தென்னாட்டுத் தலைவர்களின் சுற்றுப் பிரயாணத்தின் பெருமை
தென்னாட்டுத் தலைவர்கள் என்று சொல்லப்படுவோர்கள் வோட்டு வேட்டையென்னும் சுற்றுப் பிரயாணங்களில் ஆங்காங்கு நடக்கும் திரு விளையாடல்களை பிராமணப் பத்திரிகைகள் மறைத்து விட்டு தங்களுக்குப் பெருமை உண்டாகும்படியாக இல்லாத சங்கதிகளையும், நடக்காத கௌரவங் களையும் எழுதி பாமர ஜனங்களை ஏமாற்றி வருகிறது. பிராமணரல்லாத வாரப் பத்திரிகைகள் சிலதும் உண்மைகளை மறைத்துவிடுகிறது. தலைவர் களின் சுற்றுப் பிரயாணங்களின் யோக்கியதையை அறியவேண்டுமானால் “திராவிடன்” பத்திரிகையை வாங்கிப் படித்தால் உண்மை விளங்கும். சுய ராஜ்யக் கட்சியை எதிர்ப்பவர்களுக்கும் பிராமணரல்லாதார்களுக்காக பாடு படும் பிராமணரல்லாதார் கட்சிக்கும் பிராமணர்களின் யோக்கியதையை தைரியமாய் எடுத்து சொல்லுகிறவர்களுக்கும் யோக்கியதையும் மதிப்பும் இருக்கிறதா என்பதையும் நன்றாய் அறியலாம். தூத்துக்குடியில் நடந்த விஷயங்களும் திருச்சியில் நடந்த விஷயங்களும் தலைவர்களைக் கேட்ட கேள்விகளும் அதற்குத் தலைவர்கள் சொன்ன பதில்களையும் பிராமணப் பத்திரிகைகள் பிரசுரிக்காமல் விட்டுவிட்டிருக்கிறது. ஆகையால் அப்பத்திரி கைகளின் பொய் ஆதாரங்களையும் பொய்த் தலையங்கங்களையும் கண்டு ஏமாந்து போகாமல் இருக்கும்படியாய்க் கேட்டுக் கொள்ளுகிறோம்.
குடி அரசு – செய்தி விளக்கம் – 18.04.1926