தில் வருகிறது.

அதாவது ஒரு கூட்டத்தில் மாளவியாஜி ராமாயண சுலோகம் எடுத்துச் சொல்ல ஆரம்பித்தபோது கேரள தொண்டர்கள் “மாளவியாஜீ! நாங்கள் ராமாயணத்தில் ஆ.அ., படித்திருக்கிறோம். எங்களிடத்தில் தாங்கள் அ.ஆ.இ.ஈ. கற்றுக்கொடுக்க நினைப்பது, உங்களுக்கு ரயில் சார்ஜுக்கு கொடுத்த பணம் வீணாவதல்லால் நேரக்கேடுமாகின்றது” என்று சொன்னார்கள். அதுபோல ஜவஹர்லால் அவர்கள் தமிழ்நாட்டில் வந்து தமிழ் மக்களிடம் காங்கிரஸ் பெருமையையும் காங்கிரசு கொள்கையையும் காங்கிரசு கட்டுப்பாடும் பேசுகிறார் என்றால் இது அண்ணனிடம் தங்கை தகப்பன் வீட்டுப் பெருமை பேசுவதுபோல் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது.

காங்கிரசுக்கு தந்திரமும் சூழ்ச்சியும் ஏமாற்றுப் பிரசாரமும் சொல்லிக் கொடுத்தவர்கள் தமிழ் நாட்டவர்கள். அவர்கள் பித்தலாட்டத்தாலேயே காந்தியும் ஜவஹரும் மாளவியாவும் பட்டேலும் ஆகிய கம்பெனியார்கள் தலைவர்களாக முடிந்தது.

அப்படி இருக்க இங்கு வந்து தமிழரையே ஏமாற்றப் பார்த்தால் என்ன நடக்கும் என்பது ஜவஹருக்கு அனுபவ ஞானம் இல்லாமையால் விளங்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

நேற்று ஆனைமலை பிரசங்கத்தில் தோழர் சத்தியமூர்த்தியார் ஜவஹர்லாலைப் பற்றி சொன்னதை மக்கள் அதற்குள் மறந்திருக்க முடியுமா என்று யோசித்துப் பாருங்கள்.

“ஜவஹர்லால் கொள்கைக்காக அவருக்கு தலைமை ஸ்தானம் கொடுக்கவில்லை. அவர் குடும்ப தியாகத்துக்காக கொடுக்கப்பட்டது” என்றார். மற்றும் “ஜவஹர் கொள்கையை நான் ஒப்புக் கொள்ள வில்லை” என்றார். ஆகவே தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர், ஜவஹர்லாலை எப்படி மதிக்கிறார் என்னமாய் நடத்துகிறார் என்பது இதிலிருந்து விளங்கும். காங்கிரசுக்கு (பார்ப்பனர்களுக்கு) யாராயிருந்தாலும் சரி, தங்கள் அடிமைகளாய் இருந்தால், தங்களுக்கு பயன்படுபவர்களாய் இருந்தால் அதுவரை தலைவர் என்றும் தேசபக்தர் என்றும் அழைக்கப்படுவதும் சமயம் தீர்ந்த உடனே காலை வாரி அடிப்பதும் பரம்பரை வழக்கம். ஆகவே ஜவஹர்லாலை ஆகட்டும், அல்லது குப்புசாமி கிருஷ்ணசாமி பாரதி கம்பெனியாரை ஆகட்டும் பார்ப்பனர்கள் விளம்பரப் படுத்துவதில் நமக்கு அதிசயமொன்று மில்லை.

~subhead

கொள்கை முரண்

~shend

தவிர இன்று இவ்வளவு பதினாயிரக்கணக்கான மக்களுக்கு ஞானோபதேசம் செய்கிற இதே ஜவஹர்லால் அவர்கள் காந்தி இர்வின் ஒப்பந்தத்தை ஏன் ஆதரித்தார் என்பதற்கு ஏதாவது சமாதானம் சொன்னாரா? அப்படி ஆதரித்தது நேர்மைதான் என்று சொல்ல வருவாரானால் இண்டர் நேஷனல் ஆண்டி இம்பீரியலிஸ்ட் அசோசியேஷனில் இருந்து அதாவது ஏகாதிபத்திய எதிர்ப்பு உலக சங்கத்தில் இருந்து இவரை ஏன் விலக்கினார்கள் என்பதற்கு காரணம் சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம்.

நமது மக்களில் பெரும்பான்மையோருக்கு தங்கள் புத்தியைக் கொண்டு ஆலோசிக்கும் சக்தியை வளர விடாமல் செய்து விட்டதாலும் பார்ப்பனர் விளம்பரமே நமது நாட்டில் செல்வாக்குப் பெற்று விட்டதாலும் ஜவஹர்லால் போன்ற பொக்கு சரக்கெல்லாம் இவ்வளவு கிராக்கியாய் செலாவணியாக இடம் ஏற்பட்டுவிட்டது. ஜவஹர்லால் தனது சமதர்மத்துக்கு ஆளும் வகுப்பு என்று ஒன்றும் ஆளப்படும் வகுப்பு என்று ஒன்றும் இருக்கக்கூடாது என்பதுதான் அருத்தம் என்று சொல்லுகிறார்.

இதை ஒழித்துவிடுவது சுலபத்தில் முடியக்கூடியக் காரியமல்ல; அப்படி ஒழித்து விட்டாலும் உலகக் கஷ்டம் ஒழிந்துவிடாது என்று உறுதியாய்ச் சொல்லுவோம். மேல்நாடுகளில் இப்படி இரண்டு வகுப்பு இல்லை. அப்படி இருந்தும் மனித சமூகத்தின் கஷ்டம், ஏழ்மை விலகி விடவில்லை.

ஆதலால் நாம் சொல்லும் சமதர்மம் அதுவல்ல. பாடுபடும் வகுப்பு என்று ஒன்றும் அந்தப்பாட்டின் பயனை அனுபவிக்கும் வகுப்பு என்று ஒன்றும் இருக்கக்கூடாது என்று சொல்லுகிறோம். அப்போதுதான் மனித சமூக ஏழ்மையும் குறையும் நீங்கும் என்கிறோம்.

அப்படியானால் முதலில் பார்ப்பனீயம் ஒழிய வேண்டும், தீண்டாமையும் ஒழிய வேண்டும். இதற்கு ஜவஹர்லால் ஒப்புக்கொள்ளுகிறாரா? ஒப்புக் கொண்டால் இவரது தலைமை ஸ்தானமும், தியாகப் பெருமையும் அரை நிமிஷம் பார்ப்பனர்கள் இடம் நிற்குமா என்று யோசித்துப் பாருங்கள்.

~subhead

பாஷை பரிகாசம்

~shend

மற்றும் பாஷை விஷயத்தில் தமிழ் பாஷையை பரிகசித்து தோழர் ஜவஹர் பேசினாராம். உண்மையில் கலப்பற்ற தமிழ் ரத்தம் தங்கள் உடலில் ஓடுகிறது என்று நினைத்துக் கொண்டு அங்கிருந்த பல தமிழ் மக்களும் பார்ப்பனர்கள் கூட சேர்ந்து சிரித்தார்களாம். அவர்களைப்பற்றி நாம் ஆச்சரியப்படவில்லை.

வேறு எந்த எந்த அருமையான இன்றியமையாத குணங்களையும் விற்றுவிட்டு பார்ப்பனர்கள் பின்னால் வாலைத் தூக்கி பிடித்துக்கொண்டு திரியும் கூலித்தமிழ் மக்களுக்கு தமிழ் பாஷையை குறைகூறினதற்கு ரோஷம், சொரணை வரும் என்று எந்த மூடன் தான் எதிர்பார்க்க முடியும்?

~subhead

இதுவும் ஒரு நன்மைக்கே

~shend

ஆகவே, மொத்தத்தில் ஜவஹர்லால் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டுப் போவது நமக்கு ஒரு நன்மையான காரியம் என்றே கூறுவோம். எப்படி யெனில் தோழர் சத்தியமூர்த்தியார் எப்படி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு தலைவராயிருப்பது நமக்கு அனுகூலமோ, அதுபோல் ஜவஹர்லால் அவர்கள் காங்கிரஸ் தலைவராய் இருப்பதோடு வந்துவிட்டுப் போனது அனுகூலமானதேயாகும்.

ஒரு விஷயம், தோழர் சத்தியமூர்த்தி தனது வகுப்புநலத்தை எப்படிப் பட்ட முட்டாள்தனமான செய்கையிலும் பித்தலாட்டமான செய்கையிலும் கவனித்துகொள்ளுவார். நமது பண்டிதரோ தனது விளம்பரத்தைத்தவிர, ஆணவத்தைதவிர வேறெதையும் கவனிக்க அறியாதார். இதுதான் இருவருக்கும் உள்ள வித்தியாசம். மற்றவைகளில் இரண்டும் சரியான ஜோடியேயாகும்.

குடி அரசு தலையங்கம் 11.10.1936

 

You may also like...