மதுரையில் பார்ப்பனரல்லாதார் மகாநாடு

நாளது டிசம்பர் µ 25, 26 – ந் தேதி சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மதுரை மாநகரில் பார்ப்பனரல்லாத மக்களின் மகாநாடு கூட்டப்போகும் விபரம் சென்ற வாரத்திதழிலேயே தெரிவித்திருக்கிறோம். இம்மகாநாடு பார்ப்பனரல்லாதார் களுக்கு மிகவும் முக்கிய மகாநாடாகும். பெரும்பாலும் நமது மக்களின் பிற்கால நிலைமை இதன் மூலமாகவே இச்சமயம் நிர்ணய மாக வேண்டியிருக்கிறது. பார்ப்பனரல்லாதாரிடம் கவலை உள்ளவர்கள் என்றும் பார்ப்பனரல்லாதாருக்கு உழைப்பவர்கள் என்றும் பறையடித்துக் கொள்ளுபவர்கள் அவசியம் தவறாமல் இம்மகாநாட்டிற்கு வந்து கலந்து தங்களது அபிப்பிராயத்தையும் சொல்லி ஒப்பச் செய்து மேலால் நடந்து கொள்ள வேண்டிய விபரத்திற்கு ஒரு திட்டம் ஏற்பாடு செய்ய உதவி புரிய வேண்டும். மகாநாடு எவ்வித அபிப்பிராய பேதமுள்ள பார்ப்பனரல்லா தாருக்கும் பொதுவானதென்றே சொல்லுவோம். பொறாமையாலோ துவேஷ புத்தியினாலோ மகாநாட்டிற்கு வராமலிருந்துவிட்டு பின்னால் “அது தப்பு இது தப்பு; இது யாரோ சிலர் கூடிக் கொண்டு நடத்திய மகாநாடு; ஆதலால் என்னைக் கட்டுப்படுத்தாது; இதில் சேராதவர்கள் அனேகர் இருக்கிறார்கள்” என்று நோணா வட்டம் பேசுவதில் ஒரு பயனும் இராததோடு இவ்வித செய்கை சமூகத் துரோகம் சமயோசித வயிற்றுப் பிழைப்பேயாகும். “தவிர மகாநாட்டின் தீர்மானம் என்னவானாலும் ஏற்றுக் கொள்ளத் தயாராயிருக் கிறோம். ஆதலால் நாம் போக வேண்டிய அவசியமில்லை” என்பதாக சோம்பேறி வேதாந்தம் பேசாமல் வேறு விதமான தவிர்க்க முடியாத சந்தர்ப் பம் ஏற்பட்டாலன்றி மற்றபடி கூடிய வரையில் எல்லா முக்கிய கனவான் களுமே ஆஜராக வேண்டு மென்றே வேண்டுகிறோம். நமது மக்கள் தங்கள் வாழ் நாள்களில் எவ்வளவோ பணமும் எவ்வளவோ காலமும் வீணாய் விரையம் செய்து வருகிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. அப்படி யிருக்க இவ்வுத்தமமானதும் சுயமதிப்புள்ள ஒவ்வொரு மனிதனின் கடமை யானதுமான இந்த முக்கியமான கூட்டத்திற்குப் போவதை ஒரு செல வாகவோ காலப் போக்காகவோ கருதக் கூடாது என்றும் வேண்டிக் கொள் ளுகிறோம். ஆனால் சிலர் அதாவது பார்ப்பனர் புன்சிரிப்புக்கு ஆசைப் பட்டவர்களும் பார்ப்பனரின் மனக்கோணலுக்கு பயப்பட்டவர்களும் தனக் கென ஒரு கொள்கையில்லாமல் வலுத்த கையோடு சேர்ந்துக் கொண்டு ஞானோபதேசம் செய்து தங்களது மனிதத் தன்மையை காப்பாற்றிப் பிழைப்பவர்களும் சுலபத்தில் வர தைரியம் கொள்ளமாட்டார்கள் என்பதை யும் நாம் நன்றாய் உணர்வோம். அப்பேர்ப்பட்டவர்களைப் பற்றி நாம் குற்றம் கூறாமல் உண்மையிலேயே பரிதாபப்படுகிறோமானாலும் அவர் களால் நேரிடும் கெடுதியை இனிச் சகிக்க முடியாதென்பதையும் வணக் கத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம். நிற்க, இம் மகாநாடு பார்ப்பனர் களின் கான்பரன்ஸ் மகாநாடு களைப் போல் 12 ஜில்லா விலுள்ள 2 1/2 கோடி மக்களுக்கும் பிரதிநிதித் துவம் பொருந்திய அரசியல் சபை என்று வேஷம் போட்டுக் கொண்டு தங்கள் சொற்படி ஆடும் சோனகிரிகளான 100 அல்லது 150 பெயர்களை தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் என்று வைத்துக் கொண்டு தங்கள் அபிப்பிராயத் துக்கு மாறுபட்டவர்கள் உள்ளே வரமுடியாதபடி தந்திரங்கள் செய்து மீறி யாராவது வந்து விட்டால் அவர்களை அடித்து துரத்தி தங்கள் இஷ்டம் போல் தங்களுக்கு அநுகூலமானபடி தீர்மானங் களை நிறைவேற்றிக் கொள்ளும் பார்ப்பன சூழ்ச்சி மகாநாடுகள் போல் அல்லாமல், ஆயிரக்கணக்கான உண்மை சுதந்திரப் பிரதிநிதிகள் வந்து கூட வேண்டுமென்பதாகவும் வேண்டிக் கொள்ளுகிறோம். ராஜாக்கள், ஜமீன் தாரர்கள், மிராஸ்தார்கள், குடியானவர்கள், தொழிலாளர்கள், கூலிக் காரர்கள், வியாபாரிகள், உத்தியோகஸ்தர்கள், பெண் மக்கள் ஆகிய எல்லா வகை யாரும் தவறாமல் விஜயம் செய்து மகாநாட்டின் கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டியது தமிழ் மக்களின் கடமையாகும். ஒவ்வொரு ஜில்லா தாலூக்கா கிராமங்களிலுமுள்ள பார்ப்பனரல்லாதார் உணர்ச்சியுள்ள ஒவ்வொரு குலாபிமானிகளும் தங்களால் கூடுமான வரை பிரதிநிதிகளைச் சேர்த்து அழைத்துக் கொண்டு வரவேண்டுமென்றும் தெரியப்படுத்திக் கொள்ளு கிறோம். வெறும் உத்தியோகமும், பட்டமும், முனிசிபல், தாலுக்கா, ஜில்லா போர்டு மெம்பர் பதவியும் பெறும் வரை தன்னை பார்ப்பனரல்லாதார் உணர்ச்சிக்காரர் என்று சொல்லிக்கொண்டு தங்கள் காரியம் ஆனவுடனோ அல்லது இனி இவர்களால் நமக்கு ஆக வேண்டியதொன்றுமில்லை, இனி மேல் இம்மாதிரி காரியங்களுக்கு பார்ப்பனர்களின் தயவுதான் வேண்டும் என்பதாக நினைத்து வரவில்லை என்று அன்னியர் மனசில் நினைக்கவோ அல்லது வெளியில் சொல்லவோ இடம் வைக்காமல் இந்நிலையில் உள்ள கனவான்களும் அவசியம் விஜயம் செய்ய வேண்டுமாய் வேண்டுகிறோம். இவ்வளவு தூரம் நாம் ஏன் எழுதுகிறோ மென்றால் கோடிக்கணக்கான நமது சமூகத்தின் பேரால் உள்ள ஸ்தாபனமும் மகாநாடும் நமது எதிரிகளாலும் அவர்களது கூலிகளாலும் குற்றம் சொல்லுவ தற்கிடமில்லாமலும் இவ்வளவு நாள் இருந்தது போல் பொது மக்கள் பாரா முகமாய் இல்லாமல் அதனிடம் பக்தி செலுத்தத் தக்க தன்மையுடையதாகவும் தக்க பயனளிக்கக் கூடிய தாகவும் இருக்க வேண்டுமென்கிற ஒரே ஆசையேயல்லாமல் வேறல்ல. தென்னாட்டிலுள்ள சுயமரியாதைச் சங்கத்தைச் சேர்ந்த அங்கத்தினர்களும் பிரமுகர்களும் அவசியம் தக்க பிரதிநிதிகளோடு வர வேண்டுமென்றும் பிரத்தி யோகமாய் வேண்டுகிறோம்.

குடி அரசு – தலையங்கம் – 19.12.1926

You may also like...

Leave a Reply