இன்னுமா சந்தேகம்?

தோழர் ஜவஹர்லால் அவர்கள் தேர்தலுக்கும் பணம் வசூலித்து பார்ப்பனர்களுக்குக் கொடுக்கவும் வருகிறார் என்று சென்ற இரண்டு வாரமாக எழுதி வந்தோம். அதைப்பார்த்த ஒரு தோழர் நமக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். சென்னை கார்ப்பரேஷன் தேர்தல் இருக்கும்போதும் சில ஜில்லா போர்டு தேர்தல் இருக்கும் போதும் இந்த மாதிரி ஜவஹர்லால் அவர்களை பகிஷ்காரம் செய்வது வரவேற்புபத்திரம் மறுப்பது போன்ற காரியங்கள் நடக்குமானால் தேர்தல் பாதிக்கப்பட்டு விடாதா என்று கேட்கிறார்.

பிரசாரத்திற்கு தாராளமாய் அனுமதித்து பணம் வசூலுக்கும் இடந்தந்து ஒவ்வொரு முனிசிபாலிடியும் ஜில்லாபோர்டும் வரவேற்பளிக்கும் காரியத்துக்கு உதவி செய்து வந்தால் தேர்தலில் என்ன பலன் கிடைக்குமோ அதைவிட மோசமான பலன் ஒன்றுமே நமக்கு ஏற்பட்டு விடாது என்பதுதான் நமது பதிலாகும்.

நாம் முன் குறிப்பிட்டது போலவே தோழர் ஜவஹர்லால் எங்கேயோ இருந்துகொண்டு இங்கு தேர்தலில் நிற்கும் ஆட்களின் யோக்கியதைகளையும் தராதரங்களையும் உணராமலே காங்கிரசின் பேரால் நிறுத்தப்பட்ட ஆட்களுக்கே ஓட்டுப்போடுங்கள் என்று “ஸ்ரீ முகம்” அனுப்பி இருக்கிறார் என்றால் அவர் பார்ப்பனர் கையாளாய் பார்ப்பனப் பிரசாரத்துக்கு வருகிறார் என்பதற்கு என்ன ஆட்சேபணை என்று கேட்கின்றோம்.

காங்கிரசின் பேரால் ஒருவர் நிறுத்தப்பட்டு விட்டால் அவர் பெரிய நாணயஸ்தரும் ஒழுக்கமுடையவரும் மேதாவியும் பொது ஜன சேவைக்கு தகுந்தவர்கள் ஆய்விட்டார்கள் என்று அர்த்தமா? காங்கிரசில் சேராததாலேயே எப்படிப்பட்டவரும் பொதுநல சேவைக்கு அருகதை அற்ற அயோக்கியர்கள் என்று அர்த்தமா என்று கேட்கின்றோம்.

இன்று காங்கிரஸ் பேரால் அபேக்ஷகர்களாக்குபவர்களுக்கு என்ன பரீட்சை காங்கிரசில் இருக்கிறது என்று யாராவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம்.

தோழர்கள் உபயதுல்லா, கிருஷ்ணசாமி பாரதி, குப்புசாமி அண்டு கம்பெனியை கைக்குள் போட்டுக்கொண்டால், அவர்களை விலைக்கு வாங்கிக்கொண்டால் எப்படிப்பட்ட சாதாரண மனிதனும் காங்கிரஸ்காரனாகி ஜவஹர்லால் அவர்களால் அனுக்கிரகமும் ஆசியும் ஆதரவும் பெற்று விடக்கூடிய நிலையில் இல்லையா என்று கேட்கின்றோம். இதுவரை தமிழ் நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரியார்களில் 100க்கு சில இடங்களில் 50 பேர்களுடைய யோக்கியதைகள் எப்படியாக இருந்து வருகின்றன என்று கேட்கின்றோம்.

காங்கிரஸ்காரர்களே அவர்களுக்கு எப்படிப்பட்ட நற்சாக்ஷிப் பத்திரங்கள் அளித்து வந்தார்கள் என்பது நாம் அறியாததா? அதிக தூரம் போக வேண்டியதில்லை. பெரிய தியாகிகள், தேச பக்தர்கள், தேசியவாதிகள் என்று அமிர்தாஞ்சனம் போல் விளம்பரம் பெற்றவர்களும் தனிப்பெருந் தலைவர் பட்டமும் சர்வாதிகாரப் பட்டமும் பெற்றவர்களுமான தோழர்கள் திருச்சி டாக்டர்கள் ராஜன், சாஸ்திரி கம்பினிகளின் கதி என்ன ஆயிற்று என்று கேட்கின்றோம். டாக்டர் ராஜன் காங்கிரஸ் கட்டளையை மீறினார்; துரோகப் பட்டம்பெற்றார்; காங்கிரஸ் பிரிவு கவுன்சிலான வேலை கமிட்டியாராலும் காங்கிரஸ் தலைவராலும் காங்கிரசிலிருந்து நீக்கப்பட்டார். அவருடைய நடத்தைக்கு ஆகவே தோழர் ராஜகோபாலாச்சாரியார் கோவித்துக்கொண்டு காங்கிரஸ் நிர்வாகத்தில் இருந்து விலகி அஞ்ஞாத வாசம் செய்கிறார். அப்படிப்பட்ட டாக்டர் ராஜன் மறுபடியும் திருச்சி முனிசிபல் அதே கவுன்சில் ஸ்தானத்துக்கு நின்றால் அவருக்கு போட்டியாக காங்கிரசுக்காரர்கள் ஆள் நிறுத்தக்கூடாது என்று தீர்மானம் செய்தார்கள் என்றால் காங்கிரசின் பேரால் ஆட்கள் நிறுத்துவதில் காங்கிரசுக்காரர்கள் எப்படிப்பட்ட ஒழுக்கத்தையும் நாணயத்தையும் பின்பற்றுகிறார்கள் என்பதற்கு ஏதாவது வேறு உதாரணம் வேண்டுமா என்று கேட்கின்றோம்.

சென்னையில் இவர்கள் எப்படிப்பட்ட ஆட்களை நிறுத்தி இருக்கிறார்கள் என்று பார்த்தால் காலித்தனத்தில் தீரர்களுக்கு முதல் பிரைசும், பார்ப்பனர் களுக்கு இரண்டாவது பிரைசும், பணம் கொடுத்தவர்களுக்கு மூன்றாவது பிரைசுமாக கிடைத்து வந்திருக்கிறது. இந்த மகாத்மாக்கள்தான் திருநெல்வேலி முதல் திருவேங்கடம் வரை ஒரு குறிப்பிட்ட கொள்கைக்காக நிறுத்தப்பட்ட வர்களாம். அவர்களுக்கே ஓட்டு செய்யவேண்டுமாம்! புழுத்ததின் மீது மலங் கழித்த மாதிரி இந்த மகாத்மாக்கள் தேர்தலுக்கு நேரில் வந்து பிரசாரம் செய்யப் போவதோடு இதற்கு பணம் வேறு வசூலித்துக் கொடுக்க வருகிறார்களாம்.

இந்தமாதிரி காரியத்துக்கு வருபவரை வரவேற்று உபசரிப்பது பணம் கொடுப்பது என்றால் இவர்களுக்கு பெயர்தான் சுயமரியாதையுள்ள மக்கள் என்பதா என்று கேட்கின்றோம்.

வசவுக்கு பயந்து சிலர் பணம் கொடுக்கிறார்கள். மற்றும் சில காரியத்துக்கு சிலர் பணம் கொடுக்கிறார்கள்; கொடுக்கட்டும். ஆனால் அந்தப் பணம் எப்படி செலவழிக்கப்படுகிறது? என்ன ஆகிறது? அதனால் தொல்லை படுகிறவர்கள் யார்? என்றுகூட கவனிக்க வேண்டாமா என்று கேட்கின்றோம்.

குடி அரசு துணைத் தலையங்கம் 04.10.1936

You may also like...