ஸ்தல ஸ்தாபன மசோதா
சென்னை சட்டசபையில் ஸ்தல ஸ்தாபன மசோதா ஒன்று ஸ்தல ஸ்தாபன மந்திரி கனம் டாக்டர். சுப்பராயன் அவர்களால் கொண்டுவரப் பட்டதானது இவ்வாரம் நிறைவேற்றப்பட்டு விட்டது. அநேகமாக மேன்மை தங்கிய கவர்னர் அவர்கள் சம்மதமும் கவர்னர் ஜனரல் அவர்கள் சம்மதமும் பெற்று இவ் வருஷத்திலேயே அமுலுக்கு வந்துவிடும் என்றே நினைக்கிறோம்.
இந்த சட்டம் செய்யப்பட்டதின் மூலம் சில நன்மைகள் ஏற்படக் கூடும் என்பதை நாம் ஒப்புக் கொள்ளுகின்றோமாயினும் பலன் கொடுக்கும் முக்கியமான நன்மைகள் எதுவும் பிரமாதமாய் ஏற்பட்டு விடும் என்பதாக நம்மால் நினைக்க முடியவில்லை.
ஸ்தல சுயாட்சி போன்ற ஸ்தாபனங்களில் ஏதாவது சீர்திருத்தங்கள் செய்ய வேண்டுமானால் அச்சீர்திருத்தங்கள் மிகுதியும் அந்த ஸ்தாபனங் களின் நல்ல ஆட்சிக்கும் நாணயத்திற்கும் வரிப்பொருளை சரியானபடி செலவழிப்பதற்கும் உபயோகப்படக்கூடியதாய் இருக்க வேண்டும். இப்போது நமது நாட்டில் உள்ள ஸ்தல ஸ்தாபனங்களுக்கு இந்த மூன்று குணங்களையும் காப்பாற்றும்படியான சக்தி இல்லை என்று பல தடவை அழுத்திச் சொல்லு வோம். அதுவும் 1920-ம் வருஷம் ஏற்பட்ட ஸ்தல ஸ்தாபன சட்டத்திற்குப் பிறகு ஏதோ கொஞ்சம் நஞ்சம் இருந்த நல்லரசாட்சியும் நாணையமும் அடியோடு போய்விட்டது. பணவிஷயம் 100-க்கு 10 ஸ்தாபனங்களில் ஸ்தாபனத் தலைவர்கள் கையாடல் செய்வதில்லை என்று சொல்லலாமே தவிர மற்றபடி 100-க்கு 90 ஸ்தாபனங்கள் ஸ்தாபன தலைவர்களால் நேரிலும் நண்பர்கள் சுற்றத்தார்கள் மூலமும் கையாடல் லஞ்சம் கன்றாக்ட்டு முதலாகி யவைகளின் மூலம் ஸ்தல ஸ்தாபன பொருள்கள் பாழாக்கப்பட்டு வருகின்றது. மேல்கண்ட குணங்கள் இல்லாத சில ஸ்தல ஸ்தாபனத்திலும்கூட தாங்களோ தங்களது பந்துமித்திரர்களோ அடையாவிட்டாலும் தாங்கள் அந்த ஸ்தாபனத் தில் இருந்து நடத்தும் ஆட்சிக்கு முட்டுக்கட்டை ஏற்படாமலிருப்பதற்கும் தாங்களே அடுத்த தடவையும் அந்த ஸ்தாபனத்தில் நிலைத்திருப்பதற்கும் மற்ற மெம்பர்கள் இஷ்டப்படி நடக்க வேண்டிய நிர்பந்தங்களிலிருந்து தப்ப முடியாததின் காரணமாய் மேல் கண்ட மூன்று குணங்களால் அந்த ஸ்தாபனங் களுக்கு ஏற்படும் கஷ்ட்ட நஷ்டத்திற்கு குறையாத பலனை உண்டாக்கிவிட வேண்டியவர்களாகி விடுகிறார்கள். மற்றும் அநேக யோக்கியர்கள் கூட நிர்வாகத்தில் செரிப்படுத்திக் கொள்ளலாம் என்கின்ற எண்ணத்தின் பேரி லேயே தேர்தல்களில் கண்மூடித்தனமாய் பணம் செலவு செய்து விட்டு பிறகு அதைச் சரிப்படுத்த முயர்ச்சிப்பதில் ஸ்தாபனங்களின் நல்ல ஆட்சிக்கும் பொருளாதாரத்திற்கும் கேடு உண்டாகும்படியான மாதிரியில் நடந்து தீர வேண்டியவர்களாகி விடுகிறார்கள். இத்தியாதி குணங்கள் இந்த புது சட்டத்தால் அடியோடு மறைந்து விட்டது என்று சொல்லுவதற்கு இல்லை. ஆனால் இரண்டொரு காரியங்களில் நன்மை ஏற்பட்டிருப்பதற்கு அதை பொருத்தவரையாவது பாராட்டாமலிருக்க முடியவில்லை. அதாவது தேர்தல் விஷயங்களில் சிறிது தொல்லைகள் குறைந்திருக்கின்றது. முனிசிபாலிட்டி களில் அந்தந்த வருஷத்திய வரியை செலுத்தியவர்களுக்குத்தான் ஓட்டு ரிமை உண்டு என்கின்ற நியதி முன் இருந்ததின் காரணமாக சேர்மேன்கள் பொது ஜனங்களிடம் வரிவசூலிக்காமலே இருந்தும் தங்களுக்கு வேண்டிய சில ஆள்கள் இடம் மாத்திரம் வசூலித்துக் கொண்டும் தாங்களாகவே தொழில் வரி என்று 10 அணா வீதம் 40, 50 மூன்றாந்தர ஆள்களுக்கு கட்டி அவர்களை ஓட்டர்களாக்கி வைத்துக் கொள்ளுவதுமான முறையில் ஓட்டர் லிஸ்ட்டு தயாரித்து வைத்துக் கொண்டு தாங்களும் தங்களது நண்பர்களும் அடிமை களுமே முனிசிபாலிட்டியை பிதுராஜ்ஜித சொத்தாக அனுபவித்து வந்த வழக்கம் இனி தடைப்படும் மாதிரியில் சிறிது மாற்றமடைந்திருக்கின்றது. அதாவது பணம் கட்டினாலும் கட்டாவிட்டாலும் வரி செலுத்தும் ஜாப்தாவில் பெயர் இருந்தால் போதும் என்கின்ற அளவில் ஓட்டர்களின் யோக்கி யதாபக்ஷம் முன்னேற்றமடைந்திருக்கின்றது. இரண்டாவதாக தேர்தல்கள் அதாவது எலக்ஷன்களில் நடந்து வரும் அக்கிரமங்கள் ஒருவாறு மாற்ற மடைந்திருப்பதாகவும் தெரிகின்றது. இப்போது இருக்கும் ஸ்தல ஸ்தாபனத் தலைவர்களிலும் அபேக்ஷகர்களிலும் நூத்துக்கு 10பேர் கூட இந்த தேர்தல் விஷயத்தில் நாணையமாய் நடந்து கொண்டு வருகிறார்கள் என்று சொல்ல முடியாத நிலையிலேயே தேர்தல்கள் நடந்து வருகின்றது. உதாரணமாக நூத்துக்கு 50 தேர்தல்கள் கோர்ட்டுக்கும் 100-க்கு 75 தேர்தல்கள் கவர்மெண் டுக்கும்போய் விவகாரங்களும் தகராருகளும் செய்த வண்ணமாகவே இருந்து வருகின்றன.
நமக்கு நம்பிக்கை உண்டாகும் மாதிரியில் சில ஸ்தல ஸ்தாபன தலைவர்கள் நாமினேஷன் (ஸ்லிப்) சீட்டை கிழித்து விட்டு வரவில்லை என்று சொன்னவர்களும் போர்ஜரியாய் வித்திட்றா கடிதம் எழுதிக் கொண்டவர் களும் ‘சட்டப்படிக்கு இல்லாததால் ஸ்லிப் செல்லாது’ என்று நிராகரித்து விட்டவர்களும் தேர்தல் விஷயம் யாருக்கும் தெரியப்படுத்தாமல் இரகசிய மாய் செய்து கொண்டவர்களும் ஓட்டுப் பெட்டியைத் திறந்து திருத்திய வர்களும் போலிங் ஆபீசர் மூலம் தப்பாய் மார்க்கு செய்யச் செய்தவர்களும் நல்ல ஓட்டுகளை செல்லுபடி அற்றதென்று தள்ளி கணக்கு பார்த்தவர்களும் எலக்ஷன் தேதியில் நடத்தாமல் செய்தவர்களும் ஓட்டுப் பெட்டியில் இங்கியை ஊற்றச் செய்து ஓட்டுகளை தள்ளி குறைத்து எண்ணியவர்களும் ஓட்டுப் பெட்டியில் பாஸ்பரஸ் என்னும் நெருப்பு திராவகம் ஊத்தினவர்களும் மற்ற அபேக்ஷகரின் ஓட்டுகளை பதிவு செய்யாமல் நேரமாய் விட்டது என்று சொல்லி ஆபீசை மூடி விட்டவர்களும் ஓட்டுச் சீட்டுகளை பெட்டிக்குள் போடாமல் பக்கத்தில் ஆள்கள் இருந்து வாங்கி தங்கள் இஷ்டப்பட்டபடி செய்தவர்களும் பணம் கொடுத்தும் மிரட்டியும் நேரில் இருந்து கொண்டு ஓட்டு போட அனுமதித்தவர்களும் மற்றும் இம் மாதிரி அனேக காரியங்கள் எலக்ஷனில் தலைவரால் நடந்தது நன்றாய் தெரியும். மற்றும் போலீசார் இல்லாமல் எலக்ஷன் நடத்த முடியாததும் ஆன காரியங்கள் முதல் இம் மாதிரியான காரியங்கள் சற்றுத் தடைபடும்படியாக புதிய சட்டத்தில் எலக் ஷன்களை சர்க்கார் அதிகாரிகள் நேரில் இருந்து நடத்தும்படியான திருத்தங் கள் ஏற்பட்டிருப்பது சந்தோஷிக்கத் தக்கதேயாகும்.
மற்றும் ஒரு விஷயம். அரை சந்தோஷத்திற்கு இடமானதையும் குறிப்பிட விரும்புகின்றோம். அதாவது வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்பதாகும். இந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்னும் விஷயத்தில் நாம் சுமார் பத்து வருட காலமாக எடுத்து வந்த முயற்சி வாசகர்கள் அறிந்ததே யாகும். அதாவது 1919 ம் வருஷம் சென்னை மாகாண சங்கம் முதல் திருச்சி திருநெல்வேலி தஞ்சை திருப்பூர் சேலம் திருவண்ணாமலை காஞ்சீபுரம் ஆகிய இடங்களில் கூட்டப்பட்ட காங்கிரஸ் மாகாண கான்பரன்ஸ்கள் வரை அவைகளில் இருந்து கொண்டும், கடைசியாக அதே காரணத்தால் காஞ்சீபுரம் கான்பரன்சில் இருந்து வெளியேறி குடி அரசு, திராவிடன் பத்திரிகை மூலமும் சுயமரியாதை இயக்கத்தின் மூலமும் நாம் பார்ப்பன அடிமைகளின் எவ்வளவோ எதிர்ப்புக்கிடையில் முயற்சித்து வந்திருக்கின்றோம். அந்த முயற்சி முழுதும் கை கூடா விட்டாலும் அரசாங்க அதிகாரி உத்தியோகங் களில் ஒரு அளவும் ஸ்தல ஸ்தாபனங்களில் ஒரு அளவும் வெற்றி பெற முடிந்ததற்கு நாம் மகிழ்ச்சியடைந்தேயாக வேண்டும். சாதாரணமாக நாம் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கேட்டது முக்கியமாய் கிருஸ்தவர்கள் மகமதியர்கள் இந்துக்கள் என்பவர்களில் பார்ப்பனர்கள், பார்ப்பனரல்லாத வர்கள், பார்ப்பனரல்லாதவர்களில் “தீண்டத்தக்கவர்கள்” “தீண்டப்படாத வர்கள்” என்கின்ற பிரிவுப் படி இருக்க வேண்டுமென்றே முயற்சி செய்தோம். ஆனால் இவற்றுள் ஒன்று தவிர அதாவது பார்ப்பனர் பார்ப்பனரல்லாதவர் என்கின்ற பிரிவு தவிர மற்ற பிரிவுகளுக்கெல்லாம் பிரதிநிதித்துவம் இந்தப் புதிய சட்டத்தின் மூலம் ஏற்பட்டுவிட்டது. அதுமாத்திரமல்லாமல் அளவுக்க டங்கா மகிழ்ச்சி அடையுமாறு மற்றும் ஒரு புதிய பிரிவாருக்கும் ஏற்படுத்தப் பட்டாய் விட்டது. அதாவது ஸ்தல ஸ்தாபனங்களில் பெண்களுக்கும் தனி பிரதிநிதித்துவம் என்பது. ஆனாலும் பார்ப்பன பார்ப்பனரல்லாத பிரிவு இல்லாமல் போய் விட்டதற்கு காரணம் என்ன வென்றால் அது தப்பான கொள்கையென்றோ அல்லது தேச நன்மைக்கு விரோதமென்றோ இல்லாமல் இப்போது நாடு இருக்கும் நிலைமையில் அதாவது சுயமரியாதை இயக்கம் வேலை செய்ததின் பயனாய் அனேக ஸ்தல ஸ்தாபனங்களிலும் பார்ப்பனர்களின் ஆதிக்கம் அடியோடு ஒழிந்து விட்ட படியால் அவர்களால் இனி பயமில்லை என்கின்ற நம்பிக்கையின் பேரில் அந்த விஷயத்தை பார்ப்பனரல்லாத சில பிரமுகர்களே நழுவவிட்டு விட்டதால் அப்பிரிவு நிறுத்தப்பட்டு விட்டது. நிற்க இப்போது இந்த சட்டத்தில் ஏற்படுத்தப் பட்டிருக்கின்ற வகுப்புவாரி பிரதிநிதித்துவ விஷயத்திலும் நாம் தேர்தலுக்கு தனித் தொகுதியே வேண்டுமென்றும் கேட்டு வந்தோம். ஆனால் புதிய சட்டத்தில் தனித் தொகுதிக்குப் பதிலாக பொதுத் தொகுதியிலேயே ஸ்தானங்கள் ஒதுக்கப்பட்டு வைத்து இருக்கின்றது. இது முதல்படியாகவும் பரீட்சார்த்தமாய்ப் பார்ப்பதாகவும் என்று சொல்லி ஏற்பாடு செய்திருப்பதால் இதன் மூலம் தக்க பிரதிநிதித்துவம் கிடைக்காத பட்சம் தனித் தொகுதியே ஏற்பாடு செய்வதாகக் கருதி இருப்பது மெத்த அனுகூலமானதேயாகும்.
ஆகிய இந்த நன்மைகள் ஒரு புறமிருந்தாலும் ஸ்தல ஸ்தான நிர்வாகம் நல்ல ஆட்சியாக சீர்பட வேண்டிய வரையில் ஒரு சிறு மாறுதலும் ஏற்பட்டி ருப்பதாய் தெரியவராததற்கு வருந்தாமலிருக்க முடியவில்லை. இப்போதைய தலைவர்களின் ஆட்சிக்கு நூத்துக்கு ஐந்து பேருடையது கூட ஒழுங்கான தென்று சொல்ல முடியாதென்பதே நமது கருத்து. எவ்வளவு நாணயமுள்ள வரும் நடுநிலைமையுள்ளவருமான தலைவர்களா யிருந்தாலும் இப்போ துள்ள நிலைமையில் சிறிதும் அந்த ஸ்தல ஸ்தாபனங்களின் நன்மையைக் கோரி ஒழுங்காய் நடந்து கொள்ள முடியாத நிலையிலேயே இருந்து வரு கின்றார்கள். மெம்பர்களுடைய தாட்சண்யங்களும் ஓட்டர்களுடைய தாட்சண்யங்களும் தலைவர்களின் கைகளைக் கட்டிப் போட்டு விடுகின்றன. அனேகமாய் ஸ்தாபனங்களின் உத்தியோகங்கள் முழுதும் மெம்பர்களின் சிபார்சுப்படியே வினியோகிக்க வேண்டியதாய் இருக்கின்றது. அவர் களுடைய ஒழுக்கவீனமானதும் நாணயக் கேடானதுமான காரியங்களைப் பற்றி கவனிப்பது என்பது ஸ்தாபன தலைவர்களுக்கு சிறிதும் முடியாத காரியமாயிருக்கிறது. கான்ட்றாக்ட் விஷயங்களோ பெரும்பாலும் மெம்பர் களுக்கே வேறு பெயரின் பேரால் கொடுத்துத் தீர வேண்டியதாகும். அந்த வேலை ஊழல்களை எந்த உத்தியோகஸ்தனும் கவனிக்க முடியாது. கவனித் தாலோ மெம்பர்களால் தலைவர்களிடம் சொல்லப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டு விடும். இதுவே தமிழ் நாட்டில் மிகவும் நாணயமாய் உள்ள தலைவர்களின் நிலை. மற்றபடி அந்த தலைவர்கள் என்பவர்கள் நாணயத் திலும் யோக்கியப் பொறுப்பிலும் கவலையில்லாமலும் இதைகொண்டே ஜீவனம் பண்ண வேண்டியவர்களுமாய் இருந்து விட்டாலோ அதன் நிலையைப் பற்றி கேட்க வேண்டுமா? உதாரணமாக ஈரோடு முனிசிபாலிட் டியை எடுத்துக் கொண்டால் அந்த முனிசிபாலிட்டி ஒரு 3 வருஷத்திற்கு முன்னால் இருந்த தலைவரின் நடத்தையில் அதன் பொருளாதார விஷயம் இன்னும் 10 வருஷங்களுக்கு தலையெடுக்க முடியாத நிலையில் இருக்கின்றதை இன்றும் பார்க்கலாம். எவ்வளவோ திருட்டுகளும் புரட்டு களும் கைப்பிடியாய் பிடித்துக் கொடுத்தும் முனிசிபல் சட்டமும் இந்தியன் பினல் கோடும் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. குதிரை திருட்டுப் போனதிற்கப்புறம் லாயத்தைப் பூட்டினதைப் போல் இப்போது மிக்க நாணயமாயும் யோக்கியப் பொறுப்பாயும் இருக்கும் தலைவர்களை சர்க்காரார் மிரட்டுவதைத் தவிர வேறு ஒரு காரியமும் செய்ய முடியவில்லை.
ஈரோடே (அதாவது சர்க்காருக்கும் மந்திரிகளுக்கும் சுலபத்தில் உண்மை தெரியக் கூடியதும் தங்கள் கட்சி காரணமாக மந்திரிகள் பாரபட்சம் காட்ட வேண்டிய அவசியமில்லாததுமான ஈரோடே) இப்படி இருந்தால் மற்ற ஊர்களின் நிலைமையை நாம் சொல்லிக்காட்ட வேண்டுமா? எனவே இந்த நிலை மாறுவதற்கு நாம் ஒவ்வொரு ஸ்தாபனங்களுக்கும் ஒரு நிர்வாக அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று யோசனை கூறி இருந்தோம். ஆனால் இந்த யோசனை சட்டசபையில் பரிகசித்து காற்றில் பரக்க விடப் பட்டது.
ஏனெனில் அந்த சட்ட சபையானது பெரிதும் ஸ்தல ஸ்தாபன தலைவர்கள், ஸ்தல ஸ்தாபனத்தில் செல்வாக்குள்ள அங்கத்தினர்கள் ஆகிய வர்கள் ஆதிக்கத்தையே கொண்டதாயிருப்பதால் அவர்கள் தங்களின் நன்மையையோ அதிகாரத்தையோ செல்வாக்கையோ விட்டுக் கொடுக்க முடியாததினாலும் விட்டுக் கொடுத்தால் அவர்கள் மறுபடியும் ஸ்தல ஸ்தாபனத் தலைமையையும் – ஏன்? சட்டசபை ஸ்தாபனத்தையும் இழந்துவிட வேண்டியவர்களாய் விடுவார்களானதால் அந்த யோசனையை கனம் மந்திரி ஆதரித்தும் அங்கத்தினர்களால் அவ்வளவு அலட்சியப்படுத்தப்பட்டு விட்டது. ஆனாலும் மறுபடியும் ஒரு சமயம் இந்த சட்டம் திருத்தவரும் சமயத்தில் இந்த யோசனை இப்போதையைப் போல் அவ்வளவு அலட்சியப் படுத்தப்படாமல் சிறிது மாறுதலுடனாவது அனுமதிக்கப்படும் என்கின்ற தைரியம் நமக்கு இருப்பதால் இப்பொழுது இவ்வளவுடன் நிறுத்தி இந்த சட்டத்திற்காக முயற்சி எடுத்து விடாப்பிடியாய் உழைத்து நிறைவேற்றின கனம் முதல்மந்திரி டாக்டர் சுப்பராயன் அவர்களுக்கு நமது பாராட்டுதலும் ஏழை வரி செலுத்துவோரின் நன்றியறிதலும் உரியதாகுக.
குடி அரசு – தலையங்கம் – 02.03.1930