கோயமுத்தூர் முனிசிபால்டியில் சுயராஜ்ஜியக்கட்சியும் தீண்டாமையும்

கோயமுத்தூர் முனிசிபல் மீட்டிங்கு 18-1-26ந் தேதி நடந்தது. அன்று ஸ்ரீமான் காலஞ்சென்ற சுல்தான் சாய்ப்பு அவர்களுக்கு அநுதாபத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றினார்கள். இரண்டாவது ஒரு முக்கியமான தீர்மானம் ஆலோசனைக்கு வந்தது. பாப்பானாயக்கன்பாளையத்தில் இரண்டு இரவு பாடசாலை யிருந்து வருகிறது. ஒன்று “ஜாதி இந்துக்கள்” இரவு பாட சாலை, இன்னொன்று “பஞ்சமர்” இரவு பாட சாலை. இரண்டு பாடசாலையும் முனிசி பால்ட்டியால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. ஜாதி இந்துக்கள் இரவு பாட சாலைக்கு அதிக வாடகை வேண்டுமென்றும் இன்னொரு உதவி உபாத்தி யாயர் வேண்டு மென்றும், பஞ்சமர் பாடசாலைக்கு 5 ரூபாய் வாடகை வேண்டுமென்றும், அப்பாடசாலைக் கட்டிடக்காரர்கள், விண்ணப்பம் செய்து கொண்டிருக்கிறார்கள். இவ்விஷயம் மீட்டிங்கில் ஆலோசனைக்கு வந்த போது ஸ்ரீமான் வி. அருனாசலம் செட்டியாரவர்கள் பஞ்சமர் பாட சாலையில் 8 பிள்ளைகள் தானிருப்பதால் அதற்கு தனிப் பாடசாலை வேண்டியதில்லை யென்றும் ஜாதி இந்து பாடசாலையில் இந்த 8 பிள்ளை களைச் சேர்த்துக் கொண்டு ஒரு உதவி உபாத்தியாயரும், 15 ருபாய் வாடகை யும் வேணுமானால் கொடுத்து விடலாமென்றும் சொன்னார். சுயராஜ்யக் கட்சியைச் சேர்ந்த ஸ்ரீமான் சி. எம்.ராமச்சந்திரஞ்செட்டியாரவர்கள், பஞ்சமப் பிள்ளைகளை இந்துக்கள் பாடசாலையில் சேர்க்கக் கூடாதென்று ஆnக்ஷ பித்து விட்டார். காரணம் கிராமத்தில் தகறார் உண்டாகும் என்று சொல்லி விட்டார்.

இந்த ஸ்ரீமான் ராமச்சந்திரஞ்செட்டியார் தான், கோயமுத்தூர் முனிசி பால்டியில் காங்கிரஸ்சுயராஜ்யக்கட்சி கவுன்சிலராகத் தேர்ந்தெடுத்து மாலை சூட்டியவர். இன்னும் இவர் டிஸ்ரிக்டு எடுகேஷனல் கவுன்சில் பிரசிடெண்டு. இத்தகைய உத்தமர் பிராமணர்கள் புன்சிரிப்புக்கு மயங்கி காலமறியாமற் போனதுதான் விந்தை. கிராமப்பள்ளிக்கூடம், அதுவும் முனிசிபல் பொதுப் பள்ளிக்கூடம் இதில் பஞ்சம பிள்ளைகளைச் சேர்த்துக்கொள்ள ஆnக்ஷபிப் பாரானால் இவர் எப்படி காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பவராவார். இவர் பிராமணர் பிரசாரத்தால் ஸ்தானம் பெற்றதற்காகத் தீண்டாமை விலக்குக்கு இவ்வளவு தடையாய் இருக்கலாமா? அநேக இடங்களில் இவர் ஜாதிபேதம் இல்லையென்றும், தீண்டாமை இல்லையென்றும் பேசியிருக்கிறார். இப்படிப் பட்டவர், மேளவாத்தியத்துடன் பூமாலையிட்டு பிராமணர்கள் ஊர்கோலம் செய்து வைத்ததற்காக தன் மனச்சாக்ஷிக்கு மாராய் தீண்டாமை விஷயத்தில் இவ்வளவு தலையிடுவாறானால், எவ்வாறு நம் நாட்டில் ஏழை பஞ்சம மக்களுக்கு சமத்துவமும், கல்வியும் கொடுக்கமுடியும். கிராம இரவு பாட சாலை அக்ரஹாரமில்லாத இடம். இந்த பாடசாலையில் பஞ்சம பிள்ளைகள் சேர்க்கக் கூடாதென்று ஒரு தனி இரவு பாடசாலை வைப்பானேன்? கல்வி யிலாகாவுக்கு இத்தகைய மெம்பர்களிருப்பதால் ஏழை பஞ்சமர்கள் பாடு திண்டாட்டமாகி விடுவதல்லாமல் கசாப்புக்கடைகாரருக்கு ஜீவகாருண்ய சங்கத்துப் பிரசிடெண்டு வேலை கொடுத்தது போலாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்

ஓர் நிருபர்

குடி அரசு – கட்டுரை – 24.01.1926

You may also like...

Leave a Reply