சுயராஜ்யக் கட்சி – சித்திரபுத்திரன்

தென்னாட்டு அய்யங்கார் பிராமணர்களால் சுயராஜ்யக் கட்சி ஆக்கப் பட்டிருந்தாலும் அதற்குப் பிறப்பிடமாகவும் முதல் பலியாகவும் கொடுக்கப் பட்டது வங்காளமும் பிராமணர் வலையில் சிக்கி ஏமாந்த தேசபந்து தாசருமே யாகும். எப்படியோ, தேசபந்து தாஸ் தனது குற்றத்தை உணர்ந்து வருத்தப் படுவதற்கு முன்னும் உலகத்தார் திட்டும் வார்த்தைகள் தன் காதுக்கு எட்டு வதற்கு முன்னும் பரமபதமடைந்துவிட்டார். தென்னாட்டு பிராமணர்களும் அவருக்கு தென்னாட்டில் கோவில் கட்டி, உருவம் வைத்து, பிரதிஷ்டை செய்துவைத்து விட்டார்கள். விபூஷணஆழ்வார் உருவத்திற்கு வைணவக் கோவில்களில் கிடைத்திருக்கும் இடத்திற்கு மேலாகவே நமது தாஸர் உருவத் திற்கு “சுதேசமித்திரன்” ஆபீசில் இடம் கிடைத்து விட்டது. அதுமாத்தி ரமல்லாமல் நம்நாட்டு பிராமணச் சூழ்ச்சிக்கும் நமது தாஸர் வாழ்க்கையே அடிக்கடி “வேதக் கட்டளையாக” எடுத்துச் சொல்லப்படுகிறது. ஆனால் அவர் பிறந்த வங்காளத்தில் தாஸர் வாக்கு சிரிப்பாய் சிரிக்கிறது. அவர் சிஷ்யர்களும் அவருடைய உபதேசங்களைக் காற்றில் பறக்கவிட்டு விட்டார் கள். கல்கத்தா இந்து முஸ்லீம் ஒப்பந்தமும் இந்து முஸ்லீம் ஒற்றுமையும் இப்போது எவ்வாறு இருக்கிறது? கல்கத்தா இந்து முஸ்லீம் கலவரமும் வங்காள மாகாண மகாநாடு நடவடிக்கையும் கவனித்தவர்கள் வங்காளத்தில் தாஸருக்கு என்ன மதிப்புக் கொடுத்திருக்கிறார்கள் என்பது விளங்கும். “500 பிரதிநிதிகள் ஒன்றுகூடி வங்காள ஒப்பந்தத்தை ரத்து செய்தார்கள்” என்கிற செய்தி எட்டியிருக்கிறது. இது சட்டப்படி செல்லுமா இல்லையா ? என்பதைப் பற்றி நமக்குக் கவலையில்லை. வங்காளத்தில் சுயராஜ்யக் கட்சிக்கு உள்ள செல்வாக்கையோ அல்லது சுயராஜ்யக் கட்சிக்கு எவ்வளவு கட்டுப்பாடு இருக்கிறது என்கிற விஷயத்தையோ இதிலிருந்து அறிந்துகொள்ளலாம். அல்லாமலும், சட்டசபைகளை விட்டு வெளியேறிய கனவான்களில் வங்காள சட்டசபைக்காரர்கள்தான் மறுபடியும் சட்டசபைக்குள் ‘அவசரச் சட்டத்தைத் தடுக்கிறோம்’ என்கிற பெயரின் பேரில் முதல் முதல் உள்ளே நுழைந்தவர்கள், நுழைந்து சட்டத்தைத் தடுத்தார்களா? இவர்களால் தடுக்க முடிந்ததா? அன்றைய பிரயாணப்படி சுயராஜ்யக் கட்சி மெம்பர்களுக்கு லாபமாயிற்று. சுயராஜ்யக் கட்சி மெம்பர்களும் இருந்துதான் அவசரச் சட்டம் சட்டசபையில் நிறைவேறிற்று என்கிற கௌரவம் சர்க்காருக்கு கிடைத்தது. இதனால் கஷ்டப் படுகிறவர்கள் பொது ஜனங்கள்.

சென்னை மாகாணத்தின் யோக்கியதையோ வெளியில் பேச வெட்கக் கேடு. அய்யங்கார்களும், அய்யர்களும்தான் சுயராஜ்யக் கக்ஷிக்கு மெம்பர் கள். மற்றபடி யாருக்காவது உத்தியோகமோ, பதவியோ, வயிற்றுக்குக் கஞ்சி யோ கொடுப்பதாய்ச் சொன்னால்தான் இவர்களுக்கு பிராமணரல்லாதார் களில் சத்தம் போடவோ, கூடத் திரியவோ இரண்டொரு ஆட்கள் கிடைக்கும். அது நின்று போனவுடனே அந்த ஆட்களே இவர்கள் பேரில் திரும்பிக் கொள்ளுவார்கள். சென்னை மாகாணத்தில் உத்தியோகம் கிடைக்காததினால் மந்திரிகள் பேரில் கோபித்துக் கொண்டும், காங்கிரசில் சேர்ந்து வீராப்பு பேசுவதற்கு வெட்கப்பட்டுக் கொண்டும், சர்க்காருக்கு நல்ல பிள்ளைகளாய் நடக்க ஆசைப்பட்டுக் கொண்டும் இருந்த சுயேச்சைக் கக்ஷியார் என்கிற ஒரு கூட்டத்தார், தங்களுக்கு தேசத்தில் அடியோடு மதிப்பில்லை என்பதை அறிந்து, தங்கள் மானம் வெட்கத்தையெல்லாம் சுட்டெரித்து, தாங்கள் விடிய விடிய குற்றம் சொல்லி பரிகாசம் செய்து கொண்டிருந்த கக்ஷியாகிய சுயராஜ்யக் கக்ஷியில் சரண் புகுந்தார்கள். சுயராஜ்யக் கக்ஷியாருக்கும் இவர் களை விட வேறு கதியில்லாததால் அவர்களையும் இவர்கள் அழைத்தார்கள். இதைப்பற்றி அவர்களைக் கேட்டதற்கு, சுயராஜ்யக் கக்ஷிக் கொள்கையை நாங்கள் ஒப்புக் கொள்ளவில்லை, ஒற்றுமையை உத்தேசித்து ஒப்பந்தத்தில் மாத்திரம் கையெழுத்துப் போட்டோம் என்று சொன்னார்கள். (என்ன ஒப்பந் தம்? இரண்டு பேரும் சேர்ந்து பாமர ஜனங்களை ஏமாற்றலாம்; கிடைப்பதில் ஆளுக்குப் பாதி வைத்துக் கொள்ளலாம் என்கிற ஒப்பந்தம்.) அந்த ஒப்பந்தத் தின் பலனாய் சட்டசபை அபேட்சகர்களாய் சுயராஜ்யக் கட்சியாராலும் ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டார்கள்.

ஆனால், இப்போது பரஸ்பர ஒத்துழையாதார் என்கிற மற்றொரு கக்ஷியார் சென்னை மாகாணம் தவிர மற்ற மாகாணங்களில் தலைசிறந்து விளங்குவதால் சுயேச்சைக் கக்ஷிக்காரர்கள் ஒவ்வொருவராய் இப்போது பரஸ்பர ஒத்துழையாதார் கக்ஷியில் சேருகிறார்கள். சுயேச்சைக் கட்சித் தலைவர் ஸ்ரீமான் வெங்கட்டபதி ராஜு என்பவர் தன்னை சுயராஜ்யக் கட்சி யின் சார்பாய் சுயராஜ்யக் கட்சியார் சட்டசபைக்கு நிறுத்தாமல் ஒரு பிராமண னை நிறுத்தி விட்டதால், அவர் சுயராஜ்யக் கட்சியை விட்டுவிட்டு பரஸ்பர ஒத்துழைப்புக் கட்சியில் சேர்ந்து விட்டார். மற்றபடி, சுயராஜ்யக் கட்சியின் சார்பாக சட்டசபைக்கு நிறுத்தப்படும் ஆள்களின் யோக்கியதைகளைப் பற்றியோ கேட்க வேண்டியதில்லை. மானம், வெட்கம், சத்தியம், தேசபக்தி, நாணயம் ஆகிய குணங்களைச் சுட்டெரித்த பரிசுத்தவான்களாகப் பார்த்தே நியமிக்கிறார்கள். பிரசாரத்துக்கு வெளியில் போகும்போது கூட்டிக்கொண்டு போகும் ஆட்களைப் பற்றியோ சொல்லத் தேவையில்லை. அய்யங்கார் மடி யிலிருக்கும் பணம் காணாமல் போய்விட்டால் மடியைப் பிரித்து மூட்டையை அவிழ்த்து பரிசோதிக்கும்படியான நவமணிகளைத்தான் கூட்டிப் போவார் கள். பிரசங்கத்தின் தோரணையோ பிராமணரல்லாதவர்களுக்கெல்லாம் நாங்கள்தான் பிரதிநிதிகள்; எங்களோடுதான் எல்லா பிராமணரல்லாதார்களும் சேர்ந்திருக்கிறார்கள்; எங்கள் அங்கத்தவர்களும் எங்கள் பிரசாரகர்களும் பிராமணரல்லாதார்கள்தான் என்று பறையடிப்பார்கள். அங்கத்தவர்களோ சட்டசபைக்கு நிற்பவர்கள்; பிரசாரகர்களோ இரண்டணா காணாவிட்டாலும் மடியை அவிழ்த்துக் காட்ட வேண்டியவர்கள். இந்த நிலைமையில் நாட் டையே கலக்குகிறார்கள். சட்டசபை உத்தியோக ஆசை பிடித்தவர்கள் தவிர, சுயராஜ்யக் கட்சியில் சர்க்காருக்கு ஒரு நாலணாவாவது வரி கொடுக்கக்கூடிய குடியானவர்கள் எத்தனை பேர் சுயராஜ்யக் கட்சியில் அங்கத்தினர் அல்லது இந்த பிரசார உத்தியோகம் போய் விட்டால் வேறுவழியில் தங்களது மனச்சா க்ஷியை விற்காமல் ஜீவனம் செய்யலாம் என்று சொல்லக்கூடிய பிரசாரகர்கள் எத்தனை பேர் இவர்களோடு இருக்கிறார்கள்.

இவர்கள் தந்திரத்தையும் சூழ்ச்சியையும் அறியாமல், இதனால் தேசபக்தர்களாகலாமா என்று நினைத்துக்கொண்டு ஏதாவது ஒன்றிரண்டு உத்தமர்கள் இருந்தாலும் இருக்கலாம். அவர்களைப் பற்றி கவலையில்லை. தாங்கள்தான் பிராமணரல்லாதார் பிரதிநிதிகள்; தங்கள் கட்சியில்தான் பிராமணரல்லாதார் இருக்கிறார்கள் என்று சொல்லிக்கொள்ள இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது. உண்மையில் பிராமணரல்லாத அறிவாளி களோ, செல்வவான்களோ, முக்கியஸ்தர்களோ, தேசபக்தர்களோ, சுயராஜ்யக் கட்சியிலாவது, காங்கிரசிலாவது இருப்பார்களானால் இந்தியா சட்டசபைக்கு நிறுத்த இவர்களுக்கு பிராமணரல்லாதாரில் ஆள்கள் கிடைக்காமல் போவா னேன். வட ஆர்க்காடு, செங்கல்பட்டு, தென் ஆர்க்காடு ஆகிய மூன்று ஜில்லாவில் ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரிக்கு சமானமான ஆள்கூட இவர்கள் கக்ஷியில் பிராமணரல்லாதாரில் கிடைக்கவில்லையா? பெரிய மிராசுதார் களும் அறிவாளிகளும் உள்ள திருச்சி, தஞ்சை ஆகிய ஜில்லாக்களில் ஸ்ரீமான் ஏ. ரங்கசாமி அய்யங்காருக்கு சமானமானவர்கள் கூட கிடைக்க வில்லையா?

எவ்வளவோ செல்வவான்களும் அறிவாளிகளும் ஜமீன்தார்களும், தேசபக்தர்களும் நிறைந்த மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய ஜில்லாக்களில் ஸ்ரீமான் சேஷய்யங்காருக்கு சமானமானவர்கள் கூட கிடைக்க வில்லையா? சென்னையில் உள்ள அவ்வளவு பெரிய பிராமணரல்லாத பிரமுகர்களில் ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரைத் தவிர வேறு யாரும் கிடைக்கவில்லையா? அப்படியானால் இந்த பிராமணர்கள் வெட்கமில்லா மல் எப்படித் தங்களை பிராமணரல்லாதார் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்ள முடியும்? ஏதோ சில பிராமணரல்லாதார் அறியாமையாலும், வயிற்றுக் கொடுமையாலும் இவர்கள் பின்னால் திரிந்தால் அவர்களை வைத்துக் கொண்ட இவர்கள் பிராமணரல்லாதார் பிரதிநிதிகளாய் விடுவார் களா? தமிழ்நாட்டில் உள்ள பிராமணரல்லாதார் எல்லாரையும் தங்கள் பின்னால் திரிகிற சிலரைப் போலவே நினைத்து விட்டார்களா? இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? ஜஸ்டிஸ் கட்சியாராவது பிறரால் உத்தி யோக ஆசைபிடித்தவர்கள் என்று சொல்லப்பட்டாலும் பிராமணரல்லா தார்களைத் தவிர வேறு யாரும் அவர்கள் அங்கத்தினரல்ல. அவர்கள் கூட்டங்களிலும், மகாநாடுகளிலும் காங்கிரஸ், சுயராஜ்யக் கட்சியார் கூடுகிற கூட்டத்தைவிட எத்தனையோ மடங்கு அதிகமாய்க் கூடுகிறார்கள்.

எல்லா உத்தியோகமும் தங்களுக்கே வரவேண்டுமென்று அவர்கள் பாடுபட்டு உத்தியோகத்திற்கு ஒவ்வொரு ஆள்கள் வீத மாத்திரம் அந்தக் கட்சியில் இருப்பதாய் வைத்துக் கொண்டாலும், அந்த எண்ணிக்கையும் இந்த காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சி பிராமணர்களைவிட – இவர்களோடு திரியும் பிராமணரல்லாதார்களைவிட எத்தனையோ மடங்கு அதிகமாய்த்தானிருக் கும். மதுரை மாகாண காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தையும் சென்னை, கோவை, மதுரை நிர்வாகக் கமிட்டி கூட்டத்தையும் தமிழ்நாட்டின் சார்பாய் எல்லா இந்திய காங்கிரசிற்கும் சபர்மதி ஒப்பந்தத்திற்கும் போன கூட்டத்தையும் எண்ணிப் பார்த்துவிட்டு, இவர்கள் பொதுக்கூட்டத்திற்கும் ஜஸ்டிஸ் கட்சி பொதுக் கூட்டத்திற்கும் வரும் ஜனங்களையும் அதிலுள்ள பிராமணர் -பிராம ணரல்லாதாரின் எண்ணிக்கையும் பார்த்தால் எது பொது ஜனங்கள் பிரதிநிதித் துவம் பொருந்தியது? எது பிராமணரல்லாதார் பிரதிநிதித்துவம் பொருந்தி யது? எது பிராமணர்கள் பிரதிநிதித்துவம் பொருந்தியது? என்பது கடுகளவு மூளை உள்ளவனுக்கும் விளங்காமல் போகாது.

நமது நாட்டில் பிராமணப் பத்திரிகைகள் பிராமண சூழ்ச்சியில் செல்வாக்குப் பெற்றுவிட்டதினாலும், பிராமண வக்கீல்கள் செல்வாக்குப் பெற்றுவிட்டதாலும், உத்தியோகங்களிலும், பிராமணர்கள் செல்வாக்குப் பெற்றுவிட்டதாலும், பாமர ஜனங்கள் ஏமாறவும் பயப்படவும் ஏற்பட்டுப் போய்விட்டதால் பிராமணரல்லாதாரை பிராமணர்கள் ஏமாற்ற வசதி ஏற்பட்டு விட்டது. ஆதலால் பிராமணரல்லாத உண்மை தேசபக்தர்கள் சிலராவது ஒன்றுகூடி இந்த பிராமணர்கள், காங்கிரஸ் என்பதன் பெயராலும், மகாத்மா வின் பெயராலும், சுயராஜ்யக் கட்சி என்பதன் பெயராலும் செய்யும் புரட்டு களையும், பித்தலாட்டங்களையும் பாமர ஜனங்கள் அறியும்படி வெளியிலெ டுத்துச் சொல்லவும், சொல்லக்கூடிய பத்திரிகைகளை அவர்களிடம் பரப்ப வுமான தொண்டை கொஞ்ச காலத்திற்காவது செய்து வந்தால் நமது நிலை இப்படி எடுப்பார் கைக் குழந்தையாய் இனி இருக்க முடியாது என்றே சொல்லுவோம்.

குடி அரசு – கட்டுரை – 30.05.1926

You may also like...

Leave a Reply