சட்ட மறுப்பு இயக்கம்

 

தலைவர்களுக்குள் எங்கும் ராஜிப் பேச்சும் ராஜிக் கோரிக்கையுமே முழங்குகின்றது.

ஆனால் சர்க்கார் ராஜிக்கு இடம் இல்லை என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்கள்

குறைந்த அளவு ராஜி நிபந்தனையாக, சிறையிலிருப்பவர்களை விடுதலை செய்தால் சட்ட மறுப்பு இயக்கத்தை நிறுத்துவதாக திரு. மாள வியா சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

தேசீயப் பத்திரிக்கைகளும் அதை வலியுறுத்தி ராஜி! ராஜி!! என்று கதர ஆரம்பித்து விட்டன. எனவே தோல்வி கண்ணுக்குத் தெரிய ஆரம் பித்து விட்டது.

ஜோசியப் புரட்டினாலாவது அதாவது திரு. காந்தி நாளைக்கு விடுதலை, நாளன்னைக்கு விடுதலை என்று எழுதி சிறு பிள்ளைகளையும் பாமர மக்களையும் ஏமாற்றி சிறைக்கனுப்பிக் கணக்குக் கூட்டி வந்ததும் கூட இப்போது சில ஜோசியர்களுக்கும் 144 போட்டுவிட்டதால் அவர்களும் அடங்கும்படியாய் விட்டது. மற்றபடி ஜவுளிக்கடை, கள்ளுக்கடை, பள்ளிக் கூட மரியல்களோ வென்றால் “தொண்டர்கள் எண்ணிக்கை போதாததால்” நிறுத்த வேண்டிதாய் விட்டது.

வேதாரண்யத்திற்கு யாத்திரைக்குப் போகும் ஜனங்கள் பெயர்களை கூட பத்திரிக்கைகளுக்கு வெளிப்படுத்த முடியாமல் போய்விட்டது.

மற்றும் எது எப்படியானாலும் சட்ட மறுப்பு இயக்கத்தால் ஒரு லாபம் ஏற்பட்டதை நாம் மறுக்க முடியவில்லை. அதாவது அது சர்க்காரை ஒன்றும் செய்யமுடியவில்லையானாலும் பணக்கார வியாபாரிகள் திமிர் சற்று அடங்கி விட்டது. அநேக வியாபாரிகள் இயக்கத்தை வைதுக் கொண்டே தூக்க மில்லாமலிருக்கின்றார்கள். பணக்கார விவசாயிகள் திமிரும் சமீபத் தில் அடங்கிவிடும். தவசங்கள் விலை மிகவும் இறங்கிவிட்டதால் வரும்படி குறைந்து திண்டாடுகிறார்கள். ஆனால் ஏழைகளுக்குச் சற்று உணவுப் பொருள்கள் சல்லீசாய் கிடைக்க ஆரம்பித்து விட்டது. ஆகவே இந்தக் காரணங்களைக் கொண்டு இந்தக் கிளர்ச்சி இன்னமும் ஒரு மூன்று மாதத் திற்கு ஆவது நடந்தால் இன்னமும் சற்று ஏழை மக்களுக்கு அனுகூலமாகும் என்றே ஆசைப்படுகின்றோம்.

குடி அரசு – துணைத் தலையங்கம் – 20.07.1930

 

You may also like...

Leave a Reply