கழகத் தலைவரின் சுற்றுப்பயணம் தொடங்கியது போதைக்கு எதிரான பரப்புரைக்குத் தயாராக அறிவுரை
19.07.2024 அன்று தலைமைக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கழகத் தலைவரின் மாவட்ட வாரியான சுற்றுப்பயணம் சென்னையில் தொடங்கியது.
சென்னை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 04.08.2024 அன்று மயிலாப்பூரில் உள்ள கழகத் தலைமை அலுவலகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது.
முதல் நிகழ்வாக அண்மையில் மறைந்த கழகச் செயல்வீரர் மதிவாணன் அவர்களின் படத்தைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைத்தார். பின்னர் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவரது மகன் தமிழரசன் மாவட்டக் கழக வளர்ச்சி நிதியாக ரூ.5000/- வழங்கினார்.
மேலும் தற்போது போதைப்பொருள் கலாச்சாரம் இளைஞர்கள் மத்தியில் வேகமாகப் பரவி வரும் சூழலில் அதற்கு எதிரான பரப்புரைகளைக் கழகத் தோழர்கள் திவிரமாக மேற்கொள்ள வேண்டும் எனக் கழகத் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டுப் பேசினார்.
கழகப் பொதுச்செயலாளர் பேசுகையில் ஊடகங்களும், பத்திரிகைகளும் ஆளும் ஒன்றிய சர்வாதிகார அரசின் கைப்பாவையாகச் செயல்பட்டு வரும் இந்தக் காலகட்டத்தில் முகநூல் – டிவிட்டர் (எக்ஸ்) போன்ற சமூகவலைதளங்களே நமக்கான ஆயுதமாகத் திகழ்கிறது. எனவே கழகத் தோழர்கள் சமூக வலைதளங்களைச் சரியான முறையில் பயன்படுத்திப் பெரியாருக்கு எதிராக முன்வைக்கப்படும் அவதூறுகளுக்குப் பதிலடித் தர வேண்டும் எனப் பேசினார்.
இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக்குழு உறுப்பினர் அன்பு தனசேகர், மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, வட சென்னை மாவட்ட அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன், கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், எட்வின் பிரபாகரன், அருண் கோமதி, தினகரன், இரண்யா ஆகியோர் தங்களது கள அனுபவங்களையும், எதிர்காலப் பணிகள் குறித்தும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
மேலும் இந்தக் கூட்டத்தின் முடிவில் சென்னை மாவட்டக் கழகத்திற்குப் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
கலந்துரையாடலுக்கு வருகைதந்த சென்னையைச் சேர்ந்த ஸ்ரீஜன் – பொன்மலர் மற்றும் பல்லாவரம் நரேஷ் (எ) அழகிரி ஆகியோர் தங்களைக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்குக் கழகத் தலைவரும், பொதுச்செயலாளரும் நூல்களை வழங்கி வரவேற்றனர்.
சென்னையில் கடந்த மூன்று மாதங்களில் பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கழகத்தில் புதிதாக இணைந்தனர். அவர்கள் தோழர்கள் மத்தியில் தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டனர். அவர்கள் அனைவரும் சமூக வலைதளங்களின் மூலமாகக் கழகச் செயல்பாடுகளை அறிந்து கொண்டதன் பின் தாங்கள் கழகத்தில் இணைந்ததாகக் குறிப்பிட்டுப் பேசினார்கள்..
இதில் மாவட்ட – பகுதிக் கழக நிர்வாகிகள் மற்றும் கழகச் செயல்வீரர்கள் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 05.08.2024 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் வாலாஜாபாத் ஒன்றியம் கருக்குப்பேட்டை சங்கர் மகாலில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் முன்னிலை வகித்தார். காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் இரவிபாரதி கூட்டத்தை ஒருங்கிணைத்தார்.
கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டக் கழகத்தின் அடுத்தக்கட்டப் பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் இரவிபாரதி, கடந்த ஒருமாத காலமாகக் கழக வார ஏடான “புரட்சிப் பெரியார் முழக்க” சந்தா சேர்ப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்ததார். முதல்கட்டமாக சுமார் 50 சந்தாக்கள் சேர்க்கப்பட்டு அதற்கான தொகை ரூ.15,000/-யைக் கழகத் தலைவரிடம் வழங்கினார்.
கூட்டத்தின் முடிவில் காஞ்சிபுரம் மாவட்டக் கழகத்திற்கு புதியப் பொறுப்பாளர்களை கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவித்தார்.
அதனடிப்படையில் மாவட்ட அமைப்பாளராக க.ரவிபாரதி, மாவட்டத் துணை அமைப்பாளராக இராம ஜெயம், வாலாஜாபாத் ஒன்றிய அமைப்பாளராக ஏழுமலை ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நிறைவாகப் பிரகாசு நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது.
கூட்டத்தில் வினோத், அருண்குமார் ஆகிய இரண்டு இளைஞர்கள் தங்களைக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு கழகத் தலைவர் பயனாடை அணிவித்து வரவேற்றார்.
இதில் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ப.அருண்குமார் உள்ளிட்டத் தோழர்கள் – ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.
முன்னதாகத் தோழமைக் கட்சியைச் சேர்ந்த பலரும் கழகத் தலைவரைச் சந்தித்து பயனாடை அணிவித்து வரவேற்றனர்.
வேலூர்
வேலூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 05.08.2024 அன்று குடியாத்தம் புட்டவாரிப்பல்லி கிராமத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை வகித்தார். கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் முன்னிலை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்டக் கழக வளர்ச்சி மற்றும் கழகத்தின் அடுத்தகட்ட செயல் திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் போதைப் பொருள் ஒழிப்பு வாகனப் பரப்புரையின் செயல் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தின் முடிவில் வேலூர் மாவட்டக் கழகத்திற்கு புதியப் பொறுப்பாளர்களைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவித்தார்.
தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் வேலூர் மாவட்டத் தலைவராக தெருவிளக்கு கோபிநாத், வேலூர் மாவட்ட அமைப்பாளராக ரேணு, நெமிலி ஒன்றியச் செயலாளராக நரேன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்..
இதில் மேலும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத் தலைவர் திலீபன், ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் இரா.சிவா, மாவட்டப் பொருளாளர் சதீஷ், தெருவிளக்கு கோபிநாத், சேப்பாக்கம் சதீஷ், கஜேந்திரன், பாலகுமாரன், முரளி, பாஸ்கர் சந்திரன், பிரவீனா, சிலம்பரசன், அமல்ராஜ், செல்வகுமார் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக கழகத் தோழரும் வழக்கறிஞருமான அமுல்ராஜ் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கிராமத்தில் நடத்திவரும் “தந்தை பெரியார் இரவுப் பாடசாலை”யின் பெயர்ப் பலகையைக் கழகத் தலைவர் திறந்து வைத்தார். மேலும் அண்மையில் வழக்கறிஞராக பதிவு செய்த அமுல்ராஜுக்குக் கழகத் தலைவர், பயனாடைப் போர்த்தி வாழ்த்தினார். ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் தர்மகத்தா உள்ளிட்ட ஊர் பெரியோர்கள் மற்றும் இரவுப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
பெரியார் முழக்கம் 08.08.2024 இதழ்