கழகத்தினர் மீது குண்டர் சட்டம் : த.பெ.தி.க. கண்டனம்
திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டதைக் கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் ஆனூர் செகதீசன் விடுத்துள்ள அறிக்கை.
“தொலைக்காட்சி நிலையத்தின் மீது வெடிகுண்டு வீசிய இந்து மதவெறியர்கள் மீது சாதாரண வழக்கு. ஆனால், தந்தை பெரியார் படத்தின் மீது காவல்துறை அதிகாரிகள் முன்பே சிறுநீர் கழிப்பது, செருப்பால் அடிப்பது, தீ வைத்து எரிப்பது போன்ற சம்பவங்கள் செய்தவர்கள் மீது தமிழக காவல்துறை சிறு வழக்குகூட பதிவு செய்யவில்லை. பெரியாரைப் பற்றி மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டிய பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எச்.ராஜா மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காத காரணத்தால், உணர்ச்சி வசப்பட்ட பெரியாரின் தொண்டர்கள் சிலர் பார்ப்பன அர்ச்சகர் அணிந்திருந்த பூணூலை அறுத்ததற்கு திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் மீது மட்டும் குண்டர் சட்டம் போடுவதை வன்மையாக கண்டிக்கிறோம். தமிழ்நாட்டில் நில அபகரிப்பு, மணல் கொள்ளை, பெண்களிடம் நகைக் கொள்ளை, கட்டப் பஞ்சாயத்துக்கள் செய்யும் அரசியல்வாதிகளின் மீது பாயாத குண்டர் சட்டம் பெரியாரின் தொண்டர்கள் மீது பாய்வதா! ஏப்ரல் 14ஆம் தேதி பெரியார் திடலுக்குள் அத்துமீறி நுழைந்து, திராவிடர் கழகத் தோழர்கள் மீது கொலை வெறியோடு தாக்கிய பெட்ரோல் வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்கள் கொண்டுவந்த பாரத் இந்து முன்னணி மீது குண்டர் சட்டம் பாயாதது ஏன்? இந்த தமிழ்நாட்டில் பகுத்தறிவுவாதிகள், நாத்திகர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள், சிறுபான்மை மக்கள் வாழ்வதற்கு வழியற்ற நாடாக தமிழ்நாடு மாறிக் கொண்டு வருகிறது. தமிழ்நாடு காவல்துறையின் கட்டுப்பாட்டில் இயங்குகிறதா! அல்லது காவித்துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறதா! திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த இராவணன், கோபி, திவாகர், பிரதீப், நந்தக்குமார், பிரபாகரன் போன்ற தோழர்களை உடனடியாக விடுதலை செய்யும்படி தமிழக அரசையும், தமிழக காவல்துறையையும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஆனூர் செகதீசன் அறிக்கையில் கூறியுள்ளார்.
பெரியார் முழக்கம் 21052015 இதழ்