ஆசை வெட்கமறியாது சுயராஜ்ஜியக் கட்சியாரின் வெளியேற்றம்
“சுவற்றுக் கீரையை வழித்துப் போடடி சுரணைக் கெட்ட வெள் ளாட்டி” என்று ஒரு பழமொழி உண்டு. அதாவது ஒரு ஸ்திரீ கீரை கடைந்து தன் கணவனுக்குச் சாதம் போட்டு கீரை பரிமாரினாள். கணவன் மனதில் எதையோ வைத்துக்கொண்டு கோபம் வந்து விட்டதுபோல பாசாங்கு செய்து கீரை பக்குவம் நன்றாக இல்லையில்லை என்று கீரையை வாரி சுவற்றின் மீது இறைத்துவிட்டு எழுந்து போய் படுத்துக் கொண்டான். ஸ்திரீயும் அந்த இலையை இழுத்து வைத்து விட்டு மீதி இருந்ததைப் போட்டு சாப்பிட்டு விட்டுப் படுத்துக் கொண்டாள். சிறிது நேரத்திற்குப் பிறகு கணவனுக்குப் பசி ஏற்பட்டது. மறுபடியும் வந்து உட்கார்ந்து கொண்டு சாப்பாடு போடச் சொன் னான். அந்த மனைவி முன் இழுத்து வைத்திருந்த இலையையே பக்கத்தில் இழுத்து விட்டுவிட்டு நின்று கொண்டாள். இலையில் வெறும் சாதம் மாத்திரம் தான் இருந்தது. கணவன், மனைவியைப் பார்த்து “இந்த சாதத்திற்கு ஏதாவது கரி வைத்துத் தொலை, தொட்டு சாப்பிட” என்று சொன்னான். அதற்கு மனைவி கரியில்லை என்று சொன்னாள். பழய கீரையாவது வை என்றான். அதற்கவள் “தாங்கள் கீரை நன்றாகயில்லை என்று வேண்டாமெனச் சொன்ன தால் நான் எல்லாம் சாப்பிட்டுவிட்டேன்” என்று சொன்னாள். கணவன் மிகுந்த கோபத்துடன் “அதோ தெரிகிறதே அந்த சுவற்றுக் கீரையை வழித்துப்போடடி சுரணைக் கெட்ட வெள்ளாட்டி” என்று சொன்னான். மனைவி “ நானா, நீங்களா, சுரணைக் கெட்டவர்” என்று சொல்லி சுவற்றிலிருந்ததை சுரண்டிப் போட்டாள். கணவன் பேசாமல் சாப்பிட்டுவிட்டுப் போனான் என்பதாக ஒரு கதை உண்டு. அதைப்போல் இருக்கிறார்கள், சர்க்காரோடு கோபித்துக் கொண்டு சட்டசபையை விட்டு வெளிவந்த சிப்பாய்கள்.
நாளது மாதம் 17- ந் தேதி கல்கத்தா சட்டசபைக் கூட்டமொன்று நடக் கிறதாம். அதற்கு ‘வெளியேறிய’ சுயராஜ்யக் கட்சியார் மறுபடியும் போகப் போகிறார்களாம். இதற்குக் காரணம் என்னவென்றால் சட்டசபையில் அவச ரச் சட்டமொன்று வரப்போகிறதாம். அதை இவர்கள் போய் எதிர்க்கப் போகி றார்களாம். சர்க்காரார் அவசரச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்று நினைத்தால் இவர்கள் தடுப்பினால் நின்றுவிடுமா? நின்றுவிடுமென்று நினைப் பார்களேயாகில் சட்டசபையிடம் இவர்களுக்கு நம்பிக்கையிருப்பதாக அருத்தமாகவில்லையா? அப்படிப்பட்டவர்கள் ஏன் வெளியில் வந்ததாகச் சொல்லிக் கொள்ள வேண்டும்? இதற்காக தலைவர் பண்டித நேரு ஏன் ‘வீர மொழி’ பேச வேண்டும். ஒரு தடவை சட்டசபைப் பிரயாணச் செலவைத் தியாகம் செய்ய சக்தியில்லாத சுயராஜ்யக் கட்சி ‘வெளியேறி விட்டோம்’ என்று சொல்லுவது நகைப்பிற்கு இடமாயிருப்பதை சிறிதும் அறியவில்லை. “ஆசை வெட்கமறியாது” என்பதற்கு நமது சுயராஜ்யக் கட்சியே சரியான உதாரணம். ஆனாலும் இவைகளெல்லாம் நமது ஓட்டர்கள் புத்திக்கு சுலபத்தில் படப் போவதில்லை. என்ன செய்யலாம்? நல்லகாலம் வரும்போது தானாகவே புத்திவரும்.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 16.05.1926