அறிக்கை

சுயமரியாதைக்காரர்களில் காங்கிரஸ் சுயமரியாதைக்காரர் என்று ஒரு பிரிவு இருப்பதாகப் பத்திரிகைகளில் காணப்படுகிறது.

தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கம் என்று 10, 12 வருஷ காலமாய் இருந்துவரும் இயக்கத்தில் காங்கிரஸ் சுயமரியாதைக்காரர்கள் என்கின்ற சிலரோ, ஒருவரோ இல்லை; இருப்பதற்கு இதுவரை சுயமரியாதை இயக்கம் இடம் கொடுக்கவுமில்லை.

சுயமரியாதை இயக்கமானது காங்கிரசில் ஆதிக்கம் வகிக்கும் பார்ப்பனர்களுக்கு எதிராகவும் அவர்களது அரசியல், மத இயல், சமூக இயல் ஆதிக்கத்தை ஒழிப்பதற்காகவும் ஏற்பட்டதாகும்.

அதனாலேயே சுயமரியாதை இயக்கம் ஆரம்பத்திலிருந்தே காங்கிரசை எதிர்த்து அதன் ஆதிக்கத்தைத் தமிழ் நாட்டில் தலையெடுக்கச் செய்யாமல் இருப்பதற்காகப் போராடி வந்திருப்பதுடன் அதே கொள்கைகளைக் கொண்ட ஜஸ்டிஸ் கட்சியுடன் கூடி ஒத்துழைத்து வந்திருக்கிறது; ஒத்துழைத்தும் வருகிறது.

அன்றியும் அவ்வியக்கம் (சு.ம. இயக்கம்) இக்கொள்கைகளை ஒப்புக் கொண்டு அதற்கு ஆதரவளிக்கக் கூடியவர்களையே தன்னோடு சேர்த்துக் கொண்டும் அதற்கு மாறாக இருப்பவர்களையும் மாறான அபிப்பிராயம் கொண்டவர்களையும் நழுவ விட்டுக்கொண்டுமே வந்திருக்கிறது. இதற்கு ஆதாரம் ஆதி முதல் இதுவரை சு.ம. இயக்க நடவடிக்கைகளைக் கவனித்தால் விளங்கும்.

ஆதலால் சுயமரியாதை இயக்கத்தில் காங்கிரஸ் சுயமரியாதைக்காரர் என்பதாக ஒரு கூட்டம் இல்லை என்றும் இருக்க இடமில்லை என்றும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் இன்றைய காங்கிரசானது சுயமரியாதை இயக்கத்துக்கு நேர் எதிரிடையான இயக்கமேயாகும்.

ஆதலால் சுயமரியாதைக்காரர்கள் என்று சொல்லிக்கொண்டு இந்த காங்கிரசை ஆதரிப்பது என்பது சுயமரியாதை இயக்கத்தை எதிர்ப்பதேயாகும் என்பது எங்களுடைய தாழ்மையான அபிப்பிராயம்.

W.P.Aசௌந்திரபாண்டியன்,

ஈ.வெ. ராமசாமி.

குடி அரசு அறிக்கை 25.10.1936

You may also like...