4. எது பயித்தியக் காரத்தனம்?
சென்றவாரம் ராஜபாளைத்தில் நடைபெற்ற சென்னை மாகாண 40-வது காங்கரஸ் மாநாட்டைத் திறந்து வைத்த கனம் சி.ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் தமது பிரசங்கத்தில் தமிழ் நாடு இந்தியாவின் ஒரு பகுதியாகக் கூட இருக்கக்கூடாதென்று காங்கிரஸ் எதிரிகள் சொல்லுகின்றனர் இது பயித்தியக்காரத் தனத்தைத் தவிர வேறு இல்லை எனக் குறிப்பிட்டிருக்கிறார். இது சமயம் இதைக் குறித்து சிறிது ஆராய்வது கடமையென உணர்கின்றோம். முதலாவது இவ்வாறு கூறியவர் பயித்தியக்காரரா? அல்லது கேட்டுக்கொண்டு வாளாதிருந்தவர்கள் பயித்தியக்காரர்களா? என்ற சந்தேகம் நமக்கு உண்டாகிறது. ஏனெனில் முன்னுக்குப் பின் முரணாக பேசுகிறவர்களும் செய்கிறவர்களும் ஒன்று பயித்தியக்காரர்களாயிருக்கவேண்டும் அல்லது அவ்வாறு பேசுவதைக் கேட்டு சிந்திக்க சக்தியற்று வாளாதிருந்தவர்கள் பயித்தியக்காரர்களாக இருக்க வேண்டும். ஏன் நாம் இவ்வாறு சொல்லுகின்றோமென்றால் தமிழ்நாடு தமிழருக்கே என்று செயல்வது எவ்வாறு பயித்தியக் காரத்தனமாகும்?அந்தந்த நாடு சொந்தமாகும். அப்படியிருக்க தமிழ் மொழி பேசும் தமிழருக்குத் தான் தமிழ் நாடு சொந்தமென்றால் அது எவ்வாறு பயித்தியக்காரத்தனமாகும்? மொழி, கலை, நாகரிகம் முதலிய அம்சங்கள் பூரணமாக பெற்று ஒரு நேஷனாக விளங்க வேண்டுமென்று பிரியப்படுவது ? ஆசைப்படுவது பயித்தியக்காரத்தனமானால் இந்தியா ஒரு நேஷன் என்றும் தனி நாடு என்றும் சொல்லிக்கொள்வது எப்படி நியாயமாகும்? இந்தியா தனி நாடாக சுதந்தர நாடாக விளங்க வேண்டுமென்று சொன்னால் உலகத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டாமென்று சொல்லுகிறார்களே பயித்தியக்காரர்கள் என்று சொன்னால் கனம் ஆச்சாரியார் பொறுத்துக்கொண்டிருப்பாரா என்று கேட்கிறோம். மேலும் எந்தவித யோக்கியதையுமற்ற முறையில் இந்தியா ஒரு நேஷனாக விளங்கவேண்டுமென்று சொல்லி வருவது மட்டும் எவ்வாறு புத்திசாலித்தனமாகுமென்று கேட்கிறோம். —-
— எப்படி இந்தியா விடுதலையடைய வேண்டுமென்று விரும்புகிறார்களோ அதுபோலவே தமிழர்கள் வடநாட்டார்களுடைய சுரண்டுதலிலிருந்து விடுதலையடைய வேண்டுமென்று விரும்புகிறார்கள். இதில் ஏதாவது பயித்தியக்காரத்தனத்துக்கு இடமிருக்கிறதா?என்று வாசகர்களே யோசித்துப்பாருங்கள்.
மற்றொரிடத்தில் அவரது பிரசங்கத்தில் கனம் சி.ஆர். ஆரியன்என்றெல்லாம் கூறுவது அர்த்தமற்றதென்றும் தேசத்தைக் கெடுக்கும் விஷப்புகை யென்றும் குறிப்பிட்டிருக் கிறார். இதையும் சிறிது சிந்திக்கவேண்டியதாகும். ஏனெனில் ஆரியன் என்ற சொல் இந்நாட்டில் இத்தனை ஆயிரக்கணக்கான வருடங்கள் கடந்தும் அந்தச் சொல் மக்கள் மனதில் பதிந்திருக்க வேண்டுமானால் அவர்கள் இந்நாட்டிலே வாழ்ந்து வந்த முறை என்று சொன்னால் இதை இல்லை என்று சொல்ல முடியுமா என கேட்கிறோம். இவர்கள் அன்றோ ஆரியர்கள் வேறு ஏனையோர் வேறு என்று சட்டம் வகுத்து வாழ்க்கை நடத்தி வந்திருக்கின்றனர். மனுதர்ம சாஸ்திரமே அதற்கு சான்று பகருமே. அந்த சட்டப்படிதானே இன்றும் ஹிந்துக்கள் என்ற ஒரு பெரும் சமூகத்தாருக்கு நீதி வழங்கப்பட்டு வருகிறது. எந்தத் துறையிலும் தாங்கள் புறம்பானவர்கள். மேம்பட்டவர்கள் என்று வாழ்ந்து வருவதால் அன்றோ அந்தச்சொல் இந்நாட்டிலே இன்றும் அழியாது இருந்து வருகிறது. ஆகவே ஆரியன் என்ற சொல் நிலைத்திருக்கும் படி வாழ்க்கை நடத்தி வருகிறவர்கள் இன்று கனம் சி.ஆர்.அவர்கள் யதேச்சாதிகாரச் செய்கையால் அந்த விஷப் புகை அவரது கண்களுக்குத் தெரிகிறது போலும். நம்நாடு இவ்வாபத்திலிருந்து மீளவேண்டுமானால் ஆட்சி உரிமை தமிழர் கையில் வந்துதான் தீரவேண்டும் தமிழ்நாடு தமிழர் கையில்வந்து தமிழர் நலம் தமிழர் கையில் என்று வருமோ அன்று தான் நாடு இப்பேராபத்தினின்று காக்கப்படும். ஆகவே நாட்டை இவ்வாபத்தினின்று விடுவிக்க உண்மையான வழியைக் காட்டுவது பயித்தியக்காரத்தனமா? அல்லது ஆபத்தை வளரவிட்டு வருவது பயித்தியக்காரத்தனமா? என்பதை வாசகர்களே முடிவு செய்து கொள்ளுங்கள். என்று காங்கரஸ்காரர்கள் மற்ற கட்சிகளான ஜஸ்டிஸ், முஸ்லீம் லீக் போன்ற கட்சிகளுக்கு மதிப்புக் கொடுக்க ஆரம்பிக்கிறதோ அன்றுதான் நாட்டிலே சமாதானம் நிலவும் என்று நம்புகிறோம். இந்த உண்மையை காங்கரசில் உள்ள சில நண்பர்களும் இப்பொழுது உணரத் தலைப்பட்டுவிட்டார்கள். சமீபத்தில் ஸ்தலஸ்தாபன மந்திரி கனம் கோபால் ரெட்டியும் சென்னையில் ஒய்.எம்.சி. சங்கத்தில் பேசுகையில் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தையும், முஸ்லீம் லீக்கையும் காங்கரஸ் மதித்து சமாதானமான முறையில் நடந்து கொள்ளவேண்டும் என்று புத்தி கூறியிருக்கிறார்.
குடிஅரசு, தலையங்கம்- 08.01.1939