மேட்டூர் பெண்கள் சந்திப்பில் கொளத்தூர் மணி உரை பெரியார் காலம் போராட்டக் காலம்; தற்போது அறுவடைக் காலம்

பெண்கள் சந்திப்பு நிகழ்வு 07.08.2022 ஞாயிறு காலை 10.00 மணியளவில் மேட்டூர் தாய்த்தமிழ் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. திருப்பூர் யாழினியின் கடவுள் – ஆத்மா மறுப்பு மற்றும் பாடலுடன் தொடங்கியது. கீதா வரவேற்புரை நிகழ்த்த சுதா நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்.முதலில் பெண்கள் சந்திப்பில் கலந்து கொண்ட தோழர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

தேநீர் இடைவேளைக்கு பிறகு கோவை அமிலா சுந்தர் “அன்னை மணியம்மையார்” பற்றியும், திருப்பூர் சங்கீதா “பெரியாரின் பெண்ணியம்” பற்றியும் உரை நிகழ்த்தினர்.

மதியம் உணவு இடைவேளைக்கு பிறகு 2.30 மணிக்கு இரண்டாம் அமர்வு தொடங்கியது. நிகழ்வில் முத்துக்குமார், கோவிந்தராஜ் ஆகியோர் பெண்ணுரிமை மற்றும் ஜாதி ஒழிப்பு பாடல்களை பாடினர்.

அதனைத் தொடர்ந்து ஆனந்தி “பெண் ஏன் அடிமையானாள்” எனும் தலைப்பிலும்,  மனோரஞ்சனி “பெண்களும் மூட நம்பிக்கைகளும்” எனும் தலைப் பிலும்,  வசந்தி “மூவலூர் இராமாமிர்தம்” அம்மையாரைப் பற்றியும், வழக்கறிஞர் கண்ணகி “பெண்ணுரிமைச் சட்டங்கள்” பற்றியும் சிறப்பாக உரை நிகழ்த்தினர்.

பிற்பகல் தேநீர் இடைவேளைக்குப் பிறகு நிகழ்வில் கலந்து கொண்ட பெண்கள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிற்கும் ஒவ்வொரு தலைப்புகள் கொடுக்கப்பட்டு அது குறித்து விவாதிக்கப்பட்டது.

பின்னர் “இன்றைய சூழலில் பெண்களும் வீட்டு வேலைகளும்” என்னும் தலைப்பில் தர்சினியும், “இன்றைய சூழலில் பெண்களின் சமூக பங்களிப்பு”என்ற தலைப்பில் தேன்மொழியும், “இன்றைய சூழலில் பெண்களின் உடையும் ஒப்பனையும்” என்கின்ற தலைப்பில் இளமதியும், “இன்றைய சூழலில் பெண்களின் கல்வியும் விழிப்புணர்வும்” என்கின்ற தலைப்பில் ஆனந்தியும் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.

அடுத்ததாக தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி தமது உரையில் “பெரியாரியல் தான்  பெண்ணடிமை , மூடநம்பிக்கை, ஜாதிய பாகுபாட்டில் இருந்து நம்மை விடுவித்தது என்றும், பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை கட்டாயம் பெண்கள் அனைவரும் படிக்க வேண்டுமென்றும், சமூக விடுதலையோடு கூடிய பெண் விடுதலையை பெரியார் பேசினார் என்றும், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் பெண்கள் சந்திப்பு நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டுமென்றும்” தனது உரையில் கூறினார்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி தனது நிறைவுரையில் “கொள்கை வெற்றி என்பது பெண்கள் அதனை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருத்தலே ஆகும் என்றும், பெரியாரின் காலம் என்பது போராட்ட காலமாகவும், தற்போது  அறுவடைக்காலமாக உள்ளது என்றும், பெரியார் சொல்லிக் கொடுத்த வாய்ப்பாட்டை வைத்துக் கொண்டு நாம் கணக்குகளை போட வேண்டுமென்றும், பெண் எழுத்தாளர்கள் எழுதிய  பெண்ணுரிமை பற்றிய புத்தகங்களை படித்து பெண்கள் விவாதிக்க வேண்டுமென்றும், இட ஒதுக்கீடு மூலம் பயன் பெற்றவர்கள் அந்த சமூகத்திற்காக செய்தது என்ன?” என்பதை யோசிக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.

இறுதியாக காயத்ரி  நன்றி கூற பெண்கள் சந்திப்பு நிகழ்வு மாலை 6.00 மணிக்கு நிறைவடைந்தது.

நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து பெண்களுக்கும் மேட்டூர் வாசகர் வட்டம் கிளை நூலகம் சார்பாக கிட்டு “பெண் ஏன் அடிமையானாள்?” என்ற புத்தகத்தை வழங்கினார். கலந்து கொண்ட தோழர்களுக்கு மதிய உணவாக அசைவ உணவு வழங்கப்பட்டது. நிதழ்வுக்கான ஏற்பாடுகளை மேட்டூர் நகர கழக பொறுப்பாளர்களும், தோழர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

 

பெரியார் முழக்கம் 11082022 இதழ்

You may also like...