இது என்ன மானக்கேடு
சென்னைக் கார்ப்பரேஷனில் சுயராஜ்யக் கட்சித்தலைவர் ஸ்ரீமான் சாமி வெங்கடாஜலம் செட்டியார் புளுகுவதில் கோவை ஸ்ரீமான் சி.வி.வெங் கட்டரமணய்யங்காரை ஜெயித்துவிட்டார். ஸ்ரீ ஐயங்கார் முதலில் தனது தென்னை மரத்தில் கள்ளுக்கு முட்டியே கட்டவில்லை என்றார். பிறகு தெளுவுக்கு மாத்திரம் முட்டி கட்டினதாய்ச் சொன்னார். “சென்ற வருஷம் கோபி மகாநாட்டில் தென்னை மரங்களை ஐந்து வருஷக் குத்தகைக்குக் கொடுத்துவிட்டேன். குத்தகைக்காரன் கட்டினால் நான் என்ன செய்யட்டும் என்று சொன்னீரே இப்பொழுது அடியோடு இல்லை என்கிறீரே இது என்ன பொய்” என்று கேட்க தலை குனிந்து கொண்டார். கடைசியாக வேறு வழி யில்லாத போது “நாயக்கர் என்னை மோட்டார் கார் கேட்டார், நான் கொடுக் காததற்காக என்னைக் கெடுக்கப் பார்க்கிறார்” என்று அழுதார். நமது சென்னைக் கார்ப்பரேஷன் தலைவர் சாமிவெங்கிடாசலம் செட்டியாரோ கார்ப்பரேஷன் பணத்தில் தன் வீட்டுக்கு டெலிபோன் வைத்துக் கொண் டதைப் பற்றி கேட்டால் சர்.பி.தியாகராய செட்டியார் வைத்துக் கொண்டார், அதனால் நானும் அப்படியே வைத்துக்கொண்டேன் என்றார். சர்.பி.டி.செட் டியார் கார்ப்பரேஷன் பணத்தில் டெலிபோன் வைத்துக் கொள்ளவில்லை என்று ஆதாரம் காட்டியபின், அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டு தணி காசலம் செட்டியார் வைத்துக்கொண்டார், அதனால் வைத்துக் கொண்டேன் என்றார். அவரும் வைத்துக் கொள்ளவில்லை என்று ஆதாரம் காட்டினால் இப்போது திருமலைபிள்ளை வைத்துக்கொண்டார். அதனால் வைத்துக் கொண்டேன் என்கிறார். இப்படியே இது எங்கு போய் நிற்குமோ தெரிய வில்லை.
தவிற, தான் ஒருபோதும் ஜஸ்டிஸ் கட்சியில் சேரவில்லை என்கிறார். சேருவதற்காக தான் போட்ட விண்ணப்பத்தை காட்டினால், தெலுங்கர் கக்ஷி உண்டாக்குவதற்காக ஜஸ்டிஸ் கக்ஷியில் சேர்ந்தேன் என்று சொல்லுகிறார். இது என்ன மானக்கேடு? பரிசுத்தமும் கட்டுப்பாடும் ஒற்றுமையும் இருப்ப தாய் சொல்லப்படும் சுயராஜ்யக் கட்சியில் பொய் சொல்லுகிற விஷயத்தில் தான் பரிசுத்தமான பொய்யும், எல்லோரும் கட்டுப்பாடாகச் சொல்லும் பொய்யும், அய்யங்கார் சென்ற வழியிலேயே செட்டியார் செல்லுகிறது என்கிற ஒற்றுமையான பொய்யுமாய் இருக்கிறதே தவிற வேறுயோக்கிய மான காரியத்தில் ஒன்றையும் காணோம். ஐயோ! சுயராஜ்யக்கக்ஷியே ! உன்னை மதிக்கும் ஜனங்களும் இருக்கிறார்களே! அவர்களை நினைத்து அழுவதா? அல்லது உன்னை நினைத்து அழுவதா?
குடி அரசு – கட்டுரை – 20.06.1926