வரி குறைப்புக்கும் ஜஸ்டிஸ் மந்திரிகளுக்கும் சம்பந்தமென்ன?

இந்த மாகாணத்தில் ஜஸ்டிஸ் கட்சி இருந்ததினால் தாங்கள் ஒன்றும் செய்ய முடியவில்லை யென்றால் மற்ற மாகாணங்களில் இவர்கள் சாதித்தது என்ன? இவர்கள் என்னதான் தாக்கிப் பேசினாலும், முட்டுக்கட்டை போட்டாலும் மெஜாரிட்டி பாஸ் செய்தாலும் கவர்ன்மெண்டை ஒன்றும் அசைக்க முடியாது.

192324ல் காங்கிரஸ் சட்டசபை பஹிஷ்காரப் போராட்டம் நடத்திய காலத்தில் கழுதைகள்தான் சட்டசபைக்குப் போகும் என்று அட்டையில் எழுதி கழுதை கழுத்தில் கட்டி ஜனக்கூட்டங்களின் முன் விரட்டினார்கள். நாய் கழுத்திலும் அப்படியே எழுதிக் கட்டி வாலில் டின்களையும் கட்டி விரட்டினார்கள். சட்டசபைகளையெல்லாம் கள்ளுக்கடை என்று சொன்னார்கள். தோழர் ராஜகோபாலாச்சாரியாரும் படம் எழுதி சட்டசபைகளைக் கள்ளுக்கடை போலவும், அப்பால் ஒரு கோவிலைக் காங்கிரஸ் போலவும் காட்டினார். இப்பொழுது அந்தக் கள்ளுக்கடை யெல்லாம் கோவிலாக ஆய்விட்டதா? அல்லது அவர்களே இந்தக் கழுதைகள் ஆய்விட்டார்களா? (சிரிப்பும் கரகோஷமும்)

நீங்கள் ஞாயமாகப் பேச விரும்புங்கள்; நானும் ஞாயமாகப் பேச விரும்புகிறேன். நமக்குள் ஏன் சண்டை என்றுதான் நான் சொல்லுகிறேன். நீங்களும் ஒத்துழைக்க வாருங்கள் நானும் ஒத்துழைக்கத் தயாராக வருகிறேன். அதை விட்டு விட்டு எடுத்ததற்கெல்லாம் தேசத்துரோகம் என்றால் நாம் இவர்களுடன் எப்படி ஒத்து வேலை செய்யமுடியும்?

1926ல் ஜஸ்டிஸ் கட்சியானது தோற்றுப் போய்விட்ட காலத்தில் இவர்கள் ஈணூ. சுப்பராயனையும் ரங்கனாத முதலியாரையும் ஆரோக்கியசாமி முதலியாரையும் பொய்க்கால் குதிரையாக்கி பொய்க்கால் கொடுத்து மந்திரிகளாக நிற்க வைத்து ஆதரவு செய்தார்கள். சைமன் கமிஷன் பஹிஷ்காரம் வந்தது. அந்த மந்திரிகளுக்குள் சண்டை ஏற்பட்டது. சுப்பராயன் சைமன் கமிஷனுக்கு ஆதரவு செய்தார். ரங்கனாத முதலியாரும் ஆரோக்கியசாமி முதலியாரும் வெளியேற வேண்டியதாயிற்று. அப்போது முத்தையா முதலியாரானவர் காங்கிரஸ்காரர்கள் மந்திரிகளை ஆதரித்த செய்தியையும் தாலுக்கா போர்டு ஜில்லா போர்ட்டில் ஸ்தானங்கள் கொடுக்க வேண்டுமென்று அவர்கள் மந்திரிகளின் வீட்டு வாசலில் கெஞ்சிக்கொண்டு நின்றதையும் கண்டித்து எழுதி அவர்கள் இதற்கு என்ன ஜவாப் சொல்லப் போகிறார்கள் என்றும் கேட்டார். அப்போது காங்கிரஸ்காரர்கள் “நாம் இந்த மந்திரி சபையை ஆதரிக்கா விட்டால் ஜஸ்டிஸ் கட்சியானது ஆட்சிக்கு வந்துவிடும்” என்று பதில் சொன்னார்கள். டாக்டர் சுப்பராயன் தனக்கு ஆதரவு தரும்படியாக ஜஸ்டிஸ் கட்சியின் காலில் விழுந்தார். நாம் முத்தையா முதலியாரையும் சேதுரத்னம் ஐயரையும் மந்திரிகளாக்கி அவர்களை நம் இஷ்டப்படியெல்லாம் ஆட்டிவைத்து வேலை வாங்கினோம். சட்டசபையில் தமக்கு ஒரு காரியமும் நடக்காது என்று தாங்களே சொல்லிவிட்ட பிற்பாடு, காங்கிரஸ்காரர்கள் “நாம் போகாவிடில் ஜஸ்டிஸ் கட்சியார் வந்து நுழைந்து விடுவார்கள்” என்று சொல்லிவிட்டு நம்மை அயோக்கியர்கள் என்றால் நாம் இவர்களை அயோக்கியர்கள் என்று சொல்வதில் என்ன தப்பு? நாம் ஏன் இவர்களை அப்படி சொல்லக்கூடாது?

எலெக்ஷன்களில், ஜஸ்டிஸ் கட்சிக்காரரை வரி குறைக்கவில்லை என்றும், கைதிகளுக்கு மோர் கொடுக்கவில்லை யென்றும் சொல்லிக் கூச்சல் போடுகிறார்கள். இதெல்லாம் சண்டித்தனம். டயார்க்கி கவர்ண்மெண்டில் இந்த இலாக்காக்களெல்லாம் கவர்ண்மெண்டார் கையிலேயே இருக்கின்றன.

ஜஸ்டிஸ் கட்சியாரை தாலி அறுத்தார்கள் என்றும் சொல்லுகிறார்கள். அது ஞாயமா? மங்களூரில் ஒரு வெள்ளைக்கார மேஜிஸ்ட்ரேட் ஒரு பெண்ணுக்கு அபராதம் போட்டார், அவள் கொடுக்க பணமில்லை என்ற போது அவளுடைய கழுத்தில் தாலியைப் பார்த்ததும், அதை விற்று அபராதப் பணம் கட்டச் சொன்னார். அதற்காக ஜஸ்டிஸ் கட்சிக்காரரே கண்டித்து அரசாங்கத்தினிடம் தெரிவித்த போது அந்த மேஜிஸ்ட்ரேட், தான் அதை ஒரு நகை என்று எண்ணிக்கொண்டிருந்ததாகவும் அதனாலே தான் தெரியாமல் சொல்லிவிட்டதாகவும் தெரிவித்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

ஜஸ்டிஸ் கட்சியார் வரியைக் குறைக்கவில்லை யென்றால் அது யோக்கியமான வார்த்தையா? ஏனென்றால் ஜஸ்டிஸ் கட்சியிலும் பல மிராசுதார்களும் லேண்ட் லார்ட்களும் இருக்கிறார்கள். ஆகவே தங்களுக்கே நஷ்டம் ஏற்படக்கூடிய விஷயங்களை இவர்கள் ஆதரிப்பார்களா என்ன? 2, 3 பேர் இந்த மந்திரி பதவியில் இருக்கவும் சம்பளம் வாங்கவும் தங்களுக்கு நஷ்டம் ஏற்படும்படி இவர்களை எல்லா மிராசுதார்களும் ஆதரிப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள்? கேழ்வரகில் நெய்வடிகிறது என்றால் கேட்பாருக்குப் புத்தி எங்கே போச்சு? இதை எந்த பைத்தியக்காரன் நம்புவான்.

திருவல்லிக்கேணியில் சத்தியமூர்த்தியாரின் மனைவியார் தெருவில் வீடுவீடாய்ப் போய் முந்தானையைக் கையில் பிடித்துக்கொண்டு, நீங்கள் என் புருஷனுக்கே வோட் போடுங்கள். நீங்கள் என் புருஷனுக்கு வோட் போடாவிட்டால் அவர் இறந்து விடுவார். நான் அமங்கிலி ஆகிவிடுவேன் என்று சொல்லி கஸ்தூரிபாய் அம்மையார் குருவாயூரில் ஓட்டு வாங்கின மாதிரி கெஞ்சி ஓட்டு வாங்கினாராம். தேர்தலில் ராமசாமி முதலியார் தோற்றார். அவருக்கு என்ன முழுகிப் போய்விட்டது? அவர் இன்னும் பெரிய பதவிக்குத்தான் போய்ச் சேர்ந்தார். ஷண்முகம் செட்டியார் தோற்றார். அவருக்கு என்னகுறை ஏற்பட்டுப்போயிற்று? அவர் ஒரு சுதேச ராஜாங்கத்திற்குத் திவானாகப்போய் அதனால் அந்த ராஜ்யத்திலுள்ள பார்ப்பனரல்லாதாருக் கெல்லாம் ஏராளமான நன்மைகள் செய்யும்படிதான் ஏற்பட்டது. சத்தியமூர்த்தியார் ஜெயித்து என்ன சாதித்தார்? சாமி வெங்கிடாசலம் செட்டியார் காங்கிரஸ் பேரால் நின்று வெற்றி பெற்று தன் கண்ட்ராக்ட்டை காப்பாற்றிக் கொண்டார். முதலாளிகளுக்கு துணை நிற்கிறார். இப்படிப்பட்ட காங்கிரஸ்காரர்களின் வெற்றியினால் எங்களுக்கு என்ன கெடுதி வந்து விட்டது? மற்றவர்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டு விட்டது? அவர்கள் யோக்கியதை தான் வெளியாயிற்று.

1926ல் காங்கிரஸ்காரர்களால் கொண்டு வரப்பட்டு ஆதரவு செய்யப்பட்ட மந்திரிகளை நாம் எப்படி நம்முடைய நன்மைக்கு உபயோகப்படுத்திக் கொண்டோமோ அப்படியேதான் நாம், இனியும் காங்கிரஸ்காரர் வந்தால் செய்வோம். அவர்களை நாங்கள் எங்களுக்குப் பணிய வைத்து வேலை செய்யச்சொல்லுவோம். மேலும் இனி டாக்டர் சுப்பராயன் முதல் மந்திரியாக (வரமாட்டார்) வந்தாலும் அவரை முன்போலவே பணிய வைக்க எங்களுக்கு முடியும். காங்கிரஸ்காரர்கள் சட்டசபையை விட்டு வெளியே போய் விடுவோம் என்றால் 20000 ரூபாய் 30000 ரூபாய் செலவு செய்துவிட்டு அங்கே போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறவர் உடனேயே இவர்களோடு வெளியே ஓடி வந்து விடுவாரா என்ன? அப்படி எந்த முட்டாளுமே செய்ய மாட்டான்.

இன்றைக்கு காங்கிரஸ் பத்திரிகைகள் எல்லாம் ஜில்லா போர்டுகளிலும் காங்கிரஸ்காரர்கள் வெற்றிபெற்று வந்துவிட்டதாக எழுதுகின்றன. திருநெல்வேலி ஜில்லாபோர்டில் 32 காங்கிரஸ்காரர்களில் 26 பேர் ஓட் செய்தார்கள், பாக்கி 6 பேர்கள் எங்கே? வட ஆற்காட்டில் 26 பேருக்கு 13 பேரோ 14 பேரோ வோட் செய்தார்கள். பாக்கி காங்கிரஸ் மெம்பர்கள் எங்கே? தென் ஆற்காட்டில் பகுதி மெம்பர்கள் விலகிவிட்டார்கள். திருச்சினாப்பள்ளி செய்தி உலகம் சிரிக்கவில்லையா? இவற்றாலெல்லாம் காங்கிரஸ்காரர்கள் யோக்கியதை இன்னதென்று வெளியாய்விட்டது. ஜவஹர்லால் காங்கிரஸ் பேரால் யார் நின்றாலும் வோட் போடுங்கள் என்கிறார். அவர்களது அடையாளமும் தெரியாது; ஒன்றும் தெரியாது. அவர்கள் யோக்கியர்களா அயோக்கியர்களா என்றும் நினைக்க வேண்டாமாம். காங்கிரஸ் பேரைச் சொன்னாலே வோட் போட வேண்டுமாம். இப்படி யெல்லாம் ஏழை மக்களை ஏமாற்றுகிறார்கள்! உலகம் உள்ள பரியந்தம் இப்படி ஏமாற்றுகிறவர்களுக்கும் நமக்கும் கலகம் என்பது இருந்து கொண்டுதான் இருக்கும். இந்தமாதிரி ஏமாற்றுதல்களால் இவர்கள் ஏழைகளுக்கு ஒன்றும் நன்மை செய்ய முடியாது. ஜவஹர்லாலால்கூட காந்தியால்கூட இந்த ஏமாற்று வித்தையால் ஏழைகளுக்கு எவ்வித நன்மையும் செய்ய முடியாது. தங்களையே தாங்கள் ஏமாற்றிக் கொள்வதை அவர்கள் உணருவதில்லை. கீழேயிருக்கிறவர்கள் கீழே தான் இருப்பார்கள்; மேலே இருக்கிறவர்கள் மேலேதான் இருப்பார்கள். காந்தியானவர் ஏழைகளுக்கு உண்மையிலேயே நன்மையாக இருக்கக்கூடிய ஒரு திட்டத்தைத் தயார் செய்து அதன்படி செய்வதாகச் சொல்லட்டும். நாம் நம்முடைய வேலையை அவரிடத்திலேயே ஒப்பித்து விடுவோம். ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகளைவிட அவர் என்ன சாதித்து விட முடியும்? அவர் ஆட்டுப்பாலும் ஆரஞ்சு பழமும் சாப்பிட்டுக்கொண்டு குஷனில் படுத்துக் கொண்டு தூங்குகிறார். அவர் ஏழைகள் குடிக்கும் கஞ்சி குடிக்கிறாரா? ஏழைகள் வசிக்கும் குடிசையில் வசிக்கிறாரா? வாயால் ஏழைமை பேசுவது; அனுபவத்தில் ராஜபோகம் அனுபவிப்பது! அவர் ஏழைகளுக்காக எதைத் தியாகம் செய்தார்? ஏழைகள் பேரால் எல்லாரும் ஏமாற்றுகிறார்கள்!

ஜவஹர்லால் சங்கதி நமக்குத் தெரியாதா? அவர் பம்பாய் வியாபாரிகள் முன்பு பேசுகையில் அவர்களுடைய நன்மைகளையெல்லாம் காப்பாற்றுவதாக ஒப்புக்கொண்டுவிட்டார். “நான் சமதர்மம் என்றால் என்ன என்று தெரியாத ஜனங்களுக்குத் தெரியும்படியாக எடுத்துச் சொன்னதே யொழிய அதற்கேற்ற வேலைத் திட்டம் எங்களிடம் இல்லை” என்று சொல்லி அவர்களிடம் சமாதானம் சொல்லிக் கொண்டார். காந்தியானவர் அரசாங்கத்தையும் ஜமீன்தார்களையும் காப்பாற்றுவதுதான் தன் வேலை என்று சொன்னார்.

சத்தியமூர்த்தி ஐயர் ஐரோப்பியர்கள் சங்கத்தில் பேசப் புகுமுன் பத்திரிகை ரிபோர்ட்டர்களையெல்லாம் வெளியில் போகச்சொல்லிவிட்டார். தான் வெள்ளைக்காரரிடம் பேசக்கூடிய அந்தரங்க வார்த்தைகள் எங்கே வெளியே பொது ஜனங்களுக்குத் தெரிந்து விடுமோ என்று பயந்து கதவுகளையெல்லாம் தாழ்ப்பாள் போடச் சொல்லிவிட்டு அவர் “சுயராஜ்யம் என்றால் வெள்ளைக்காரர்களின் கீழ் அடங்கி வாழ்வதே அர்த்தம்” “பூரண சுயராஜ்யம் என்றால் குடியேற்ற நாட்டு அந்தஸ்தே அர்த்தம்” “ஜஸ்டிஸ் கட்சிக் காரர்களின் கொள்கைதான் எங்களுக்கு ஆகாது. அவர்கள் சமதர்மவாதிகள்” என்று பதில் சொன்னார். இவை “சுதேசமித்திரன்” “தினமணி” ஆகிய பத்திரிகைகளில் வந்த வாக்கியங்கள். இவ்வளவு தகிடுதத்தத்திற்கும் பிறகு நம்மை தேசத் துரோகிகள் என்று அவர்கள் சொல்லுகிறார்கள்.

பிரபல பார்ப்பனராகிய விஜயராகவாச்சாரியார் வெளிநாட்டிற்குப் போயிருந்தபோது அரசர் விஷ்ணு அம்சம் என்று சொன்னார். ரங்காச்சாரியார், சீனிவாச சாஸ்திரியார், சி.பி. ராமசாமி ஐயர் இவர்களெல்லாம் வெளிநாடுகளில் சென்று வெள்ளைக்கார அரசர் விஷ்ணு அம்சம் என்று சொன்னார்கள். அதனால் ரங்காச்சாரியார் மகன் மூன்றாவது பாரம் படித்து டிக்கட் கலக்டர் வேலையிலிருந்தவர் திடீரென்று போஸ்டல் சூபெரெண் டெண்டெண்ட் வேலைக்குப் போனார். சீனிவாச சாஸ்திரியார் ரைட் ஆனரபில் ஆனார். அவர் மகனுக்கும் பெரிய வேலை வாங்கிக்கொடுத்தார். அவர்களெல்லாம் நம் தேசத்தைக் காட்டிக்கொடுத்ததை விட யார் அதிகமாக தேசத்தைக் காட்டிக் கொடுத்து விட்டார்கள்?

முன் காந்தி பகிஷ்காரப் போராட்டம் நடத்திய போது வைஸ்ராயானவர் இவரை என்ன செய்வதென்று மயங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது சீனிவாச சாஸ்திரிதான் அவரைப் பிடித்து ஜெயிலில் போடவேண்டு மென்று வைஸ்ராய்க்குப் புத்தி சொன்னார். இதெல்லாம் எனக்குத் தெரியாதா? ஏன் பித்தலாட்டமாகப் பேசுவது என்று கேட்கிறேன். (தொடர்ச்சி 18.10.1936 குடி அரசு)

குறிப்பு: 27.09.1936 ஆம் நாள் திண்டுக்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை. (04.10.1936 குடி அரசு தொடர்ச்சி)

குடி அரசு சொற்பொழிவு 11.10.1936

You may also like...