காங்கிரஸ் ஏற்பட்டது பிரிட்டீசாரை வாழ்த்தவே

காங்கிரஸ் வருணாச்சிரமம் கோருகிறது

ஜஸ்டிஸ் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கோருகிறது

~cmatter

தோழர்களே!

இன்று நமது மாகாணத்தில் காங்கிரஸ்காரர்கள் என்றும், ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் என்றும் இரண்டு கூட்டத்தார்கள் பிரமாதமாகவும் மிகவும் வேகமாகவும் பிரசார வேலைகள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குள் பெரும்பாலும் எதைப்பற்றி சண்டை என்று நான் உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை.

சீக்கிரம் நம் தேசத்தில் புதிய சீர்திருத்தங்கள் ஏற்படப் போகிறபடியால் அதற்காக சமீபத்தில் நடக்க விருக்கிற எலெக்ஷன்களில்தான் தான் வெற்றி பெறுவதற்காக ஒரு கட்சியானது மற்ற கட்சியின் மேல் குறைகூறுவது உண்மையென்று உங்களுக்கு அதிகம் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. நம் தேசத்தில் ஒரு கட்சி மேல் மற்றொரு கட்சி துவேஷப் பிரசாரம் செய்து கொண்டிருக்கின்றது. துவேஷப் பிரசாரம் செய்வது என்ற கருத்து எனக்குக் கொஞ்சமும் பிடிக்காது. நான் துவேஷப் பிரசாரம் செய்ய வேண்டுமென்று உங்கள் முன் வரவில்லை.

நானும் காங்கிரஸில் இருந்தவன் தான். காங்கிரஸ் பார்ப்பனர்களுடன் நான் ஒத்துழைத்திருக்கிறேன். ஆகையால் இப்பொழுதும் கூட காங்கிரஸ்காரரைத் தாக்கிப் பேசுவதென்றால், என் மனதிற்கு மிகவும் சங்கடமாகத்தான் இருக்கிறது. அவர்கள் மீது குறைகூறவோ, பழிசுமத்தவோ நான் இங்கு வரவில்லை. ஆனால் அவர்கள் செய்யும் பொய்ப் பிரசாரத்திற்கும், சொல்லுகிற பழிகளுக்கும் பதில் சொல்லவேண்டும் என்கிற தன்மையிலேயே நான் இங்கு வந்திருக்கிறேன்.

இந்தத் திண்டுக்கல்லில் இந்தப் பார்ப்பனர்கள் எத்தனையோ கூட்டங்கள் கூட்டி எங்களை ஓயாமல் வைதுகொண்டு வருகிறார்கள். அவர்கள் எவ்வளவுதான் வைதாலும் நாங்கள் அவர்களை பதிலுக்கு வைவது என்பது இல்லாமல் அவர்களுக்கு பதில் சொல்லுவது என்கிற ஒரு வேலையோடு நின்று விடுகிறோம். அவர்கள் 10, 20 பேப்பர்களை வைத்துக் கொண்டு எங்களை தமக்குத் தோன்றுகிறபடியெல்லாம் திட்டுகிறார்கள்; பழி சுமத்துகிறார்கள். நாம் இதற்கெல்லாம் சரியான முறையில் பதில் சொல்லாமல் இருந்து விட்டால் பாமர ஜனங்கள் ஏமாந்து போகமாட்டார்களா?

நமக்குள் உண்மையான குற்றம் ஒன்றுமே இல்லை. நாம் கேட்கிற கேள்விகள் ஒன்றுக்குமே அவர்கள் ஒழுங்காய்ப் பதில் சொல்லமுடியாது. நாக்கில் நரம்பு இல்லாமல் கள்ளுக்கடையில் இருந்துகொண்டு வைவது போல் வைவது தான் அவர்கள் பிரசாரமா யிருந்து வருகிறது. காங்கிரஸ் தலைவர்கள் எல்லாரும் இதை ஆதரிப்பதுடன் தலையை ஆட்டி அங்கீகாரம் செய்கிறார்கள். இது மானங்கெட்ட முறை என்றும் பதிலுக்கு பதில் வருமென்றும் அவர்கள் உணர்ந்து கொள்வதில்லை. நம் தலைவர்கள் ஊர்வலத்தில் இன்று அவர்கள் கழுதைகளின் கழுத்தில் அட்டைகளைக் கட்டி அந்த அட்டைகளில் பொப்பிலி என்று எழுதி விரட்டி விட்டார்கள். நாமக்கல்லிலும் அவர்கள் அப்படியே செய்தார்கள். நாம் அவைகளைப் பிடித்துக்கொண்டு வந்து கட்டினோம். அவைகளைக் கட்டிவைத்து “கேளு கழுதையே கேள்; கேளு கழுதையே கேள்” என்று பதில் சொல்ல வேண்டுமென்று எண்ணியிருந்தேன். அதற்குள் போலீஸ்காரர்களின் உதவியினாலும், மற்றவர்களது உதவியினாலும் காங்கிரஸ்காரர்கள் தங்கள் கழுதைகளை அவிழ்த்துக் கொண்டு போய் விட்டார்கள்.

அவர்கள் நம் தலைவர்களை தேசத்துரோகிகள் என்றும், உத்தியோக வேட்டைக்காரர்கள் என்றும் சொல்லித் திட்டுகிறார்கள். நாம் இப்படிப்பட்ட துவேஷப் பிரசாரத்திற்கு எவ்வளவு காலம் இடம் கொடுப்பது? எவ்வளவு காலம் பொறுத்துக் கொண்டிருப்பது?

அவர்கள் கழுதைகளின் கழுத்தில் பொப்பிலி என்று எழுதிக்கட்டினால் நமக்குக் கழுதைகள் அகப்படாதா? சத்தியமூர்த்தி என்று எழுதிக்கட்ட 10 கழுதைகள் அகப்படாதா? ஜவகர்லால் என்று எழுத 15 கழுதைகள் அகப்படாதா? காந்தி என்று எழுதிக்கட்ட 20 கழுதைகள் அகப்படாதா? அவர்களுடைய காலித்தனத்திற்கெல்லாம் வட்டிக்கு வட்டி போட்டு அடிக்கு அடியும் உதைக்கு உதையும் வசவுக்கு வசவும் கொடுக்க நமக்கு முடியாதா? நாம் இப்படிச் செய்தால் அவர்கள் நம்மை என்ன செய்துவிட முடியும்?

ஆனால் நாம் அப்படி செய்ய ஆரம்பித்துவிட்டால் ஐயோ ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் எங்களை வைகிறார்கள் என்று பெரிய கூச்சல் போடுவார்கள். வெள்ளைக்காரர்கள் வீட்டின் பின்புற வாசலில் நுழைந்து நம் மீது சாடி சொல்லுகிறார்கள்.

காங்கிரஸ்காரர்கள் தங்களுக்கும் பெரிய பதவிகள் வேண்டு மென்றும், பெரிய அதிகாரம் வேண்டுமென்றும் ஆசைப்படுகிறார்கள். அவர்களுக்கு அவைகள் வேண்டுமென்றால் நாம் அதை மறுக்கவில்லை. அவர்களுக்கும் உரிமை உண்டு. ஆனால் அவர்கள் அப்படி அதை பாமர மக்களிடம் எடுத்துச் சொல்லட்டுமே. இதை விட்டு விட்டு “ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் உத்தியோக வேட்டைக்காரர்கள்; தேசத்துரோகிகள்; நாங்கள் எல்லாம், தேசபக்தர்கள் தேசாபிமானிகள்” என்றால் இதையெல்லாம் எப்படிப் பொறுத்துக்கொண்டிருக்க முடியும்? இன்றைக்கு ஜஸ்டிஸ் கட்சியானது காங்கிரசை விட எதில் மோசமாய் போய்விட்டது? அவர்கள் தலைவர்கள் யோக்கியதையை விட நம் தலைவர்கள் யோக்கியதை எதில் குறைவு? அவர்கள் கொள்கையை விட நம் கொள்கை எதில் குறைந்து இருக்கிறது? இந்த இரு கட்சிகளுக்குள்ளும் எதில் வேற்றுமை இருக்கிறது என்று நீங்கள் ஆராய வேண்டும்.

நாம் சட்டசபைக்குப் போக வேண்டும், மந்திரி பதவி ஏற்றுக்கொள்ள வேண்டும், மக்களுக்கு நன்மை செய்யவேண்டுமென்கிறோம். அப்படியே காங்கிரஸ்காரர்களும் சட்டசபைக்குப் போகவேண்டும், மந்திரி பதவிகளை ஏற்றுக் கொள்ள வேண்டும், மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்கிறார்கள். ஆனால் எதில் இவர்களுக்குள் வித்தியாசம்?

ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் எல்லா சமூகத்தார்க்கும் அவரவர்கள் ஜனத் தொகைக்குத் தக்கபடி அதிகாரம் பதவி இவைகளில் விகிதாச்சாரம் கொடுக்கப்பட வேண்டும் என்கிறார்கள். இதைத்தான் காங்கிரஸ்காரர்கள் தேசத்துரோகம் என்கிறார்களே தவிர மற்றபடி வெள்ளைக்காரர்களிடம் நடந்து கொள்வதில் அவர்கள் இரகசியத்தில் கும்பிடு போடுகிறார்கள். நாம் வெளிப்படையாய் அவசியத்துக்கு ஏற்ற அளவு ஒத்து உழைக்கிறோம்.

மற்றும் காங்கிரஸ்காரர் தங்கள் கொள்கையில் அடிக்கடி மாறி மாறியும் பொய் சொல்லியும் ஜனங்களை ஏமாற்றுகிறார்கள். ஆனால் ஜஸ்டிஸ்காரர் ஆதியில் என்ன என்ன தங்கள் கொள்கைகள் என்று வெளியிட்டார்களோ அதையே சொல்லிக் கொண்டும், அதையேதான் செய்துகொண்டும் இருக்கிறார்கள். காங்கிரஸ்காரரின் அடிக்கடி மாற்றப்படும் கொள்கைகளிலும் தோழர்கள் சுப்பராயன் அவர்களுக்கு ஒரு கொள்கை; ராஜகோபாலாச்சாரியாருக்கு மற்றொரு கொள்கை; சத்தியமூர்த்திக்கு ஒரு கொள்கை; ஜவகர்லாலுக்கு ஒரு கொள்கை; காந்திக்கு மற்றொரு கொள்கை, ஜவகர்லால் காந்தியை ஒப்புக் கொள்வதில்லை, காந்திக்கும் ஜவஹர்லாலுக்கும் சத்தியமூர்த்திக்கும் கொள்கையில் வேற்றுமை. இவர்களெல்லாம் எதில் ஒற்றுமை என்றால் மற்ற எல்லாச் சமூகத்தாரையும் ஏமாற்றுவதில் மட்டும் தான்.

மற்ற கட்சியாரெல்லாம் தேசத்துரோகிகள் என்றும் அவர்களுக்கு வோட்டுகளைப் போடாமல் காங்கிரஸ்காரருக்கே வோட்டுப் போடுங்கள் என்றும் அவர்கள் சொல்லுகிறார்கள். மற்றும் நாம் வகுப்பு வாதிகளாம்; ராஜபக்தர்களாம். இவர்கள் வகுப்பு வாதிகள் அல்லவா? ராஜ பக்தர்கள் அல்லவா?

1885ல் காங்கிரஸ் ஸ்தாபனமானது ஏற்பட்டது. அப்பொழுது முதல், அது ராஜபக்தி காட்டி வந்ததோடு தேசத்தின் நிர்வாகத்தில் இந்தியர்களுக்கு உத்தியோகம் வேண்டுமென்றும், அதிகாரத்தில் பங்கு பதவி வேண்டு மென்றும் வெள்ளைக்காரர்கள் பார்க்கும் உத்தியோகமும் வாங்குகிற சம்பளமுமே இந்தியர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டுமென்றும் வெள்ளைக்காரரைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டு வந்ததும் அவர்கள் அப்படியே அடைந்து அனுபவித்துக்கொண்டு வந்ததும் வெள்ளைக்காரர்களே இந்த நாட்டில் இருந்து என்றென்றும் அரசு புரியவேண்டும் என்று சொன்னதும் நமக்குத் தெரியாதா? இந்தப்படி பெற்று இவர்கள் அனுபவித்தால் அது தேசபக்தி! தேசாபிமானம்! நாம் அனுபவித்தால் தேசத்துரோகமா? எ.ஒ. ஹியூம் என்ற வெள்ளைக்காரர் இந்தக் காங்கிரஸை ஏற்படுத்தி இந்த மாதிரியாக வெள்ளைக்காரரைக் கேட்டுக்கொள்ளும்படி தீர்மானம் செய்ய யோசனை கொடுத்ததையேற்றுக் கொண்டார்கள். காங்கிரசானது எந்தெந்தக் காலத்தும் பிரிட்டனும் இந்தியாவும் ஒன்றாய்ப் பிணைத்துக் கட்டினதுபோல் இருந்துகொள்ள வேண்டி விரும்புவதாகவும் முதல் கொள்கை ஏற்படுத்தினார்கள். அந்தப்படியே ஒவ்வொரு காங்கிரசிலும் ராஜவிஸ்வாசப் பிரமாணமும் காங்கிரஸ்காரர்கள் செய்து கொடுத்துக்கொண்டு வந்தார்கள். இதை ஈயர் புக் என்ற புஸ்தகத்திலும் காங்கிரஸ் சரித்திரம் என்ற புஸ்தகத்திலும் நீங்கள் படித்துத் தெரிந்து கொள்ளலாம், 1914ம்ஆண்டுசென்னையில் கூடிய காங்கிரசிற்கு நானும் 10 ரூபாய் கொடுத்து டெலிகேட்டாகப் போயிருந்தேன். அதுசமயம் சென்னை கவர்னராக இருந்த பெண்ட் பிரபு அவர்களும் காங்கிரசுக்கு அழைக்கப்பட்டிருந்ததால் அவரும் இடையில் வந்தார். அப்பொழுது சுரேந்திரநாத பானர்ஜியானவர் நடவடிக்கைகளை யெல்லாம் அப்படியே நிறுத்திவிட்டு ஏற்கெனவே பாஸ் செய்திருந்த ராஜவிஸ்வாசப் பிரமாணம் நிற்க, அதிகப்படியாக இருக்கவென்று, திரும்பவும் ராஜ விஸ்வாசத்தை தெரியப்படுத்துகிறதாக தீர்மானம் கொண்டுவந்து பிரமாதமான ஒரு பிரசங்கம் செய்தார். இப்பவும் கூட காங்கிரஸ்காரர்கள் சட்டசபைகளிலும் லோக்கல் போர்டுகளிலும் மெம்பர்களாக நுழைந்து அங்கம் வகிக்கிற பொழுது, தாம் இந்த அரசாங்கத்தின் சட்டங்களுக்கும் சட்டசபையின் சட்ட முறைகளுக்கும் கட்டுப்பட்டு நடப்பதாகவும், இந்த ராஜாவுக்கும் இந்த ராஜாவின் பின் வரும் சந்ததிகளுக்கும் அதாவது பார்க்காமல் கொள்ளாமல் இனிமேல் பிறக்கப்போவதாக இருக்கிறவர்களுக்கும் ராஜவிஸ்வாசமாக இருப்பதாகப் பிர்ம முடிச்சைப் பிடித்துக் கொண்டு பிரமாணம் செய்து கொடுத்து விட்டுத்தானே உட்காருகிறார்கள். இந்தப்படி இவர்கள் பிரமாணம் செய்து சதா திட்டம் செய்து கொடுத்து பெரிய சம்பளங்கள், பதவிகள், அதிகாரங்கள் இவற்றை அனுபவித்தால் அது தேச பக்தி! தேசாபிமானம்! மற்றவர்கள் செய்தால் அது தேசத்துரோகமா? நமக்குப் பொய்ச் சத்தியம் பண்ணத் தெரியாது, அவர்கள் அப்படி சத்தியம் செய்தால் சுவர்க்கமும் மற்றவர்கள் செய்தால் அவர்களுக்கு நரகமும் வந்துவிடுமா?

ஜஸ்டிஸ் கட்சியின் மேல் வீண் துவேஷப் பிரசாரம் செய்கிறார்கள்; தூற்றுகிறார்கள். மந்திரிகள் 4000 ரூ. சம்பளம் வாங்கி எடுத்துக் கொள்ளுவதாகச் சொல்லுகிறார்கள். ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்ட பிறகு தான் இந்த சம்பளம் ஏற்பட்டதா அல்லது அதற்கு முன்னாலேயே இருந்ததா என்று யோசித்துப் பாருங்கள். காங்கிரஸ்காரர்கள் 1885ம் வருஷம் முதல் 1910 அல்லது 1918 வரையில் கூட இந்தப்படி கேட்கவில்லையா? இந்த மாதிரி கேட்டுத்தானே கிருஷ்ணசாமி ஐயர், சி.பி. ராமசாமி ஐயர், சிவசாமி ஐயர், பி. ராஜகோபாலாச்சாரியார், ஸ்ரீனிவாச ஐயங்கார், வெங்கட்டராம சாஸ்திரியார் இவர்களெல்லாம் அனுபவித்தார்கள். இவர்கள் வேலை பார்த்தால் நாட்டை “வெள்ளைக்காரருக்கு காட்டிக்கொடுக்கவில்லை. தேசாபிமானிகள்”. ஆனால், நாம் பார்க்கிறபோதுதான் தேசத்தைக் காட்டிக்கொடுத்துவிட்டோமாம்; தேசத் துரோகிகள் ஆய்விட்டோமாம். வெள்ளைக்காரருக்கு அடிமைகளாக ஆய்விட்டோமாம். இதென்ன அக்கிரமம் என்கிறேன். இவ்வளவுதானா?

இவர்கள் இப்படிப்பட்ட பெரிய பதவிகளை அடைந்து பெரிய சம்பளங்களை அனுபவித்ததால் அதற்காக இவர்களை தேசாபிமானிகள் என்று சொல்லி இவர்களுக்கு சிலைகள் கூட பீச்சில் வைக்கப்பட்டிருக்கின்றன. பட்டணம் பீச்சில் கிருஷ்ணசாமி ஐயர் சிலையைப் பாருங்களே! இந்தப் பார்ப்பனர்கள் தாங்கள் பெற்ற மகா பெரிய சம்பளங்களைக் கொண்டு தாங்களே வீடு வாசல் கட்டி சுகமாக இருந்து கொண்டிருக்கிறார்கள். மைலாப்பூர் அரண்மனைகள் தேசபக்தியால் ஏற்பட்டனவா? ஆனால் நம்முடைய மந்திரிகளின் செலவுகளைப் பாருங்கள்! உள்ள திட்டத்திற்கு 1000 ரூபாயை ஒவ்வொருவரும் குறைத்துக் கொண்டார்கள். ஒவ்வொருவரும் கட்சியின் பத்திரிகைக்கு தலைக்கு 1000 ரூபாய், 1200 ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கிறது. பிரசார வேலைக்கு தலைக்கு 500 ரூபாய் செலவழிக்க வேண்டியிருக்கிறது. வருமான வரி மாதம் 400, 500 செலுத்த வேண்டியிருக் கிறது. மிச்சம் இருப்பதை எலெக்ஷனில் செலவு செய்துவிட்டு வேலை போன பின்பு வீட்டில் குந்திக்கொண்டு வக்கீல் வேலை செய்துதான் சாப்பிட வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இல்லாவிட்டால் அவர்கள் சொந்த சொத்தில் சாப்பிடுவார்கள். காங்கிரஸ்காரர்கள் உத்தியோகங்கள் செய்து ஏகமாய் அனுபவித்து வருகிற பணத்தில் தேச பக்தி என்று முத்திரை போடப்பட்டு இருக்கிறதா? பொப்பிலி ராஜா அவர் வாங்குகிற 3300 ரூபாய் சம்பளத்தையும் ஜஸ்டிஸ் பேப்பருக்குக் கொடுத்துவிட்டு போதாமல் கையிலிருந்து இன்னம் 4000 ரூபாய் கட்சிக்காக செலவு செய்யவேண்டியதாக இருக்கிறது.

மந்திரியாக இருந்த சிவஞானம்பிள்ளை தான் ஏற்கெனவே வேலை பார்த்து வாங்கிக்கொண்டிருந்த பென்ஷனைக் கொண்டுதான், சாகும் அளவும் காலம் கழித்தார். முத்தைய முதலியார் எல்லாவற்றையும் எலெக்ஷனில் தொலைத்துவிட்டு வக்கீல் வேலை செய்து பிழைக்கிறார். முனிசாமி நாயுடு செத்துப்போனதும், பண முடிப்பு வசூல் பண்ணிக்கொடுத்து அவரது குடும்பத்தை பிழைப்பிக்க வேண்டி யிருந்தது. மந்திரியாக இருந்த கனம் சேதுரத்னம் ஐயர் வேலையைவிட்டதும் செலவுக்குப்பணம் போதாமல் கிரிமினல் கேஸில் மாட்டிக்கொண்டு எல்லாவற்றையும் தொலைத்துவிட்டார். காங்கிரஸ் பார்ப்பனர்களோ லட்சக்கணக்கில் அனுபவித்து பணம் சேர்த்து பத்திரமாய் வைத்துக்கொண்டு சுகமாக காலம் கழிக்கிறார்கள். இவர்களுடன் நாமும் சேர்ந்துகொண்டு, ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் உத்தியோக வேட்டைக் காரர்கள், தேசத்துரோகிகள் என்று கூச்சல் போட்டால் நம்மிலும் முட்டாள்கள் யார் இருக்க முடியும்?

காங்கிரஸ் ஏற்பட்டதே பிரிட்டிஷ்காரரை வாழ்த்துவதற்குத்தான். அதனுடைய முதல் திட்டமே “நாங்கள் வெள்ளைக்கார ராஜாவிடத்திலும் அவருடைய குடும்பத்தாரிடத்திலும் பக்தியாகவும் விஸ்வாசமாகவும் நடந்து கொள்வோம்” என்பதே. ஆனால் ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் அவ்விதம் செய்தால் அதற்காக வெள்ளைக்காரர்களை வெறுக்கிறதுபோல் காங்கிரஸ்காரர்கள் பாசாங்கு செய்கிறார்கள். தாம் பெரிய ராஜத்துரோகிகள் போல் காட்டிக்கொண்டு பேசுகிறார்கள். பிறகு வெள்ளைக்காரர்கள் வீட்டுக்கும் கவர்னர் வீட்டுக்கும் போய், “நாங்கள், அனுமார் ராமனிடம் எப்படி பக்தியாயும் அடிமையாயும் இருந்தாரோ அதைவிட 100 பங்கு அதிக பக்தியாயும் அடிமையாயும் நடந்துகொள்வோம்” என்று சொல்லிக் கெஞ்சுகிறார்கள். நாம் இதற்கெல்லாம் எப்படி ஏமாந்து கொண்டிருக்க முடியும்?

இவர்களுடைய லெக்சர்களும் தீர்மானங்களும் கவர்ண்மெண்டை அசைக்க முடியாது. மோதிலால் நேருவானவர் சட்டசபையில் பிரமாதமாகப் பேசினார்; மேஜையைத் தட்டினார்; புஸ்தகத்தைத் தூக்கி எறிந்தார்; கடைசியாக அவர், “நாம் இந்த கவர்ண்மெண்டை அசைக்க முடியாது. நமக்கு சட்ட சபைக்குள் வேலையே இல்லை. நம் வேலையெல்லாம் பொது ஜனங்கள் முன்புதான்” என்று அரை மணிநேரம் பேசிவிட்டு வெளியேறினார். சீர்திருத்தச் சட்டங்களில் அப்படி பாதுகாப்புகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. காங்கிரஸ்காரரான அவினாசிலிங்கம் செட்டியாரே காங்கிரசுக்குப் பயந்துதான் அப்படிப்பட்ட பாதுகாப்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன” என்று சொல்லி யிருக்கிறார். இவ்வளவு பாதுகாப்புகளை வைத்துக்கொண்டு நாம் கவர்ன்மெண்டை என்ன செய்துவிடமுடியும்? காங்கிரசின் எந்த ஒரு தீர்மானம் எங்கே அமுலுக்கு வந்தது? காங்கிரஸ்காரர்கள் வீணில் கத்திக் கொண்டிருப்பதைத் தவிர ஜனங்களுக்கு என்ன சாதித்ததாகச் சொல்ல முடியும்?

(தொடர்ச்சி 11.10.1936 குடி அரசு)

குறிப்பு: 27.09.1936 ஆம் நாள் திண்டுக்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை.

குடி அரசு சொற்பொழிவு 04.10.1936

You may also like...