ஹிந்து மஹாசபை
ஹிந்து மஹாசபையைப் பற்றி நாம் பல தடவைகளில் அது வர்ணா சிரம சபை என்றும், இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு விரோதமான சபை என்றும், பிராமணாதிக்கத்திற்காக உழைக்கும் சபை என்றும் எழுதி வந்தது வாசகர் களுக்கு ஞாபகமிருக்கலாம். சில நண்பர்களுக்கு இவ்வாறு எழுதியதைப் பற்றி மனவருத்தம் ஏற்பட்டிருந்தாலும் இருக்கலாம். ஆனால் இப்பொழுது வரவர அதன் யோக்கியதை நாம் எழுதியபடியே முழுவதும் வெளியாகி விட்டது. அதாவது, விதவா விவாகத் தீர்மானம் ஹிந்து மஹாசபை மஹா நாட்டின் விஷயாலோசனைக் கமிட்டியில் நிறைவேறினதும், அதன் அக்கிரா சனராகிய பண்டித மாளவியா மஹாநாட்டுப் பந்தல் பக்கம் கூட எட்டிப் பார்க்கமாட்டேன் என்று அத்தீர்மானத்திற்கு ஆதாரமாயிருந்தவர்களை விரட்டித் தீர்மானத்தையே மஹாநாட்டிற்கும் கொண்டு வரவிடாமல் நசுக்கி விட்டார். பின்னர் தீண்டாமையைப் பற்றின தீர்மானம் மஹாநாட்டில் நிறை வேறினவுடன் சபையில் உள்ளவர்களெல்லாம் எழுந்து ஓடிப்போய் விட்டார்களாம் . ஆதலால் தலைவர்கள் எழுந்து போனவர்களை அழைத்து வந்து இத்தீர்மானத்தின் ரகசியத்தை எடுத்துரைத்து, அதாவது இத்தீர்மா னத்தில் தீண்டாமை ஒழியத் தகுந்த மாதிரி எந்த விதமான ஏற்பாடும் நாங்கள் செய்துவிடவில்லை. பொது ஜனங்களை ஏமாற்றுவதற்காக வேண்டி ஏதோ தீண்டாமையில் அக்கறையுள்ளவர்கள் போல் காட்டுவதற்காகச் செய்யப் பட்டதே ஒழிய வேறல்ல என்று பொருள்படும்படி பேசி அத்தீர்மானத்தில் யாதொரு சத்துமில்லை என்கிற ரகசியத்தை வெளிக்காட்டி, அதுவும் ஏற்பாடு செய்யுங்களென்று கேட்டுக் கொள்ளுகிறோமேயல்லாமல் வேறில்லை. உங்களுக்கு இஷ்டமிருந்தால் செய்யுங்கள், இல்லாவிட்டால் வேண்டாம். வெளிப் பிரசாரத்திற்கு இம்மாதிரி தீர்மானங்களையெல்லாம் நிறைவேற்ற வேண்டியிருக்கிறது. காரியத்தில் செய்யவில்லையானால் பரவாயில்லை. அது உங்கள் இஷ்டம் என்று சொன்ன பிறகுக் கூட வெளியே போனவர்கள் போயே தீர்ந்தார்களாம். இதோடு ஹிந்து மஹாசபையின் தீர்மானங்களையும், உரிமைகளையும் காப்பாற்றுவதாக வாக்களிப்பவர்களுக்கு மாத்திரமே வோட்டு கிடைக்கும்படி பிரசாரம் செய்ய வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார்களாம். இதிலிருந்து அறியக் கிடப்பதென்னவென்றால் விதவா விவாகத்தையும், தீண்டாமை ஒழிப்பதையும் ஒப்புக்கொள்ளுகிறவர்களுக்கு ஹிந்து மஹாசபை எதிர் பிரசாரம் செய்யும் என்பதும், மகாத்மா காந்தியடி களே சட்டசபைக்கு நிற்பினும் அவருக்குக்கூட வோட்டுக் கொடுக்கக் கூடாதென்றேதான் சொல்லும். இதுவே அதன் கொள்கையுமாகும் என்பதை இப்பொழுதாவது வாசகர்கள் உணர்வார்கள் என்று நினைக்கிறோம்.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 21.03.1926