ஜவஹருக்கு பல ஸ்தல ஸ்தாபனங்களில் வரவேற்பில்லை

பண்டித ஜவஹர்லாலுக்கு தென்னாட்டிலுள்ள பல ஸ்தல ஸ்தாபனங்களில் வரவேற்பில்லை.

சென்னை கார்ப்பரேஷனில் முதலில் வரவேற்பளிப்பதில்லை யென்று தீர்மானிக்கப்பட்டது. பின் கோழி முட்டையும், செருப்புகளும் வீசி காலித்தனம் செய்து வரவேற்பளிப்பதெனத் தீர்மானம் செய்துகொள்ளப்பட்டது.

திருச்சியிலும் முதலில் வரவேற்பளிப்பதில்லையென முனிசிபாலிட்டியில் தீர்மானிக்கப்பட்டது. பின் அங்கும் காங்கிரஸ் காலிகள் செருப்புகளும் அழுகல் முட்டைகளும் எறிந்து காலித்தனம் செய்து வரவேற்பளிப்பதெனத் தீர்மானம் செய்துகொள்ளப்பட்டது.

மதுரை ஜில்லாபோர்டிலும் வரவேற்பளிப்பதில்லை யெனத் தீர்மானித்து விட்டது.

கிருஷ்ணகிரி யூனியன் போர்டில் வரவேற்புக் கொடுப்பதற்கு முயற்சித்தார்கள். ஆனால் அங்கு கொடுப்பதில்லை யென தீர்மானிக்கப்பட்டது.

ஈரோட்டிலும் வரவேற்பளிக்க முயற்சித்தார்கள். இங்கு அவர்களுக்கு பலமில்லை யென்று தெரிந்ததும் அந்த முயற்சியை நிறுத்திவிட்டார்கள்.

திண்டுக்கல்லிலும் வரவேற்பளிக்க முயற்சித்தார்கள். அங்கும் அவர்களுக்கு பலமில்லாததால் அம்முயற்சியும் நிறுத்தப்பட்டது.

விருதுநகர் முனிசிபாலிட்டியிலும் வரவேற்பில்லை. இதுபோல் இன்னும் பலவிடங்களில் வரவேற்பில்லை.

இம்மாதிரி வடநாட்டிலிருந்து வந்த எந்தத் தலைவருக்கும் நடக்கவில்லை. ஜவஹருக்கு மட்டும் ஏன் இப்படி நடந்ததென்றால் அவரது முட்டாள்தனமான நடத்தையாலே தான். இதுமட்டுமல்ல, இவர் சென்று விட்டுவந்த விடங்களிலெல்லாம் இவர் நடந்துகொண்டதைப் பற்றி பொது ஜனங்கள் மிகவும் வெறுப்பாகவும், இழிவாகவும் பேசுகிறார்கள். இவர் இப்போது தென்னாட்டிற்கு வந்து போவது ஒரு வகைக்கு நலமென்றே கருதுகிறோம். ஏனெனில் இவரைப் பற்றி “இந்திரன், சந்திரன்” என்று பார்ப்பனர்கள் புகழ்ந்து பாமர ஜனங்களை ஏமாற்றி வந்ததை தெரிந்துகொள்ள சந்தர்ப்பம் ஏற்பட்டதே யாகும்.

ஆகையால் இனிமேலாவது பொதுஜனங்கள் காங்கிரஸ் பெயரால் பார்ப்பனர்கள் ஏமாற்றி வருவதைக் கண்டு ஏமாறாமலிருக்க வேண்டுமென்று எச்சரிக்கிறோம்.

குடி அரசு துணைத் தலையங்கம் 18.10.1936

You may also like...