முறியடிக்கப்பட்டவர்களுக்கு ‘மித்திரனி’ன் நற்சாக்ஷிப் பத்திரம்

சென்னைத் தேர்தல்களில் பார்ப்பனரல்லாத கட்சியாருக்கு வெற்றி ஏற்பட்டதைப் பற்றி ‘மித்திரன்’ தன்னை திருப்தி செய்து கொள்ளுகையில் சென்னை வெற்றி பார்ப்பனரல்லாத கட்சியான ஜஸ்டிஸ் கட்சிக்கு வெற்றி யல்லவென்றும், ஜஸ்டிஸ் அபேட்சகர்களான கனவான்கள் அந்தந்த பேட்டை ஓட்டர்களுக்குச் செய்த சேவையினாலேயே அவர்களுக்கு வெற்றி கிடைத்த தென்றும் சொல்லுகிறான். இதிலிருந்தே பார்ப்பனக் கட்சியான சுய ராஜ்யக் கட்சியாரின் சார்பாய் நிறுத்தப்பட்ட அபேட்சகர்களை ஓட்டர் கள் மதிக்க வில்லை என்றும் இவர்கள் நன்மை செய்வார்கள் என்று ஓட்டர்கள் நினைக்கவில்லை என்றும் ஏற்படுகிறது. இதைப் பார்க்கும் போது, ஐயோ பாவம்! நமது ஸ்ரீமான் ஒத்தக்காசு செட்டியாரை இப்பார்ப்பனர்கள் பழைய குரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு எந்தெந்த விதத்தில் கெடுத்து விட்டார்கள் – கெடுத்து வருகிறார்கள் என்பதை நினைக்கும் போது செட்டி யார் பேரில் அளவு கடந்த பரிதாபமேற்படுகிறது.

ஸ்ரீமான் செட்டியாரின் மான நஷ்ட வழக்கில் செட்டியார் மானம் ஒத்தக்காசுதான் பெறும் என்று தீர்ப்பு வாங்கிக் கொடுத்து விட்டார்கள். ஸ்ரீமான் செட்டியார் தனது பேராசையினிமித்தம் தனது பட்டத்தையும் விட்டுஏமாறினார் என்கிற பெயர் வாங்கிக் கொடுத்து, பட்டத்தையும் பிடுங்கி விட்டார்கள். போதாக் குறைக்கு சென்னைத் தேர்தலில் ஸ்ரீமான் செட்டியார் தோல்வியுற்றதற்குக் காரணம் ஓட்டர்களுக்கு செட்டியாரிடத்தில், தங்க ளுக்கு நன்மை செய்வார் என்கிற நம்பிக்கையில்லாததால்தான் ஓட்டுக் கிடைக்க வில்லை என்று சொல்லிவிட்டார்கள். ஸ்ரீமான் செட்டியார் வெற்றி பெற்றிருந்தால் அது செட்டியாரின் நல்ல குணத்திற்கு அல்லவென்றும் சுயராஜ்யக் கட்சியாரிடத்தில் ஜனங்களுக்குள்ள மதிப்பு என்றும் சொல்லிக் கொள்ளுவார்கள். ஸ்ரீமான் செட்டியார் தோற்றதால் அது சுயராஜ்யக் கட்சிக்கு ஜனங்களிடத்தில் உள்ள வெறுப்பும் அவநம்பிக்கையும் அல்ல வென்றும் செட்டி யாரிடத்தில் ஜனங்களுக்கு நம்பிக்கையில்லாததால்தான் என்றும் சொல்லி விட்டார்கள். நாளைக்கு சென்னை சட்டசபைத் தேர்தலில் செட்டியார் அவர்கள் அநேகமாய்த் தோற்றுப் போகலாம். அப்போது செட்டியாரைப் பற்றி என்ன சொல்லுவதற்குத் தயாராயிருக்கிறார்களோ தெரியவில்லை.

எப்படியாவது நமது ஸ்ரீமான் செட்டியாருக்கு நாள் கழிந்தால் போதும்; யார் என்ன சொன்னாலும் கவலை இல்லை போல் இருக்கிறது. செட்டியாரின் பரிதாப நிலைக்கு நாம் மிகுதியும் இரங்குகிறோம்!

குடி அரசு – கட்டுரை – 15.08.1926

You may also like...

Leave a Reply