9. காந்தியார் தகிடுதத்தம்.
காங்கிரஸ்காரருக்கு நாணயமோ, யோக்கியப் பொறுப்போ உறுதியான கொள்கையோ, நேர்மையோ இல்லை யென்பதற்குத் திரிபுர காங்கிரஸ் தலைவர் தேர்தல் விஷயமாக ஏற்பட்டிருக்கும் தகராறே போதிய அத்தாட்சியாகும் அடுத்த காங்கரஸ் தலைவர் தேர்தலுக்கு மௌலானா அபுல்கலாம் அசாத், தோழர் சபாஷ் சந்திரபோஸ் தோழர் பட்டாபி சீதாராமய்யா ஆகி மூவர் பெயர்களும் திரிபுர காங்கிரஸ் பிரதிநிதிகளால் சிபார்சு செய்யப்பட்டன. காந்தியர் தூண்டுதலினால், உடல்நிலை சரியில்லை யென்றும் தள்ளாத வயதில் மிகப் பொறுப்பு வாய்ந்த காங்கிரஸ் தலைவர் பதவியைத் தாங்க முடியாதென்றும் ஒரு போலிக் காரணம் சொல்லிக்கொண்டு மௌலானா அபுல்கலாம் அசாத் போட்டி போடாமல் விலகிக்கொண்டார். விலகியவர் பட்டாபியை எல்லாரும் ஆதரிக்க வேண்டுமென ஒருகுறும்பு சிபார்சும் செய்தார். மௌலானா விலகியதும் தோழர் படடாபி சீத்தாராமய்யாவும் விலக விரும்பினாராம். ஆனால் காந்தியார் சம்மதிக்க வில்லை. தோழர் பட்டாபி போட்டி போடவேண்டுமென்று அவர் வற்புறுத்திக் கேட்டாராம். தோழர் சுபாஷ் சந்திரபோஸ் அடுத்த வருஷ காங்கிரஸ் தலைவராக வரக்கூடாதென்பது காந்தியார் முடிவாம். அவ்வாறு பத்திரிக்கையில் உலகை மயக்கிக் கொண்டிருப்பது போல் தலைவர் தேர்தல் பற்றி ஒரு கட்டுரை எழுதியும் தொலைத்திருக்கலாம். ஆனால் தந்திரசாலியான காந்தியார் அவ்வாற ஒன்றும் செய்யவில்லை. அவ்வாறு வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டிருந்தால் அவரது யோக்கியதையை உலகம் அறிந்து சிரிக்கும் என அவர் எண்ணியிருக்க வேண்டும்.
சுபாஷ் போஸ் ஆத்திரம்
ஆகவே குறுக்குவழியில் இறங்கினார். காங்கிரஸ் கமிட்டி மெம்பர்களான தோழர்கள் படேல், ராஜேந்திர பிரசாத், ஜெயராம்தாஸ் தௌலத்ராம், கிருபாலினி, சங்கரராவ் தேவ், புலாபாய் தேசாய், ஜம்னாலால் பஜாஜ் ஆகிய ஏழு பிரகஸ்பதிகளையும் தூண்டிவிட்டு ஒரு அறிக்கை வெளிவிடும் படி செய்தார் சுபாஷ் போஸ் இவ்வருஷம் போட்டி போடக் கூடாதென்றும் பட்டாபிக்கு அவர் விட்டுக் கொடுக்க வேண்டுமென்றும் விசேஷ சந்தர்ப்பங்களிற்றான் ஒருவர் இரண்டாம் முறையும் தலைவர்கலாமென்றும் அத்தகைய விசேஷ சந்தர்ப்பம் இப்பொழுது இல்லையென்றும் அவர்கள் அவ்வறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்கள். போகிற போக்கில் பட்டாபியை ஆதரிக்க வேண்டுமென்று மௌலானா அசாத் சிபார்சு செய்ததும் காரியக்கமிட்டி மெம்பர்களில் ஏழு பேர் பட்டாபியை ஆதரிக்க வேண்டுமென்று குறும்புத்தனமாக அறிக்கை வெளியிட்டதும் சுபாஷ் சந்திரபோசுக்கு அதிக ஆத்திரத்தை உண்டு பண்ணியது.
பிரகஸ்பதிகள் அறிக்கை
ஆகவே படேல் பெரியார் கன்னத்தில் அடித்தது போல் அவர் ஒரு நீண்ட அறிக்கை வெளியிட்டார். அவ்வறிக்கையில் படேல் கம்பெனிபாரின் சூழ்ச்சிகளும் காங்கரஸ் தளகர்த்தர்கள் யோக்கியதைகளும் நன்றாக விளக்கப்பட்டிருந்தன. சமஷ்டியை எதிர்க்கப்போவதாகக் காங்கிரஸ்காரர்கள் எல்லாம் ஒரே மூச்சாய்க்கூச்சல் போட்டாலும் அடுத்த வருஷம் பிரிட்டிஷாருடன் சமரசம் செய்து கொண்டு சமஷ்டியை ஒப்புக்கொள்ள காங்கிரஸ் மிதவாதிகள் தயாராக இருக்கிறார்கள் என்றும் சமஷ்டிமந்திரிகள் ஜாபிதா கூட தயார் செய்யப்பட்டு விட்ட தென்றும் தாம் அவர்கள் சூழ்ச்சிக்கு உட்படப்போவதில்லையென்ற காரணத்தினாலேயே படேல் கம்பெனியார் தம்மை எதிர்க்கிறார்கள் என்றும் சுபாஷ்சந்திர போஸ் அவ்வறிக்கையில் விளக்கமாகக் குறிப்பிட்டுருந்தார் அதற்குப் பதிலாக படேல் கம்பெனியாரும் ஒரு அறிக்கை வெளியிட்டார்கள். காங்கிரஸ் தலைவர் வெறும் பொம்மையே என்றும் அவர் இஷ்டப்படி எதுவுமே செய்ய முடியாதென்றும் காங்கிரஸ் கொள்கைகளையும் வேலைத்திட்டங்களையும் வகுக்க காங்கிரசுக்கும் காங்கரஸ் கூடாத காலங்களில் காங்கிரஸ் காரியக் கமிட்டிக்குமே அதிகார முண்டென்றும் சமஷ்டியைத் தாம் தீவிரமாக எதிர்க்கப் போவதாய் சுபாஷ் போஸ் கூறுவதற்குப் பொருள் இல்லை என்றும் சமஷ்டியை பட்டாபி உட்பட காங்கிரஸ்காரர் எல்லாம் எதிர்க்கத்தான் செய்கிறார்கள் என்றும் சுபாஷ் போஸ் ஆபத்தானவர் என்றும் அவர் மறுபடியும் தேர்தலுக்கு நிற்க கூடாதென்றும் அவ்வறிக்கையில் அவ்வெழுவரும் குறிப்பிட்டிருந்தார்கள். அதைப் பார்த்து சுபாஷ் சந்திரபோஸ் கலங்கவில்லை. எக்காரணம் கொண்டும் தரம் போட்டியிலிருந்து விலகப்போவதில்லையென்றும் வேறொரு தீவிர சமஷ்டி எதிர்ப்பாளரைத் தலைவர் தேர்தலுக்கு நிறத்தினால் தாம் விலகிக்கொள்ள தயார் என்றும் அவ்வாறு செய்யாதவரை தாம் தேர்தலுக்கு நிற்பது உறுதி யென்றும் அவர் கண்டிப்பாகக் தெரிவித்தார். கடைசியாகத் தேர்தலும் நடத்தி சுபாஷ் சந்திரபோஸ் அதிகப்படியான வோட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்; பட்டாபி தோல்வியுற்றார். எனினும் அவர் கலங்கவில்லை. அரசியல் மரியாதைப்படி, அவர் வெற்றி பெற்ற சுபாஷ் போசுக்கு வாழ்த்துச் செய்தியும் அனுப்பினார்.
காந்தியார் வயிற்றெரிச்சல்
ஆனால் ஆசையெல்லாந் துறந்த மகாத்மா என்றும் தியாகி என்றும் கலப்படமற்ற வீரர் என்றும் தேசபக்தர் என்றும் அந்தராத்மா சொற்படி காரியங்கள் கடத்துபவரென்றும் சொல்லப்படும் காந்தியாருக்குத் தான் சுபாஷ் வெற்றி அடக்க முடியாத வயிற்றெரிச்சலையும் ஆத்திரத்தையும் உண்டு பண்ணிவிட்டது ஜனவரி 31-ந்தேதி சுபாஷ் போஸ் வெற்றியைப் பற்றி அவர் வெளியிட்ட அறிக்கை மகாத்மா பட்டத்துக்கு அவர் உரியவரல்ல வென்பதை வெட்ட வெளிச்சமாக்கிவிட்டது. தேர்தலில் வெற்றி தோல்வி ஏற்படுவது இயல்பே. தோற்றவரை ஆதரித்தோர் தேர்தல் முடிவு தெரிந்த பிறகு வெற்றி பெற்ற வரை வாழ்த்துவது அரசியல் மரியாதை, ஒருவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டபிறகு. அவரை ஆதரித்தவரும் எதிர்த்தவரும் தமது பொதுத்தலைவராக மதிப்பதே ஜனநாயக முறை ஆனால் பெரிய அரசியல்வாதி என்றும் ராஜ்யதந்திரி என்றும் காங்கரஸ் உபதேசகர் என்றும் புகழப்படும் காந்தியாரோ ஜனநாயக அறிவே இல்லாத ஒரு அப்பாவியைப்போல் நாட்டுப் புறத்தானைப்போல் ஒரு அறிக்கை வெளியிட்டு தம்மையும் காங்கிரசையும் கேவலப் படுத்திக்கொண்டார். பட்டாபி தோல்வி தமதுதோல்வியென்றும் இனித்தமக்கு தமது கோஷ்டியாருக்கும் காங்கிரசில் இடமில்லை யென்றும் காங்கிரஸ் மந்திரிகள் ராஜிநாமாச் செய்ய வேண்டுமென்றும், போஸ் அவருக்கு இஷ்டமானவர்களைக் காரியக்கமிட்டி மெம்பர்களாகச் சேர்த்துக்கொண்டு அவர் இஷ்டப்படி காங்கிரஸ் காரியங்கள் நடத்து வேண்டுமென்றும் கூறி காந்தியார் காங்கிரசில் பிளவுண்டு பண்ணவித்துப் போட்டு விட்டார்.
என்ன தீவிர வாதம்.
இவ்வண்ணம் சுபாஷ் மீது காந்தியார் வெறுப்புக் கொள்ளக் காரணமென்ன? சுபாஷ் போஸின் தீவிர வாதம் அவருக்குப் பிடிக்கவில்லையாம். காந்தியாராலும் தாங்க முடியாதபடி அவ்வளவு தீவிரமாக சுபாஷ் என்ன சொன்னார்? என்ன செய்தார்? அவர் தீவிரப்போக்கு, திரிபுரக் காங்கிரசுக்கு அனுப்ப மாலதாஜில்லா அரசியல் மாநாட்டில் சுபாஷ் பாபுமேல் நோட்டத்தில் தயார்செய்த தீர்மானத்தில் விளக்கப்பட்டிருக்கிறது. சுயநிர்ணய உரிமைப்படி பிரதிநிதித்துவ மாநாடு கூடி எதிர்கால அரசியல் திட்டத்தை வகுக்க வேண்டுமென்று அதற்கு 6 மாதசகவாசம் பிரிட்டிஷ்சர்க்காருக்குக் கொடுக்க வேண்டுமென்றும் 6 மாத காலத்துக்குள் இந்தியர் கோரிக்கையை பிரிட்டிஷார் ஒப்புக்கொள்ளாவிட்டால் மேற்கொண்டு செய்ய வேண்டிய காரியத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொறுப்புக்கு விட்டுவிடவேண்டுமென்றும் தேவையுண்டானால் சட்ட மறுப்புச் செய்யத் தயங்கக் கூடாதென்றும் அந்தத்தீர்மானம் கூறுகிறது. இதில் என்ன புதுமையான தீவிரம் இருக்கிறதென்று நாம் காந்தியாரைக் கேட்கிறோம். இத்தீர்மானத்தில் புதுமையாக எதுவுமில்லை என்பதைப் பள்ளிப் பையன்களும் அறிவார்கள்.
எல்லாம் பழங்கதையே
பிரதிநிதித்துவ சபைகூட்டி எதிர்கால இந்திய அரசியலை நிர்ணயம் செய்யவேண்டுமென்று பண்டித நேருவின் தலைமைப் பதவி காலத்து நிறைவேற்றப்பட்ட பழைய காங்கிரஸ் தீர்மானமே இது. அதனால் இதற்கு பிரிட்டிஷார் இணங்கா விட்டால் சட்டமறுப்புத் தொடங்க வேண்டுமென்னும் பழைய காங்கிரஸ் பல்லவியையே ஆதாரமாக வைத்துக்கொண்டே மாஜி காங்கிரஸ் தலைவர் பண்டித நேரு சமஷ்டியை எதிர்ப்பேன், எதிர்ப்பேன், கிழிப்பேன், எரிப்பேன், என்றெல்லாம் வாய்வீச்ச வீசிக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் சுபாஷ் போஸின் போக்கு தீவிரப்போக்கு என காந்தியார் அஞ்சக்காரணம் என்ன? பிரதிநிதித்துவ சபை கூட்டி எதிர்கால அரசியலை அமைக்கும் தீர்மானம் விளையாட்டுக்குத் தான் நிறைவேற்றப்பட்டதா? சட்டமறுப்புப் பேச்சும் வெறும் பூச்சாண்டிதானா? காந்தியார் யோக்கியப் பொறுப்போ நாணயமோ ஸ்திரபுத்தியோ உடையவராயிருந்தால் சுபாஷ் போஸை இரு கையாலும் வரவேற்று அவருடைய தீவிர திட்டத்துக்கு ஆசிர்வாதம் அளிக்க வேண்டியது தானே! இப்பொழுது தயங்கக் காரணம் என்ன? காங்கிரஸ் தற்காலம் ஊழல்மயமாக இருப்பதினால் சட்டமறுப்புப் போருக்குத் தலைமை வகித்து நடத்த தமக்குச் சக்தியில்லையெனக் காந்தியார் ஒரு போலிக்காரணம் கூறுவதேன்? காந்தியார் தலைமை வகித்து நடத்தா விட்டால் சட்டமறுப்பு வெற்றி பெறாதென்றும் சுபாஷ் தலைமையில் தொடங்கப்படும் சட்ட மறுப்பு தோல்வியுறுமென்றும் ஒரு கூட்டத்தார் கூச்சல் போடுவதேன்? காந்தியார் இல்லாவிட்டால் இனி இந்தியாவிலே எதுவும் நடவாதென்று ஒலமிடப்படுவதேன்? இக்கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்க ஆழ்ந்த யோசனையோ பெரிய திறமையோ வேண்டியதில்லை
சுபாஷை எதிர்ப்பதற்குத் காரணம்.
சட்டமறுப்பென்றால் பெரும் பணம் வேண்டும். காங்கிரசுக்குப் பொருளுதவி செய்யக்கூடிய முதலாளி வர்க்கத்தாரெல்லாம் காந்தி கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் சுபாஷும் அவரது கோஷ்டியாரும் எதிரிகள். ஆகவே சுபாஷ் கட்சியாருக்கு அவர்கள் பொருளுதவி செய்யமாட்டார்கள். சென்ற சட்டமறுப்புக் காலங்களில் பொருளுதவி செய்த முதலாளிகளுக்கு காந்தியார் தக்கபடி பிரதி நன்றி காட்டிவிட்டார். சர்க்கார் முதலாளிகள் சர்க்காராயிருக்கும்படி காந்தியார் செய்துவிட்டார். சென்ற சட்டமறுப்புக் காலத்திலே இந்தியர் பிரிட்டிஷாரோடு போராடவேண்டியிருந்தது. பிரிட்டிஷாரை விரட்டிவிட்டு இந்தியர்களுக்கு எல்லா அதிராங்களையும் பிடுங்கிக்கொடுப்பதாய்க் கூறி முதலாளிகளிடம் கூறிப் பணம் பறிக்கப்பட்டது. அதன்படி முதலாளிகளுக்கு அதிகாரம் பிடுங்கிக் கொடுக்கப்பட்டு ஆகிவிட்டது. இனி அந்த அதிகாரத்தைப் பிடுங்க காந்தியார் உடன்படுவாரா? இனித் தொடங்கப்படும் சட்டமறுப்புப் போர் காங்கிரஸ் மந்திரிகளை எதிர்த்தே தொடங்கவேண்டும். ஏனெனின் ஏழு மாகாணங்களில் சர்க்காரை நடத்திக்கொடுப்பவர்கள் காங்கிரஸ் மந்திரிகளே காந்தியாரின் நண்பர்களான முதலாளிகளின் பிரதிநிதிகள் ஆகவே தமக்குப் பொருளுதவியும் ஆக்கமளித்தும் காப்பாற்றிவரும் முதலாளிகளுக்கு காந்தியார் துரோகம் செய்வாரா? அதனாலேயே பிரதிநிதித்துவ சபைப்பேச்சும் எதிர்கால அரசியல் அமைப்புப் பேச்சும் சட்டமறுப்புப் பேச்சும் இப்பொழுது கேட்கப்படவில்லை. சமஷ்டியை எதிர்ப்பேன், தகர்ப்பேன். கிழிப்பேன், எரிப்பேன் என ஆர்ப்பாட்டம் செய்த ஜவஹர்லால்கூட இப்பொழுது சுபாஷ் போஸை ஆதரிக்கத் தயங்குகிறார். காந்தி பக்தர்கள் சுபாஷ் போசின் காரியக்கமிட்டியில் அங்கம் வகிக்கவும் அஞ்சகிறார்கள். சாது சுபாஷ் போஸ் இந்தச் சூழ்ச்சிகளை அறியாமல்சட்ட மறுப்பு, சட்டமறுப்பு எனப் புலம்புகிறார். கடைசியில் எவ்வாறு முடியப்போகிறது? காந்தி கோஷ்டியாராலும் முதலாளி வர்க்கத்தாராலும் கைவிடப்பபட்ட பிறகு சுபாஷ் போஸ் தம் உண்மை நிலையை உணர்ந்து காந்தி கோஷ்டியாருக்கு அடிபணியத்தான் போகிறார். அவ்வாறு செய்ய அவரது சுயமரியாதை உணர்ச்சி குறுக்கே நின்றால் அவர் அரசியலைத் தலைமுழுகி விட்டு வெளியேற வேண்டியது தான். காங்கிரஸ்காரர் கடைசி நேரத்தில் சமஷ்டியை ஒப்புக்கொள்ளப்போவது நிச்சயம்.
குடிஅரசு, தலையங்கம் – 5.2.1939
- சுபாசு கம்பெனியார் போக்கு
சென்ற வாரத் தலையங்கத்தில் காந்தி பக்தர்கள் சுபாஷ் போஸின் காரியக்கமிட்டியில் அங்கம் வகிக்கவும் அஞ்சுகிறார்கள். சாது சுபாசுபோஸ் இந்தச் சூழ்ச்சினையறியாமல் சட்டமறுப்பு, சட்டமறுப்பு எனப் புலம்புகிறார் கடைசியில் எவ்வாறு முடியப்போகிறது? காந்தி கோஷ்டியாராலும் முதலாளிவர்க்கத் தாராலும் கைவிடப்பட்ட பிறகு சுபாஷ் போஸ் தம் உண்மை நிலையை உணர்ந்து காந்தி கோஷ்டியாருக்கு அடிபணியத்தான் போகிறார் அவ்வாறு செய்ய அவரது சயமரியாதை உணர்ச்சி குறுக்கே நின்றால் அவர் அரசியலைத் தலைமுழுகி விட்டு வெளியேற வேண்டியதுதான். காங்கிரஸ்காரர் கடைசி நேரத்தில் சமஷ்டியையும் ஒப்புக்கொள்ளப் போவது நிச்சயம் என நாம் குறிப்பிட்டிருக்தோம். தேர்தல் முடிவுக்குப் பிறகுள்ள சுபாஷின் போக்கை கவனிகையில் நாம் கூறிய ஜோசியம் மெய்யானாலும் ஆகலாம் என்ற நிலைமையே ஏற்பட்டிருக்கிறது படேல் கம்பெனியார் காரியக்கமிட்டி மெம்பர்கள் பதவியை ராஜிநாமாச் செய்யத்————-
—————————————————————————–
போசுக்கு சர்வாதிகாரமாம்
அடுத்த வருஷத்துக்கு சபாஷ் போசுக்கு காங்கிரஸ் சர்வாதிகாரமும் அளிக்கப்பட்டுவிட்டது. எதிர்கால காங்கரஸை இயக்கும் பொறுப்பு முழுதும் சபாஷ் போஸ் தலையிலேயே சுமத்தப் பட்டிருக்கிறது. ஆனால் அந்தப் பொறுப்பைத் தாங்கிக்கொள்ள சபாஷ் பிரியப்படுகிறாரா? அப்பொறுப்பைத் தாங்க சபாஷ் போசுக்கு சக்தியுண்டா? பக்க பல முண்டா? என நோக்குகையில் இக்கேள்விகளுக்கு ஆம் என பதில்அளிக்க சற்று தயங்கவேண்டியதாகவே இருக்கிறது. சுபாஷ் அழைப்புப்படி கல்கத்தாவில் கூடிய தீவிர வாதிகள் மாநாட்டுப் போக்கே நாம் இவ்வாறு கூறுவதற்குக் காரணம். ஸ்ரீநிவாசய்யங்கார், எச்.எப். நரிமன் டாக்டர் நாரே போன்ற காந்தி எதிரிகளே முக்கியமாக அழைக்கப்பட்டிருந்தார்கள். அநேகமாக சுபாஷை ஆதரித்த தீவிரவாதிகளும் எல்லா மாகாணங்களிலிருந்தும் அம்மாநாட்டுக்குச் சென்றிருந்தார்கள். ஆனால் மாநாடு கூட்டப்படும் முன் தீவிரவாதிகளுக்கு இருந்து வந்த ஆவேசமும் உற்சாகமும் மாநாடு முடிந்த பிறகு இருப்பதாகத்தோன்ற வில்லை.
திட்டமென்ன?
சமாஷ்டி எதிர்ப்பை வலுப்பாகவேண்டும் சுதந்தரப் போராட்டத்தை துரிதப்படுத்த வேண்டும் என முடிவு செய்யப் போவதாக கூறப்படுகிறதேயன்றி அவ்விரண்டுக்குமான திட்டங்கள் வகுக்ப்பட்டதாகத் தெரியவில்லை திட்டம் வகுக்கப்படாதத் தீர்மானங்களாலும் முடிவுகளாலும், பயனில்லையென நாம் கூறத்தேவையில்லை. கல்கத்தா தீவிரவாதிகள் மாநாடு வெறும் வாய்ப்பந்தல் மாநாடாகக் கூடி முடிந்ததென்றே தோன்றுகிறது. காந்தியார் அவரது கோஷ்டியார் சுபாஷ் போசின் தீவிரவாதிகளுடன் ஒத்துழைக்க முடியாதென்று பகிரங்கமாகக் கூறியிருக்கையில், தமது வெற்றி தீவிரவாதிகள் வெற்றியென்றோ காந்தியாரின் தோல்வியென்றோ கூறுவதிற் கில்லையென்றும் காங்கிரசில் பிளவே இல்லையென்றும் ஒரு கால் பிளவென்றே வைத்துக் கொண்டாலும் ஒற்றுமைப்படுத்தவே தாம் விரும்புவதாகவும் சுபாஷ் கூறுகிறார் அம்மாநாட்டில் பங்குகொண்டவர்களில் பிரபலஸ்தரும் காந்தீய எதிரியுமான தோழர் ஸ்ரீநிவாஸய்யங்காரும் ஒற்றுமை ஒற்றுமை எனவே கதறுகிறார்.
ஆனால் காந்தீயர்கள் நிலைமையை காந்தியார் தெளிவாகக் கூறியிருக்கைiயில் காரியக் கமிட்டி மெம்பர்களான காந்தீயர்கள் தமது பதவிகளை ராஜிநாமாச் செய்ய தயாராயிருக்கையில் அவ்விருகூட்டத்தாருக்கும் ஒற்றுமை எப்படி சாத்தியமாகுமென்பதே கேள்வி. பிரதிநிதித்துவ சபை கூட்டி எதிர்கால அரசியலை நிர்ணயிக்க 6 மாத கெடு பிரிட்டனுக்குக் கொடுப்பதென்றம் அக்கெடுவுக்கு பிரிட்டன் பதிலளிக்கத் தவறினால் மேற்கொண்டு செய்ய வேண்டிய வேலை காரியக்கமிட்டியைப் பொறுத்ததென்றும் சுபாஷ் போஸ் மேற்பார்வையில் மால்தா ஜில்லா அரசியல் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப்பற்றி கல்கத்தா மாநாட்டில் எதுவுமே பேசப்பட்டதாய்த் தெரியவில்லை. அதுபற்றி தோழர் ஸ்ரீநிவாசய்யங்காரிடம் அபிப்பிராயம் கேட்டபோது அவர் எதுவுமே கூற மறத்து விட்டாராம். கடைசியாக எல்லாம் திரிபுர காங்கிரசில் முடிவு செய்யப்படுமென்று சொல்லப்படுகிறது ஆனால் சுபாஷை ஆதரித்த தீவிரவாதிகள் போக்கோ திடுக்கிடக்கூடியதாயும் வியக்கக் கூடியதாயும் இருக்கிறது.
வீரவாகுபல்டி
திருநெல்வேலி ஜில்லாபோர்டு தலைவர் தோழர் எம்சி. வீரபாகுபிள்ளை ஒரு அதிதீவிர அபேதவாதியாம்; காந்தீய எதிரியாம். சென்ற காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சுபாஷ் போஸை ஆதரித்தவராம் எனினும் அவர் திருநெல்வேலி ஜில்லா 11-வது அரசியல் மாநாட்டிலே காந்தியாரிடம் தமக்குப் பூரண நம்பிக்கையிருப்பதாக ஒரு தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றி யிருக்கிறார். இந்தியாவிலே காந்தியாரின்றி எதுவும் சாயாதென்றும் பேசியிருக்கிறார் சுபாஷை ஆதரித்த தீவிரவாதிகள் எல்லாம் தோழர் வீரபாகு பிள்ளையைப் போல் பல்டியடிக்கத் தொடங்கி விட்டால் சுபாஷ் போஸின் கதி கடைசியில் அதோகதி ஆகத்தானே செய்யும்?
மந்திரிகட்சியார் போக்கு
அப்பால் நாட்டிலே அதிகச் செல்வாக்குடைய மந்திரி கட்சியைச் சேர்ந்த காந்தீயர்களின் மனப்போக்கை கவனிப்போம் அதற்கு சாம்பிலாக சென்னைப்பிரதம மந்திரியின் பார்லிமெண்டரி காரியதரிசியான தோழர் ஏ.காளேசுரராவின் பேச்சை எடுத்துக்கொண்டால் போதுமானது. நிலக்கோட்டைக் தாலுக்கா அரசியல் மாநட்டை திறந்துவைக்கையில் அவர் பேசிய பேச்சுகள் பொதுவாக காந்திபக்தர்கள் மனப்போக்கை நன்கு விளக்கக்கூடியதாக இருக்கிறது. காந்தியார் ஒருவர்தான் இந்தியராஜீய பொருளாதார பிரச்சினைகளை தீர்க்கவல்ல ஒரு தலைவர். நம்முன் பிரிவினை ஏற்பட்டால் விடுதலைப் போராட்டம் வெற்றியடையாது. துருக்கிக்கு கெமால் பாஷாவும், ஜெர்மனிக்கு ஹிட்லரும் எவ்வாறு தணித் தலைவர்களாயிருந்து வெற்றி பெற்றார்களோ அதே போன்று நாம் யாவரும் காந்தியாரின் தலைமையில் ஒன்று பட்டு தேசப் போராட்டத்திற்காக வேலை செய்யவேண்டும் கல்தத்தாவில் சுபாஷ் போஸ் தீவிரவாதிகள் மாநாட்டைக் கூட்டியது ஒரு அவசரகுணமாகும். தீவிரவாதிகள் வெறும் லஷ்யவாதிகள் சில புத்தகங்களைப் படித்த அநுபவத்தைக் கொண்டவர்கள். அவர்கள் ஆத்திரப்பட்டு சந்திரனைத் தாவிப் பிடித்து விடுவதைப் போன்ற காரியங்களை சாதித்து விடுவோமெனக் கூறுவதில் பிரயோஜனமில்லை என்றெல்லாம் தோழர் காளேசுவராவ் பேசியிருக்கிறார் காந்தியில்லாமல் ஒரு காரியமும் சாயாது என்ற பேச்சே காங்கிரஸ் அரசியல் உலகத்திலே இப்பொழுது முனைந்து நிற்கிறது.
ஏட்டுச் சுரக்காய்களா?
காந்தியை சுபாஷ்போஸ் நேரிற்கண்டு ஆசிர்வாதம் பெற வேண்டுமென்றும் பலர் சொல்லு கிறார்கள் சுபாஷ் 11-ந்தேதி காந்தியாரைச் சந்திக்கவும் ஆசிர்வாதம் பெறவும் தயாராகிவிட்டாராம் சுபாஷை ஆதரித்தவர்கள் தீவிரவாதிகள் அவசரவாதிகள் ஏட்டுச்சுரைக்காய்கள் கறிக்காகாதவர்கள் என்றெல்லாம் பழிக்கப்படுகிறார்கள் துருக்கி கெமால் பாஷாவும் ஜெர்மனிக்கு ஹிட்லரும் போல் இந்தியாவுக்கு காந்தியாரே தனித்தலைவர் என்றும் தோழர் காளேசுவரராவ் முடிவும் கூறிவிட்டார்கள். ஆனால் அவரது முடிவின் உட்பொருளை உள்ளபடி அறிந்துள்ளாரா என்பது சந்தேகத்துக்கு இடமாகவே இருக்கிறது. துருக்கித் தலைவரான கெமால் பாஷாவும் ஜெர்மன் தலைவரான ஹிட்லரும் அவர்களது காலத்திலேயே அவர்களது தாய்நாட்டுக்கு விடுதலை சம்பாதித்துக்கொடுத்து விட்டார்கள்.
தொட்டதெல்லாம் தோல்வி
ஆனால் காந்தியாரோ அவர் தொடுத்தத விடுதலைப் பnhராட்டத்தில் இன்னும் வெற்றி பெறவில்லை. மாறாக போர் நடுவில் நாட்டு மக்களில் பெரும்பாலரால் செல்லாக்காசெனக் கவிழ்க்கப்பட்டு விட்டார் காந்தியார் ஒழித்தல்லாமல் காங்கிரஸ் உருப்படாது, நாடும் விடுதலை பெறாது என்ற பேச்சகளும் பகிரங்கமாகக் கேட்கப்படுகின்றன. பட்டாபி தோல்வி என் தோல்வியே என காந்தியாரும் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுவிட்டார். காங்கிரசின் தற்கால குழப்பமான நிலைமையில் சட்டமறுப்புப் போரில் இனி என்னால் தலைமை வகித்து நடத்த முடியாதென வாய்விட்டும் கூறிவிட்டார்.
பீத்தல் பேச்சு
எனினும் கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லையென வீரம் பேசிய பயில்வான்மாதிரி கதேசமஸ்தான விடுதலைப்போரில் ஈடுபட்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை கவிழ்க்கப் போவதாகவும் பீத்திக்கொள்கிறார். நான் தோல்வியுற்றேன், என்னால் இனித் தலைமை வகித்து சுதந்தரப்போர் நடத்த முடியாது என் காந்தியார் பகிரங்கமாகக் கூறுகையில் காந்தியார் தான் இந்தியாவின் தனித்தலைவர், அவர் இன்றி ஒன்றும் சாயாது எனக் கூறுபவர்களும் இந்தியாவில் இருக்கவேண்டுமானால் அவர்கள் மூளைக்கு ஏதோ கோளாறு ஏற்பட்டிருக்க வேண்டும் என்று தானே முடிவுகட்டவேண்டும். இத்தகைய மூளைக் கோளாறு ஏற்பட்டவர்கள் ஈடுபடும் எந்தக்காரியமாவது வெற்றி பெறுமா? காந்தி கோஷ்டியார் சுபாஷ் கோஷ்டியாரை தீவிரவாதிகள், அவசரவாதிகள்!ஏட்டுச் சுரைக்காய்கள் எனப்பழிப்பதின் உட்பொருள் என்ன?
உட்பொருள்
உட்பொருளை அறிய அதிக மூளைவலியோ, பெரிய மேதாவித் தனமோ தேவையில்லை அவர்கள் கூறுவதன் உட்பொருள் இதுதான் பிரிட்டனை எதிர்த்து சட்ட மறுப்புச் செய்து தோல்வியுறப் போகும் காலத்தில் அந்தப் புண்ணியவான் லார்டு இர்வின் கருணையினால் இர்வின் காந்திஒப்பந்தம் என்ற பகட்டுப் பெயரினால் காந்தியார் வலியச்சென்று மன்னிப்புக் கொடுத்து அரசியல் கைதிகளை விடுதலை செய்து காங்கிரஸ்வாதிகள் மானத்தைக் காப்பாற்றினார். அப்புறம் மீண்டும்அரசியல் சீர்திருத்தத்தைக் கவிழ்க்கப்போவதாக பயமுறுத்தி கடைசியில் சீர்திருத்தத்தை ஒப்புக்கொண்டு மாகாணங்களிலும் அரசியலையும் கைப்பற்றிணோம். மீண்டும் சமஷ்டியை எதிர்க்கப் போவதாக புரளிசெய்து ஏதாவது கிடைக்கக் கூடிய சலுகைகளையும் பெற்று சமஷ்டியையும் எற்று நடத்துவதே புத்திசாலித்தனம். இதை உணராமல் அவசரவாதிகள் சட்ட மறுப்பு, சட்டமறுப்பு என்று புலம்புவது பைத்தியக்காரத்தனம்.
இதுவே காந்தி பக்தர்களின் உள்ளக்கிக்க நாம் கூறுவது மெய்யென்பதை எதிர்க்காலம் காட்டப்போவதும் நிச்சயம்.
குடிஅரசு, தலையங்கம்- 12.2.1939