நாயுடு, முதலியார், நாயக்கர். சென்னையில் டாக்டர் வரதராஜுலு நாயுடுகார் ( தற்கால நிலைமை )
சென்னையில் இம்மாதம் 17-ந் தேதி திருவல்லிக்கேணி கடற்கரையில் ஸ்ரீமான் எஸ்.சீனிவாசய்யங்கார் அக்கிராசனத்தின் கீழ் டாக்டர் நாயுடுகார் ஒரு நீண்ட பிரசங்கம் செய்தார். அவை பல பத்திரிகைகளில் பலவிதமாக வெளிப் பட்டிருந்தாலும் அவரது ‘தமிழ் நாடு’ பத்திரிகையில் சுருக்கமாக வெளி வந்திருக்கிறது. அவற்றில் சில உண்மைகள் விளங்குவதை மாத்திரம் நாம் இதனடியில் குறிப்பிடுகிறோம்.
அதாவது “பெரிய சந்தேகம்” என்ற தலைப்பின் கீழ் “இந்த சர்க்கா ரை இப்பொழுதே நாம் நிருத்திவிட முடியும். ஆனால் அதற்குப் பிறகு (நிருத்திய பிறகு) இத்தேசத்தை எப்படி நிர்வகிப்பதென்பதுதான் இப்பொ ழுது பெரிய சந்தேகம்” என்று பேசியிருக்கிறார். தற்கால நிலைமையில் யோக்கியமான ராஜீயவாதிகளின் கருத்து இதுவேதான். ஏனெனில், நமது தேசத்தில் ஒருவன் உயர்ந்தவன் என்றும் பிராமணன் என்றும், மற்றவன் தாழ்ந்தவன் என்றும், சண்டாளன், பார்க்கக் கூடாதவன், தெருவில் நடக்கக் கூடாதவன் என்றும், ஒரு மதம் உயர்ந்த மதம், மற்றொரு மதம் தாழ்ந்த மதம், ஒரு வகுப்பார் தான் மூளை உள்ளவர்கள், மற்ற வகுப்பார் மூளை இல்லாத வர்கள் என்று சொல்லிக்கொண்டு அவனவன் சுயநலத்துக்காக மானம், கற்பு, மனச்சாக்ஷி இவைகளை விற்று ஏழை மக்களை நசுக்கிப் பிழைத்துக் கொண்டிருக்கிற காலத்தில் இந்த சர்க்கார் நின்று போனால் தேசம் என்ன கதி அடையும் என்பதை யோசித்துப் பார்த்தால், “இந்த சர்க்காரை நடைபெற வொட்டாமல் செய்கிறோம், வெள்ளைக்காரரையே ஓட்டி விடுகிறோம்” என்று சொல்லி ஓட்டுக் கேட்பவர்கள் எவ்வளவு அயோக்கியர்கள் என்பது விளங்கும். இந்த உண்மையை டாக்டர் நாயுடுகார் தைரியமாய் எடுத்துச் சொன்னதற்கு நாம் அவரைப் பாராட்டுகிறோம்.
அடுத்தபடியாக “முறைகள்” என்ற தலைப்பின் கீழ் “காங்கிரஸ் முன்னிருந்த நிலைமையில் இப்பொழுதில்லை. அதில் முன்னிருந்த கட்டுப்பாடுகளும் இப்பொழுதில்லை” என்று சொல்லியிருக்கிறார். இதையும் அவர் தைரியமாய் எடுத்துச் சொன்னதற்கு நாம் பெரிதும் பாராட்டுகிறோம். ஏனெனில் காங்கிரஸ்வாதிகளென்போர்கள் காங்கிரசின் குற்றங்களை எடுத்துச் சொன்னால் பெரிய பாவமென்றும் தேசத் துரோக மென்றும் சொல்லி ஏமாற்றும் பார்ப்பனர்கள் மத்தியிலிருந்து கொண்டு காங்கிரசின் ஊழல்களை எடுத்துச் சொல்வதென்றால் அதற்கு மிகவும் தைரியம் வேண்டும். ஆதலால் நாம் இதையும் போற்றாமலிருக்க முடியாது.
மற்றோரிடத்தில் “சட்டசபைக்குச் செல்லுபவர்களால் ஒன்றும் செய்ய முடியாது” என்று சொல்லிவிட்டு “ராயல் கமிஷன் வருவதற்கு முன்பு நமது அபிப்பிராயங்களை சட்டசபைகளில் சரியாய்த் தெரிவிக்க உதவும்” என்று சொல்லி இருக்கிறார். இதுவும் உண்மையான விஷயம் தான். இப்போது சட்டசபைக்குப் போகிற பார்ப்பனர்கள் கருத்தும் அதுதான். ஏனெனில் இப்பொழுது கொடுத்திருக்கும் ‘சீர்திருத்தம்’ நமது மாகாணத்தில் பார்ப்பனரல்லாதார் கொஞ்சமாவது முன்னேறுவதற்கு உதவி செய்திருக்கிறது. பார்ப்பனரல்லாத மந்திரிகள் நிர்வாகத்திற்கு வரவும், பார்ப்பனரல்லாதாரில் சிலருக்காவது உத்தியோகம் பதவி முதலியவைகள் ஏற்படவும், அதன் மூலம் பார்ப்பனரல்லாதார் சுயமரியாதை காப்பாற்றப்படவும் அது உதவியாயிருக் கிறது. ஆதலால் 1929-ம் வருடம் வரும் ராயல் கமிஷனில் நமது பார்ப்பனர் தேசத்தின் பேரால் சட்டசபைக்கு வந்ததாகச் சொல்லிக் கொண்டு இதுவரை பார்ப்பனரல்லாதாருக்கு ஏற்பட்டிருக்கும் நன்மைகளை அழிக்கவும் கொஞ்ச மாவது கொடுத்திருப்பதாய்ச் சொல்லும் அதிகாரங்களை திருப்பி எடுத்துக் கொள்ளச் செய்து சர்க்கார் மூலம் தங்களுக்கே உத்தியோகமும் பதவியும் பெரிய சம்பளங்களும் கிடைக்கும்படியாகப் பாடுபடவும், வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் கூடாது, எல்லாவற்றிற்கும் எல்லா வகுப்புக்கும் எல்லா மதத் திற்கும் பார்ப்பனர்கள் தாங்களே பிரதிநிதியாயிருந்து கொண்டு மற்றவர்களை மிலேச்சர், தீண்டப்படாதவர் என்று சொல்லிக்கொள்ள சவுகரிய மேற்படுத் திக் கொள்ளலாம் என்பதும்தான் அவர்கள் கவலை. அதற்காகத்தான் இப் போது சட்டசபைக்குப் போக இவ்வளவு தந்திரங்கள் செய்வது என்பதுதெளி வாய் விளங்க, டாக்டர் நாயுடுகாரின் மேற்கூறிய வார்த்தைகள் போதுமானது.
“பட்டதாரிகள்” என்ற தலைப்பின் கீழ், “தேர்தலுக்குக் காங்கிரஸ் அபேக்ஷகர்களைத் தெரிந்து எடுக்கும்போது சிறந்த தேசாபிமானிகள் அபேக்ஷகர்களாய் கிடைக்கவில்லை” என்று சொல்லியிருக்கிறார். இதுவும் சத்தியமான வாக்கென்றே சொல்லுவோம். காரணம் அவர் என்ன சொல்லி யிருந்த போதிலும்கூட “சிறந்த தேசாபிமானிகள் காங்கிரஸ் அபேக்ஷகர்க ளாய்க் கிடைக்கவில்லை” என்பது மிகவும் சத்தியமானது. ஏனெனில் காங்கிரசில் தேசாபிமானிகள் இல்லை என்பதை ருஜுப்படுத்த இதைவிட வேறு எதையும் அவர் சொல்லியிருக்க முடியாது.
‘ஜமீன்தாரர்கள்’ என்ற தலைப்பின் கீழ் “பணக்காரருக்கு ஓட்டுக் கொடுக்கக்கூடாது” என்று சொல்லியிருக்கிறார். இதுவும் சரியான விஷயம். பணக்காரர்கள் சட்டசபைக்குப் போனால் தங்கள் நிலைமையாகிய பணக் காரர்கள் நன்மைக்குத்தான் பாடுபடுவார்கள். ஏழைகளைப் பற்றி கவனிக்க மாட்டார்களென்பதுதான் அதன் தத்துவம்.
‘பார்ப்பனரல்லாதார்’ என்ற தலைப்பின் கீழ் “ஜஸ்டிஸ் கக்ஷி பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்திற்கு என்று ஸ்தாபிக்கப்பட்டது” என்று சொல்லியிருக்கிறார். இதை டாக்டர் நாயுடுகார் ஒப்புக் கொண்டதற்கு பார்ப்பனரல்லாதார் அவருக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளார்கள். ஏனெனில் நமது பார்ப்பனர் சில காலங்களுக்குக் கூலி கொடுத்து ஜஸ்டிஸ் கட்சி ‘சர்க்கார் கட்சி’, ‘உத்தியோக வேட்டைக் கட்சி’, ‘ஒரு சில பதவிக் கேற்பட்ட கட்சி’ என்று எழுதியும் பேசியும் வரும்படி செய்து பார்ப்பன ரல்லாதார் கட்சியையே அடியுடன் ஒழிக்கக் கங்கணங்கட்டிக் கொண்டு வேலை செய்யும் சமயத்தில் நமது டாக்டர் நாயுடுகாரவர்கள் ‘‘ஜஸ்டிஸ் கட்சி பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்திற்காக ஏற்பட்ட கட்சி’’ என்று சொல்லி பார்ப்பனர்களின் சூழ்ச்சிகளும், தந்திரங்களும் அடங்கும்படி கர்ஜித்ததற்கு நன்றி பாராட்ட வேண்டியது நமது கடமை.
அல்லாமலும், பார்ப்பனரல்லாதாருக்கு சர்க்கார் உத்தியோகங்கள் அதிகமாகக் கிடைப்பதின் மூலமாய்த்தான் முன்னேற முடியுமென்று அறி வித்து விட்டே அவர்கள் வேலை செய்து வருகிறார்கள். ஆதலால் “உத்தி யோகம் பெறுவது தங்கள் கொள்கை என்று பகிரங்கமாகச் சொல்லும் ஒரு கக்ஷியாரை எப்படி பதவி வேட்டைக்காரர் என்று சொல்ல முடி யும்?” என்று வினவியிருக்கிறார். இது பார்ப்பனருக்குமாத்திரமல்லாமல் பார்ப்பனரல்லாதாரிலேயே சில பைத்தியக்காரர், பார்ப்பனரல்லாத கக்ஷியின ரைப் ‘பதவி வேட்டைக்காரர்’ என்று சொல்லித் திரிவோர்களுக்கும் புத்தி வரும்படி செய்திருக்குமென்றே நினைக்கிறோம்.
‘பூர்வீக பிராமணர்’ என்ற தலைப்பின் கீழ் “இப்போது பார்ப்பனர் களே எங்கு பார்த்தாலும் உத்தியோகங்களில் நிறைந்திருப்பதால் தங்க ளுக்கும் உத்தியோகம் கிடைக்க வேண்டுமென்று ஜஸ்டிஸ் கக்ஷியார் கேட்கிறார்கள். தங்களுக்குரிய பங்கைக் கொடுக்கும்படி ஒருவர் கேட் கும் போது அதைப் பதவி வேட்டை என்று எப்படிச் சொல்ல முடியும்?” என்றும் சொல்லியிருக்கிறார் . இது ஒரு வகுப்பார் உரிமை கேட்பதால் தேசம் கெட்டுப்போகுமென்று சொல்லித் திரிபவர்களுக்குச் சரியான பதிலாகும்.
‘பார்ப்பனரின் கொடுமை’ என்ற தலைப்பின் கீழ் “வெள்ளையர் களிடம் இந்தியர் என்ன கேட்கிறார்களோ அதையேதான் பார்ப்பனர் களிடம் பார்ப்பனரல்லாதார் கேட்கிறார்கள்” என்று சொல்லியிருக்கிறார். அல்லாமலும் “குருகுலப் போராட்டத்திலிருந்து நான் பார்ப்பனர்களிடம் வைத்திருந்த நம்பிக்கையை இழந்து விட்டேன்” என்றும் “பார்ப்பனர் களது கொடுமைகளின் காரணமாகவே தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகக் கமிட்டி அங்கத்தினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன்” என்றும் சொல்லியிருக்கிறார். இதனாலேயே காங்கிரஸ் பார்ப்பனர்கள் ஸ்தாபனமென் பது யாவருக்கும் நன்றாய் விளங்கும். இல்லாவிட்டால் பார்ப்பனர்கள் கொடு மைக்காக ஒருவரும் காங்கிரஸ் பதவியிலிருந்து விலகவே மாட்டார்கள் என்பதை யாவரும் சுலபத்தில் உணரலாம்.
“ஜஸ்டிஸ் கக்ஷிக்கு வேண்டுகோள்” என்ற தலைப்பின் கீழ் “வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் நல்லதல்ல, ஆனால் தங்களுடைய நன்மைக்கு ஆபத்து வராமல் காத்துக்கொள்ள தற்கால ஏற்பாடாக ஏதாவது ஒன்றைச் செய்து கொள்ளலாம்” என்றும் “ஒருவருக்கொருவர் நம்பிக்கை யேற்ப டுகிற வரையில் இம்முறையைக் கைக் கொள்ளலாம்” என்றும் “ஜஸ்டிஸ் கக்ஷியாருக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை விட முடியாதென்ற எண்ண மிருந்தால் அவர்கள் காங்கிரசில் வந்து ஏன் வற்புறுத்தக் கூடாது ? அவ்வாறு செய்யும்படி அவர்களைக் (ஜஸ்டிஸ் கக்ஷியாரை) கேட்டுக்கொள்ளுகிறேன்” என்றும் சொல்லியிருக்கிறார்.
இவற்றில் மேற்கூறிய இரண்டொரு வார்த்தைகளைத் தவிர மற்றவை களை மாத்திரம் நாம் ஆதரிக்க முடியாதிருப்பது பற்றி வருந்துகிறோம். டாக்டர் நாயுடுகார் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் தப்பென்றாலும் “ஒருவருக் கொருவர் நம்பிக்கை ஏற்படும் வரை தற்கால யேற்பாடாக ஏதாவதொன்றைச் செய்து கொள்ளலாம்” என்று சொல்லுகிறார். ‘அது எது’, ‘என்ன செய்து கொள்ளலாம்’ என்று சொல்லியிருந்தால் நன்றாயிருந்திருக்கும். ஒருவருக் கொருவர் நம்பிக்கையில்லாததால்தான் தனிப் பிரதிநிதித்துவம் கேட்கிறார் கள் என்கிறதை ஒப்புக்கொண்ட டாக்டர் நாயுடுகார் தானும் ஒரு வழி சொல் லாமல் பிறத்தியார் கேட்பதையும் தப்பென்று சொன்னால் வேறு கதி என்ன வென் பதுதான் நமது கவலை. ஆனால் சமீபத்தில் டாக்டர் நாயுடுகாரவர்கள் இரண் டோர் இடங்களில் பேசியபோது, சில வகுப்பாருக்கு வாக்காளர் தனித் தொகுதியுங்கூட கொடுக்க வேண்டுமென வற்புறுத்தியுள்ளார். சில இடங்க ளில் பேசும் போது ஜஸ்டிஸ் கட்சியார் கேட்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித் துவம் தப்பல்ல என்றும் சொல்லியிருக்கிறார். நாமும் இரண்டொரு சமயத் தில் டாக்டர் நாயுடுகாரின் அபிப்பிராயத்தைப் பற்றி எழுதும் போது டாக்டர் நாயுடுகார் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அடியோடு கூடாதென்று சொல்ல வில்லை யென்றும், அதில்லாமல் வேறு வழியில் வகுப்புவாரிப் பிரதிநிதித்து வத்தின் கருத்தைப் பூர்த்தி செய்ய முடியுமாவென்று பார்க்கிறார் என்றும், முடியாவிட் டால் அவர் என்ன செய்வாரென்பது நமக்குத் தெரியுமென்றும் எழுதியிருந் தோம். ஆதலால் அவர் தற்கால நிலையில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கொள்கைக்கு விரோதியல்ல வென்பதும், அதனுடைய வழி களில் தான் கொஞ்சம் குழப்பமாயிருக்கிறார் என்பதும் நமது நம்பிக்கை. அப்படியில்லா விட்டால் ஜஸ்டிஸ் கட்சியாருக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித் துவம் கேட்க சுதந்திரம் உண்டென்றும் காங்கிரசில் வந்து கேட்கும் படியும் சொல்லியிருக்க மாட்டார்.
ஆனால் பார்ப்பனரல்லாதார் ஏழு பேரும், பார்ப்பனர் இரண்டு பேரு மாயிருக்கும் காங்கிரஸ் நிர்வாக சபையிலிருந்து, டாக்டர் நாயுடு கார் போன்ற வீரர்களே பார்ப்பனர் கொடுமையைச் சகிக்க மாட்டாமல் மனம் நொந்து அதைவிட்டு விலக வேண்டிய அவசியம் நேர்ந்திருக்கும் போது ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் எத்தனை பேர்கள்தான் காங்கிரசுக்குள் வந்தாலும் பார்ப்பனர் கொடுமையிலிருந்து தப்பமுடியுமா? அல்லாமலும் காங்கிரசிலி ருந்து வகுப்பு வாரி உரிமையை வற்புறுத்தும்படி டாக்டர் நாயுடுகார் கேட்டுக் கொள்ளுகிறார். இதுவும் நமக்கு ஆச்சரியமாகவேயிருக்கிறது.
காங்கிரஸ் கமிட்டிக்கு டாக்டர் நாயுடுகார் தலைவராகயிருந்த சமயத் தில் ஸ்ரீமான் திரு.வி. கலியாணசுந்தர முதலியார் தலைமை வகித்ததும் 100-க்கு 90 பேர் பார்ப்பனரல்லாதாராய்க் கூடியிருந்ததுமான தமிழ் மாகாண மகா நாட்டில், மும்முறை காங்கிரஸ் கமிட்டி காரியதரிசியாகவும், இரண்டு முறை கமிட்டித் தலைவராகவும், ஒருமுறை தமிழ் மாகாண மகாநாட்டுக்குத் தலைவ ராகவும், மூன்று முறை ஜெயிலுக்குப் போனவரென்று சொல்லப்பட்டவராக வுமுள்ள ஒரு இராமசாமி நாயக்கர் என்பவரே வகுப்புவாரி தீர்மானம் காங்கிரசின் பேரால் கொண்டுபோய் பிரேரேபிக்கக்கூட அனுமதி கிடைக்கா மல் ஓடிப்போகும்படி நேர்ந்திருக்கும் போது, ஐயோ பாவம்! எவ்வளவோ கஷ்டப்பட்டுக் கொண்டும் காங்கிரஸ் உலகத்தில் கெட்ட பெயர் வாங்கிக் கொண்டுமிருக்கும்படியான ஜஸ்டிஸ் கட்சியார் காங்கிரசில் வந்து சேர்ந்தால் அவர்களைப் பார்ப்பனர்கள் சும்மா விடுவார்களா?
இந்நிலைமையில் இது ஆகிற காரியமா? ஒரு சமயம் தமிழ்நாடு கமிட்டியில் ஒப்புக்கொண்டாலும் அகில இந்திய காங்கிரசில் ஒப்புக் கொள்ளும்படி பார்ப்பனர் சம்மதிப்பார்களா? இவைகளை யோசித்துப் பார்த்தால் உண்மை விளங்காமல் போகாது. ஜஸ்டிஸ் கட்சியாரைத் தற்கால காங்கிரசுக்குக் கூப்பிடுவதானது பார்ப்பனரல்லாதாரியக்கத்தை ஒழிப்ப தாகுமே தவிர அவர்களுக்கு அநுகூலம் செய்வதாகாதென்றே உறுதி கூறு வோம். இது ‘‘அங்கேண்டி மகளே ஆலாய்ப் பறக்கிறாய் இங்கு வா காற் றாய்ப் பறக்கலாம்” என்பது போலிருக்கிறது. நம்மால் ஜஸ்டிஸ் கட்சிக்கு உதவி செய்ய முடியா விட்டாலும் நாம் அதற்குக் கெடுதி செய்யாமலிருந் தாலே கோடிக் கன்னிகாதானம் செய்த பலனுண்டு. ஆதலால் இந்த இரண் டொரு விஷயத்தைத் தவிர மற்ற விஷயங்களில் நமது டாக்டர் நாயுடுகார வர்கள் சொன்னதாக நாம் ‘தமிழ் நாடு’ பத்திரிகையிலிருந்து மேலே எடுத்துக்காட்டிய விஷயங்கள் முழுவதையும் மனப்பூர்வமாய் ஆதரிக் கிறோம்.
இதற்கு முன் ஸ்ரீமான் திரு.வி.கலியாணசுந்தர முதலியாரவர்கள் எழுதிய ‘இந்தியாவின் தலையெழுத்து’ என்ற விஷயமும் ‘குடிஅரசு’ எழுதிவரும் விஷயமும் டாக்டரவர்கள் சொன்னதாக இதில் எடுத்தாண் டிருக்கும் விஷயமும், பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் என்கிற விஷயத் தைப் பொறுத்த வரையிலும் தற்கால காங்கிரசின் யோக்கியதையைப் பொறுத்த வரையிலும் ஜஸ்டிஸ் கட்சியைப் பொறுத்தவரையிலும் யாதொரு அடிப்படை யான வித்தியாசமும் இருப்பதாய் நாம் நினைக்கவில்லை.
ஆனால் நாம் பச்சைத் தமிழில் எழுதுகிறோம்; பேசுகிறோம். டாக்டர் அவர்கள் ராஜதந்திரத் தமிழில் எழுதுகிறார். பேசுகிறார். ஸ்ரீமான் முதலியா ரவர்கள் சங்கத்தமிழில் எழுதுகிறார்; பேசுகிறார். இதுதான் வித்தியாசமே தவிர வேறில்லை. பல காரணங்களால் பலருக்குப் பச்சைத் தமிழ் வராது. இதற்காக வேண்டி ஒருவரும் கலக்கமுற வேண்டியதில்லை. தேர்தல்கள் சமீ பித்து விட்டன; சூழ்ச்சிகள் மலிந்து விட்டன; தமிழ் மக்கள் பாஷை வித்தி யாசத்தைப் பார்த்துக் கொண்டிருப்பது பைத்தியக்காரத்தனம். திருட்டுப் போன பின்பு கதவைத் தாழ்ப்போடுவதில் பயனில்லை. ஆதலால் பார்ப்பன ரல்லாதார் உடனே ஒன்று கூடித் தேர்தலில் தங்கள் சமூக முன்னேற்றத் திற்கும், சமூகக் கட்டுப்பாட்டிற்கும், பத்திரத்திற்கும், சுயமரியாதைக்கும் பங்கமில்லாதபடி நடந்து கொள்ள வேண்டியது ஒவ்வொரு பார்ப்பனரல்லா தாரின் முக்கியக் கடமை யாகும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
குடி அரசு – கட்டுரை – 01.08.1926