வெளிநாடு செல்ல விரும்பும் ஈழத் தமிழர்களிடம் அதிகாரிகளின் கெடுபிடிகளை தளர்த்துக! குடியுரிமை அதிகாரியிடம் கழக சார்பில் மனு
இலங்கை இராணுவத்தின் ஒடுக்கு முறைகளிலிருந்து தப்பித்து, ஈழத் தமிழர்கள், கடல் வழியாக படகுகள் வழியாக தாய்த் தமிழகம் நோக்கி அகதிகளாக வருகிறார்கள். படகுகளில் வர முடியாதவர்கள், சுற்றுலாப் பயணிகள் என்ற பெயரில் ‘விசா’ பெற்று விமானம் மூலம் அகதிகளாக வருகிறார்கள். இவர்களும் அகதிகளாக தமிழகம் நோக்கி வந்தவர்கள்தான். இவர்கள் தாய்நாட்டுக்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ திரும்பும்போது இந்தியாவில் அனுமதித்த காலத்தைவிட கூடுதலான காலம் தங்கியதற்காக விதிக்கப்படும் அபராதத் தொகை பல மடங்கு அதிகமாக்கப்பட்டுள்ளதால் அவர்கள் கடும் துயரத்துக்கு உள்ளா வதை சுட்டிக்காட்டி, திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சென்னை சாஸ்திரி பவனிலுள்ள தலைமை குடியுரிமை அதிகாரியிடம் பொதுச் செய லாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் செப். 25 பகல் 11 மணி யளவில் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது.
“கடந்த வருடத்திற்கு முன்பு வரை ஈழத் தமிழர்கள் தங்கள் தாயகத்திற்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ செல்ல வேண்டுமானால் விசாக் காலம் முடிந்து தங்கியிருக்கும் காலத்திற்கான அபராதத் தொகை மூன்று மாதத்திற்கு ரூ.100 மட்டுமே. ஆனால் தற்போது அபராதத் தொகை பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நபர் ஒருவருக்கு – முதல் 3 மாதங் கள் வரை கூடுதலாக தங்கினால் – ரூ.1,800; 3 மாதங்களிலிருந்து 2 ஆண்டு கள் வரை தங்கினால் – ரூ.7,800; 2 ஆண்டுகளுக்கு மேல் தங்கிவிட்டால் – ரூ. 13,800 அபராதமாக விதிக்கப்படு கிறது. அதேபோல், விசா அபராதக் கட்டணமும் ஒவ்வொரு 3 மாதத்திற் கும் ரூ.900 என்ற வகையில் விதிக்கப் படுகிறது.
இதனால் ஒரு குடும்பத்தில் 4 பேர் இருந்தால் இலட்சக்கணக்கில் அபராதத் தொகை கட்ட வேண்டியிருக் கிறது. உயிர்பிழைக்க தாய்த் தமிழகம் நோக்கி அடைக்கலம் தேடி வந்த ஈழத் தமிழர்கள் மீது இப்படி சுமை ஏற்று வது மனித நேயத்துக்கு எதிரானது. அதுபோலவே வெளிநாடு செல்ல விரும்புவோர் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களும் மேலும் கூடுதலாக்கப் பட்டுள்ளன.
விசா படிவம், காவல்துறை ஆய்வாளரிடமிருந்து பெறப்பட்ட சான்றாவணம், வீட்டு உரிமையாளரி டமிருந்து ஒரு கடிதம் – என்ற அளவோடு இருந்த நிலை இப்போது கடுமையாக்கப்பட்டு, அதிகாரிகள் தேவையற்ற ஆவணங்களை சமர்ப் பிக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்துகிறார்கள்.
இணைய தளம் மூலமாக விசா மனு தாக்கல் செய்ய வேண்டும்.
வீட்டு உரிமையாளரின் சான்று.
இவர்தான் வீட்டு உரிமையாளர் என்பதற்கான முகவரிச் சான்று.
இவர்தான் வீட்டு உரிமையாளர் என்பதற்கான புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை சான்று.
வீட்டின் உரிமையாளரே தன் இமெயில் முகவரியில் இருந்து குடி யுரிமை அலுவலகத்திற்கு தன் வீட்டில் தான் குடியிருக்கிறார் என்று தகவல் அனுப்ப வேண்டும். இது தவிர அந்த வீட்டில்தான் குடியிருக்கிறார் என்று வீட்டின் அருகிலுள்ள இரண்டு நபர்களின் சான்று.
பழைய கடவுச் சீட்டை ஒப்படைத் ததற்கான இலங்கை துணைத் தூதரகத் தின் சான்று (பழைய கடவுச் சீட்டை ஒப்படைத்த பிறகே புதிய கடவுச் சீட்டு வழங்கப்படுவதும் அதிலேயே அவர்கள் பழையதை ஒப்படைத்ததற் கான சான்று இருந்தாலும், தேவை யில்லாமல் இது கேட்கப் படுகிறது).
இது தவிர வழக்குகள் ஏதுமில்லை என்பதற்கான காவல்துறை சான்று – என்று ஆவணங்கள் கேட்கப்படு கின்றன.
பொதுவாக காவல் நிலையத்தில் வழங்கப்படும் பதிவுச் சான்றிதழ் அல்லது வழக்கில்லா சான்றிதழே விசா நீடிப்பு செய்வதற்கும் புதிய விசா வழங்குவதற்கும் போதுமானது. ஆனால் குடியுரிமை அலுவலக அதிகாரிகளோ தேவையில்லாமல் ஈழத் தமிழர்களை துன்புறுத்தி அலைக் கழிக்கும் நோக்கத்தில் இது போன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட் டுள்ளது.
மேற்குறிப்பிட்ட இந்தப் புதிய உத்தரவினால் ஈழத் தமிழர்கள் இங்கு மேலும் மேலும் இன்னலுக்குள்ளா வதுடன் இலங்கைக்கோ அல்லது வெளிநாட்டிற்கோ செல்லாமலும் எந்த வசதி வாய்ப்புகளும் இல்லாமலும் அவதிப்படுவதோடு மேற்படி குடியுரிமை அதிகாரிகள் கேட்கும் ஆவணங்களினால் வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீட்டில் குடியிருக்கும் ஈழத் தமிழர்களை வீட்டை விட்டு காலி செய்யும் நிலைமையும் ஏற்படுகிறது” – என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
குடியுரிமை அதிகாரி மனுவில் அடங்கியுள்ள கருத்துகளை பொறுமையாகக் கேட்டு, கவனம் செலுத்துவதாகக் கூறினார். கழகப் பொதுச்செயலாளருடன் தலைமைக் கழகச் செயலாளர் தபசி குமரன், அன்பு தனசேகரன், மாவட்ட செயலாளர் உமாபதி, மாவட்ட தலைவர் வேழவேந்தன், மாணவர் கழக அமைப்பாளர் பாரி சிவா உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர். நிகழ்வில் கழகத் தோழர்கள் ஏராளமாகப் பங்கேற்றனர்.
பெரியார் முழக்கம் 01102015 இதழ்