கோபியில் நடந்தது என்ன?

தோழர் ஜவஹர்லாலுக்கு கோபியில் கருப்புக்கொடி பிடித்து பஹிஷ்கரித்ததைப் பற்றி காங்கிரஸ் பத்திரிகைகள் என்பவை அயோக்கியத் தனமாகத் திரித்துக் கூறி இருக்கின்றன.

பத்திரிகை நிருபர்கள் பெரிதும் பார்ப்பனர்கள் என்பதும் அவர்கள் இம்மாதிரி விஷயங்களில் 100க்கு 99ல் அற்பத்தனமாகவே நடந்து கொள்ளுகிறார்கள் என்பதும் எவ்வளவு தான் கண்டித்தாலும் அவர்களுக்கு ரோஷம் என்பது மருந்துக்குக் கூட ஏற்படுவதில்லை என்பதும் நாம் இதற்கு முன் அனேக தடவை வெளியிட்ட காரியமாகும். ஆகவே கோபியில் நடந்த விஷயத்தில் சில பத்திரிகை நிருபர்கள் அயோக்கியத்தனமாய் நடந்து கொண்டதில் அதிசயமில்லை. ஆனால் “மெயில்” பத்திரிகை நிருபர் அடியோடு அது போல் நடந்து கொள்ள முடியவில்லை. ஏனெனில் “மெயில்” பத்திரிகை சொந்தக்காரர் முழுப்பார்ப்பனர் அல்ல. ஆதலால் கேள்விக்கு பதில் சொல்லவேண்டி வருமே என்று பயந்து கொஞ்சமாவது உண்மை எழுதவேண்டியதாகி விட்டது.

அதாவது கோபியில் கருப்புக் கொடிபிடித்தவர்களை தோழர் ஜவஹர்லால் கூப்பிட்டதாகவும் கருப்புக்கொடி பிடித்தவர்கள் பயந்து கொண்டு நழுவி விட்டதாகவும் பல காங்கிரஸ் பத்திரிக்கைகள் என்பவைகள் எழுதி இருக்கின்றன. நிருபரில்லாத சில பத்திரிக்கைகள் அவற்றைப் பார்த்து காப்பி அடித்திருக்கின்றன.

ஆனால் “மெயில்” பத்திரிகை நிருபர் கருப்பு கொடி பிடித்தவர்களை பண்டிதர் ஜவஹர் கூப்பிட்டார். கருப்புக்கொடிக்காரர் வந்தார்; ஜவஹர் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார்” என்று எழுதி இருக்கின்றார். (கோபியில் இருந்து வந்த சேதியையும் மற்றொருபுறம் பிரசுரித்திருக்கிறோம்.) ஆகவே இம்மாதிரி விஷயங்களில் பார்ப்பனப் பத்திரிக்கைகளும் அவற்றின் நிருபர்களும் எவ்வளவு யோக்கியமாய் நடந்துகொள்கிறார்கள் என்பதை பொது ஜனங்கள் உணர்ந்துகொள்ள வேண்டுமாய் விரும்புகிறோம்.

குடி அரசு துணைத் தலையங்கம் 18.10.1936

You may also like...