சென்னை வாசிகளே என்ன செய்யப் போகிறீர்கள் ? -சித்திரபுத்திரன்

ஈரோடு ராமசாமி நாயக்கர், டாக்டர் வரதராஜுலு நாயுடு, திரு. வி. கலியாணசுந்திர முதலியார், ஆரியா, சக்கரை செட்டியார் , தண்டபாணி பிள்ளை, பாஞ்சால சிங்கம் லாலா லஜபதிராய், பம்பாய் புலி ஜயகர் ஆகிய பார்ப்பனரல்லாத காங்கிரஸ் தியாகிகளை யெல்லாம் காங்கிரசை விட்டுப் போகும்படி துரத்திவிட்டு இவர்கள் எல்லாம் காங்கிரசை விட்டுப் போய் விட்டதால் காங்கிரஸ் பரிசுத்தமாய் போய்விட்டதென்று சொன்னவரும் இன்னமும் வக்கீல் தொழிலில் மாதம் 10,000 சம்பாதித்துக் கொண்டு இருப்ப வரும், நேற்று காங்கிரசில் வந்து சேர்ந்தவருமான ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய் யங்கார் என்கிற பார்ப்பனருக்கு ஓட்டுக் கொடுக்கப் போகிறீர்களா? அல்லது பி.ஏ.,பி.எல்., 20 வருஷத்திற்கு முன் படித்திருந்தும் நாளது வரை வக்கீல் உத்தியோகத்திற்கு போகாதவரும் பள்ளியில் படிக்கும்போதுமுதலே தேசத்திற்காகப் பேசி, தேச பக்தராயிருந்த பார்ப்பனரல்லாதார் நன்மையின் பொருட்டு லண்டனுக்குப் போனவருமான ஸ்ரீமான் வி. சக்கரை செட்டியார் என்கிற பார்ப்பனரல்லா தாருக்கு ஓட்டுச் செய்கிறீர்களா?

தேசத்திற்காக 5 வருஷ காலம் ஜெயிலுக்குப் போன ஸ்ரீமான் ஆரியா வையும், பார்ப்பனரல்லாதார் சுயமரியாதைக்காக மூன்று முறை ஜயிலுக்குப் போன ஈ.வெ.ராமசாமி நாயக்கரையும் ஜயிலில் போட வேண்டுமென்று பார்ப்பன அட்வொகேட் ஜெனரலையும் பார்ப்பன சட்ட மெம்பரையும் கெஞ்சும் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்யங்கார் என்னும் பார்ப்பனருக்கு ஓட்டுப் போடப் போகிறீர்களா? அல்லது பார்ப்பனரல்லாத ஸ்ரீமான் சக்கரைச் செட்டி யாருக்கு ஓட்டுப் போடப் போகிறீர்களா? பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்தவும், பார்ப்பனரல்லாதார் ஆதிக்கத்தை ஒழித்து பார்ப்பனரல்லாதார் இப்பொழுது பார்த்து வரும் உத்தியோகங்களையெல்லாம் பிடுங்கி பார்ப்பனர் கையில் கொடுத்து விட்டு பார்ப்பனரல்லாதார் சூத்திரர், பார்ப்பன ரின் வைப்பாட்டி மக்கள் என்னும் கொள்கையை நிலைநிறுத்தப் பாடுபடும் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்யங்கார் என்னும் பார்ப்பனருக்கு ஓட்டுப் போடப் போகிறீர்களா? அல்லது பார்ப்பனரல்லாதார் சுயமரியாதைக்கும், மனுசத் தன்மைக்கும், தேச விடுதலைக்கும் உழைக்கும் ஸ்ரீமான் வி. சக்கரை செட்டியாரான பார்ப்பனரல்லாதாருக்கு ஓட்டுப்போடப் போகிறீர்களா? இதில்தான் உங்கள் மூளையின் தத்துவம் விளங்கப் போகிறது.

குடி அரசு – கட்டுரை – 26.09.1926

You may also like...

Leave a Reply