இந்து தேவஸ்தான சட்டம்
இந்து தேவஸ்தான சட்டத்தைப் பற்றி பாமர ஜனங்களை ஏமாற்ற தமிழ்நாட்டு தேசீய பிராமணர்களில் பெரும்பாலோர் செய்த கிளர்ச்சி, ஸ்ரீமான் கள் ஈ.வெ.ராமசாமி நாயக்கர், வரதராஜுலு நாயுடு முதலியவர்கள் போட்ட வெடி குண்டினால் நசுக்குண்டு போயிருந்தாலும், வேறு விதமான பல தந்திரங்கள் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதாவது, வைசிராய் இதற்கு அநுமதி கொடுக்கச் செய்யாமலிருப்பதற்கு எவ்வளவோ பாடு பட்டார்கள். அதுவும் தோல்வியுற்றது. இந்தியா சட்டசபையில் எவ்வ ளவோ தந்திரம் செய்தார்கள். அதிலும் தோல்வியுற்றது. சீமைக்குப் போய் சக்கரவர்த்தியின் மூலம் இச்சட்டத்தை அழிக்கப் பார்த்தார்கள். அதிலும் தோல்வியுற்றது. கடைசியாக தங்கள் சட்ட ஞான தந்திரத்தைக் கொண்டு ஹைகோர்ட்டைப் பிடித்தார்கள். அங்கு ஏதோ கொஞ்சம் ஜயமடைகிறார்கள் போல் தோன்றுகிறது. அதாவது, பல மடாதிபதிகள் பேரால் அவர்களிடம் வக்காலத்து வாங்கி இச்சட்டமே சட்டப்படி செல்லாதென்றோ, இச்சட்டம் செய்ய சட்டசபைக்கு சட்டமில்லை என்றோ, வாதம் சொல்லி வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள். வழக்கின் தன்மையைப் பற்றி இது சமயம் நாம் ஒன்றும் சொல்லுவதில்லை. ஆனால், ஒரு விஷயம். சட்டசபையில் பிரேரேபனை வந்து மெஜாரிட்டியாரால் தீர்மானம் நிறைவேறி, கவர்னர் சம்மதம் பெற்று, இந்தியா சட்டசபையிலும் ஒப்புக்கொள்ளப்பட்டு ராஜப் பிரதிநிதியும் சம்மதம் கொடுத்து, சக்கரவர்த்தியும் ஏற்றுக்கொண்டு அமுலுக்கு வந்த ஒரு காரியம் இவ்வளவும் தப்பின பிறகும் பூரா உறுதியாய் விட்டது என்று நினைப்பதற்கு இடமில்லையானால், இம்மாதிரி அரசாங்க அமைப் பைப் பற்றி நாம் என்னவென்று நினைப்பது? அரசாங்கமென்றால் கையில் பலத்தவன் காரியம் என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது. திருவண்ணா மலையில் உள்ள ஒரு மடாதிபதியின் பிராதின் பேரில் தேவஸ்தான சட்டத் தைக் கொஞ்சக் காலத்திற்கு அம்மடத்து காரியத்தில் கோர்ட்டார் பிரவேசிக் கும் விஷயத்தில் தற்காலிகமாக தடைப்படுத்தப்பட்டிருக்கிறது என்று தமிழ் பத்திரிகைகளில் பார்த்தோம். பிராமணப் பத்திரிகைகள் சாதாரணமாய் இம்மாதிரி விஷயங்களைப் பற்றி எழுதும் போது தலைப்பில் ஜட்ஜுகள் பெயர் எழுதுவதுண்டு, ஆனால் இந்த வழக்கைப் பற்றி எழுதும் போது இன்ன ஜட்ஜு இம்மாதிரி தீர்ப்புக் கூறினார் என்று எழுதவேயில்லை. தொடர்ந்தும் பார்த்தோம்; காணப்படவேயில்லை. இதினால் பெயர் எழுதினால் ஜட்ஜு பிராமணரா, பிராமணரல்லாதாரா என்பதை ஜனங்கள் அறிந்து விடுவார்களே என்கிற எண்ணம் கொண்டோ என்னமோ, ஜட்ஜுகள் பெயரைக்கூட இம்மாதிரி சந்தர்ப்பங்களில் எழுதப் பயப்படுவதாயிருந்தால், இவர்கள் தந்திரத்தை என்னென்று சொல்வது? இவற்றைக் கவனிக்கும் போது என்னமாவது செய்து, யாரையாவது பிடித்து இச் சட்டத்தை ஒழிக்கும் வரை ஓயமாட்டார்கள் என்பது திண்ணம் . அதற்கேற்றாற்போல் தோட்டி முதல் தொண்டமான் வரை அநேக இலாகாக்களில், இவர்களாகவே இவர்கள் ஆதிக்கமாகவே இருக்கிறது. போதாக் குறைக்கு அடுத்து வரும் சட்ட சபையும் இவர்கள் மயமாகப் பகீரதப் பிரயத்தனங்கள் நடக்கின்றது. ஹை கோர்ட்டில் தேவஸ்தான சட்டம் அடிபட்டாலும் அடிபடாவிட்டாலும் அடுத்த சட்டசபை இவர்கள் மயமாகி இவர்கள் இஷ்டம் போல் ³ சட்டத்தை உருக் குலையச் செய்யும் வரையில் ³ சட்டம் அமுலில்லாமல் வைத்திருந்தாலும் போதும். கேஸின் முடிவு எப்படியோ ஆகட்டும் என்பது சிலரின் எண்ணம். அம்மாதிரி எண்ணக்காரர்களுக்கு இவ்வுத்திரவு வெற்றி கொடுத்திருக்கிற தென்றே சொல்லலாம். மற்றவைகள் ஹைகோர்ட் முடிவைப் பொறுத்திருக் கிறது என்பது ஒரு பக்கமிருந்தாலும் முக்கியமாய் அடுத்த சட்டசபைத் தேர்தலையே பொறுத்திருக்கிறது என்பதுதான் நமது அபிப்ராயம்.
ஆதலால், தேவஸ்தான சட்டத்தையும் ஒரு கையில் ஆதரித்துக் கொண்டு, சட்டத்தை ஒழிக்க நினைக்கும் பிராமணர்களுக்கும் மற்றொரு கையில் வோட் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்களே. அவர்களது உத்தேசம் என்ன என்பதை நாம் அறிய முடியவில்லை.
குடி அரசு – கட்டுரை – 07.03.1926