இரண்டு வைத்தியர்கள்
– சித்திரபுத்திரன்
பார்ப்பன ஆயுர்வேத வைத்தியருக்கும் பார்ப்பனரல்லாத சித்த வைத்தியருக்கும் சம்பாஷனை
ஆ. வே. வை:- ஓய் சித்த வைத்தியரே; இந்த சட்ட சபைக்குள் திரு. முத்துலட்சுமி அம்மாள் போன பின்பு நமது வைத்தியத் தொழில்களுக் கெல்லாம் ஆபத்து வந்து விட்டது போல் இருக்கின்றதே. இதைப்பற்றி கேள்வி கேப்பாடு இல்லையா!
சி. வை:- என்ன ஆபத்து?
ஆ. வே. வை:- என்ன ஆபத்தா! இவ்வளவுதான் சித்த வைத்தியத்தின் புத்தி.
சி. வை:- சரி, ஆயுர்வேத வைத்தியர்களே மகா புத்திசாலிகளாய் இருக்கட்டும். அந்த அம்மாளால் என்ன ஆபத்து வந்துவிட்டது?
ஆ. வே. வை:- பொட்டுக்கட்டக் கூடாதாம், தேவதாசிகள் கூடாதாம். இந்த இரண்டும் நின்றுபோய் விட்டால் நமது ஜீவனம் எப்படித்தான் நடக்கும்.
சி.வை:- அடேயப்பா இதுதானா பெரிய ஆபத்து. இதற்கும் நமக்கும் என்னய்யா சம்மந்தம். தாசிகள் இல்லாவிட்டால், கோவில் அர்ச்சகப் பார்ப்பனர்களுக்குத்தான் ஜீவனம் கெட்டுப்போகும். ஏனென்றால் கோவி லுக்கு தாசிகள் வராவிட்டால் ஜனங்கள் கோயிலுக்குப் போக மாட்டார்கள். அதனால் அவர்களுக்கு பூசை பண்ணுவதிலும் வரும்படி குறையும். தரகிலும் வரும்படி குறையும். அப்படி குறைந்தாலும் சிலருக்குத் தான் குறையும். நல்ல அழகான பெண்டாட்டியோ அக்கா தங்கையோ இருக்கிற பூசாரிகளுக்கு வரும்படி ரெட்டிக்குமே தவிர குறையாது. ஆகவே இதனால் நமக்கு என்ன ஆபத்து?
ஆ.வே.வை:- சித்த வைத்தியரே உமக்குக் கண்டது கண்டபடி உளரத் தான் தெரியும். உள்ளுக்குள் இருக்கும் தத்துவம் இன்னதென்று தெரியாது.
சி.வை:- ஆயுர் வேத வைத்தியருக்கே உள் தத்துவம் தெரியட்டும். நமக்குத் தெரியவேண்டாம். சங்கதி என்ன? சற்று சொல்லும் பார்ப்போம்.
ஆ.வே.வை:- சங்கதி என்னவென்றால் குருக்கள் அர்சகர்கள் பூசாரி இவர்கள் சங்கதி எப்படியோ நாசமாய் போகட்டும். தாசி இல்லாததினால் அவர் வரும்படியோ தரகோ நின்றுபோகாது என்பது உண்மைதான். அன்றியும் எப்படியும் ஏதாவது சரி பண்ணி அதாவது சாமியை கீழே தள்ளியோ அல்லது ஆட்டி புரட்டியோ அஷ்ட பந்தன கும்பாபிஷேகம் பண்ணச் செய்து வயிரை வளர்த்திக்கொள்வார்கள். இல்லாவிட்டால் விக்கிரகம் செய்பவனை கைக்குள் போட்டு இரண்டு விக்கிரகங்களை வாங்கிக் கொண்டு போய் எங்கேயாவது ஒரு காட்டில் புதைத்து விட்டு வந்து சாமி கனவில் வந்து சொன்னதாக எந்த பணக்கார முட்டாளிடமாவது அல்லது ஒரு பார்ப்பன தலைவனிடமாவது சொல்லி ஆர்ப்பாட்டம் செய்து ஜனங்களை கூட்டிக் கொண்டுபோய்காட்டி புதிதாய் எடுப்பது போல் தோண்டி எடுத்து அதற்கு கோவில் கும்பாபிஷேகம் உர்சவம் செய்து ரம்பவும் சக்தி இருக்கிறதாக காட்டி பிழைத்துக் கொள்வார்கள். .அவர்களைப் பற்றி நமக்குக் கவலை இல்லை.
சி.வை:- அப்படியானால் பின்னை நமக்கு என்ன ஆபத்து வந்துவிடும்?
ஆ.வே.வை:- சொல்லவும் வெட்கமாக இருக்கின்றது.
சி.வை:- என்னதான் சொல்லுமே பார்ப்போம். நமக்கு நாமே பேசிக் கொள்வதில் வெட்கமென்ன?
ஆ.வே.வை:- நோயில்லாவிட்டால் வைத்தியன் எப்படி பிழைப்பான். இதை ஒத்துக் கொள்ளுகிறீர்களா இல்லையா?
சி.வை:- ஆம், உண்மைதான்.
ஆ.வே.வை:- தாசிகள் இல்லாவிட்டால் நமக்கு பணம் கிடைக்கும் படியான நோய் எப்படி பரவும்?
சி.வை:- அடேயப்பா இதுதானா பெரிய சங்கதி. வருகிற நோய் எப்படியும் வந்துவிடும். அதெல்லாம் கடவுள் செயல்.
ஆ.வே.வை:- உன் கடவுள் தலையில் நெருப்பை வாரிக் கொட்டு. வேறு நோய்களுக்கெல்லாம் இங்கிலீஷ் வைத்தியமாய்விட்டது. இந்த மேக சம்மந்தமான அதுவும் இரகசியமான இடங்களில் வருகின்ற நோய்களுக்குத் தான் இப்பொழுது ஜனங்கள் டாக்டர்களை கூப்பிடவும் அவர்களுக்கு காட்டவும் வெட்கப்பட்டுக் கொண்டு நம்மை கூப்பிட்டு காட்டுகின்றார்கள். இனி தாசிகள் இல்லாவிட்டால் மேக வியாதி எப்படி அதிகமாக உண்டாகும். ஒரு சமயம் உண்டானாலும் அது எப்படி பரவும்?
சி.வை:- தாசிகள் இல்லாவிட்டால் மனிதர்கள் எல்லாம் பரிசுத்தவான் களாகி விடுவார்களாக்கும். அப்பவும் போகிறவன் எப்படியாவது போய்த்தான் தீருவான்.
ஆ.வே.வை:- எப்படிப் போய்த் தீருவான். மற்றொருவன் சம்சாரத் தினிடம் போனால் அவன் உதைப்பான். திருட்டுத்தனமாகத்தான் போக வேண்டும். அது சாதாரணமாய் தாசிகளிடம் நடக்கும் மாதிரிக்கு நூற்றில் ஐந்து பங்குகூட நடக்காது. அதிலும் இந்தமாதிரி நடவடிக்கைகளால் வியாதி அதிகமாய் உண்டாகிவிடாது. அவர்கள் அவசரமும் பயமும் வியாதி உண்டாவதற்கு நேரமே இருக்காது. ஆதலால் இதனால் நமக்கு பெரிய நஷ்டம் தான்.
சி.வை:- தாசிகள் எடுபட்டுப் போனாலும் குச்சுக்காரிகள் என்னும் பேரால் எத்தனையோ பேர்கள் இருப்பார்களேயொழிய அடியோடு விவசாரத் தனம் இல்லாமல் போய் விடுமென்று பயப்பட வேண்டாம்.
ஆ.வே.வை:- குச்சுக்காரிகள் இருப்பார்கள் என்றே வைத்துக் கொள்வோம். அந்த இடங்களுக்கு 4 – நம்பர் 5 – நம்பர் பேர் வழிகள் தான் போவார்கள். அவர்கள் காசு கொடுக்கவும் சக்தி அற்றவர்கள். அவர்களால் வியாதி பரவுவதற்கும் இடமிருக்காது. பெரிய மனிதர்கள், பணக்காரர்கள், உத்தியோகஸ்தாள், மரியாதைக்காரன் என்பவர்கள் போன்ற இந்த மாதிரியான ஆள்கள் கண்டிப்பாக அந்த மாதிரி இடங்களுக்குப் போக மாட்டார்கள். ஏன் என்றால் கண்டவர்கள் கேவலமாய் மதிப்பார்கள். தாசி வீடானால் தாராள மாய்ப் போவார்கள். பார்க்கின்றவர்களும் மதிப்பார்கள். அன்றியும் இப்படிப் பட்டவர்கள் போனால்தான் இவர்களுக்கும் சுலபமாய் நோய் வரும். அதை தங்கள் வீட்டில் உள்ள பெண்களுக்குப் பரப்பவும் சௌகரியமாகும். இந்த இரண்டு பேராலும் நம் இஷ்டப்படி பணம் வரும். தவிரவும் இந்த குச்சுக் காரிகள் வியாபாரத்திற்கும் கூட ஆபத்து வந்து விட்ட சங்கதி உனக்குத் தெரியாதா?
சி. வை:- அதென்ன சங்கதி.
ஆ.வே.வை:- நீ எந்த உலகத்தில் இருக்கிறாய் என்று எனக்குத் தெரிய வில்லை. விவசாரிகள் தடுப்பு மசோதா என்று ஒன்று இப்போது சட்ட சபை யில் பாசாகி இருக்கின்றது உனக்குத் தெரியாதா? அதனால் அதுவும் குறைந்து தான் போகும். அதுவும் தவிர குச்சுக்காரிகள் லைசென்ஸ் வாங்க வேண்டு மாம். நோயில்லையென்று டாக்டர் சர்டிபிகேட் கொடுக்க வேண்டுமாம்.இவ்வளவும் தப்பியல்லவா நமது வயிற்றுப் பிழைப்பை நடத்த வேண்டி யிருக்கிறது.
சி.வை:- அப்படியா சங்கதி. ஆனால் ரொம்பவும் நல்ல காரியமாச்சுது. ஒருவருக்கொருவர் இஷ்டப்பட்டு திருட்டுத் தனமாய்ப் போகிறவர்கள் எப்படியோ நடந்து கொள்ளட்டும். பணம் காசு கொடுத்து போவது என்கின்ற விவசார வியாபாரம் ஒழிந்தால் போதும். நாம் நமக்கு வரும்படி இல்லா விட்டாலும் வேறு வேலை பார்த்துக் கொள்ளுவோம்.
ஆ.வே.வை:- அந்த தர்ம ஞானமெல்லாம் வாயில் பேசிவிடலாம். உங்களுக்கு இப்பொழுது சற்று நல்ல காலம். இந்த மந்திரிகள் காலத்தில் எப்படியும் வேலை கிடைத்து விடும். இல்லாவிட்டால் மண் வெட்டி யெடுத்து மண் சுமந்தானாலும் பிழைத்துக் கொள்வீர்கள். எங்கள் கூட்டத்திற்கு இந்த மாதிரி பிழைப்பைத் தவிர வேறு பிழைப்பு என்ன இருக்கின்றது. சொல்லும் பார்ப்போம்.
சி. வை:- அதற்கு என்ன செய்யலாம். நீங்களும் மண்வெட்டி எடுக்க வேண்டியது தான். எத்தனை காலத்திற்குத்தான் மக்களை ஏமாற்றி துன்புறுத்தி வாழமுடியும்? தாசியும் வேசியும் ஒழிந்ததால்தானா நமது பிழைப்பு போயிற்றென்று சொல்லுகின்றீர். அதற்கு முன்னாலேயே போய்விட்டது.
ஆ.வே.வை:- அதற்கு முன்னாலேயே எப்படிபோய் விட்டது என்கின்றீர்.
சி.வை:- யூனியன் பஞ்சாயத்து தாலூக்கா ஜில்லா போர்டு முனிசிபா லிட்டி சட்டசபை முதலான ஸ்தானங்களுக்கு எலக்ஷன் வந்ததொன்று. அதிலும் ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்டதிலிருந்து இந்த ஸ்தானங்களில் பார்ப்பன ரல்லாதாரும் இருக்க இடம் கிடைத்து எலக்ஷன் கிராமங்களுக்குப் போக ஆரம்பமானவுடன் பணக்காரர் வீட்டு பிள்ளைகள் யெல்லாம் தாசி, வேசி நாடகம், சதுர், ஆடு கோழிச் சண்டை, கச்சேரி ஆகிய வேலைகளில் இருந்த மோகத்தை எலக்ஷனில் திருப்பி விட்டார்கள். முன் சொன்ன காரியங்க ளுக்கு செலவழித்த பணங்களையெல்லாம் எலக்ஷன்களில் செலவு செய்ய ஆரம்பித்து விட்டார்கள். ஆதலால் தாசிகள் இருந்தாலும் கூட அவர்களுக்கு முன் போல் தொழில் நடப்பதும் கஷ்ட்டம். வைத்தியர்களுக்கும் முன் போல் பணம் வருவதும் கஷ்ட்டம். ஏனென்றால் இந்த எலெக்ஷன் மூலமாக அவர் களுக்குக் கொஞ்சம் இங்கிலீஷ் நாகரீகம் பிடிபட்டு விடுகின்றது. அதனால் இங்கிலீஷ் வைத்தியத்தில் ஆசை விழுந்து விடுகின்றது. இது மாத்திரமா இன்னும் ஒரு காரணம் சொல்லுகின்றேன் கேளும்.
ஆ.வே.வை:- அது என்ன சொல்லும் பார்ப்போம்.
சி.வை:- சுயமரியாதை இயக்கம் வந்த பிறகு பெண்களை அதிகமாகப் படிக்க வைக்க ஆரம்பித்து விட்டார்கள். பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். படிப்பும் சுதந்திரமும் கிடைத்த பெண்கள் புருஷர் களை தாசி வீட்டுக்கு சுலபத்தில் அனுப்புவார்களா? தாசிகளுக்கு மேலாக சிங்காரித்துக் கொள்ளுகிறார்கள்; தாசிகளுக்கு மேலாக பேசத் தெரிந்து கொள்ளுகிறார்கள்; தாசிகளுக்கு மேலாக மற்ற காரியங்களும் செய்து கணவன்மார்களை அடக்கி ஆள ஆரம்பித்து விட்டார்கள். இவைகளினால் வாலிபர்களுக்கும் தங்கள் யெண ஜாதிகளிடம் அதிகமான அன்பு காதல் ஏற்பட்டு விடுகின்றது. தவிரவும் முன்போல் மாமி மாமன் நாத்தி அதிகாரங் களும் குடும்ப வீடுகளில் குறைந்து போய் விட்டதால் புருஷன் பெண் ஜாதிமார்கள் அடிக்கடி பேசவும் கொஞ்சவும் தாராளமாய் சௌகரியம் கிடைத்துவிட்டது. இத்தனையும் அல்லாமல் சாரதா மசோதா வேறு வந்து விட்டது. கல்யாணம் ஆனதும் பெண் எதற்கும் தயாராய் இருக்கின்றது. அதிலும் சுயமரியாதை இயக்கம் ரொம்பவும் முத்திப்போய் புருஷன் பெண் ஜாதிகள் ஒருவரையொருவர் தாங்களே தெரிந்தெடுத்துக் கொள்ளுகின்ற வழக்கம் ஏற்பட்டுவிட்டது. இப்படிப்பட்டவர்கள் வேறு புருஷனையோ வேறு பெண்ணையோ கவனிப்பது என்பது மிக்க அபூர்வமாகத்தான் இருக்கும். ஆகவே பல வழிகளிலும் இந்த மாதிரி பிழைப்புக்காரர்களுக்கு இனி ஆபத்து தான். அதற்கு யார் என்ன செய்வார்கள். இத்தனை பேர்களுக்கு நல்ல காலம் வந்தது போல் நமக்கும் வரும். இதைப் பற்றி ஏன் கவலைப் படுகிறீர்கள்.
ஆ.வே.வை:- நீ சொல்வதைப் பார்த்தால் இனி தாசி வேசிகளிருந் தாலும் பிரயோஜனப்படாது என்றுதான் எனக்குத் தெரிகின்றது. ஏனென்றால் காலமோ கலிகாலம். ஆளுக்காள் தலைவிரித்து ஆடத் துடங்கி விட்டார்கள். கட்டுப்பாடெல்லாம் போய்விட்டது, இப்படி யெல்லாம் நடக்குமென்று வெகு நாளைக்கு முன்னமேயே பரமசிவன் பார்வதிக்குச் சொல்லி பார்வதி நந்திக்குச் சொல்லி நந்தி நாரதருக்குச் சொல்லி நாரதர் ரிஷிக்குச் சொல்லி ரிஷி முனிவர்களுக்குச் சொல்லி முனிவர்கள் பெரியோர்களுக்குச் சொல்லி பெரியவர்கள் நமக்குச் சொல்லி இருக்கிறார்கள்.
சி.வை:- நல்ல காரியமாச்சுது. பின்னையேன் அழுகிறீர். பகவான் முதல் பெரியோர்கள் வரை சொன்ன வாக்கு தவருமா? முதலில் பகவான் தலையில் நெருப்பை வாரிக் கொட்டு என்றீர். இப்போது பகவான் வாக்கு என்கிறீரே. என்ன சங்கதி.
ஆ.வே.வை:- என்னமோ சொன்னேன். உண்மை பேச வைத்தது. நம்மை கேழ்க்க வைத்தது. நான் போய் வருகிறேன்.
சி. வை:- நல்ல காரியம்.
குடி அரசு – உரையாடல் – 02.03.1930