“தமிழ் நாடு”

“தமிழ்நாடு” பத்திரிகையை தோழர் வரதராஜுலு நாயுடு அவர்கள் நிறுத்திவிடப்போவதாய் 26936ந் தேதி தமிழ்நாடு பத்திரிகையில் தலையங்கம் எழுதி தன் கையெழுத்தையும் போட்டுவிட்டார். இது உண்மையாக இருக்குமோ அல்லது அவரது அரசியல் தந்திரங்களில் இதுவும் ஒன்றோ என்பது நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை.

எப்படியானாலும்சரி “தமிழ்நாடு” பத்திரிகை நிறுத்தப்பட்டு விடுமானால் தமிழ் மக்கள் தோல்விக்கும் பார்ப்பனர்கள் வெற்றிக்கும் இது ஒரு இமயமலை போன்ற பெரியதும் சூரிய வெளிச்சம் போன்ற நிச்சயமானதுமான உதாரணமாகும்.

இந்த நாட்டில் தமிழ் மக்கள் முயற்சிக்கும், அவர்கள் இதுவரை பாடுபட்டுச் செய்து வந்த வேலைக்கும் சிறிதாவது பயன் ஏற்பட்டதா என்று கண்டுபிடிக்க வேண்டுமானால் அது பார்ப்பனப் பத்திரிகைகளின் செல்வாக்கும் செலவாணியும் எவ்வளவு குறைந்து இருக்கிறது என்பதைக் கொண்டுதான் அளவுக் கணக்கு எடுக்க முடியும்.

அந்தப்படி பார்த்தால் பார்ப்பனரல்லாதார்களால் நடத்தப்படும் பத்திரிகைகள் எவ்வளவு முதல் வைத்து நடத்தப்படுபவைகளானாலும் வருஷா வருஷம் மலேயா, கொளும்பு, ரங்கூன் முதலிய இடங்களுக்குச் சென்று எவ்வளவுதான் பணங்கள் அரித்துக் கொண்டு வந்து நடத்துவதானாலும் பார்ப்பனர்களுக்கு எவ்வளவு தான் அடிமைப்பட்டு நடத்தினாலும் குருடர்களை செந்தாமரை கண்ணன் என்றும் மூடர்களை மகாபுத்திமான்களே என்றும், அயோக்கியர்களை உலகம் போற்றும் உத்தம சிகாமணிகளே என்றும், கோழைகளை பரிசுத்த வீரர்களே என்றும், சுய நல உருவங்களை மகாத் தியாகியே என்றும் கூறியும் எழுதியும் போற்றுதல் தொழிலுக்கும் புகழ்தல் தொழிலுக்கும் அடிமையாக பலவித ஒழுக்க ஈனமான ஆதரவுகள் பெற்றும் நடத்துவதாய் இருந்தாலும் நித்திய கண்டம் நிமிஷ கண்டம் என்கின்ற நிலையில்தான் பார்ப்பனரல்லாதார் பத்திரிகைகள் நடத்த முடிகிறது. ஒவ்வொரு வினாடியும் அவைகளுக்கு மங்களம் பாடவேண்டிய அவசியத்தில் தான் இருந்து வருகின்றன.

பார்ப்பனப் பத்திரிகைகளோ ஒன்றும் அஸ்திவாரமே இல்லாமலும் எவ்வித ஆதாரமும் இல்லாமலும் யாரோ ஒரு அனாமதேய அன்னக்காவடி பார்ப்பனர்களால் ஆரம்பிக்கப்பட்டாலும் கூட அது ஒரு ஆதார பிரதிநிதித்துவ பத்திரிகை போலவும் அடுத்த நிமிஷத்துக்கு வேண்டிய சாதனங்கள் இல்லாவிட்டாலும் எவ்வித கவலையோ அதிருப்தியோ இல்லாத நிலையிலும் நடந்து வருகின்றவைகளாகவும் இருந்து வருகின்றதைக் காணலாம். அதை மீறி ஏதாவது பத்திரிக்கை கொஞ்ச நாளைக்காவது நிறுத்தப்பட வேண்டியதாய் இருந்தாலும் தக்க லாபத்துடன் தான் பணம் மீதி செய்து கொண்டு நிறுத்தி நடத்தக்கூடியதாய் இருக்கக்கூடியதாய் இருக்குமே தவிர கை முதலோ, பெருமையோ, நாணயமோ கொள்கையற்று திண்டாடியோ நட்டமடைந்தோ நிறுத்தப்பட வேண்டியதாக ஏற்படுவதே இல்லை.

உதாரணமாக இந்த 15ஆண்டுகாலத்தில் “ஜஸ்டிஸ்” பத்திரிக்கைக்கு சுமார் 3, 4 லக்ஷ ரூபாய் கைப்பொறுப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றாலும் இன்றும் பொப்பிலி ராஜா பொக்கிஷத்தில் கைவைக்காவிட்டால் பத்திரிகை ஆபீசு மூடப்பட வேண்டிய நிலையில் தான் இருந்து வருகிறது.

1933ம் வருஷத்தில் “ஜஸ்டிஸ்” பத்திரிகை தீவாளி ஆகி நிறுத்தப்பட்டு ஐ.பி.க்கு வந்து கடன் கொடுத்தவர்களுக்கு 60, 70 ஆயிரம் ரூபாய் நட்டமேற்பட்டு மறுபடியும் பொப்பிலி ராஜாவால் பதினாயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்யப்பட்டு ஈ.வெ.ராமசாமியால் ஆதியில் தனது அச்சு மிஷின் இலவசமாய் உதவப்பட்டு “நியுடைம்ஸ்” என்ற பத்திரிகையாக “ஜஸ்டிஸ்” மறுபிறவி எடுத்து இப்போதும் எதோ மந்திரிகள் உதவியால் வெள்ளைக்காரர்களுக்கு மாத்திரம் விஷயம் விளங்கினால் போதும் என்கின்ற நிலையில் தான் இருந்து வருகிறது.

பார்ப்பனரல்லாதார் இயக்க மற்றொரு பத்திரிக்கையாகிய “திராவிடன்” பத்திரிகையோ அதுவும் லக்ஷக்கணக்கான முதலை சாப்பிட்டுவிட்டு ஈ.வெ. ராமசாமி தலையிலும் பத்து இருபது ஆயிரம் ரூபாய்க்கு கையை வைத்துவிட்டு ரிசீவர் கைக்குப் போகவேண்டியதாகி நாட்டுக் கோட்டை செட்டியாரால் ஏலத்தில் எடுக்கப்பட்டு காங்கிரசிலும் பார்ப்பனரல்லாதார் இயக்கத்திலும் மந்திரி வேலைக்கு வியாபாரம் பேசிக்கொண்டு பெயர் போர்டு பலகையும் ஒடிந்த மிஷினும் உருக்கவேண்டிய ஈயமுமாய் தியாகராய ஞாபகக் கட்டடத்தில் சிறைப்பட்டுக் கிடக்கின்றது. மற்றும் எதைப்பற்றிச் சொல்லவேண்டும் என்பது நமக்கு விளங்கவில்லை.

10, 12 வருஷ காலமாய் நடந்துவந்த “குடி அரசு”ம் டாக்டர்கள் கை விட்டுவிட்ட காயலாக்காரன் போலவே காலந்தாட்ட வேண்டி இருக்கிறது என்று தைரியமாய் சொல்லக்கூடிய நிலையில் இருக்கிறது. தாங்க முடியாத நஷ்டம் வந்து விடவும் இல்லை; நஷ்டம் அனுபவிக்க வேண்டிய நிலையிலும் இல்லை; அதனால் ஒரு நன்மையும் ஏற்பட்டு விடவில்லையே என்று ஏமாற்றமடைய வேண்டிய நிலையிலும் இல்லை. ஆனால் எத்தனை நாளைக்கு இந்த நன்றி கெட்ட, சுரணை அற்ற மக்களுடன் போராடிக் கொண்டிருப்பதோடு எத்தனை துரோகிகளின் சதிகளை சகித்துக்கொண்டிருப்பது என்கின்ற சலிப்பில் உயிர்வாழவேண்டியதாய் இருக்கும் காரணமே ஆகும். ஆகவே மொத்தத்தில் பத்திரிக்கைகளின் நிலையைக் கொண்டு பார்த்தால் பார்ப்பனரல்லாத மக்களின் முயற்சி வெற்றி பெறவில்லை என்பதோடு “தமிழ்நாடு” நிறுத்தப்படுவதாலேயே தோல்விக் குறியும் தோன்றுகின்றது என்று நினைக்கவேண்டி இருக்கிறது என்பதைக் காட்டவே இவ்வளவு எழுதினோம்.

“தமிழ்நாடு” பத்திரிகை விஷயத்தில் அது எப்படி நடத்தப்பட்டு வந்திருந்தாலும் ஆதியில் நம்மை எவ்வளவு வைதிருந்தாலும் நாம் அதனிடம் எவ்வளவு அதிருப்தி கொண்டிருந்தாலும் இந்த 6, 7 வருஷ காலமாக அதன் வளர்ச்சியிலும் வாழ்விலும் கவலைகொண்டே இருந்தோம். பார்ப்பனர் போலவே தங்களுக்குள் உள்ள வேறுவித அபிப்பிராயங்களை லட்சியம் செய்யாமல் இருப்பதுபோல் இருந்து பத்திரிக்கை வளர்ச்சிக்கு அதிக நன்மை செய்யாவிட்டாலும் அதன் மேன்மையில் ஆசைகொண்டே வந்தோம்.

பல சந்தர்ப்பங்களிலும் நமது காரியாலயத்தில் இருந்து ஒரு காலணா தினசரி வெளியாக்க வேண்டும் என்று ஏற்பட்ட சந்தர்ப்பங்களையும் சௌகரியங்களையும் ஏற்கனவே ஏற்பட்டு இருந்ததையும் எல்லாம் தடுத்தே வந்தோம். என்ன செய்தும் “தமிழ்நாடு” நிறுத்தப்பட வேண்டிய நிலைமையை எய்துகின்றது என்றால் அது தோழர் வரதராஜுலு நாயுடு தோல்வி மாத்திரமல்லாமல் பார்ப்பனரல்லாதார் தலை தூக்குவதை தாழ்த்தி விட்டது என்று தான் சொல்ல வேண்டும் என்று மறுபடியும் சொல்லுகிறோம். அதோடு கூட பார்ப்பனருக்கு விரோதமாய் இந்த நாட்டில் பத்திரிக்கை நடத்த முடியாது என்பதையும் கல்லில் எழுதுவதுபோல் ஆகிறது என்றும் சொல்ல வேண்டி இருக்கிறது.

தோழர் கல்யாணசுந்தர முதலியார் பார்ப்பனருக்கு பின் தாளம் போடுகிறார் என்றால் காற்றில்லாமல் வாழ்ந்தாலும் வாழலாம் பார்ப்பனர் தயவில்லாமல் அவர்களது முகவிலாச புன்சிரிப்பு இல்லாமல் வாழ முடியாது என்கின்ற நிலைமை அடைந்ததால் தான் என்று சொல்லவேண்டி இருக்கிறது. “தேச பக்தன்” தோழர் கல்யாணசுந்தர முதலியாரால் நடத்தப்படுகிற காலத்தில் அவர் பார்ப்பனரல்லாத பெரியார்களை வைகின்றதற்கே அவரது பேனாவை காலத்திலும் அகாலத்திலும் சந்தர்ப்பத்திலும் அசந்தர்ப்பத்திலும் பயன்படுத்திய காரணத்தால் முதல் முதல் தமிழ் நாட்டுக் காந்தி என்ற பட்டம் பெற்றவர் அவரேயானார். பிறகு சிறிது அதனால் “சுதேசமித்திர”னுக்கு அசௌகரியம் ஏற்பட்டது என்று தெரிந்த உடனே அவரைக் களரியைப் பிடித்து உந்தி விட்டார்கள்.

இப்படி இன்னம் எவ்வளவோ உதாரணம் எடுத்துக் காட்டலாம்.

“தமிழ்நாடு” நிற்பதானாலும் சரி, நடப்பதானாலும் சரி, அது கொள்கைகளுக்கு சதா திண்டாடிக் கொண்டே வந்தது என்றாலும் சரி, அதன் உண்மையான உழைப்பு ஒன்றை நாம் மறுப்பதற்கு இல்லை என்பதோடு அதற்கு நன்றி காட்டாமல் இருக்கமுடியாது என்றும் சொல்லுவோம். அதாவது பார்ப்பனரல்லாதார் சமூகக் குறைகளை நன்றாய் அறிந்திருந்தது, கோபம் வரும்போதெல்லாம் தயவு தாக்ஷண்யமில்லாமல் பார்ப்பனர்களை வெளியாக்கிற்று, மக்களுக்கு சிற்சில சமயங்களில் தைரியமூட்டி வந்தது, பார்ப்பனீயம் ஒழியவேண்டும் என்பதில் மாத்திரம் கொள்கை மாறாமல் கடைசி வரை இருந்து வந்தது. பார்ப்பனரல்லாத மக்களுக்கு கூடுமானவரை தாராள நோக்கத்துடன் விளம்பரம் கொடுத்து வந்தது. சுயமரியாதை இயக்கத்தை ஆதியில் எதிர்த்தபோதிலும் 5, 6 வருஷகாலமாக அது செய்ய வேண்டியதற்கு மேலாகவும் எதிர்பார்த்ததற்கு மேலாகவும் உதவிபுரிந்து வந்தது. இவற்றை நாம் மறக்கவே மாட்டோம். “தமிழ்நாடு” உண்மையாகவே நிறுத்தப்பட்டு போகுமானால் பார்ப்பனரல்லாதார் சமூகத்துக்கு சரியான நட்டமே யாகும் என்பது நமது உண்மையான அபிப்பிராயமாகும்.

தோழர் நாயுடுகார் டிசம்பர் மாத ஆரம்பத்தில் “தமிழ்நாடு” நிறுத்தப்பட்டு விடும் என்று கூறுகிறார். 5, 6 வருஷகாலம் காங்கிரசைக் கண்டித்து வந்து கடைசி காலத்தில் காங்கிரசில் சேர்ந்த மூன்றாம்நாள் “தமிழ்நாடு” பத்திரிகையை நிறுத்திவிடப் போகிறேன் என்ற சன்மானத்தைப் பெற வேண்டியவரானார் என்றால் இவர் காங்கிரசில் சேர்ந்ததைப் பொது மக்கள் எவ்வளவு ஆதரிக்கிறார்கள் அல்லது இவரைக் காங்கிரஸ்காரர்கள் எவ்வளவு நம்புகிறார்கள் என்பதுதான் அதிலிருந்து கண்டு பிடிக்கத்தக்கதாகும். எல்லாவற்றையும் உத்தேசித்து நாம் ஒரு யோசனை கூறுகிறோம். அதாவது டிசம்பரில் நிறுத்தப்போகும் பத்திரிகையை (உண்மையாய் இருந்தால்) பிப்ரவரி 15ந்தேதி வரையில் நடத்தி அப்புறம் அவசியமானால் நிறுத்துவதற்கு முடிவு செய்யும் படி வேண்டுகிறோம்.

ஏனெனில் பிப்ரவரி முதல் வாரத்தில் சட்டசபை எலக்ஷன் நடக்கிறது. பிப்ரவரி 15ந் தேதி வாக்கில் முடிவு தெரிந்துவிடும். அப்போது பார்ப்பனரல்லாதார் கட்சி ஜெயித்தால் கண்டிப்பாக “தமிழ்நாடு” நிறுத்த வேண்டிய அவசியம் வராது. தோற்று விட்டாலோ “தமிழ்நாடு” பத்திரிகைக்கு வெகு கிராக்கியான தேவை இருக்கும்படியான நிலைமை ஏற்படும். அந்தச் சமயம் தமிழ்நாடானது ஒரு புரட்சி நடக்கும் நாடு போல் உற்சாகமும், உணர்ச்சியும், வேகமும் உள்ள நாடாய் இருக்கும். தோற்றவுடன் இப்போது பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டைக்காரர்களாக இருப்பவர்கள் பார்ப்பனரல்லாதார் கட்சியில் பிரமுகர்களாகவும் தலைவர் களாகவும் இருக்கும் நிலை ஒழிந்து அக்கட்சியை நம் போன்றவர்களும் தோழர் வரதராஜுலு போன்றவர்களும் நடத்தும்படியான நிலைமை ஏற்பட்டாலும் ஏற்படலாம். வெற்றி ஏற்பட்டால் தான் நம் போன்றவர்களுக்கு மதிப்பும் வேலையும் நன்மையும் எழுச்சியும் இல்லாமல் போனாலும் போகலாமே ஒழிய தோல்வி (ஏற்படாது) ஏற்பட்டு விட்டாலோ ஒரு 5 வருஷ காலத்துக்குள் சென்ற 10 வருஷ கால முன்னேற்றம் ஏற்படும்படி காலச் சக்கரத்தை உருட்டிவிட முடியும் என்கின்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

ஆதலால் கூட இரண்டே மாதம் பொறுத்துப் பார்த்து பிறகு அவரது முடிவை அமுல் நடத்தும்படி வேண்டிக்கொள்ளுகிறோம்.

ஜஸ்டிஸ் கட்சியார் தினசரி நடத்தப் போகிறார்களா என்பதை 100க்கு 50 வீதம் நம்பிக்கையைத்தான் வைக்கக்கூடியதாயிருக்கிறதே தவிர எந்த முடிவுக்கும் 51 வீதம் நம்பிக்கை வைக்க தைரியமில்லை.

தோழர் நாயுடுகாரு அவர்கள் 2 மாத காலம் வைத்தது ஒரு சமயம் ஜஸ்டிஸ் கட்சி 3 பை பத்திரிகையும் வந்துவிட்டால் “தமிழ்நாடு” நிலைமை கஷ்டமாகி விடுமோ என்று நினைக்கிறாரோ என்பது சிலரின் ஹேஷ்யமாயிருக்கிறது.

அப்படியே ஏற்பட்டாலும் ஜஸ்டிஸ் கட்சி தோற்றால் மறுபடியும் பணம் போட்டு பத்திரிகை நடத்துபவர்கள் யார் என்பது போட்டிப் பரிசு போன்ற விஷயமே. ஆதலால் எவ்வளவோ கஷ்ட நஷ்டம், தொல்லை ஆகியவைகளுக்கு இடையில் இந்த 10 வருஷ காலம் நடந்துவந்த “தமிழ்நாடு” இனியும் ஒரு 4 மாதம் அதுவும் அவராகவே நடத்த ஏற்றுக் கொண்ட இரண்டு மாதம் தவிர மேற்கொண்டு 2 மாதகாலம் நடத்திப் பார்த்து அப்புறம் ஒரு முடிவுக்கு வரவேண்டுகிறோம்.

அதுவரை பார்ப்பனரல்லாதார்களில் யாரை வைதாலும் சரி, அந்தக் கட்சியை எப்படி வைதாலும் சரி. அதற்கெல்லாம் பூரா (லைசென்ஸ்) அனுமதிச் சீட்டுக் கொடுக்கிறோம். அதைப்பற்றி யாரும் வருத்தப்பட மாட்டார்கள் என்றும் உறுதி கூறுகிறோம் நிறுத்தி விடுவது தமிழ் மக்களுக்கு நஷ்டமேயாகும்.

குடி அரசு தலையங்கம் 04.10.1936

You may also like...