திரு.ஆர்.கே. ஷண்முகம் செட்டியாரும் திரு. ஸ்ரீனிவாசய்யங்காரும்
திரு.ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் அவர்கள் இம்மாதம் 2-ந் தேதி இந்தியர் பிரதிநிதியாக பொது மக்கள் சார்பாய் தெரிந்தெடுக்கப்பட்டு சர்க் காராலும் ஒப்புக்கொள்ளப்பட்டு ஜினிவா மகாநாட்டுக்குச் செல்கின்றார்.
திரு. ஸ்ரீனிவாசய்யங்கார் வெயில் காலத்தில் சுகம் அனுபவிக்க உடல் நலம் பேணி இங்கிலாந்துக்குச் செல்கின்றார்.
ஆனால் தனது சுகவாசத்திற்குச் செல்லும் திரு, ஸ்ரீனிவாசய்யங்காருக்குத் தேசீயத்தின் பேரால் வழியனுப்பு உபசாரங்கள் பொதுமக்கள் பேரால் சென்னையில் செய்யப்பட்டதே ஒழிய திரு. ஷண்முகம் செட்டியா ருக்கு ஒரு உபசாரமும் நடத்தப்படவில்லை. இதன் காரணம் என்ன என்ப தைப் பற்றி நாம் அதிகம் சொல்ல வேண்டியதில்லை.
திரு. செட்டியார் பார்ப்பனரல்லாதார், திரு. அய்யங்கார் பார்ப்பனர் என்பதைத் தவிர வேறு காரணம் இல்லை. இவ்வய்யங்கார் வழியனுப்பு உபசார திருவிழாவுக்கு போட்டி போட்டு செலவு செய்து தலைமை வகித்த திரு. வரதராஜுலு அவர்கள் திரு. அய்யங்காரைப் பற்றி பாடியிருக்கும் கவியை சற்று கவனிப்போம்.
“திரு. அய்யங்காரை முப்பது கோடி மக்கள் பொது சொத்து என்று கருதுகிறார்கள்.
சுயராஜ்யப் போரில் அய்யங்கார் தளகர்த்தராய் இருக்கிறார். தேக சௌக்கியத்தை முன்னிட்டு இங்கிலாந்துக்கு போவதாக அய்யங்கார் சொன்னாலும் சமயம் நேர்ந்தால் தேச விடுதலைப் போரின் லக்ஷியங்களை எடுத்துச் சொல்ல பின்வாங்கமாட்டார். இந்த நாட்டில் ஜாதிச் சண்டை, சமூக வேற்றுமை, வகுப்புப் பிணக்கு உண்டுமானால் அதை மத்தியஸ்தம் செய்ய பிரிட்டிஷாருக்கு உரிமை இல்லை யென்பதை திரு. அய்யங்கார் பிரிட்டி ஷாருக்கு தெரிவிக்க வேண்டும்.” (திரு அய்யங்காருக்குத்தான் உண்டு போலும். ப-ர்)
என்று பேசியிருக்கின்றார். பின்னர் திரு. வரதராஜுலுவின் சகாக் களாகிய திரு. ஷாபி முகம்மது சாயபும், திரு குழந்தையும், திரு சத்திய மூர்த்தியும், திரு வரதராஜுலுவை விட ஒருபடி குறைவாகவே அய்யங் காரைப் பற்றிக் கவிபாடி உற்சவத்தை ஒருவாறு முடித் திருக்கின்றார்கள்.
திரு. வரதராஜுலுவைப் பற்றி திரு. அய்யங்காரும் திரு. அய்யங் காரைப்பற்றி திரு. வரதராஜுலுவும் இதற்கு முன் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்ட வார்த்தைகள் “நாய் கூட குறுக்கே போகமுடியாது” என்று சொல்லும் பழமொழிபோல் அவ்வளவு கேவலமாக இருந்தது யாவருக்கும் தெரிந்த விஷயம்.
திரு. வரதராஜுலுவை காங்கிரசிலிருந்து விலக்கினால்தான் காங்கிரசு பரிசுத்தப்படும் என்று அய்யங்கார் சொன்னதும், மைலாப்பூர் அய்யங்காரை காங்கிரசை விட்டு ஒழித்து காங்கிரசைக் கைப்பற்றினால்தான் அது பார்ப்பனரல்லாதாருக்கு ஆபத்தில்லாமல் இருக்கும் என்றும், பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதாருக்கு கேட்டை விளைவித்து பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்த காங்கிரசை ஆயுதமாக உபயோகித்துக் கொண்டிருக்கிறார்
களாதலால் அவர்களை காங்கிரசை விட்டு ஒழிக்க வேண்டும் என்றும் திரு. வரதராஜுலு சொன்னதும் போய், இவர்கள் இப்போது ஒருவருக்கொருவர் புகழ்வது கவி பாடிக் கொள்வதில் உள்ள இரகசியம் என்ன என்பதை பொது ஜனங்களே கண்டு கொள்ளட்டும். சென்ற வருடம் திரு. வரதராஜுலுவை பார்ப்பனர்கள் காங்கிரசிலிருந்து வெளிப்படும் படியாய்ச் செய்ததற்காக பார்ப்பனரல்லாதார்களில் சிலரை கெஞ்சிக் கேட்டுக் கொண்டதின் பலனாக வும் “இந்த ஒரு தடவை பாருங்கள், இனிமேல் எனக்கு புத்தி வந்து விடும்” என்று சொல்லிக் கொண்டதின் பலனாகவும் பார்ப்பனரல்லாதாரிலும் சிலர், “இஷ்டப்பட்டவர்கள் – அதுவும் காங்கிரசினால் பார்ப்பனர்கள் பார்ப்பன ரல்லாதாருக்கு கெடுதி செய்ய முடியாமல் பார்த்துக் கொள்ள சக்தி உடைய வர்கள் – காங்கிரசில் சேரலாம்” என்று அனுமதி கொடுத்தவுடன், யாரும் காங்கிரசிற்குள் நுழையாதபடி திரு. அய்யங்கார் பந்தோபஸ்து செய்து கொண்ட காலத்தில், திரு. வரதராஜுலுவின் ஊர் காங்கிரஸ் கமிட்டியையும் பார்ப்பனர்கள் சுவாதீனம் செய்து கொண்டு வரதராஜுலுவை வெளியாக்கிய போது ஸ்ரீவரதராஜுலு வெட்கப்பட்டு பல ரூபாய் செலவு செய்து சேலத்தில் ஜில்லா காங்கிரஸ் மகாநாடு கூட்டி “பார்ப்பனர்கள் என்னை மிக அவமானப் படுத்தி விட்டார்கள். ஆதலால் நாயக்கர்வாளே தாங்கள் வரவேண்டும்! திரு. சிதம்பரம் பிள்ளைவாளே! தாங்கள் வரவேண்டும்! திரு. பனக்கால் ராஜாவே தாங்கள் வந்து என் மானத்தைக் காப்பாற்ற வேண்டும்! திரு. ராமசாமி முதலியாரே ! தாங்கள் வரவேண்டும். திரு. ஷண்முகம் செட்டியாரே தாங்கள் வரவேண்டும்” என்று ஒவ்வொரு பார்ப்பனரல்லாதவர்களையும் கெஞ்சி அழைத்து மகாநாட்டை நடத்தியதும், அது சமயம் திரு. வரதராஜுலு அய்யங்காரையும் பார்ப்பனர் களையும் வைததும், பார்ப்பனரல்லாதார்களை திருப்தி செய்ய காங்கிரசின் கொள்கையிலேயே ஜாதி வித்தியாசம் இல்லை என்கின்ற ஒரு குறிப்பை சென்னையில் கூடும் காங்கிரசில் சேர்த்து விடுவதாகவும் அது முடியாவிட்டால் தான் காங்கிரசை விட்டு மறுபடியும் வெளியில் வந்துவிடுவதாக வீரம் பேசினதும் இதற்குள் யாரும் மறந்திருக்க முடியாது.
அப்படிப்பட்ட நாயுடு இதே திரு. அய்யங்கார் அழையாமலே காங்கிரசிற்குள் வலிய நுழைந்ததும் கூட்டம் திரு. நாயுடு மீது சந்தேகப்பட்டு காங்கிரசில் திரு. நாயுடுவை மேடையில் கூட உட்கார வைக்காமல் அவமா னப்படுத்தியதும், இதற்காக திரு. நாயுடு இதே திரு. அய்யங்காரிடம் “காங்கி ரசின் கொள்கையில் ஜாதி வித்தியாசத்தை ஒழிக்க வேண்டும் என்று சேர்க்க திரு. ஷண்முகஞ் செட்டியார் கொடுத்திருக்கும் தீர்மானம் வெளியானால் நானே அதை எதிர்த்து தோற்கடிக்க உதவியாய் இருக்கின்றேன்” என்று உறுதி சொல்லி தன்னை சேர்த்துக் கொள்ளும்படி செய்து கொண்டதும் யாவரும் அறிந்த ரகசியமேயாகும். இந்த நிலையில் திரு அய்யங்காரை நாயுடு புகழ்வதும் திரு. அய்யங்கார் நாயுடுவைப் புகழ்வதும் இருவரும் சேர்ந்து இந்தியப் பிரதிநிதியாய் ஜினிவாவுக்குச் செல்லும் திரு. செட்டியாருக்கு வேறு சிலர் நடத்த இருந்த வழியனுப்பு உபசாரத்தைக் கூட தடுத்ததும் ஒரு அதிசயமல்ல.
எனவே தேசீயம் என்பது என்ன என்பதை வெளிப்படுத்த இதை எழுதுகிறோமே ஒழிய செட்டியாருக்கு உபசாரம் இல்லை என்பதற்கு இதை எழுதவில்லை.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 06.05.1928