33. கடல் குமுறுது!
காற்றடிக்குது கடல் குமுறுது! கண்ணைத்திறவாய் நாயகமே என்று பாடிய கவியின் கருத்தை, சென்னை சென்ற ஞாயிறன்று, மிகமிக அழகாக எடுத்துக்காட்டிற்று. அன்று பெரியார் வரவேற்புக் கூட்டம் மிக ஆடம்பரமாக திருவல்லிக்கேணி கடற்கரையில் கொண்டாடப்பட்டது. கடல் அலை ஒலிக்கு சக்தி அதிகமா அன்றி தமிழரின் முரசொலிக்கு சக்தி அதிகமா என்று போட்டி நடந்து அன்று. கடற்கரையில் எங்கு நோக்கினும் தமிழர்கள்! தமிழ்ப்பெண்கள்! தமிழ் வாலிபர்கள்! தமிழ்த் தலைவர்கள்! 1000-க்கு மேற்பட்ட வெளியூர்த் தமிழர்கள் அக்கூட்டத்திற்கு வந்திருந்தனர். ஆச்சாரி சர்க்காரின் அழைப்பை ஏற்றுக்கொண்டு சிறைசென்று மீண்ட தாய்மார்க்ள் ஒரு புறமும், தொண்டர்கள் மற்றொரு புறமும் அமர்ந்திருக்க உயரமாக எழுப்பப்பட்ட மேடைமீது மின்சார விளக்கொளியுடன் நீதிக்கட்சிச் சின்னமாகிய திராசு மின்னவெண்ணிறத்தாடி கடற்காற்றால் ஆடி அசைய, பிரகாசிக்கும் கண்கள் அங்குமிங்கும் பாய்ந்து நோக்க, பெரியார் மேடைமீது அமர்ந்த காட்சியை தமிழர் என்றும் மறவார்! அன்று கண்ட தமிழரின் உற்சாகத்தை பெரியாரும் என்றும் மறவார். அக்காட்சியை, சரிதமும் மறவாது....