3. பொப்பிலி ராஜாவே மேலும் தலைவர்
தோழர்களே!
இந்தச் சந்தர்ப்பத்தில் நமது தலைவர் பொப்பிலி ராஜா அவர்களைப்பற்றிச் சில வார்த்தைகள் குறிப்பிடவேண்டியது மிகவும் அவசியமாகும். நமது கட்சியானது பல வழிகளிலும் சிதறுண்டு, பலஹீனப்பட்டிருந்த காலத்தில் பொப்பிலி ராஜா அவர்கள் தன் முயற்சியையும், செல்வத்தையும் கட்சியின் வளர்ச்சிக்காகவே பயன்படுத்தினார் என்பது நீங்கள் யாவரும் அறிந்ததேயாகும். எந்தக் காரணத்தைக்கொண்டு அவர் கட்சித் தலைமைப் பதவியை ராஜீநாமாச் செய்திருந்தாலும், என்னைப் பொறுத்தவரையில் அவரே தான் நம் கட்சிக்கு இன்னும் தலைவர் என்றே கருதிக் கொண்டிருக்கிறேன். ஏனெனில் பொப்பிலி ராஜா அவர்களுடைய நெஞ்சுறுதி, கட்சிப் பற்று தியாகம் முதலிய அருங் குணங்கள் ஒருவரிடம் ஒருங்கு சேர்ந்திருப்பதென்பது மிக மிக அருமையாகும். ஆகையால் இன்னமும் நான் அவர்கள் இட்ட கட்டளையை மீறாமல் அவருக்கு ஒரு உதவித் தொண்டனாகவே இந்த ஸ்தானத்தை வகிக்கிறேன் என்பதே எனது எண்ணமாகும்.
இந்த சந்தர்ப்பத்தில் இதுகாறும் என்னுடன் கூட பல கஷ்ட நஷ்டங்களுக்கிடையில் நம்மக்களுக்கு இடைவிடாத்தொண்டு புரிந்து கொண்டு வருகின்ற எனதருமைத் தோழர்களான சௌந்திரபாண்டியன் அவர்களுக்கும் விஸ்வநாதம் அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ளக் கடமைப் பட்டிருக்கின்றேன்.
எங்கள் நோக்கம் இந்த நாட்டின் எல்லா மக்களும் சம உரிமையும், சம சந்தர்ப்பமும் பெறவேண்டுமென்பதே. இக்கொள்கையை இந்நாட்டுத் தீவிர அரசியல் கட்சியான காங்கிரஸ் கைக்கொண்டிருக்கின்றதா என்று கேட்கின்றேன்? அப்படியிருந்தால் இன்று காங்கிரஸில் பார்ப்பனர்களே ஆதிக்கம் பெற்றிருக்கவும், மற்றவர்கள் கைதூக்க மாத்திரம் உரிமைகொண்டவர் களாகவும் இருக்க யாது காரணம்?
அரசியல் துறையில் காங்கிரஸ்காரர்கள் அந்நியர்கள் இந்நாட்டை விட்டு விரட்டப்பட வேண்டுமென்று சொன்னால் நாங்கள் அவர்களை வேண்டாமென்கிறோமா? காங்கிரஸ்காரர்கள் பூரண சுயேச்சை வேண்டுமென்றால் நாங்கள் கூடாது, கால் சுயேச்சை அல்லது அரை சுயேச்சையே போதுமென்கிறோமா?
காங்கிரஸ்காரர்கள் குடிகளுக்கு வரியே போடக்கூடாதென்றால், நாங்கள் வரிபோட்டுதான் ஆகவேண்டுமென்று சொல்லுகிறோமா?
காங்கிரஸ்காரர்கள் மக்கள் எல்லாம் எழுதப்படிக்க தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் நாம் அது தப்பு, ஒரு ஜாதி மட்டும்தான் படிக்க வேண்டும் மற்றவர்கள் படிப்பது குற்றமென்கின்றோமா?
காங்கரஸ்காரர்கள் ஜாதி வேற்றுமை கூடாது; எல்லாரும் ஒரு குலம் என்றால் நாங்கள் ஜாதி வேற்றுமை இருக்கத்தான் வேண்டும் என்கின்றோமா?
பார்ப்பனர்கள் தங்கள் விகிதாசாரத்துக்குப் பெற்றுள்ள அளவுக்கு மேல் உத்தியோகம் பெறவோ அன்றி உத்தியோகங்களெல்லாம் நமக்கு மாத்திரந்தான் இருக்கவேண்டுமென்றோ ஆசைப்படு கின்றோமா? அல்லது கடந்த 7-வருட ஆட்சியில் எந்த வகுப்பார்களை அவர்களுக்கு நியாயமாகச் சேரவேண்டிய விகிதத்தைப் பெற முடியாமல் செய்து விட்டோமா? அல்லது அவ்விகிதாசாரத்தைக் குறைத்து விட்டோமா?
உத்தியோகம் செல்வாக்கு எதற்கு?
உத்தியோகம் பெற அனைவர்க்கும் உரிமை உண்டு, எல்லோரும் அதற்குத் தகுதியுடையவர் களாக வேண்டியவர்களேயாவர்கள்.
உத்தியோகத்திற்குரிய அதிகாரம், பொறுப்பு, செல்வாக்கு எல்லாம் நாட்டு மக்களை நன்கு நடத்தவும், அவர்களுக்குச் தொண்டாற்றவுமேயாகும். உத்தியோகத்திற்கு ஏற்பட்டுள்ள சம்பளம் இந்நாட்டு மக்கள் கொடுக்கும் வரிப்பணத்திலிருந்தே கொடுக்கப்படுகின்றது. அத்தகைய உத்தியோகத் தைப் பெற விரும்புவது நாட்டிலுள்ள எல்லா வகுப்பு மக்களின் பிறப்புரிமை என்று சொல்வது எப்படிக் குற்றமாகும் என்பதும், உத்தியோகம் பெற முயற்சிப்பது எப்படி உத்தியோக வேட்கையாகுமென்பதும் நமக்கு விளங்கவில்லை.
நேஷன் என்ற வார்த்தைக்கு பொருள்கொண்டு பார்த்தால் இந்தியாவை ஒரு நேஷன் என்று கூறுவது எவ்வாறு பொருந்தும்? மொழிகளை அடிப்படையாக வைத்துப் பிரித்தால் இந்தியாவை அநேக நேஷன்களாகப் பிரிக்கலாம் அல்லது அங்க மச்ச அடையாளத்தின் மீது பாகுபாடு செய்தாலும் ஆரியர்கள், திராவிடர்கள், மங்கோலியர்கள் எனப் பல (நேஷன்) பிரிவுகளாகும். பழக்க வழக்க சமுதாயக் கோட்பாடுகளைக் கொண்டு பிரித்தாலும் அதுவும் பார்ப்பன, பார்ப்பனரல்லாத இந்துக்கள் எனப் பல ஜாதி வகுப்புக்களாகப் பிரிக்கப்படும். மற்றும் எவ்வகையில் பார்த்தாலும் இந்திய நேஷன் என்பதற்கு இந்தியா முழுமையும் சேர்ந்த நிலப்பரப்பு மாத்திரம் என எவ்வாறு பொருள்படும்?
ஆந்திர தேசீயவாதிகள் சென்னை மாகாணத்தை விட்டுப் பிரிந்து தனி மாகாணமொன்று ஏற்படுத்தி அதன் நிர்வாகத்தைத் தாங்களே மேற்கொள்ள வேண்டுமென்று முயற்சிக்கின்றனர். அவ்வாறே ஒரிசாவும்,சிந்துவும் தனித்தனி மாகாணமாய் விட்டன.
பர்மாக்காரர்கள் இந்தியாவிலிருந்து பிரிந்து பர்மா பர்மியருக்கே என்று தீவிர கிளர்ச்சி செய்து வெற்றி பெற்றது நாம் அறிந்ததே. இலங்கைக்காரர்களும் இப்படியே.
அதேபோல் ஆரியர்களிடமிருந்தும் மங்கோலியர்களிடமிருந்தும், திராவிடர்கள் பிரிந்து போக வேண்டுமென்று நினைப்பது தேசீயத்திற்கு விரோதமாகுமா?
வெள்ளையர் ஆட்சியின் கீழ் இல்லாவிட்டால் அந்நியர் படையெடுப்பினின்றும் நம்மை காத்துக்கொள்ள முடியாதெனக் கூறப்படுமானால் சிலோன், பர்மா இவைகளைப் போலவோ அன்றி கனடா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா இவைகளைப் போன்றோ தமிழ் நாடோ, திராவிட நாடோ பிரிந்திருக்கமல்லவா?
வெள்ளையர் ஆட்சியின் கீழேயே இருக்கலாகாது; பூரண சுதந்தரம் பெற்ற தேசமாக இருக்கலாம் எனப்படுமானால் ஐரோப்பாவில் 3-கோடி 4-கோடி ஜனத்தொகை கொண்ட பெல்ஜியம், ஹாலண்டு, சுவிட்ஸர்லாண்டு, டென்மார்க் போல சென்னை மாகாணமோ, தமிழ்நாடோ தனித்த நாடாக இருப்பது அசாத்தியமா?
காங்கரஸ் தேசீய சபையா?
அப்படிக்கின்றி இந்திய தேசீய சபையின் சர்வாதிகாரி குஜராத்தி நேஷனைச் சேர்ந்தவர், பெருந்தலைவர்களிலே ஒருவர் காஷ்மீரி நேஷனைச் சேர்ந்தவர், மற்றொருவர் வங்காளி நேஷனைச் சேர்ந்தவர். நிர்வாக சபையினர் அனைவரும் தமிழர்களோ, தமிழ் நாட்டினரோ அல்லாமல் இதரர்களாயிருந்து கொண்டு தேசீயம் பேசுவதென்றால் காங்கரஸ் உண்மையில் எவ்வாறு தேசீய சபையாகும்?
தென்னாட்டான் சுரண்டுவதை பொறுக்கமாட்டாமல் சிங்களத்தான் சீறுகிறான். குஜராத்தி சுரண்டலும் சிந்து மார்வாடி சுரண்டலும் தமிழ்நாட்டைப் பாப்பராக்குகிறது. இதற்கு நாம் துடி துடித்தால் தேசீயத்திற்கு விரோதமாய் விடுகிறது.
தேசீயம் பேசி அழிந்து போகவா?
திராவிட மக்கள் (தமிழ் மக்கள்) மீது ஆரிய மதம் சுமத்தப்பட்டு தமிழர் உழைப்பின் பலனையெல்லாம் தமிழரல்லாத ஒரு சிறு கூட்டத்தவர்கள் கொள்ளைபோல் சுரண்டுவதை, உறிஞ்சுவதை, இது நீதியா, முறையா, அடுக்குமா என்று கேட்கப் புகுந்தால் அது தேசீய துரோகமாகவதுடன் ராஜதுவேஷமும், வகுப்புத்துவேஷமுமாகி விடுகிறது. இம்மாதிரி தேசீய வேஷம் போட்டு நாம் அழிந்து போவதா? அல்லது அதைக்கண்டு பயந்து தற்கொலை செய்து கொள்வதா? தோழர்களே ஆழ்ந்து யோசியுங்கள்.
உலக ஒற்றுமையை நான் வெறுப்பவனல்ல. உலக மக்கள் சமதர்ம வாழ்வை மேற்கொள் வதை வேண்டாமென்று கூறவில்லை. மக்கள் யாவரும் விகிதாச்சாரம் உழைத்து அவ்வுழைப்பின் பலனை விகிதாச்சராம் பகிர்ந்து, தத்தம் தகுதிக்கும் தேவைக்கும் அவசியமான அளவு அனுபவிப்பதை நான் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் தேசீயம் என்றும், தேச சேவையென்றும், தேசபக்தி என்றும், சொல்லுவது பாமர மக்களை ஏமாற்றுவதற்குப் பயன்படுத்தப்படக் கூடாது என்கிறேன்.
சுயராஜ்யத்துக்கு ஜஸ்டிஸ் கட்சியார் முட்டுக்கட்டை போட்டார்களா?
தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்னும் பார்ப்பனரல்லாத மக்களடங்கிய ஸ்தாபனத்தின் பெயரால் 1920ம் ஆண்டு தொடங்கி 17 வருடகாலம் அரசியல் அதிகாரத்திலே ஆலோசனை கூறுபவர்களாகவும், சில இலாக்காக்களின் நிர்வாகத் தலைவர்களாகவுமிருந்து நம்மவர் நாட்டிற்குச் சேவை செய்து வந்த காலத்தில் சுயராஜ்யம் பெறுவதற்குத் தடையாக அவர்கள் செய்த காரியம் யாவை? என்றும், நாட்டு மக்கள், நலத்திற்குச் செய்ய வேண்டுவனவற்றில் செய்யத் தவறியன யாவை? என்றும் யாராவது சொல்ல முன் வருவார்களா என நான் அவர்களை அறைகூவி அழைக்கின்றேன்.
சமுதாயத்தில் ஜாதிபேதக்கொடுமைகளை ஒழிக்க அரும்பாடு பட்டு, மக்களாயிருந்தும் கேவலம் விலங்குகள் போல நடத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, தெருவிலும் நடக்கத் தகுதியற்றவர்கள் எனக்கொடுமைப் படுத்தப்பட்ட மக்களுக்கு சமுதாய உரிமைகளை வாங்கிக் கொடுத்தது யார்? சகல ஜாதிமத வகுப்பினருக்கும் சமுதாய சேவையிலும் அரசாங்க சேவையிலும் பங்கெடுத்துக் கொள்ளச் சந்தர்ப்பம் அளித்தது யார்?
குடிஅரசு, துணைத்தலையங்கம் – 01.01.1939