மாவட்டக் கழகக் கலந்துரையாடல்கள் எழுச்சி நடை சேலம் மேற்கு, கிழக்கு மாவட்டங்கள், கழக ஏட்டுக்கு  ரூ. 2,48,500 சந்தாத் தொகை

சேலம் : சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் 05.01.2023 வியாழன் காலை 10.00 மணியளவில் கொளத்தூர் எஸ்.எஸ். மஹாலில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது.  கலந்துரையாடல் கூட்டம் கடவுள் மறுப்பு – ஆத்மா மறுப்புடன் தொடங்கியது.

கூட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் சி.கோவிந்தராஜ் வரவேற்புரையாற்றினார். அவர் தனது உரையில் சேலம் மேற்கு மாவட்டத்தில் 2023ஆம் ஆண்டிற்கான ‘புரட்சிப் பெரியார் முழக்க’ சந்தா இதுவரை 475 ஆண்டு சந்தாக்களும், 84 ஐந்தாண்டு சந்தாக்களும் பெறப்பட்டுள்ளது எனவும் மீதமுள்ள சந்தாக்களை விரைவில் முடித்து கொடுக்க வேண்டுமாய் தோழர்களிடம் கேட்டுக் கொண்டார். (கிழக்கு மாவட்ட சந்தாக்களையும் சேர்த்து ரூ.2,48,500/- வழங்கப்பட்டது)

தொடர்ந்து பேசிய கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், “தமிழ்நாடு அரசு நமது இயக்க செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறதென்றும், தோழர்கள் அனைவரும் நமது இயக்க ஏடான (புரட்சிப் பெரியார் முழக்க’த்தை முழுமையாகப் படிக்க வேண்டுமென்றும், பொதுச்செயலாளரின் ‘வாட்ஸ் ஆப்’ உரைகளை முழுமையாகக் கேட்டு அதனை மற்ற நண்பர்களுக்கும் பகிர வேண்டும்” எனவும் குறிப்பிட்டார்.

அவரைத் தொடர்ந்து கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தலைமைக்குழு உறுப்பினர்கள் காவை ஈஸ்வரன், அ.சக்திவேல், சூலூர் பன்னீர்செல்வம் ஆகியோர் தமது கருத்துக்களை எடுத்துரைத்தனர். தொடர்ந்து கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒன்றிய, நகர, கிளைக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் தங்களது கருத்துக்களை கூறினார்கள்.  குறிப்பாக அனைவரும் இனிவரும் காலங்களில் கிராமங்கள்தோறும் தெருமுனைக் கூட்டங்களை நடத்த வேண்டுமென்ற கருத்தை முன்வைத்தனர்.

பெரியார் முழக்க ஐந்தாண்டு, ஆண்டு சந்தாவாக 1,25,000 ரூபாய் கழகத் தலைவரிடம் கொடுக்கப்பட்டது.

நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி தமது உரையில் “தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் தோழர்களை சந்திப்பதன் நோக்கம் என்பது கழக அமைப்புகளை புதுப்பித்தல் மற்றும் பெரியார் முழக்க சந்தா சேர்ப்பு ஆகிய இரண்டும் என்றும், பெரியார் முழக்க செய்திகளை எத்தனை பேர் படிக்கின்றோம் என்பதை ஆய்வு செய்ய வேண்டுமெனவும், நமது இயக்க ஏடான பெரியார் முழக்கத்தை அனைத்து நூலகங்களுக்கும் செல்வதற்கு தோழர்கள் முயற்சிக்க வேண்டுமென்றும், கழக இணையதளத்தை தோழர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும், அனைத்துப் பகுதி பொறுப்பாளர்களும், தோழர்களும் புதிய உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டுமென்றும், அதே போல் வருகின்ற தோழர்களை தக்கவைக்க முயற்சி செய்ய வேண்டுமெனவும்” குறிப்பிட்டு பேசினார்.

மறைந்த மேட்டூர் திராவிடர் கழக தலைமைக் குழு உறுப்பினர்  மு.ஹ. சந்திரசேகரன், திராவிடர் விடுதலைக் கழக தூத்துக்குடி மாவட்ட முன்னாள் தலைவர் பால்ராஜ், ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா ஆகியோர் மறைவிற்கு சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிறைவாக கொளத்தூர் நகர தலைவர் ராமமூர்த்தி நன்றி கூற கலந்துரையாடல் கூட்டம் நிறைவடைந்தது. கலந்து கொண்ட தோழர்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஈரோடு : திராவிடர் விடுதலைக் கழகம், ஈரோடு தெற்கு மாவட்டத்தின் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 07.01.2023 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் ப. ரத்தினசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையிலும் மாவட்ட கழக அலுவலகத்தில்  நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கழகத்தின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து தோழர்களுடன் விவாதிக்கப்பட்டது. கழக வார ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சந்தா குறித்தும் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • 31.12.2022 அன்று கொளத்தூர் தார்காடு கழகத் தோழர் விஜயகுமாரின் தந்தை இயக்க முன்னோடியான ஆசிரியர் இராமசாமி மறைவுற்றார். 01.01.2023 அன்று மறைவுற்ற தூத்துக்குடி மாவட்ட முன்னாள் தலைவர் வே.பால்ராசு, 04.01.2023 அன்று மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தந்தை பெரியாரின் கொள்ளுப் பேரனுமாகிய திருமகன் ஈவெரா ஆகியோருக்கு அஞ்சலியும் இரங்கலையும் இக்கூட்டம் செலுத்துகிறது.
  • கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய நூல்களை தமிழ்நாடு அரசு நாட்டுடைமையாக்கியதற்கு நன்றி தெரிவிப்பதோடு, பொதுச்செயலாளர் விடுதலை இராஜேந்திரன் அவர்களின் பெரியாரிய பணியினை கௌரவிப்பதற்கான முன்னெடுப்பே நூல்கள் நாட்டுடைமையாக்கம் என்றே இக்கூட்டம் கருதுகிறது. நூல்களை நாட்டுடைமையாக்க எந்தவித வேண்டுகோள் விடுக்காமலும் கௌரவித்த தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மாவட்ட கழகம் பாராட்டு தெரிவிப்பதோடு நன்றியையும் மகிழ்வோடு தெரிவிக்கிறது.
  • எதிர்வரும் பிப்ரவரி 2023, ஈரோட்டில் சனாதன எதிர்ப்பு பொதுக்கூட்டம் நீலகிரி நாடாளு மன்ற உறுப்பினர் ஆ.இராசா, மற்றும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோரை அழைத்து நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவராக பழனிசாமி, செயலாளராக பேரன்பு, அமைப்பாளராக பிரபு ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

இக்கூட்டத்தில் மாவட்ட தலைவர் செல்வராஜ், மாவட்ட செயலாளர் எழிலன், மாவட்ட அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநகரத் தலைவர் குமார், தமிழ்நாடு அறிவியல் மன்றம் சிவக்குமார், மணிமேகலை, ஜோதி, இரவி, கோபிநாத், கார்மேகம், செந்தில், அய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஈரோடு வடக்கு : ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் ஜன. 8 அன்று மாலை திராவிடர் விடுதலை கழகத்தின் மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளராக கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் பரப்புரைக்கான பயண திட்டங்கள் குறித்து நிர்வாகிகளிடையே உரையாற்றினார்.

பின்னர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களின் அறங்காவலர்களாக நியமிக்கக் கூடாது என்ற உயர்நீதிமன்றத்தின் கருத்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசுகையில்….

“அரசின் கொள்கை முடிவுகளை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் முடிவு செய்வதுதான் சரியாக இருக்கும்; நீதிமன்றங்களின் உத்தரவு பொருத்தமானதாக இருக்காது. நீதிமன்றங்கள் வரம்போடு நடந்து கொள்ள வேண்டும்  என்பது எமது விருப்பம்” என்றார்.

திராவிட அரசியல் காரணமாக தமிழ்நாடு பின்னோக்கி சென்றுவிட்டதாகக் கருத்து தெரிவித்த ஆளுநர், அவருக்கான வேலையை மட்டும் ஒழுங்காக செய்தால் போதும் அரசின் அறிவுரைப்படி செயல்படுவது மட்டுமே அவரது பணியாகும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் அரசியலை இங்கே புகுத்துவது ஆளுநரின் பணி அல்ல என்றும் கூறினார்.

இஸ்லாமிய மற்றும் கிறித்துவர்களின் விழாக்களைப் புறக்கணித்து விட்டு அரசு பணத்தில் தசாரா பண்டிகைக்கு கொலு வைத்துக் கொண்டாடி வருகிறார். ஆளுநருக்கு விருப்பமாக இருந்தால் கமலாலயம் சென்று பாஜகவில் பொறுப்பு வாங்கி கொண்டு அவ்வாறு செயல்படலாம். தமிழக சட்டமன்றத்தின் உறுப்பினர்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரால் ஒப்புதல் பெற்ற பிறகே தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டது.

எனவே சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இல்லாத சந்தேகம் ஆளுநர் ரவிக்கு வந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.  ஆளுநர் முதலில் மகாராஷ்டிராவின் பெயரை மொழிபெயர்த்து தெரிந்து கொண்ட பின் அதனை மாற்றிக் காட்டட்டும் பிறகு தமிழகத்தைப் பற்றி பேசுவதை பார்க்கலாம் எனவும், ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்குக் கையெழுத்திட நேரமில்லை சூதாட்டம் நடத்தும் முதலாளிகளை வைத்துக் கொண்டு பேசுகிறார். ஆளுநர் தனது வாயை அடக்கி கொண்டு இருந்தால் மரியாதை என்றார்.

ஈஷா மையத்தில் நடைபெறும் சம்பவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்து கொண்டுள்ளது பற்றி கேட்டதற்கு கழகத் தலைவர் அளித்த பதில்:

“சாமியார் அனைவருமே போலியானவர்கள் தான். சாமியார்களில் இதுவரை கைது செய்யப்பட்ட சாமியார் கைது செய்யப்படாத சாமியார் என இரண்டு வகை தான் உள்ளது. இதில் கைது ஆகும் சாமியார் பட்டியலில் ஈஷா சாமியார் இடம்பெறுவார் என்று தெரிகிறது” என்றார்.

பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிக்கையாளர்களை அவமதிக்கும் செயல் குறித்து பேசுகையில்,

“அண்ணாமலை இப்போது பார்ப்பனர்களின் கட்சியில் இருப்பதால் அவர்களைப்போல அண்ணாமலைக்கும் ஆணவம் வந்து விட்டதால் தான் அப்படிப் பேசி வருகிறார். அண்ணாமலை இன்னும் காவல்துறை அதிகாரி மனநிலையிலிருந்து விடுபடாமல் உள்ளார். அரசியல் கட்சியின் தலைவர் என்ற மனநிலைக்கு வரவில்லை என்பது அவரது நடவடிக்கைகள் காட்டுகிறது அவருக்கு விரைவில் அரசியல் அறிவு வரவேண்டும் என்பதே எங்களுக்கு விருப்பம் எதிர் வரும் காலத்தில் சிறிதளவாவது அரசியல் அறிவை பெற்றவராக அண்ணாமலை வளர வேண்டும் . 2016ஆம் ஆண்டில் காபிடே உரிமையாளர் சித்தார்த் ரபேல் வகை கடிகாரத்தை வாங்கியுள்ளார்,  அவரிடமிருந்து அன்றைய ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை அந்த ரபேல் வகை கடிகாரத்தை வாங்கியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன, அப்படியானால் அது இலஞ்சக் கணக்கில் தான் வரும். அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என கூறும் அண்ணாமலை ரபேல் கைகடிகாரம் பெற்ற இலஞ்ச ஊழல் கணக்கிற்கு முதலில் பதில் சொல்ல வேண்டும்” என்று கொளத்தூர் மணி தெரிவித்தார்.

கூட்டத்தில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா அவர்களுக்கும், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தூத்துகுடி மாவட்ட முன்னாள் செயலாளர் தோழர் பால்ராஜ் அவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய  நூல்களை நாட்டுடைமை ஆக்கிய திராவிட மாடல் தமிழ்நாடு அரசிற்கு நன்றியும்,  தமிழ்நாட்டின் முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாவட்ட கழகத்திற்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இறுதியாக கோபி ஒன்றிய அமைப்பாளர் செகநாதன் நன்றி தெரிவித்தார்.  நிகழ்விற்கான ஏற்பாடுகளை அருளானந்தம், இராவணன் ஆகியோரும், உணவிற்கான ஏற்பாடுகளை சுப்பிரமணியம், செகநாதன் ஆகியோர் செய்து இருந்தனர்.

பெரியார் முழக்கம் 12012023 இதழ்

You may also like...