சாகித்ய அகாடமி விருதை திருப்பி அனுப்பினார்!
பிரபல கன்னட எழுத்தாளர் கல்புர்கி கொலை செய்யப்பட்டது, நாடு முழுவதும் படைப்பாளிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், சாகித்ய அகாடமி விருது பெற்ற இந்தி எழுத்தாளர் உதய் பிரகாஷ் தான் பெற்ற அகாடமி விருதை மீண்டும் அரசிடம் திருப்பி அளிக்க முடிவு செய்துள்ளார்.
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உதவிப் பேராசிரியரான இவர், தன்னுடைய முடிவை தனது முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில் அவர் தனக்கு அளிக்கப்பட்ட விருதுடன், ரூ.1 இலட்சம் ரொக்கப் பரிசையும் திருப்பி அளிக்க உள்ளதாகக் கூறியிருக்கிறார்.
மேலும் அவர் கூறும்போது, “இந்த முடிவு பற்றி வேறு எந்த எழுத்தாளர்களுடனும் நான் விவாதிக்கவில்லை. இது முழுக்க முழுக்க நானே எடுத்த முடிவு. கல்புர்கியின் கொலைக்கு இந்துத்துவ சக்திகளே காரணம். இந்தச் சம்பவம் என்னை உலுக்கியிருக்கிறது. இப்போது நான் மவுனித்திருக்கக் கூடிய நேரம் கிடையாது. மவுனம் இதுபோன்ற நடவடிக்கைகளை இன்னும் அதிகரிக்கவே செய்யும்” என்றார்.
2010-2011ஆம் ஆண்டு இவரின் ‘மோகன்தாஸ்’ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக இவருக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.
பெரியார் முழக்கம் 10092015 இதழ்