7000 ஆண்டுகளுக்கு முன்பு விமானம் விட்டார்களாம்!
பிரதமர் மோடி தொடங்கி வைத்த, மும்பையில் நடந்த இந்திய அறிவியல் காங்கிரசில் (ஜன.3-7) படிக்கப்பட்ட சில கட்டுரைகள் – சர்வதேச விஞ்ஞானிகளிடையே இந்தியாவை கேலிக்கும் அவமானத் துக் கும் உள்ளாக்கியிருக்கிறது.
‘சமஸ்கிருதத்தில் அறிவியல்’ என்ற தலைப்பில் ஒரு தனி அமர்வு அமைக்கப்பட்டதாம் அதில் ‘ஆய்வு’ கட்டுரை ஒன்றை படித்திருக்கிறார், விமான கேப்டனாக இருந்த போடாஸ் என்பவர், 7000 ஆண்டு களுக்கு முன்பே, முன்னோர்கள் விமானம் ஓட்டியதாகவும், அந்த விமானம் பூமியில் மட்டுமல்ல, வானமண்டலத்திலேயே கிரகங்கள் விட்டு கிரகங்களுக்கு பறந்ததாகவும் – ஏதோ, பள்ளிக்கூட மாணவன் தேர்வு மதிப்பெண்ணுக்கு எழுதும் கற்பனைக் கட்டுரை போல தரம் தாழ்ந்த ஒரு ‘ஆய்வை’ முன் வைத்திருக்கிறார். கொதித்துப் போன, அமெரிக்காவில் ‘நாசா’வில் பணியாற்றும் இந்திய விஞ்ஞானி காந்தி ராமனும், 200க்கு மேற்பட்ட அறிவியல் விஞ்ஞானி களும் இந்த உரையை வன்மையாகக் கண்டித்ததோடு, இதுபோன்ற கட்டுரைகள், இந்திய அறிவியலின் பெருமைகளை மிகவும் கீழ்த்தரமாக்கி விடும் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
வானில் பறப்பது என்பது ஒரு மனிதனின் கனவாக இருந்திருப்பதில் எந்த வியப்பும் இல்லை. அப்படி கனவு கண்டவர்கள் வெளிப்படுத்திய விருப்பங்களையெல்லாம் பார்ப்பனர்கள் தங்களின் ‘சமஸ்கிருத’ப் பெருமையாக்குவது வெட்கக்கேடு அல்லவா? இதற்கு மறுப்பாக ‘தமிழ் இந்து’ நாளேட்டில் வெளிவந்த ஒரு மறுப்புக் கட்டுரையிலிருந்து சில பகுதிகளை வெளியிடுகிறோம்:
“ரைட் சகோதரர்கள் 1903ஆம் ஆண்டுக்கு முதன்முதலாக விமானத்தில் பறக்க முடிந்தது என்றால், அறிவியல் அதற்கு முன்னால் பல மைல்கற்களைத் தாண்ட வேண்டி யிருந்தது. நியூட்டனின் விதிகளும் பெர்னூலியின் கொள்கையும் இல்லையென்றால், விமானம் பிறந்திருக்காது.
இரப்பர், அலுமினியம், பெட்ரோல் இல்லையென்றால் விமானம் பிறந்திருக்காது. எல்லாவற்றுக்கும் மேலாக ‘உள் எரிபொறி’ (இன்டெர்னல் கம்ப்ரஷன் இன்ஜின்) கண்டுபிடித்திருக்காவிட்டால், விமானம் பிறந்திருக்காது. மற்றைய அறிஞர்களின் தோள்களில் ஏறி நின்றே புதுப்புதுக் கண்டு பிடிப்புகளை அறிவியலாளர்கள் நிகழ்த்துகிறார்கள். இந்தக் கண்டுபிடிப்பு மற்றும் கொள்கைச் சங்கிலிகளில் ஒரு இணைப்பு அறுந்தாலும், புதிய கண்டுபிடிப்புகள் அரிதாகிவிடும். மேலாக, மனிதனுக்குப் பயன்படும் எந்த அறிவியல் கண்டு பிடிப்பையும் அவன் மறந்ததாகத் தெரியவில்லை. எனவே, விமானங்களைச் செய்து அவற்றைப் பறக்க வைக்கும் தொழில்நுட்பம் மனிதனுக்குத் தெரிந்திருந்தால், அதை அவனால் மறந்திருக்கவே முடியாது.
காப்டன் போடாஸ் கட்டுரை ‘வ்யாமானிக சாஸ்திரம்’ என்ற புத்தகத்தைப் பற்றியது. பாரத்வாஜ முனிவரால் எழுதப்பட்ட இந்தப் புத்தகம், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று சொல்லப்படுகிறது. ஆனால், இந்தப் புத்தகத்தை ஆராய்ந்த இந்திய அறிவியல் கழக விஞ்ஞானி தேஷ்பாண்டே என்பவர், இந்தப் புத்தகத்தை 1904ஆம் ஆண்டுக்கு முன்னால் எழுதியிருக்க முடியாது என்பதையும், அதில் கொடுக்கப்பட் டிருக்கும் முறைப்படி விமானம் செய்தால் அது பறக்க முடியாது என்பதையும் தெளிவாகச் சொல்லி யிருக்கிறார்” என்று அந்தக் கட்டுரை போலி அறிவியலை மறுத்துள்ளது.
‘இந்திய அறிவியல் காங்கிரஸ்’ முதன்முதலாக 1914ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. சென்னையில் இரண்டாவது அறிவியல் காங்கிரஸ் மாநாடு இன்றைக்கு 99 ஆண்டுகளுக்கு முன் சென்னை மாநில கல்லூரியில் கூடியபோது, காங்கிரசின் தலைவராக இருந்த மருத்துவர் டபிள்யூ.ஆர். பென்னர்மேன், “இந்த காங்கிரசின் நோக்கமே மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடுவதுதான்” என்று தெளிவுபடுத்தினார். அப்போது, மலேரியா, காலரா, வாந்தி பேதி, பிளேக் போன்ற நோய்கள் கட்டுப் படுத்த முடியாமல் பரவிக் கொண் டிருந்தது. அந்த நோய்களைத் தவிர ‘பேய், பிசாசு, ஆவி, பில்லி சூன்யம்’ போன்ற வியாதிகள் மக்களிடம், படித்தவர் படிக்காதவர்கள் என்கிற வேறுபாடின்றி பரவிக் கிடப்பதை சுட்டிக்காட்டிய பென்னர்மேன், இந்த மூடநம்பிக்கை வியாதிகளை எதிர்த்துப் போராடுவதே அறிவியல் காங்கிரசின் நோக்கம் என்று தெளிவுபடுத்தினார். இப்போது கூடிய 102ஆவது காங்கிரசு மூடத்தனங்களையும் போலி அறிவியலையும் அறிவியலாக்க முயற்சிப்பது மிகப் பெரும் தலைகுனிவாகும்.
பெரியார் முழக்கம் 15012015 இதழ்