சீப்பை எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டதினாலேயே கலியாணம் நின்று போகுமா?
நமது ‘குடி அரசு’ பத்திரிகைக்கு விரோதமாக சில பிராமணர்களும், பிராமணரல்லாத சில வாரப் பத்திராதிபர்களும், வயிற்றுக்கில்லாமல் கஷ்டப் படும் சில காங்கிரஸ் தொண்டர்களென்போருக்குப் பணம் கொடுத்தும், தங்களுடைய வாரப் பத்திரிகைகளை இலவசமாக அனுப்பிக் கொடுத்தும், ஆட்களை ஏவிவிட்டு நாம் ஜஸ்டிஸ் கக்ஷியாரிடம் பணம் வாங்கிக் கொண்டு பத்திரிகை நடத்துவதாகவும் ஜெயிலுக்குப் பயந்து கொண்டும் பதவிகளுக் காசைப்பட்டும் சர்க்காருக்கனுகூலமாய்த் திரும்பி விட்டதாகவும், இன்னும் பல இழிவான காரணங்களையும் சொல்லி அதனால் “குடி அரசை” வாங்கி வாசிக்கக் கூடாதென்றும் ஆங்காங்கு திண்ணைப் பிரசாரங்கள் நடத்தி வருவ தாய் அடிக்கடி நமக்குத் தகவல்கள் எட்டிக்கொண்டே வருகின்றன. இவற் றைப் பற்றி நமது உப பத்திராதிபர் இரண்டொரு இடங்களில் நேரிலும் பார்த் திருக்கிறார். “குடிஅரசு”க்கும் அதன் பத்திராதிபருக்கும் செல்வாக்கு குறைத்தும் போவதினாலேயே பிராமணரல்லாதாருடைய முன்னேற்றத்தை அடக்கி விடலாமென்று நினைப்பது “சீப்பை எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டால் கலியாணத்தையே நிறுத்திவிடலாம்” என்று நினைக்கிற அறி வீனத்தைப் போற்தான் முடியும். இவ்வித விஷமப் பிரசாரகர்கள் இரண் டொரு பத்திரிக்கையை திருப்பி அநுப்பிவிடச் செய்தபோதிலும், பத்திரிகை யின் வளர்ச்சி நாம் எதிர்பார்க்கிற அளவுக்கு மேல் வளர்ந்து கொண்டு தான் போகிறது. அது எப்படியானாலும் நமக்கு கவலையில்லை. தேச விடுதலை யின் பொருட்டும், பிராமணரல்லாதார் முன்னேற்றத்தின் பொருட்டும் நமது கருத்தை வெளியிட பத்திரிகையை வைத்துக் கொண்டிருக்கிறோமே தவிர, பத்திரிகை நடத்தி அதனால் பணம் சம்பாதிப்பதற்காக அதை நாம் வைத்துக் கொண்டிருக்கவில்லை யென்பதை மாத்திரம் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
குடி அரசு – அறிக்கை – 10.01.1926