காந்தியார் மறைவு: பெரியார் வானொலியில் பேச்சு
காந்தியார் மறைவு செய்தி வந்தவுடன், தமிழ்நாட்டு வானொலி நிலையம் தந்தை பெரியார் அவர்களை அழைத்துப் பேச செய்தது. கலவரங்களில் ஈடுபட வேண்டாம் என்று தந்தை பெரியார் வேண்டுகோள் விடுத்தார்.
“பெரியார் காந்தியவர்களின் விசனிக்கத்தக்க திடீர் மறைவு என்னைத் திடுக்கிட வைத்தது. இந்திய மக்களனைவரையுமே இந்நிகழ்ச்சி திடுக்கிட வைத்திருக்குமென உறுதியாக நம்புகிறேன். கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகவே காந்தியார் இப்பரந்த உபகண்ட மக்களின் எதிர்கால வாழ்வுக்கு வழிகாட்டியாயிருந்து வந்தார். மக்களுக்கு அவரது தொண்டு மகத்தானது, அவரது இலட்சியக் கோட்பாடுகள் உலக மரியாதையினை பெற்றுவிட்டன. காந்தியார் மீது நடத்தியிருக்கும் மோசமான தாக்குதல் கண்டனத்துக் குரியதாகும். பல திறப்பட்ட எல்லா வகுப்பு மக்களுக்கும் நியாயமாகவும் பாரபட்சமற்ற முறையிலும் நடந்து கொண்ட காந்தியார், இக் கொடுந் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்களென்றால் இது மிகவும் வெறுக்கத் தக்கதாகும்.
இக்கொலையாளியை ஆட்டிப் படைக்கும் சதிகார கூட்டமொன்று திரைமறைவில் வேலை செய்து வரவேண்டும். வடஇந்தியாவில் நடைபெற்றுவரும் கலவரங்களுக்கெல்லாம் அடிப்படைக் காரணமாயிருப்பது மதவெறியேயாகும். காந்தியாரின் இடத்தை நிறைவு செய்பவர் இந்நாட்டில் எவருமே இல்லை. மக்கள் தங்களது அரசியல் மத வேறுபாடுகளை மறந்து சகோதர பாவத்துடன் நடந்து கொள்வதே நாம் காந்தியாருக்குச் செய்யும் மரியாதையாகும்.
தென்னாட்டுத் திராவிடர்கள் இயல்பாகவே நாட்டில் அமைதியும் சமாதானமும் நிலவ வைப்பர்.”
(‘குடிஅரசு’ 7.2.48)
குறிப்பு: பெரியார் பார்ப்பனர்களை ஒழிக்கும் ஒரு வாய்ப்பாக இதை கருதாமல், அமைதி காக்கச் சொன்னதால், தமிழ்நாட்டு பார்ப்பனர்களுக்கு பாதுகாப்பு கிடைத்தது. இந்த நாகரிகத்தை பார்ப்பனர்களிடம் எதிர்பார்க்க முடியுமா? (ஆர்)
பெரியார் முழக்கம் 08012015 இதழ்