ஏற்காடு கிராமப் பகுதியில் கழகப் பரப்புரைக்கு உற்சாக வரவேற்பு
ஏற்காடு ஒன்றிய கழகத்தின் சார்பாக எங்கள் தலைமுறைக்கு சாதி வேண்டாம்; வேலை வேண்டும் என்கின்ற பரப் புரை பயணம், ஏற்காட்டின் கிராமப் பகுதியான செம்மனத்தம் மற்றும் நாகலூரில் நடைபெற்றது. முதல் நிகழ்வு காலை 11 மணிக்கு அப்பகுதியின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிளைச் செயலாளர் ராஜா தலைமையில் தொடங்கியது. பிரச்சாரத்தின் நோக்கம் குறித்து
மா. தேவதாஸ், பெருமாள் ஆகியோர் விளக்கிப் பேசினர். அந்த கிராமத்திற்கு வியாபாரம் செய்ய வந்திருந்த 60 வயதுடைய முதியவர் ஒருவர் நாம் இதுவரை கேட்டிராத பார்ப்பன எதிர்ப்புப் பாடல் ஒன்றை பாடி அனைவரையும் சிலிர்க்க வைத்தார். அவரைத் தொடர்ந்து ஆத்தூர் மகேந்திரனின், ‘மந்திரமல்ல தந்திரமே’ நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இரண்டாம் நிகழ்வாக, நாகலூர் என்ற கிராமத்தில், அப்பகுதியைச் சேர்ந்த கழகத் தோழர் சந்தோஷ் தலைமையில் பரப்புரை சிறப்பாக நடைபெற்றது. அப்பகுதியிலுள்ள சுய உதவிக் குழுவின் சுபம் அடார்னஸை சேர்ந்த நண்பர்கள் கழகத் தோழர்களைப் பாராட்டி இனிப்பு வழங்கியும், மின்சாரம் தந்தும் உதவினர். ஏற்காட்டில் முதன்முறையாக நான்கு கடைகளே உள்ள கிராமப் பகுதியில் துண்டேந்தி வசூல் செய்ததில் ரூ.980 வசூலானது, கழகத் தோழர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தந்தது.