கார்பொரேஷன் தலைவர்
சென்னை கார்ப்பரேஷன் தலைவர் தேர்தலில் திரு. ஏ. ராமசாமி முதலியார் அவர்கள் வெற்றி பெற்றார் என்ற சேதியைக் கேட்டு மகிழ்ச்சி
யடையாத உண்மைத் தமிழ் மக்கள் இந்நாட்டில் இருக்க மாட்டார்கள் என்றே நினைக்கின்றோம். தவிர இந்த முடிவானது சென்ற வருஷம் முதலே உறுதியாய் எதிர்பார்த்த முடிவாகும். மேலும் இந்த முடிவானது, சென்னை பார்ப்பனர்கள் தங்களுக்குள்ளாகவோ தங்கள் அடிமைகளுக்குள்ளாகவோ காங்கிரஸ் வேஷத்தாலோ தேசீய வேஷத்தாலோ யாரையும் நிறுத்த முடியாமல் போனதைப் பொருத்தவரையில் பார்ப்பனரல்லாதாருக்கு ஒரு பெரிய வெற்றியானாலும் ஜஸ்டிஸ் கட்சியில் கட்சிப் பிளவை உண்டாக்கும் வேலையில் கரும் பார்ப்பனர்களும் வெள்ளைப் பார்ப்பனர்களும் ஒருவாறு வெற்றிபெற்று விட்டார்கள் என்றே சொல்லவேண்டும். திரு. ராமசாமி முதலியாருக்கு ஏற்பட்ட வெற்றியின் சந்தோஷத்தைவிட ஒரே கட்சியில் ஏற்பட்ட அபிப்பிராயபேதம் வருந்தத்தக்கதேயாகும் என்றாலும் திரு. ராமசாமி முதலியார் அவர்களை தலைவராகக் கொண்ட சென்னை கார்ப்பொ
ரேஷனை நாம் பாராட்டாமலிருக்க முடியாது. சென்னை கார்ப்பொ ரேஷனுக்கு இதுவரை இருந்த கெட்ட பெயரும் இழிவும் திரு முதலியார் காலத்தில் மாறி அதற்கு ஒரு கௌரவம் ஏற்படும் என்று எதிர்பார்க்கின்றோம்.
குடி அரசு – செய்தி விளக்கம் – 18.11.1928