ஜாதி எதிர்ப்புப் பரப்புரை இயக்கங்கள்… பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடுகள் 2015இல் கழகம் கடந்து வந்த பாதை
ஜாதிய ஒடுக்குமுறைகள், தீண்டாமை வன்கொடுமைகளுக்கு, எதிராக களம் கண்ட திராவிடர் விடுதலைக் கழகம், இவற்றிற்கு ஊற்றுக்கண்ணாக இருக்கும் ஜாதியை எதிர்த்து, 2015ஆம் ஆண்டு முழுதும் கிராமம் கிராமமாக பரப்புரை இயக்கங்களை நடத்தி முடித்திருக்கிறது. ‘எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்’ என்ற முழக்கத்துடன் பரப்புரை இயக்கங்களைத் தொடர்ந்து ‘எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்; எங்கள் சந்ததிக்கு வேலை வேண்டும்’ என்ற முழக்கத்தை முன் வைத்து அடுத்தகட்ட பரப்புரை நடத்தியது. பல்லாயிரம் துண்டறிக்கைகள் மக்களிடம் வழங்கப்பட்டன. பார்ப்பன மதவாத சக்திகளுக்கு எதிரான மாநாடுகள்; மதவெறிக்கு எதிரான போராட்டங்கள் என்று திராவிடர் விடுதலைக் கழகம் 2015இல் நிகழ்த்திய களப்பணிகளின் தொகுப்பு. ஜனவரி: ஜன.12இல் சென்னையில் தமிழ்ப் புத்தாண்டு விழாவை கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக கழகம் முன்னின்று நடத்தியது. காந்தியை கொலை செய்த கோட்சே பார்ப்பனருக்கு சங்பரிவாரங்கள் சிலை வைத்து பெருமை சேர்க்கக் கிளம்பின. இதை எதிர்த்து கோட்சே சிலை எதிர்ப்பு மாநாட்டை கழகம் ஈரோட்டில் நடத்தியது...