இந்தியாவின் ‘ஏக தலைவ’ரான ஸ்ரீமான் எஸ். சீனிவாசய்யங்காரின் முடிவான லக்ஷியம்
எல்லா இந்திய காங்கிரஸ் தலைவரும், எல்லா இந்திய சுயராஜ்யக் கட்சித் தலைவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், தென்னாட் டுப் பார்ப்பனத் தலைவரும், மாஜி அட்வொகேட் ஜெனரலும் ஆகிய ‘ஏக தலைவரான’ ஸ்ரீமான் எஸ்.சீனிவாசய்யங்காருக்கு இன்னும் மூன்று லக்ஷியம் தான் இருக்கிறதாம்.
அதாவது:-
1. ஸ்ரீமான்கள் ஏ.ராமசாமி முதலியாரவர்களையும், பனகால் ராஜா
வையும் சென்னை சட்டசபையில் ஸ்தானம் பெறாதபடி செய்து
விடவேண்டும்.
2. தான் இந்தியா சட்டசபைக்குத் தெரிந்தெடுக்கப்பட வேண்டும்.
3. ஸ்ரீமான்கள் ஈ.வெ.ராமசாமி நாயக்கரையும், ஆரியாவையும்
ஜெயிலுக்கு அனுப்பிவிட வேண்டும்.
ஆகிய இம்மூன்று லக்ஷியங்களும் நிறைவேறிவிட்டால் பிறகு, தான் ராஜீய வாழ்விலிருந்தே விலகி விடுவாராம். ஏனெனில் ஒரு மனித னுக்குச் செல்வம், பெண்,கீர்த்தி ஆகிய மூன்று சாதனங்கள்தான் லக்ஷியமான தாகுமாம். அவற்றில் முதல் இரண்டைப்பற்றி தான் திருப்தியடைந்தாய் விட்ட தாம். மூன்றா வதான கீர்த்திக்கு முட்டுக்கட்டையாக மேற்சொன்னபடி சென்னை சட்ட சபையில் ஸ்ரீமான்கள் ஏ.ராமசாமிமுதலியார், பனகால் அரசர் ஆகியவர்களும் இந்தியா சட்டசபைக்குப் போகாமல் இருக்கும்படி தடை செய்வதும், ஸ்ரீமான்கள் நாயக்கர், ஆரியா ஆகியவர்கள் தன்னைத் தூற்று வதும் ஆகிய காரியங்கள்தான் தடங்கலாயிருக்கிறதாம். அய்யோ பாவம்! இம்மூன்று காரியங்களும் அய்யங்கார் இஷ்டம் போல் நிறைவேறினா லாவது அய்யங்காரின் கடைசி லக்ஷியம் நிறைவேறுமா என்பது நமக்கு சந்தேகமாகவே இருக்கிறது.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 03.10.1926