சென்னையில் சுயமரியாதைத் திருமணம்
நான் மணமக்களை ஆசீர்வதிக்க வேண்டுமென்று விரும்பு கின்றார்கள். ஆசீர்வாதம் செய்யும் வழக்கம் என்ன என்பதைப் பற்றி யோசித் ததில் இப்பொழுது வழக்கத்தில் ஆசீர்வாதம் செய்கின்ற மாதிரியானது, சிறிதும் பொருளற்றது என்பதோடு, நம்மிடம் பிச்சை வாங்கி உண்பவர்கள் தங்கள் வயிறு வளர்ப்பதற்காகச் செய்யும் காரியமாக இருக்கிறபடியால், இம்முறையில் ஆசீர்வாதம் செய்வது என்பது எனக்கு இஷ்டமில்லாத காரியமாகும். ஏனெனில் ஆசீர்வாதம் செய்யும்படி விரும்புகின்றவர்களும் எதிர்பார்க்கின்றவர்களும் இவ்வாசீர்வாதத்தால் உண்மையான பலனை எதிர்பார்க் கின்றார்கள். ஆனால் ஆசீர்வாதம் செய்கின்றவர் ஆசீர்வாதம் செய்யப் படுகின்றவர்களைப் பற்றி ஒரு கவலையுமில்லாமல் ஆசீர்வாதம் செய்வது என்பதை ஒரு பெருமையாக நினைத்து, தமக்கும் மற்றவர் களுக்கும் பொருள் விளங்காத ஏதோ ஒன்றின் மீது பழியைப் போட்டு அது உன்னைக் காப்பாற்றட்டும் இது உங்களைக் காப்பாற்றட்டும் என்று கை காட்டிவிட்டுப் போவதில் யாதொரு பலனும் இல்லை. அதுவும் இதுவும் மணமக்களை காப்பாற்ற ஆசீர்வாதம் செய்பவருடைய தயவு வேண்டிய தில்லை. அப்படிக் காப்பாற்றும் ஒரு வஸ்துவோ, அல்லது ஒரு சக்தியோ வேறு ஒருவர் காப்பவருக்கும் காக்கப்படுபவருக்கும் இடையில் தரகரா யிருந்து வக்காலத்துப் பேச வேண்டியதுமில்லை. அன்றியும் அப்படிக்காக்க வல்லமையுள்ள பொருளோ சக்தியோ மத்தியில் வக்கீலையும் தரகரையும் எதிர்பார்க்காது. ஆதலால் அந்த முறை அசட்டு முறை என்பதுதான் எனது அபிப்பிராயம். ஆனால் இப்படி ஒரு வழக்கம் ஏன் இருக்கிறது? என்று பார்த்தால் ஆசீர்வாதம் பெறுவது என்பது ஆதரவு பெறுவது என்பதற் காகத்தான் ஏற்பட்டதாக இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. யாதானு மொருவர் ஒரு கனவானையோ மணமக்களையோ அல்லது ஏதாவது ஒரு ஸ்தாபனத்தையோ ஆசீர்வதிப்பது, வாழ்த்துவது என்பதானால், அவ்வா சீர்வதிப்பவர் மீது பொறுப்பு விழுகக் கூடியதாய்த்தானிருக்கும். எப்படி யெனில் வாழ்த்தினவர் வாழ்த்தப்பட்டவர்களின் வாழ்வுக்குப் பொறுப்பாளி யாவார். அப்படிக் கில்லாமல் வாழ்த்துவது ஏமாற்றுவதுதான் ஆகும். அதுபற்றியே அறிஞர்களா யுள்ளவர்கள் பெரியோர்களாகவும், செல்வாக்கும் பொது ஜனமரியாதையும், பெற்றவர்களையே வாழ்த்துதலுக்கு விரும்பு கின்றதும், வழக்கமாயிருக்கின்றது. ஆனால் இங்கு இது சமயம் என்னை விரும்பியது எது பற்றி என்பது எனக்கு விளங்கவில்லை. ஒரு சமயம் எனது தலை நரையைப் பார்த்து இங்குள்ளவர்களில் நானே பெருங்கிழவனென்று எண்ணி அழைப்பதாக நினைக்கின்றேன். இம்மாதிரி வாழ்த்துதலுக்கும் வயதுக்கும் சம்பந்தமில்லை. இந்த மணமக்களை வாழ்த்த கிரமமாக நான் எதிர்பார்க்க வேண்டியவர்கள் இங்கு விஜயம் செய்திருக்கும் உயர்திரு. ராஜா சர். அண்ணாமலையாரின் குமாரர் குமாரராஜா மு.அ.முத்தையா அவர்களே ஆவார். மணமக்கள் அவர்களின் வாழ்த்தைப் பெற்றுவிட்டால் அப்புறம் மணமக்களின் வாழ்வுப் பெருக்கம் குமாரராஜாவையும், குமாராஜா அவர்களைப் பின்பற்றும் மற்றவர்களுடைய பொறுப்புமாகும். ஆனதால் எனக்கு இட்டகட்டளையை மீறாமல் உங்கள் எல்லோருடைய ஆதரவையும் எதிர்பார்த்து நான் இம்மணமக்களின் வாழ்வு இன்பமாகவும், சுதந்தரமாகவும் மற்றும் பொது ஜனங்களுக்கு உதவுவதாகவும் கழிய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
நிற்க, இந்தத் திருமணத்தைப் பற்றியும், இரண்டொரு வார்த்தைகள் சொல்ல வேண்டுமென்பதாகச் சிலர் ஆசைப்படுகின்றார்கள். நான் சுருக்கமாகச் சொல்வதென்ன வென்றால், திருமணங்களை அதாவது விவாகங்களை நமது மக்களில் அநேகர் பொறுப்பற்ற முறையில் விவாகம் என்பது தெய்வீகமானது என்கிறார்கள். தெய்வீகம் என்பது குழந்தைகளைப் பெறுவதும் மாமனார் மாமியார் முதலியவர்களுக்கடங்கி நடப்பதும், புருஷனையே தெய்வமாகக் கொண்டு அவர் அடித்தாலும் உதைத்தாலும் மற்றும் எவ்வித அக்கிரமம் செய்தாலும் அவ்வளவையும் பொறுத்துக் கொண்டு அவருக்குக் கீழ்படிந்து நடக்க வேண்டியது என்றும், மற்றும் இதுமாதிரி எவ்வளவோ அதாவது மனிதத்தன்மை சுதந்திரம் சுயமரியாதை ஆகியவை ஒன்றும் இல்லாமல் அடிமைப் போல் இருக்க வேண்டும் என்பதாக சொல்லப்படுகின்றன. இந்த லட்சணமுள்ள மணம் தெய்வீக மணமானால் கண்டிப்பாய் அதை ஒழித்துச் சுதந்தரமும் சுயமரியாதையும் உள்ள மனுஷீக மணமே நடைபெறவேண்டும்.
எனவே, தெய்வீக மணமென்பது அடிமைமணம்; சந்தையில் காம நுகர்ச்சிக்கு வாங்கிய நுகரும் யந்திரமணம் அல்லது வைப்பாட்டி வாழ்க்கை என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது. புருஷனுக்கு பெண் அடங்கித்தான் நடக்க வேண்டுமென்றால் பெண்ணுக்குப் புருஷன் அடங்கித் தான் நடக்கவேண்டும் என்பதானால் மாத்திரம்தான் அந்த நிபந்தனையை ஒப்புக்கொள்ளலாம். பெண் மாமியார், மாமனாருக்குக் கீழ்ப்பட்டு அவர் களுக்கு ஏவல் செய்துதானாக வேண்டுமென்றால் புருஷன் தனது மாமியார் மாமனாருக்கு ஏவல் செய்யத் தயாராயிருந்தால்தான் அந்த நிபந்தனையை ஒப்புக் கொள்ள முடியும். அப்படிக்கில்லாமல் வீட்டு வேலைக்கு ஒரு அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்கினது போல இருக்க கல்யாணம் செய்வதும், அந்த மாதிரி கல்யாணத்தில் தெய்வீக சக்தியும் தன்மையும் இருக்கின்றது என்பதை இனி அரைவினாடி கூட நமது நாட்டில் செல்லும் படியாக விடாமல் செய்துவிடவேண்டும். அதுதான் சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய வேலைகளில் ஒன்றாகும். மற்றபடி நாட்டுக்கோட்டை நகரப் பிரமுகர்களுக்கு இவ்வுணர்ச்சி தோன்றியிருப்பதும் அதிமுக்கியமான நாட்டுக்கோட்டை நகரத் தலைவர்கள் இங்கு விஜயம் செய்திருப்பதும் எனக்கு அளவிலாத மகிழ்ச்சியை விளைவிப்பதோடு இந்நாட்டின் விடுதலைக்கும் சுயமரியாதை வளர்ச்சிக்கும் ஒரு அறிகுறியாகும்.
குறிப்பு : 31.03.1929 இல் சென்னையில் நடைபெற்ற சென்னை சட்டசபை துணைத் தலைவர் டாக்டர். எஸ். முத்துலட்சுமி அம்மாள் அவர்களின் வளர்ப்பு மகள் திருமணத்தில் வாழ்த்துரை .
குடி அரசு – வாழ்த்துரை – 07.04.1929