பிராமண உபாத்தியாயர்களின் பேரில் உள்ள சந்தேகங்களுக்கு ஆதாரம்
பிப்ரவரி மாதம் 19-ந் தேதி கோயமுத்தூரில் நடந்த ஜில்லாக் கல்விச் சபைக் கூட்டத்தில் சட்டசபை மெம்பரான ஸ்ரீமான் ஆர்.வீரய்யன் ஒரு தீர்மானம் கொண்டுவந்தார். அதாவது, “அழுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பிள்ளைகள் பள்ளிக்கூடத்தில் அதிகமாகப் படிப்பதற்காகப் பொதுப்பள்ளிக் கூடங்களுக்கு, தாலூகாபோர்டு, ஜில்லாபோர்டு, முனிசிபல் கவுன்சில் முதலிய வற்றின் தலைவர்கள் பிராமணரல்லாத உபாத்தியாயர்களையே நியமிக்க வேண்டும். இப்பொழுதுள்ள ஒரு பிராமண உபாத்தியாயர் வேறு பள்ளிக் கூடங்களுக்கு மாற்றி விட வேண்டும்” என்பதாகப் பிரேரேபித்தார். இதை ஜனாப் கலந்தர் சாயபு ஆமோதித்தார். இதை ஸ்ரீமான் சி.வி. வெங்கிட்ட ரமணய்யங்கார் இத்தீர்மானம் பிராமணர்களைக் குறைகூறுவதாயிருக்கிறது என்ற காரணத்தால் ஒழுங்குத் தவறென்ற ஆnக்ஷபனை கிளப்பியதில் தலைவர் இவ்வித தீர்மானம் கொண்டுவர யாருக்கும் அவகாசம் உண்டென் றும் ஒழுங்கானதுதான் என்பதாகவும் சொல்லி விட்டார். பிறகு இது வெளிப்படையாய் ஒரு வகுப்பாரைப் பாதிக்கிறது என்று சிலர் கருதியதால், கோயமுத்தூர் ஜில்லாபோர்டு பிரசிடெண்டும் – அந்நகர் முனிசிபல் சேர் மெனுமான ஸ்ரீமான் சி.எஸ். இரத்தினசபாபதி முதலியார் முழு தீர்மானத் திற்குமாக ஒரு திருத்தம் கொண்டு வந்தார். அதாவது, “லோகல் போர்டு, முனிசிபாலிட்டி இவைகளின் அக்கிராசனாதிபதிகள், தங்கள் அதிகாரத்தின் கீழ் உள்ள பாட சாலைக்கு அழுத்தப்பட்ட வகுப்புப்பிள்ளைகள் தாராளமாய்ச் சேர்த்துக் கொள்ளத்தக்க உபாத்தியாயர்களையே நியமிக்க இக்கல்விச் சபை சிபார்சு செய்கிறது” என்று பிரேரேபித்தார். தீர்மானம் தெளிவாயில்லாததால் ஸ்ரீமான் வீரய்யன் திருத்தத்தை ஒப்புக்கொள்ள மறுத்து விட்டதின் காரணமாய், அசல் பிரேரேபனை தோல்வியுற்றுப் போய் விட்டது. வாசகர்கள் இதிலிருந்தே கீழ்தர பள்ளிக்கூடத்திலிருந்தே தாழ்த்தப்பட்ட வகுப்புப் பிள்ளைகளின் படிப்புக்குப் பிராமண உபாத்தியாயர்களால் எவ்வளவு தடை இருக்கிறது என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.
குடி அரசு – கட்டுரை – 28.02.1926