ஜாதி எதிர்ப்புப் பரப்புரை இயக்கங்கள்… பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடுகள் 2015இல் கழகம் கடந்து வந்த பாதை
ஜாதிய ஒடுக்குமுறைகள், தீண்டாமை வன்கொடுமைகளுக்கு, எதிராக களம் கண்ட திராவிடர் விடுதலைக் கழகம், இவற்றிற்கு ஊற்றுக்கண்ணாக இருக்கும் ஜாதியை எதிர்த்து, 2015ஆம் ஆண்டு முழுதும் கிராமம் கிராமமாக பரப்புரை இயக்கங்களை நடத்தி முடித்திருக்கிறது. ‘எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்’ என்ற முழக்கத்துடன் பரப்புரை இயக்கங்களைத் தொடர்ந்து ‘எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்; எங்கள் சந்ததிக்கு வேலை வேண்டும்’ என்ற முழக்கத்தை முன் வைத்து அடுத்தகட்ட பரப்புரை நடத்தியது. பல்லாயிரம் துண்டறிக்கைகள் மக்களிடம் வழங்கப்பட்டன. பார்ப்பன மதவாத சக்திகளுக்கு எதிரான மாநாடுகள்; மதவெறிக்கு எதிரான போராட்டங்கள் என்று திராவிடர் விடுதலைக் கழகம் 2015இல் நிகழ்த்திய களப்பணிகளின் தொகுப்பு.
ஜனவரி: ஜன.12இல் சென்னையில் தமிழ்ப் புத்தாண்டு விழாவை கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக கழகம் முன்னின்று நடத்தியது. காந்தியை கொலை செய்த கோட்சே பார்ப்பனருக்கு சங்பரிவாரங்கள் சிலை வைத்து பெருமை சேர்க்கக் கிளம்பின. இதை எதிர்த்து கோட்சே சிலை எதிர்ப்பு மாநாட்டை கழகம் ஈரோட்டில் நடத்தியது (ஜன. 24). காந்தியார் படுகொலை செய்யப்பட்ட ஜனவரி 30 அன்று அவரது கொலைக்குக் காரணமான பார்ப்பன மதவாத சக்திகள் திருச்சியில் ‘விசுவ இந்து பரிஷத்’தின் பொன் விழா மாநாட்டை நடத்தினர். திருச்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள், காந்தியார் சிலைக்கு மாலை அணிவித்து இந்த மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டம் நடத்தி கைதானார்கள் (ஜன.30).
பிப்ரவரி: கழக வெளியீடுகள் அறிமுக விழாவும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவிய மருத்துவர் களுக்கு பாராட்டு விழாவும் கழக சார்பில் ஈரோட்டில் நடந்தது (பிப்.12). காதலர் தினத்தில் சென்னை கடற்கரைக்கு வரும் காதலர்கள் மீது வன்முறைத் தாக்குதலை நடத்தும் சங்பரிவார் அமைப்புகளுக்கு எதிராக சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் கடற்கரைக்கு வரும் காதலர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இதனால் கண்ணகி சிலை அருகே போராட்டம் நடத்த திரண்டிருந்த ‘சங்பரிவாரங்கள்’ திட்டமிட்டபடி போராட்டத்தை நடத்தாமல் கலைந்து சென்றனர்.
மீத்தேன் எதிர்ப்பு கூட்டியக்கத்தில் பங்கு பெற்றிருந்த கழகம், அத்திட்டத்தை எதிர்த்து மயிலாடுதுறை, கோபி உள்ளிட்ட பகுதிகளில் மத்திய அரசு அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தியது. தோழர்கள் கைதானார்கள். ஆத்தூர் அருகே தலைவாசல் கிராமத்தில் ஒரு நாள் பயிற்சி முகாம் கழக சார்பில் நடந்தது (பிப்.22). சென்னை கழக அலுவலகத்தில் கழகத் தலைமைக் குழு கூடி, ‘எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்’, பரப்புரைப் பயணத்துக்கு திட்டங்களை தீட்டியது (பிப்.28). சென்னை குருநானக் கல்லூரியில் நடந்த சோதிடர் மாநாட்டில் தமிழக அரசு அதிகாரிகள் பங்கேற்பதை எதிர்த்து சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் கல்லூரி வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தி கைதானார்கள். எதிர்ப்பின் காரணமாக மாநாட்டின் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவிருந்த காவல்துறை அதிகாரி பெரியப்பா, மாநாட்டை புறக்கணித்தார். உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நியமனத்தில் சமூக நீதியை வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது (பிப்.25).
மார்ச்: ஏற்காடு ஒன்றிய கழக சார்பில் ஒருநாள் பயிற்சி முகாம் நடந்தது (மார்ச் 1). உயர்நீதிமன்றத்தில் புதிய நீதிபதிகளுக்கான பட்டியலில் பார்ப்பனர்கள் கூடுதலாக இடம் பெற்றிருந்ததை எதிர்த்தும், வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்தினருக்கு வாய்ப்புக் கோரியும், சமூக நீதிக்கான கூட்டமைப்புக் கழகத்தின் முயற்சியால் உருவாக்கப்பட்டது. கூட்டமைப்பு சார்பில் உயர்நீதிமன்ற முற்றுகைப் போராட்டம் நடந்தது. கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், இயக்கங்களைச் சேர்ந்த 700 தோழர்கள் கைதானார்கள். எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம் பரப்புரைப் பயணங்கள் சேலம் மாவட்டத்திலும் (மார்ச் 21) சென்னை மாவட்டத்திலும் (மார்ச் 20) தொடங்கின. கழக முன்னணி அமைப்பான தமிழ்நாடு அறிவியல் மன்றம் சார்பில் திருப்பூரில் ‘மகளிர் நாள்’ (மார்ச் 8) சிறப்புடன் நடந்தது. பரப்புரைப் பயண நிறைவு விழா பொதுக் கூட்டங்கள் சித்தோடு (மார்ச் 24), மயிலாடுதுறை (மார்ச் 26), சத்திய மங்கலம் (மார்ச் 27) ஊர்களில் நடந்தன. திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சட்ட விரோதமாக கட்டப்பட் டிருந்த கோயில், கழகத்தின் முயற்சியால் இடிக்கப்பட்டது.
ஏப்ரல்: சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் 6 மாவட்டங்களில் 10 நாள்கள் பயணித்து, 40 ஜாதி எதிர்ப்புப் பரப்புரைக் கூட்டங்களை நடத்தினர். மார்ச் 30ஆம் தேதி தாம்பரத்தில் நிறைவு விழா கூட்டம் நடக்கவிருந்த சில மணி நேரத்துக்கு முன் காவல்துறை அனுமதி மறுத்தது. பிறகு உயர்நீதி மன்றம் வழியாக அனுமதி பெறப்பட்டு, அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்.14 அன்று தாம்பரத்தில் எழுச்சியுடன் நடந்தது. கலவரம் செய்ய திரண்டிருந்த இந்து முன்னணி யினர் கூட்டத்தில் எழுச்சி கண்டு கலைந்து சென்றனர். செம்மரம் கடத்தியதாக ஆந்திர காவல்துறையால் கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்யப் பட்டனர் 20 தமிழர்கள். இதைக் கண்டித்து திருப்பூரில் ஆந்திர வங்கியை முற்றுகையிட்டு கழகத்தினர் கைதானார்கள் (ஏப்.13). காஞ்சி மாவட்டக் கழகத் தோழர்கள் சாலை மறியல் நடத்தி கைதானார்கள்.
இந்தப் பிரச்சினையில் தமிழக அரசின் அலட்சியத்தைக் கண்டித்து சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடச் சென்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த 300 தோழர்கள் கைதானார்கள். திருச்சி மாவட்டக் கழகம் திருவெறும்பூரில் அரங்கத்தில் ஏற்பாடு செய்திருந்த ஒரு நாள் பயிற்சி முகாமுக்கு தடை விதித்த காவல்துறை, கழகப் பொறுப் பாளர்களை காவல் நிலையத்தில் தடுத்து வைத்தது. பயிற்சி முகாமில் பங்கேற்போருக்கு மாட்டுக்கறி உணவு வழங்கப் படும் என்று துண்டறிக்கையில் குறிப்பிட்டிருந்ததால், மதவெறி சக்திகளுக்கு பணிந்து காவல்துறை இந்த ‘கருத்துரிமைப் பறிப்பு’ நடவடிக்கையை மேற் கொண்டது (ஏப்.18). மேட்டூர் கழகப் படிப்பகத்தில் ஒரு நாள் பயிலரங்கம் நடந்தது (ஏப்.13)
தாலி பற்றி விவாதம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்த ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்த ‘சங்பரிவாரங்கள்’, பெரியார் திடலில் திராவிடர் கழகம், நீதிமன்ற அனுமதியோடு நடத்திய தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கும் எதிர்ப்பு தெரிவித்து பெரியார் திடலுக்குள் தாக்குதல் நடத்த நுழைந்தனர். பெரியார் இயக்க நிகழ்ச்சிகளில் கலவரம் செய்வதும், பெரியார் உருவப் படம் எரிப்பதும், பெரியார் இயக்கங்களை அச்சுறுத்து வதும், காவல்துறை ஆதரவுடன் தொடர் நிகழ்ச்சி களாக நடந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் 6 பேர் கழகத்தின் அனுமதியின்றி தாங்களாகவே முடிவெடுத்து, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி பகுதிகளில் பார்ப்பனர்களின் ஆதிக்கச் சின்னமான பூணூலை அறுத்தனர். பூணூல் அறுப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு, ‘சங்பரிவாரங்கள்’ திட்டமிட்டு நடத்தி வந்த கலகம், வன்முறைகளை நிறுத்தினர். கழகத் தோழர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. 7 மாத சிறைவாசத்துக்குப் பிறகு உயர்நீதி மன்றத்தால் தோழர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஏப்.21-26 வரை நம்பியூரிலும், மயிலாடுதுறை அருகே மணல்மேடு கிராமத்திலும் தொடங்கி, ஜாதி எதிர்ப்புப் பரப்புரைப் பயணங்கள் நடந்தன.
மே: தமிழ்நாடு அறிவியல் மன்றம் சார்பில் குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம், திண்டுக்கல்லில் 5 நாள் நடந்தது
(மே 6-10). கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் நடந்த ஜாதி எதிர்ப்புப் பரப்புரைப் பயண நிறைவு விழா மேடையில் திருமணம் செய்யக் கூடாது என்று (நிர்மல்-இந்துமதி மணவிழா) காவல்துறை தடைவிதித்தது. உயர்நீதிமன்றம் வழியாக அனுமதி பெறப்பட்டு திருமணமும், நிறைவு விழாவும் சிறப்புடன் நடந்தது (மே 17). மேட்டூர் புதுச்சாம் பள்ளியில் நாத்திகர் விழா பேரணிக்கு காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டு, பிறகு உயர்நீதிமன்ற அனுமதியுடன் எழுச்சியுடன் நடந்தது (மே 30).
ஜூன்: சென்னை அய்.அய்.டி.யில் அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டத்தை மோடி ஆட்சி தடை செய்தவுடன் நாடு முழுதும் எதிர்ப்புகள் வெடித்தன. சென்னையில் கழக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி 70 தோழர்கள் கைதானார்கள் (ஜூன் 1). நெமிலியிலும் கழக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது (ஜூன் 3). இராஜபக்சே உருவ பொம்மை எரிப்பு மற்றும் ‘முழக்கம்’ உமாபதி, காவல்துறையால் கொடூரமாக தாக்கப்பட்டதைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டங்களுக்காக காவல்துறை தொடர்ந்த வழக்கிலிருந்து மன்னை கழகத் தோழர்கள் 7 பேர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.
ஜூலை : கோகுல்ராஜ் என்ற தலித் பொறியியல் பட்டதாரி, ஆதிக்க ஜாதியைச் சார்ந்த பெண்ணை காதலித்ததால் கொடூரமாகக் கொலை செய்யப் பட்டார். வழக்கைக் கொலைக் குற்றமாக மாற்றி நடவடிக்கையை துரிதப்படுத்தக் கோரி காவல்துறை இயக்குனரிடம் சென்னை மாவட்டக் கழக சார்பில் மனு அளிக்கப்பட்டது (ஜூலை 1). கோகுல்ராஜ் கொலையைக் கண்டித்து திருச்சியில் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது (ஜூலை 3). சென்னையில் கழகத் தலைமைக் குழு கூடியது (ஜூலை 4). மேட்டூரில் கழகத் தோழர்கள் தொடர் தெருமுனைப் பரப்புரைக் கூட்டங்களைத் தொடங்கினர் (ஜூலை 4-11). ஜூலை 19இல் தர்மபுரியில் கழகச் செயலவைக் கூடியது. கழகத் தலைமைப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். கழகத் தலைவர், பொதுச் செயலாளர், மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து கழகத் தோழர்களை சந்திக்க திட்டமிடப் பட்டது. வாரத்தின் இறுதி 3 நாள்களில் ஜூலை 21இல் தொடங்கி, ஆக°ட் 2ஆம் ததி வரை இந்த சந்திப்பு நடந்தது. மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் மாற்றி யமைக்கப்பட்டு, புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
ஆகஸ்டு: கோகுல்ராஜ் கொலையில் தலை மறைவான குற்றவாளி யுவராஜை, ‘தேடப்படும் குற்றவாளியாக’ அறிவித்து, சொத்துக்களை பறிமுதல் செய்ய வலியுறுத்தி திருச்செங்கோட்டில் கழகம், காவல்துறை மறுப்புக்குப் பிறகு உயர்நீதிமன்ற அனுமதியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தியது (ஆக.17). கழகத்தின் கோரிக்கை வெற்றி பெற்றது. காவல் துறை யுவராஜை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது (ஆக.24). புதுவையில் கழக சார்பில் ஒருநாள் பயிலரங்கம் நடந்தது. கழகத் தலைவர் வகுப்பு எடுத்தார் (ஆக.16). சேஷ சமுத்திரத்தில் தலித் மக்கள் தேரை எரித்து வன்முறையில் இறங்கிய ஜாதி வெறியர்களைக் கண்டித்து சங்கராபுரத்தில் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது (ஆக.24).
செப்டம்பர் : 80 ஆண்டுகளாக தலித் சிறுபான்மை யினர் வாழ்ந்த குடியிருப்புப் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்ட நில மோசடிக் கும்பலிடமிருந்து நிலங்களை மீட்டுத் தர திருப்பூரில் கழகத் தலைவர் தலைமையில் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது (செப்.9). மயிலாடுதுறை அருகே உள்ள வழுவூர் வீரட்டேசுவரன் கோயிலில் தலித் மக்கள் நுழைய அனுமதி மறுத்து, கொலை வெறியாட்டம் ஆடிய ஜாதி வெறியர்களைக் கண்டித்து, ஜாதி எதிர்ப்புக் கூட்டியக்கம் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தி, கழகத் தோழர்கள் கைதானார்கள். ஆண்டுதோறும் பதட்டத்தை உருவாக்கி வரும் விநாயகன் அரசியல் ஊர்வலத்தைக் கண்டித்து, பெரியார் கைத்தடிகளுடன் எதிர் ஊர்வலம் புறப்பட்ட சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் 200 பேர் கைதானார்கள் (செப்.20).
திருப்பூர் மாவட்டக் கழக சார்பில் பல்லடத்தில் பெரியார் பிறந்த நாள் விழா வாகனப் பேரணியும் கொடி ஏற்றமும் சிறப்புடன் நடந்தன (செப்.25). அரசு அலுவலகங்களில் கடவுளர் படங்களை அகற்றக் கோரியும் பூஜைகள் நடத்துவதை நிறுத்தக் கோரியும், நாகர்கோயில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன் குமரி மாவட்டக் கழகத் தோழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பல்வேறு ஊர்களில் பெரியார் பிறந்த நாள் விழாக்களை கழகத் தோழர்கள் பேரணி நடத்தி, பொதுக் கூட்டங்கள் நடத்தி கொண்டாடினர். கோபியில் பேரணியும், மேட்டூரில் இரு சக்கர வாகனப் பேரணியும் நடந்தன. இளம்பிள்ளைப் பகுதி தோழர்கள் 10 தொடர் பரப்புரைக் கூட்டங்களை நடத்தினர்.
சென்னை மயிலாப்பூர் பகுதி தோழர்கள், பெரியார் பிறந்த நாளையொட்டி கால்பந்து போட்டிகளை நடத்தினர். தூத்துக்குடி மாவட்டக் கழகத் தோழர்கள் பெரியார் பிறந்த நாளில் கழகத் தோழர்களுடன் கழக ஆதரவாளர்கள் இல்லங்களுக்குச் சென்று கழக நூல்களை அன்பளிப்புகளாக வழங்கினர். தமிழ்நாட்டில் ஈழத் தமிழ் அகதிகள் மீது காவல்துறை, உளவுப் பிரிவு நிகழ்த்தி வரும் கெடுபிடிகளை நிறுத்தக் கோரி, குடியுரிமை அதிகாரியிடம் சென்னை மாவட்டக் கழக சார்பில் மனு அளிக்கப்பட்டது.
அக்டோபர் : பார்ப்பனர்களின் பூணூல் அறுத்ததாக குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஏப்.20இல் கைது செய்யப்பட்ட சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் 6 பேரும் அக்.9இல் உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜைகளை நிறுத்தக் கோரி ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் கழகம் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது (அக்.14). சென்னை மாநகர ஆணையரிடம் மாவட்டக் கழகம் சார்பில் அரசு அலுவலகங்களில் கடவுள் படங்கள் இடம் பெறக் கூடாது என்ற அரசாணையை இணைத்து கழக சார்பில் நேரில் மனு அளிக்கப்பட்டது. அந்த அரசாணையை காவல்துறை ஆணையர் சென்னை காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைத்தார். காஞ்சி மாவட்டக் கழகம் சார்பில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரைப் பயணம் இரண்டு நாட்கள் நடந்தன (அக்.24, 25). 2009ஆம் ஆண்டு காங்கிரசு ஆட்சி, ஈழத் தமிழர் இனப்படுகொலைக்கு துணை நின்ற கொடுமைகளை விளக்கி, கழக சார்பில் வெளியிடப்பட்ட, “இனி என்ன செய்யப் போகிறோம்?” குறுந்தகடு, தமிழகம் முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறுந்தகடுகளை வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட கழகத் தோழர் கோபி. இளங்கோ, இரண்டு மாதம் கோவை சிறையிலிருந்து பிணையில் விடுதலையானார். இந்த வழக்கில் தபசி குமரனையும், காவல்துறை சேர்த்தது. இருவரையும் வழக்கிலிருந்து நீதிமன்றம் விடுதலை செய்தது (அக்.20).
நவம்பர்: காவல்துறை தடையை எதிர்த்து உயர்நீதிமன்ற அனுமதியோடு வேலூரில் மாட்டிறைச்சிக்கு தடை போடும் பார்ப்பன மதவெறி சக்திகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது (நவம். 6). ஈரோடு மாவட்டக் கழக சார்பில் ஈரோட்டில் ‘பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு’ மாநாடு ஒருநாள் மாநாடாக எழுச்சியுடன் நடந்தது (நவம். 8). விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே மணக்குப்பம் கிராமத்தில் கழகத்தின் புதிய அமைப்பு தொடக்க விழா நடந்தது (நவம். 15).
டிசம்பர் : சென்னை மாவட்டக் கழகம் சார்பில் வரலாறு காணாத கடும் மழை, வெள்ளத்துக்கிடையே பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது (டிசம்பர் 1). மாநாடு முடிந்தவுடனேயே திராவிடர் விடுதலைக் கழகமும் ‘புரட்சிப் பெரியார் முழக்க’மும் இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருள்களை வழங்கும் உதவிப் பணிகளைத் தொடங்கினர். 10 நாள்கள் வரை இப்பணி நீடித்தது. கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாகை, ஈரோடு மாவட்டக் கழகத் தோழர்கள் நேரில் சென்று நிவாரணப் பொருள்களை வழங்கினர். வாரத்துக்கு ஒரு நாள் என்று திட்டமிட்டு, 8 வாரம் தொடர்ந்து ஜாதி எதிர்ப்புப் பரப்பரை இயக்கம் நடத்திய ஈரோடு மாவட்டக் கழகம் நம்பியூரில் பயண நிறைவு விழாவை நடத்தியது (டிச. 13). பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாட்டை சேலம் மாவட்டக் கழகங்கள் ஒரு நாள் மாநாடாக சேலத்தில் சிறப்புடன் நடத்தின (டிச.19). வழக்கம்போல் காவல்துறை கடைசி நேரத்தில் அனுமதி மறுத்தது. உயர்நீதிமன்றம் வழியாக அனுமதி பெற்று மாநாடு நடந்தது. கழகத்தின் தொய்வில்லாப் பயணம் தொடருகிறது.
நினைவில் பதிந்த நிகழ்வுகள்
2015ஆம் ஆண்டில் கழக சார்பில் 15 நூல்கள் வெளியிடப்பட்டன.
கழகத்தின் இணையதளம் புதுப்பிக்கப்பட்டு ஏராளமான நூல்கள், இயக்க வரலாறுகள் பதிவேற்றப்பட்டன.
பெரியார் இயக்கங்கள் இணைந்து மேடையேறும் சூழலை திராவிடர் விடுதலைக் கழகம் உருவாக்கியது. திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சி ஆகிய பெரியார் அமைப்புகள் இதில் ஆர்வம் காட்டி செயல்பட்டன.
பெரியார் திடலில் திராவிடர் கழகம் நடத்திய தாலியகற்றும் நிகழ்ச்சிக்கு மதவாத சக்திகள் கடும் எதிர்ப்புகளைக் காட்டியபோது, பெரியார் இயக்கங்கள் பெரியார் திடலில் சங்கமித்தன.
கழகத்தின் ஒவ்வொரு மாநாடும் பேரணியும் கூட்டங்களும் காவல்துறையின் தடைகளைத் தகர்த்தே நடந்தது. வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, அருண் ஆகியோர் இதில் முனைப்புடன் செயல்பட்டு அனுமதி பெற்றுத் தந்தனர்.
பெரியார் முழக்கம் 31122015 இதழ்